நடப்பு
Published:Updated:

எதற்கும் தயாராக இருப்பவர்களே வெற்றி அடைகிறார்கள்..! நீங்கள் வாய்ப்புகளை வசப்படுத்தி ஜெயிப்பவரா..?

எம்.பி.ஏ  புக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
எம்.பி.ஏ புக்ஸ்

MBA BOOKS

வெற்றியடைய வேண்டும் எனத் தீவிரமாக நினைப்பது சுயநலமான செயல் எனப் பலரும் நினைக்கிறார்கள். இது நிச்சயம் உண்மையில்லை. ஒருவர் வெற்றி பெற்றால் அது அவருடைய குடும்பம், நண்பர்கள், அவர் வாழும் சமூகம் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயம் என்ற அனைவருக்குமே மிகவும் உதவுவதாகவே இருக்கிறது. மேலும், நாம் ஒவ்வொருவருமே வெற்றி பெறத் தகுதியானவர்கள்தாம் என்கிற நம்பிக்கை தரும் வார்த்தை களுடன் ஆரம்பிக்கிறது வெற்றிக்கான சூத்திரங்களைச் சொல்லும் இந்தப் புத்தகம்.

வெற்றி நம்மைத் தேடி வராது...

வெற்றி பெறுவதற்கான திட்டங்களைத் தீட்டி அதை நடைமுறைப்படுத்தி வெற்றியைப் பெற முயலும் மனிதர்கள் ஒரு ரகம் என்றால், வெற்றி என்பது நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் வரட்டும் என்று இருப்பது மற்றொரு ரகம். இதில் நீங்கள் முதல் ரக மனிதராக இருந்தால் உங்களுக்கானதுதான் இந்தப் புத்தகம் என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியை.

திட்டமிட்டு உழைத்தால்தான் வெற்றி...

ஒரு வேலையில் சேர்வதானாலும் சரி அல்லது ஒரு வேலையில் பதவி உயர்வைப் பெறுவதானாலும் சரி... அந்த வாய்ப்புகள் நம்மைத்தேடி வரட்டும். வந்த பின்னர், தயாராகிக் கொள்வோம் என்று இல்லாமல் வாய்ப்புகள் வருவதற்கு முன்பே அதற்காகத் தன்னை தகுதிப்படுத்திக் கொண்டு தயாராகிக் கொள்பவர்களே சிறந்த வெற்றி அடைகின்றனர். பெரிய அளவில் வெற்றி பெறாத மனிதர்களைக் கூர்ந்துநோக்கினால் ஒன்று நமக்கு தெளிவாகப் புரியும். அவர்கள் அன்றாட வாழ்வின் பிரச்னைகளைத் தீர்த்துக்கொண்டு மட்டுமே வாழ்ந்துகொண்டிருப்பார் கள். அவர்களுடைய வாழ்க்கையில் பொதுவாக, செல்லும் திசையை நல்லபடியாக மாற்றி அமைத்துக் கொள்வதற்கான முயற்சிகள் எதையுமே அவர்கள் செய்ய மாட்டார்கள். குறிப்பாகச் சொன்னால், எதிர்காலம் குறித்த திட்டமிடுதல் அவர்களிடம் இருக்காது. அன்றாடம் அவர்கள் எதிர்கொள்ளும் விஷயங்களை மட்டுமே கையாண்டு, அது குறித்த புகார்களை மட்டுமே கூறிக்கொண்டு இயங்கும் இந்த மனிதர்கள் பெரிய அளவிலான வெற்றியை அடைவது என்பது சாத்தியமே இல்லை.

‘‘உங்கள் வாழ்க்கைக்கான முழுப் பொறுப்பையும் நீங்களே ஏற்று அதை உங்கள் விருப்பப்படி வாழ்வது எப்படி என்பதை நீங்கள் கற்றுக் கொண்டேயாக வேண்டும். இல்லா விட்டால் நீங்கள் உங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை ஓட்டாமல் வாழ்க்கை உங்கள் மீது ஏறி பயணித்து விடும் என்பதை முழுமையாக உணர்ந்துகொள்ளுங்கள். இதைக் கற்றுக்கொண்டால், உங்களால் உங்களுடைய வாழ்க்கையின் போக்கை நிர்ணயிக்க முடியும். நம் அனைவருக்கும் முன்னால் இந்த உலகில் நீக்கமற நிறைந்திருக்கும் ‘வாய்ப்பு’களைப் பற்றித் தெளிவாக உணர்ந்துகொள்ளுங்கள்’’ என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியை.

எம்.பி.ஏ  புக்ஸ்
எம்.பி.ஏ புக்ஸ்

வெற்றி என்பது என்ன..?

