ராகுல் மெஹ்ரா ஒரு அனுபவமிக்க, நிறுவனத்துக்கு அதிகம் லாபம் சம்பாதித்துத் தரும் அதிகாரி. ஆனாலும், இரண்டு வருடங்களுக்கு முன் அவருக்கு வந்திருக்க வேண்டிய பதவி உயர்வு இன்னமும் வந்தபாடில்லை. எல்லாம் சரியாக இருந்தும் ஏன் அவருக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை’’ என்கிற கேள்வியுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம். ராகுல் மெஹ்ரா மாதிரி நீங்களும் இருக்கலாம். பதவி உயர்வு பெறுவதில் உள்ள சூட்சுமங்கள் என்ன என்பதை நீங்கள் புரிந்துகொண்டால், இனிவரும் காலத்தில் அதைச் சீக்கிரமே எட்டிப் பிடிக்க முடியும்.

நான்கு படிநிலைகள்
பொதுவாக, நிறுவனத்துக்குத் தேவையான பங்களிப்புகளைப் பணியாளர்கள் தருவதில் நான்கு படிநிலைகள் உள்ளன. பதவி உயர்வு பெற நினைப்பவர்கள் முதலில் இந்த நான்கு படிநிலைகளையும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
முதல் படிநிலை
படித்து முடித்துவிட்டு கல்லூரியில் இருந்து வேலைக்கு வந்து நிறுவனத்தில் இணைவது என்பது முதல் படிநிலை. இந்தப் படிநிலையில் நிறுவனத்தில் அவர்களுக்குத் தரப்பட்டுள்ள வேலையில் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும். எல்லா வற்றையும் கற்றுக்கொண்டு, அன்றாடப் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடித்து எனப் பம்பரமாகப் பணிபுரியும் காலம் இது. இந்தப் பணிகளைச் செய்யும்போது தெரியாத விஷயங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டும், ஒரு பாஸின் கீழ் பொறுப்பாக இயங்கியும் வர வேண்டியிருக்கும். இந்தப் படிநிலையில், ஒரு நபர் மற்றொருவரை சார்ந்தே நிறுவனத்துக்குத் தன்னுடைய பங்களிப்பைத் தருகிறார். (contributing depentently).
இரண்டாவது படிநிலை
கொஞ்சம் கொஞ்சமாக வேலையில் தேர்ந்து, நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு, டெக்னிக்கல் ஸ்கில்களை வளர்த்தெடுத்து, வேலையைக் கொடுத்தால் ஃபாலோ-அப் தேவையில்லாமல் முடித்துவிடுவார் என்ற நம்பிக்கையை மேலதிகாரிகளிடம் பெற்று, ‘பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள் நான் பார்த்துக்கொள்கின்றேன்’ என்று தானாக முன்வந்து செயல்படுவது இரண்டாவது படிநிலை. இந்தப் படிநிலையில் ஒருவர் தன்னந்தனியே தன்னுடைய பங்களிப்பைத் தருகிறார் (contributing independently).
மூன்றாம் படிநிலை
தனிப் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துவரும் நபரே மூன்றாவது படிநிலைக்கு நகர்த்தப்படுகிறார். இந்தப் படிநிலைக்கு வருவதற்கு டெக்னிக்கலாக மிகவும் அகண்ட அறிவும் திறமையும், மற்றவர்களைப் பயிற்றுவித்து ஆளாக்கித் தருகிறேன் (Mentor) என்று பொறுப்பேற்கும் குணமும், உடன் பணிபுரிபவர்களைச் சிறப்பாக நிர்வகிக்கும் குணமும், புத்தம் புது ஐடியாக்களை நிறுவனத்துக்குக் கொண்டு வரும் பங்களிப்பும், வெவ்வேறு துறைகளை ஒருங்கிணைத்து அரவணைத்துச் செல்லும் பண்பும், வாடிக்கையாளர்கள், சப்ளையர்கள் என எல்லோரையும் ஒன்று சேர்த்து இயங்கும் குணமும் பரிமளிக்க வேண்டும். இந்தப் படிநிலையில் ஒருவர் மற்றவர் மூலமாகத் தன்னுடைய பங்களிப்பை (Contributing through others) நிறுவனத்துக்குத் தருகிறார்.
