நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பிசினஸ் நிறுவனங்களை ஜெயிக்க வைக்கும் சோஷியல் மீடியா..! நீங்களும் இதைச் செய்யலாமே!

சோஷியல் மீடியா
பிரீமியம் ஸ்டோரி
News
சோஷியல் மீடியா

M B A B O O K S

கோவிட்-19 தொற்று நோய்க்குப் பிறகு, உலகமே மாறிவிட்டது. மனிதர்கள் நேருக்கு நேர் சந்திக்கத் தயங்கும் இந்த நிலையில், சோஷியல் மீடியாக்கள்தான் அனைவரையும் ஒன்றிணைக்கும் விஷயமாக இருக்கிறது. பல்வேறு நாடுகளில் உள்ள 25,000 பேருக்கும் மேற்பட்ட நுகர்வோர்களிடம் சர்வே ஒன்றை நடத்தியதன் மூலம் அவர்களுடைய சோஷியல் மீடியா உபயோகம் என்பது 65% அளவுக்கு அதிகரித்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. சோஷியல் மீடியா என்பது சர்வரோக நிவாரணி இல்லை என்றபோதிலும் மனிதர் களை உடனுக்குடன் (ரியல் டைம்) சென்றடைவதற்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும் விஷயமாகும். இப்படியானதொரு சூழலில், சி.இ.ஓ போன்ற நிறுவனங்களைத் தலைமை யேற்று நடத்தும் பொறுப்பில் இருப்பவர்கள் எந்த அளவுக்கு சோஷியல் மீடியாவைப் பயன் படுத்தித் தங்களுடைய செயல் பாட்டை சிறப்பாக்கிக்கொள்ள வேண்டும் என்பது பற்றிச் சொல்லும் புத்தகத்தைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.

இந்தப் புத்தகம் தற்போதைய பல சி.இ.ஓ-க்கள் மற்றும் முன்னாள் சி.இ.ஓ-க்கள் அவர்களுடைய சொந்த நடையில் எழுதியுள்ள அத்தியாயங் களைக் கொண்டதாகும். அவர் களுடைய அனுபவங்களை அவரவர் களுடைய ஸ்டைலில் எழுதியுள்ளனர். ஒருசில கருத்துகளில் அவர்கள் வேறுபட்டிருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒப்புக்கொள்ளும் ஒரே விஷயம், சோஷியல் மீடியாவின் அபரிமிதமான சக்தியைத்தான். அந்த சக்தியை நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பது பற்றி விரிவாகச் சொல்கிறார் ஆசிரியர்.

புத்தகம்
புத்தகம்

அடிக்கடி நடக்கும் போன் செக்கிங்...

கடைசியாக எப்போது உங்கள் போனை செக் செய்தீர்கள் என்கிற கேள்விக்கு 5 நிமிடத்துக்கு முன்னால், பல மணி நேரத்துக்கு முன்னால், நேற்றைக்கு… என வரும் பதில்களில் எது சரியானதாக இருக்கும்? நேற்றைக்கு என்பது நிச்சயமாக சரியான பதிலாக இருக்காது இல்லையா? ஒரு சராசரி ஸ்மார்ட் போன் உபயோகிப்பாளர் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 28 முறை செல்போனைப் பார்த்து செக் செய்கிறார் என்கின்றன ஆய்வுகள். அதாவது, குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மற்றும் வருடத்துக்கு 10,000 முறைக்குமேல் செக் பண்ணுகிறார்கள் என்றுதானே அர்த்தம்.

இந்த மாதிரி தொடர்ந்து மக்களுடன் தொடர்பில் இருக்கும் சூழ்நிலையில், சோஷியல் மீடியாவைத் தவிர்த்துவிட்டு, ஒரு சி.இ.ஓ சிறப்பாகச் செயல்படவே முடியாது. சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்தால் தேவை இல்லாத கவனம் (வெளிச்ச மும்) கிடைப்பதாலும், எதிர்மறைப் பின்னூட்டங்கள் அதிகம் வரவாய்ப் பிருப்பதாலுமே பல சி.இ.ஓ-க்களும் சோஷியல் மீடியாவில் பெரிய அளவில் பங்கேற்கத் தயங்குகின்றனர். சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாகப் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு எதிர் பாராத ரிஸ்க்குகளைத் தருகிற போதிலும் அந்த நிறுவனங்களுக்கு சோஷியல் மீடியா எக்கச்சக்கமான வாய்ப்புகளை வழங்குவது மறுக்க முடியாத உண்மை.

அறிவே சக்தி...