முதலில், வெற்றி என்பது உங்களைப் பொறுத்தவரை, என்ன என்பதைத் தெளிவாக வரையறை செய்யுங்கள். என் வாழ்வில் அதுவாக என்ன வருகிறதோ, அது வெற்றி யில்லை. எனக்கு இதுதான் வேண்டும். அதை நான் நினைக்கும் விதத்தில் அடைவதுதான் வெற்றி என்பதை முதலில் நீங்கள் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப்போனால் நம்முடைய பார்வையில் வெற்றி பெற்றவர்கள் பலருக்குமே இந்தத் தெளிவு இல்லாததால், அவர்கள் இருக்கும் இடத்தில் வெற்றிகரமாக இருப்பதைப்போல், இருந்தாலுமே அது அவர்களுடைய முழுமையான திறனுக்கு ஏற்ற வெற்றியாக இல்லை என்பதை உணராமலேயே இருந்து கொண்டிருப்பார்கள்.

வெற்றி என்பது இதை இந்தக் காலத்துக்குள் இந்த அளவுக்கு அடைய வேண்டும் என்று தீவிரமாகத் திட்டமிட்டு அதற்காக உழைத்து, அதன் மூலம் அடைவது ஆகும். பதவி, பணம், அந்தஸ்து என எதுவாக இருந்தாலும் தானாக வாழும் சூழ்நிலை ஒத்துழைத் ததால் மட்டுமே வந்திருந்தால் அதுவெல்லாம் வெற்றியே இல்லை என்கிறார் ஆசிரியர்.

பணம், பதவி, அந்தஸ்து பெறுவது வெற்றியா..?

திட்டமிட்டு உழைத்து பெறுவதுதான் வெற்றி என்பதை நீங்கள் புரிந்து கொண்டுவிட்டீர்களா, ஓகே நீங்கள் அடுத்தகட்டத்துக்குச் செல்லலாம். முதலில் உங்களுடைய பார்வையில் எது வெற்றி என்பதை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். வெற்றி என்பதை நிர்ணயம் செய்யும்போது பெரும்பாலும் நாம் சமநிலையை மறந்து செயல்பட ஆரம்பித்துவிடுவோம். அதாவது பதவி, பணம், அந்தஸ்து என்ற ஏதாவது ஒன்றை மட்டுமே வெற்றி என்று நினைத்து அதை நோக்கி மட்டுமே பயணிப்பதற்கான திட்டங்களைத் தீட்டுவோம். வெற்றி என்பது ஒன்றை மட்டும் நோக்கியே பயணிப்பதில்லை. வாழ்க்கையில் பல்வேறு விஷயங்கள் இருக்கவே செய்கின்றன. அவற்றைச் சமநிலையில் வைத்து செயல்படுவதே வெற்றியாகும்.

உதாரணமாக, பணம் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, அதைச் சேர்த்த மனிதர்கள் பலரும் பிற்பாடு அது மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை உணர்வார்கள். அதற்குள் அவர்கள் முக்கியத்துவம் தரமறுத்த பல்வேறு விஷயங்களில் நிலைமை கைமீறிப் போயிருக்கும். எள்ளளவும் மன திருப்தி தராத அதே நேரம் அதிக சம்பளம் தருகிற ஒரு நல்ல வேலையை வெறுப்புடன் பார்த்து வருவார்கள். இது உண்மையில் வெற்றியே அல்ல.

மற்றவர்களைப் பார்த்து நிர்ணயித்துக் கொள்ளாதீர்கள்...

வெற்றி என்பது உங்களால் உங்களுக்கு எது என்று தீர்மானிக் கப்பட வேண்டிய ஒன்றே தவிர மற்றவர்களுடன் ஒப்பிட்டு, ‘இவர் இதைப் பெற்றிருக்கிறார்; அதனால் நான் இதை அடைந்தால் தான் வெற்றி’ என்று தீர்மானிப்பது இல்லை என்பதையும் தெளிவு படுத்துகிறார் ஆசிரியை.

வெற்றி என்பது எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கும் ஒரு விஷயம் ஆகும். யாரும் பிறக்கும்போதே மிகவும் சிறப்பான திறமைகளுடன் பிறப்பதில்லை. பிறவி ஜீனியஸ்கள் என்ற ஒருசில விதிவிலக்குகள் இருக்கிறதே தவிர, பெரும் பான்மையினர் சமமானதொரு திறமையினுடனேயே இந்தப் பூமியில் பிறக்கின்றனர். ஜீனியஸ்கள் விதிவிலக்காக மட்டுமே இருக்கிற இந்த உலகில், பயிற்சியாலும் முயற்சியாலும் திறமையை வளர்த்தெடுத்து வெற்றி பெற்றவர்களுடைய எண்ணிக்கை எண்ணிலடங் காததாக இருக்கிறது என்று சொல்லும் ஆசிரியர், இதற்கு உதாரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், கால் பந்து வீரரான டேவிட் பெக்ஹாம், கோல்ப் விளையாட்டு வீரரான டைகர் வுட்ஸ் உள்ளிட்ட பலரையும் உதாரணமாகக் காட்டுகிறார் ஆசிரியை.