நான்காம் படிநிலை
இருக்கும் தொழிலின் மூலமந்திரத்தைப் புரிந்துகொண்டு எது பிசினஸை நகர்த்திச் செல்கிறது என்பதை அறிந்து கொண்டு, ஸ்ட்ராட்டஜி குறித்த முடிவுகளுக்கான அறிவுரைகளை வழங்கிக்கொண்டிருப்பது நான்காவது படிநிலைக்கு அவசியமான குணாதிசயம். இந்தப் படிநிலையில் ஒருவர் ஸ்ட்ராட்டஜிக் பங்களிப்பைச் (Contributing strategically) செய்கிறார்.

வெவ்வேறு தேவைகள், திறன்கள்...
இந்த நான்கு படிநிலைகளைக் கொஞ்சம் கூர்ந்துபாருங்கள். இந்தப் படிநிலைகளுக்குத் தேவையான குணாதிசயங்கள் எல்லாம் நேர்கோட்டில் அமைந்தவையல்ல. ஏற்ற/இறக்கங்களுடன் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை யாகவும் ஒரு சில ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை யாகவும் இருக்கும். அதேபோல், ஒரு படிநிலையில் இருக்கும் போதே மற்ற படிநிலைகளுக்குத் தேவைப்படும் வேலைகளைச் செய்துகொண்டிருக்கவும் வேண்டியிருக்கும். அன்றாடப் பணிகளைக் கவனித்துக்கொண்டே ஸ்ட்ராட்டஜிக்கான சில வேலைகளை முதல் படிநிலையிலேகூட ஒருவர் கட்டாயமாகச் செய்ய வேண்டியிருக்கும்.
‘என் பதவிக்கேற்ப இன்றைக்கு என்னென்ன வேலைகளை நான் செய்ய வேண்டுமோ, அதை மட்டும் சரியாகச் செய்து முடித்துவிட்டேன்’ என்று சொல்லிக்கொண்டு ஒருவர் இருக்கவே முடியாது. அப்படி இருந்துவிட்டு பதவி உயர்வை எதிர்பார்க்கவும் கூடாது. பல்வேறு விகிதாசாரங்களில் இந்த நான்கு படிநிலைகளுக்கும் தேவையான விஷயங்களை ஆரம்பகாலத்தில் இருந்தே தொடர்ந்து செய்துவரும் ஒரு நபரால் மட்டுமே நிர்வாகத்தின் மனதில் அவருடைய செயல் பாட்டுத் திறன் குறித்த மாற்றத்தை உணர வைக்க முடியும் (Perceived transition).
‘அட, இவர் அடுத்த படிநிலை யில் இருக்க வேண்டியவராச்சே’ என்று நிர்வாகம் நினைக்கும் அளவுக்கு ஒருவரால் அவர் கேரியரில் பெற்றிருக்கும் மாற்றத்தை உணர்த்துவது கொஞ்சம் நுணுக்கமான (பலருக்கு கொஞ்சம் கடினமான) வேலை என்றாலுமே அதைச் சரிவர செய்யும்போது மட்டுமே பதவி உயர்வுகள் சாத்தியமாகிறது.
கடினமான மாற்றம்...
இந்த மாற்றம் ஒவ்வொரு வருக்கும் மிகக் கடினமான தாகவே இருக்கிறது. ஒவ்வொரு நிர்வாகியும் தான் அன்றாடம் செய்துவரும் பணிகளை மிகச் சிறப்பாகச் செய்வதிலேயே மிகுந்த கவனமுடன் இருக்கிறார். ஏனென்றால், அவர்களுக்கு நேரடியான பலனைத் தருவது அவர்கள் செய்துவரும் அந்தப் பணிகளே.