கடந்த 20 ஆண்டுகளில் டெலி கம்யூனிகேஷன் மற்றும் இன்டர்நெட் துறையில் உலகம் கண்ட வளர்ச்சி என்பது மிகப் பெரியது. இன்ஃபர் மேஷன் டெக்னாலஜி என்பது ஒரு நிறுவனத்தினுள் இருக்கும் பல இலாகாக்களில் ஒன்றாக இருந்த நிலை மாறி, இன்றைக்குத் தொழில்கள் கட்டமைக்கப்படுவதே கம்ப்யூட்டர் களை அடித்தளமாகக் கொண்டுதான் என்ற நிலைக்கு நாம் வந்துள்ளோம். அறிவே சக்தி (knowledge is power) என்ற நிலை மாறி, இன்றைக்கு ஆயுள்கால கல்வி (life long learning) என்ற சூழ்நிலைக்கு நம்மைக் கொண்டுவந்து விட்டிருப்பது இன்டர்நெட்டின் சாதனை என்றே நாம் சொல்ல வேண்டும். இதை நாம் ‘சோஷியல் ஏஜ்’ என்று சொல்லலாம். இந்த ‘சோஷியல் ஏஜ்’ என்பது எக்கச் சக்கமான சப்தங்களுடனும், தனிநபர் சுதந்திரத்தில் ஊடுருவல்கள், எக்கச்சக்க மான தேவையற்ற செய்திகள் போன்ற வற்றுடனேயே செயல்பட்டு வருகிறது. இதில் இருக்கும் தேவையற்ற விஷயங் களைப் பிரித்தெடுத்து எறிந்துவிட்டு தேவையானவற்றை மட்டும் உபயோகித்துக்கொள்ளும் கலையை நிறுவனங்கள் கற்றே ஆக வேண்டும். சோஷியல் மீடியாவை உபயோகிக்கத் தெரிந்த சி.இ.ஓ-க்கள் இந்த சவால்களையும் வாய்ப்புகளையும் முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பார்கள்.

சோஷியல் மீடியாவில் தொடர்ந்து தொடர்பில் இருப்பதும் வெளிப்படை யாக விஷயங்கள் பகிரப்படுவதும் வாடிக்கையாளர், முதலீடாளர், பணியாளர்கள் என்ற அனைத்துத் தரப்பினரின் மத்தியிலும் நம்பகத் தன்மையை வளர்க்க பெருமளவில் உதவுகிறது. வெளிப்படைத்தன்மை அபரிமிதமான அளவில் நிலவுவதற்கு சோஷியல் மீடியா மிகவும் உதவியாக இருக்கிறது. இந்த நிலை உருவாவதற்கான அடித்தளத்தை அமைப்பது தலைமையில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை ஆசிரியர் கூறுகிறார்.

உலக அளவில் பணிபுரியும் பணியாளர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் சோஷியல் மீடியா உதவியாக இருக்கிறது. நிறுவனத்துக்கானாலும் சரி, நிறுவனத் தின் சி.இ.ஓ-வுக்கானலும் சரி பிடிக்கிறதோ இல்லையோ, சோஷியல் மீடியாவைப் பிடித்த ஒரு விஷயமாக ஆக்கிக்கொள்வதே சிறந்ததொரு தீர்வாக இருக்கும்.

புத்தகத்தின் பெயர்:
The Social CEO: 
How Social Media Can Make You A Stronger Leader

ஆசிரியர்: 
Damian Corbet

பதிப்பாளர்:
Bloomsbury Business
புத்தகத்தின் பெயர்: The Social CEO: How Social Media Can Make You A Stronger Leader ஆசிரியர்: Damian Corbet பதிப்பாளர்: Bloomsbury Business

எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

சரி, சி.இ.ஓ-க்கள் சோஷியல் மீடியாவை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற கேள்வியை நீங்கள் கேட்கவே செய்வீர்கள். அதற்கு முன்னால் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் சி.இ.ஓ-க் களைக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம்.

இந்தவகை நிறுனங்கள் அதிக படைப்பாற்றல் கொண்டவை யாகவும், சுறுசுறுப்புடனும் இருக்கும். சிறந்த திறமை கொண்ட பணியாளர்களை இந்த நிறுவனத்தால் கவர்ந்திழுக்க முடியும். வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் மற்றும் ஏனைய வர்களிடம் இருந்து தேவையான பயனுள்ள கருத்துகளை அதிக அளவில் பெற முடியும். எல்லை யில்லா உலகமாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் செயல்பாடுகளை சுலபத்தில் இணைத்துச் செயல்படுத்த முடியும்.

தாங்கள் செயல்படும் துறையில் முன்னணி நிலையை அடையத் தேவையான இணைந்து உருவாக்குதல் (co-creation), இணைந்து வளர்ச்சிக்காகச் செயல்படுதல் (co-development) மற்றும் துறையில் செயல்படும் அனைத்து நிறுவனங்களையும் இணைத்து பொதுவான காரியங் களுக்காகப் பணியாற்றுதல் போன்றவற்றைச் செவ்வனே செய்ய முடியும்.