ஆனால், கேரியரில் மேலே மேலே என்று போகும்போது அவர்கள் செயல்பட வேண்டிய எல்லைகள் விரிந்துகொண்டே போகும் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். சிறிய குழு விலிருந்து பெரிய குழு, குறுகிய காலத்தில் இருந்து நீண்ட காலம் என ஒரு நிர்வாகி செயல்படும் எல்லைகளின் அளவு பெரிதாகிக் கொண்டே போகும் என்பதை அவர் மனப்பூர்வமாக உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தப் புரிந்துகொள்ளலும் உணர்வும் இருந்தால் மட்டுமே டெக்னிக்கல் என்ற நிலைமையில் இருந்து ஸ்ட்ராட்டஜி மற்றும் அனைவரை யும் ஒருங்கிணைத்துச் செயல் படுதல் என்ற நிலைக்கு ஒரு நிர்வாகியால் தன்னை மாற்றிக் கொள்ள முடியும்.
அதிலும் முதல் இரண்டு படிநிலைகளிலும் தேவைப்படும் பண்புகள் மற்றும் திறமைகளுக்கும் அடுத்த இரண்டு படிநிலையில் தேவைப்படும் பண்புகள் மற்றும் திறமைகளுக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பது ஒரு நிர்வாகிக்கு தெள்ளத் தெளிவாகப் புரிய வேண்டும். ஏனென்றால், மூன்றாவது மற்றும் நான்காவது படிநிலையில் பிசினஸ் குறித்த புத்திக்கூர்மை, வாய்ப்புகளையும் இடர்களையும் முன்கூட்டியே கண்டறியும் திறன், உச்சபட்சக் குழப்பத்திலும் தெளிவாகச் செயல்படும் திறன், திறமையான பணியாளர்களைக் கண்டறிந்து அவர்களுடைய திறமையை மென்மேலும் பரிமளிக்கச் செய்வதற்குத் தேவை யான விஷயங்களைச் செய்வது, அடுத்தடுத்த தலைவர்களை உருவாக்கும் விஷயங்களைச் செய்வது, ஏன் நடைமுறையில் இருக்கும் இந்த நிலையை மாற்றக் கூடாது என்ற கேள்வியைக் கேட்கப் பழகுவது, நிறுவனத்துக்கு உள்ளும்புறமும் நல்லதொரு நெட்வொர்க்கை உருவாக்கிக்கொள்வது, நம்பகத்தன்மையை அதிக அளவுக்கு வளர்த்துக்கொள்வது மற்றும் நிறுவனத்தின் உள்ளும்புறமும் பல்வேறு அமைப்புகளில் பங்கேற்பது போன்றவையே ஒரு நிர்வாகிக்கு அதிக அளவில் தேவைப்படும் பண்பு களாகும் என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியை.
நம்மிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை அடிப்படையாகவும், நினைத்த விஷயங்களைச் சாதித்துக் கொள்ளத் தேவையான தொடர்புகளை வைத்துக்கொண்டும் (நிறுவனத்துக்கு உள்ளேயும் வெளியேயும்), உங்களால் என்ன முடியும், எவற்றையெல்லாம் நீங்கள் சாதித்துள்ளீர்கள் என்பது யார் யார் கண்ணுக்கெல்லாம் தெரிய வேண்டுமோ, அது தெரியும்படி பார்த்துக்கொண்டும், உங்களுடைய நம்பிக்கையான குணம், ஸ்டைல், மேனரிஸம் போன்றவற்றின் மூலம் சரியானதொரு நபராக உங்களை வெளிக்காட்டிக் கொண்டும் இருந்தால் மட்டுமே உங்களுடைய கேரியரில் நீங்கள் அடுத்தடுத்து வேகமான முன்னேற்றத்தைச் சந்திக்க முடியும் என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியை.
ஒவ்வோர் அத்தியாயத்திலும் பல்வேறு கார்ப்பரேட் நிர்வாகிகளின் நிஜவாழ்க்கை உதாரணங்களை மேற்கோள் காட்டி எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் கேரியரில் உயர வேண்டும் என நினைக்கும் அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய ஒரு புத்தகம்.