பாரம்பர்ய நிர்வாக முறைகளில் இருக்கும் குறைபாடுகளைக் களைந்து சிறப்பாகச் செயல்பட முடியும். எதிர்பாராத திசையில் இருந்து வரும் (சிலசமயம் முன்கூட்டியே உணர்ந்தும்) டிஷ்ரப்ஷன்களை சுலபமாக எதிர்கொள்ள முடியும்.

சோஷியல் மீடியாவின் மூலமாக ஒரு சி.இ.ஓ நல்ல பணியாளரைப் பாராட்ட முடியும். வாடிக்கையாளருடன் தொடர்பில் இருந்து அவர்களுக்கு அந்த நிறுவனம் செயல்படும் துறையில் ஏற்படும் மாறுதல் களைப் புரிய வைப்பதுடன் அவர்களுடைய தேவையைத் தெளிவாகப் புரிந்துகொண்டு செயல்படவும் முடியும்.

சோஷியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவ்வாக இருப் பதன் மூலம் சி.இ.ஓ-க்கள் தங்களுடைய பர்சனல் பிராண் டையும் வளர்த்தெடுக்க முடியும். மேலும், விற்பனை வளர்ச்சி என்பதைத் தாண்டி வாடிக்கை யாளர்கள் மத்தியில் நம்பிக் கையை வளர்த்தெடுப்பதன் மூலம் தொடர்ந்து அவர்களை விசுவாசமிக்க வாடிக்கையாளர் களாக நிலைநிறுத்த முடியும்.

சிறிய நிறுவனங்களுக்கும் இது ஏற்றதே!

சோஷியல் மீடி யாவில் பங்களிப் பைக் கொண் டிருக்கும் சி.இ.ஓ என்றவுடன் பெரிய மல்ட்டி நேஷனல் நிறுவனத்தின் சி.இ.ஓ-க்கள் மட்டுமே இதைச் செய்து பலனடைய முடியும் என்று நினைக்காதீர்கள். எஸ்.எம்.இ நிறு வனத்தின் தலைவர் களும், லாபநோக்கம் அல்லாத (non-profit) நிறுவனங்களின் தலைவர்கள்கூட சோஷியல் மீடியா வில் பங்கேற்பதன் மூலம் இதேபோன்ற பலன்களை அவர்களுடைய நிறுவனங்கள் அனுபவிக்க முடியும் என்பதை விளக்கத் தனியாக ஓர் அத்தி யாயம் இந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறை, மருத்துவம், உற்பத்தி, லாபநோக்கம் அல்லாத நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ், சோஷியல் என்டர்ப்ரைஸ்கள், சுற்றுச்சூழல் சார்ந்த நிறவனங்கள், ஸ்டார்ட்அப்கள், கல்வி பயிற்றுவிக்கும் நிறுவனங்கள், டெக்னாலஜி, டிராவல்துறை போன்ற வற்றில் பணிபுரியும் சி.இ.ஓ-க்கள் தாங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பதால், தாங்களும் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களும் எவ்வாறு பயனடைந்தனர் என்பதைத் தனித்தனி அத்தியாயத்தில் விளக்கியுள்ளனர்.

‘‘சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பது என்பது ஒரு மனநிலை. வெறுமனே லிங்க்ட்-இன், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் கணக்குகளை வைத்திருப்பது மட்டும் இல்லை. இவை எல்லாம் உங்களை ஒரு சோஷியல் லீடர் ஆக்க உதவும் உபகரணங்களே யாகும். இவற்றை எப்படி உபயோ கிக்க வேண்டும் என்பதை நீங்கள் தெளி வாகப் புரிந்துகொண்டால் மட்டுமே சோஷியல் மீடியாவின் மேஜிக் பவர் என்பது உங்களுக்குப் புரியும்’’ என்று சொல்லி முடிகிறது இந்தப் புத்தகம்.

நிறுவன தலைவர்கள் மட்டுமன்றி, அனைவரும் சோஷியல் மீடியாவின் சரியான பக்கத்தைப் புரிந்துகொள்ள உதவும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒரு முறை படித்து பலன் பெறலாம்.

பிட்ஸ்

வெளிநாட்டு போர்ட் ஃபோலியோ நிறுவனங்கள் உலக அளவில் அதிகம் முதலீடு செய்யும் நாடாக இருக்கிறது இந்தியா. இந்த ஆண்டில் இதுவரை 5.89 பில்லியன் டாலர் (ரூபாய் மதிப்பில் சுமார் 43,000 கோடி) முதலீடு செய்யப்பட்டு உள்ளது!