ஆய்வு சொல்வது என்ன..?

‘‘திறமை என்பது எப்போது கிடைக்கிறது என்றால், அதைப் பயிரிட்டு, வளர்த்தெடுத்து, பயிற்சிகள் பலவும் செய்யும் போதுதான் கிடைப்பதாக ஃப்ளோரிடா பல்கலைக் கழகத்தின் ஆய்வு முடிவுகள் மேலும் சொல்கின்றன. மனித மூளை என்பது ஒருவர் வயது வந்த நபரானதும் மாறாத நிலைக்குச் சென்றுவிடுவதில்லை. அந்த வயதுக்குப் (எந்த வயதிலும்) பின்னாலும் மூளை புதியவற்றைக் கற்றுக்கொள்ளவும், மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும் தகுதியான ஒன்றாகவே இருக்கிறது என்கின்றன ஆய்வு முடிவுகள். இதனாலேயே வாழ்வின் எந்த நிலையிலும் நம்மால் நம்முடைய செயல்பாட்டை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்’’ என்கிறார் ஆசிரியை.

முன்னேற்றத்துக்கான எந்தவொரு விஷயம் குறித்தும் நம்பிக்கைக் குறைவு, சந்தேகம், நம்மால் முடியுமா என்ற எண்ண மெல்லாம் தோன்றும் பட்சத்தில் அதுகுறித்து சிந்திப்பதை நிறுத்தி விட்டு, அந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பித்துவிடுங்கள் (அது குறித்த எவ்வளவு சிறிய நடவடிக்கை யானாலும் அதை எடுங்கள்) என்று சொல்கிறார் ஆசிரியை. வெற்றி பெறுவதற்கான மனநிலை என்பது எப்படி இருக்க வேண்டும், பல விஷயங்களையும் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம், எதைக் கற்றுக்கொள்ள வேண்டும், எப்படிக் கற்றுக்கொள்ள வேண்டும், வேகமாக ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வது எப்படி என இந்தப் புத்தகத்தில் தனித் தனி அத்தியாயங்களில் சொல்லப் பட்டிருக்கின்றன.

புத்தகத்தின் பெயர்:
The Success Code 
ஆசிரியர்
Amanda Dewinter
 பதிப்பாளர்:
HQ An imprint of HarperCollins Publishers Ltd
புத்தகத்தின் பெயர்: The Success Code ஆசிரியர் Amanda Dewinter பதிப்பாளர்: HQ An imprint of HarperCollins Publishers Ltd

மூன்று வகையான ஸ்ட்ரெஸ்கள்...

ஸ்ட்ரெஸ் (அழுத்தம்) மூன்று வகைப் படும். பாசிட்டிவ்வான விஷயங்களுக்கு உதவும் அன்றாடம் எதிர்கொள்ளும் ஸ்ட்ரெஸ், கொஞ்சம் நீண்டகால அடிப்படையில் நம்மால் தாங்க முடிந்த ஸ்ட்ரெஸ் மற்றும் வெகு நீண்ட நாள் களுக்கு நம்மிடம் இருக்கும் நச்சு ரக ஸ்ட்ரெஸ் என்பவையே அந்த மூன்று வகைகள்.

இவற்றில் முதல் இரண்டு வகை அழுத்தத்தை (ஸ்ட்ரெஸ்) வெற்றிக்கான படியாகப் பயன்படுத்திக்கொள்வது எப்படி, நம்மை நாமே ரீசார்ஜ் செய்து கொள்வது எப்படி, மன உரம் மற்றும் பழக்கவழக்கங்களுக்கு இடையேயான தொடர்பு போன்றவற்றையும் விளக்க மாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

‘‘எப்போதெல்லாம் வாழ்க்கை கடுமையாக இருக்கிறதோ, உங்களால் ஒரு காரியத்தை வெற்றிகரமாகச் செய்ய முடியாமல் போகிறதோ, அப்போது நீங்கள் எடுக்கும் முயற்சியும் நீங்கள் செய்யும் பயிற்சியும் ஒரு நாளில்லாவிட்டால் ஒரு நாள் வெற்றியை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும் என்ற மந்திரத்தை நினைவில் கொள்ளுங்கள் என்று கூறி முடிகிறது இந்தப் புத்தகம்.

வெற்றி பெற நினைக்காத மனிதர்களே இந்த உலகில் இல்லை. எனவே, வெற்றி குறித்தும் அதற்குத் தேவை யான பயிற்சிகள் குறித்தும் தெளிவாகச் சொல்லும் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படித்து பயன் பெறலாம்.

பிட்ஸ்

ம் நாட்டில் 449 உள் கட்டமைப்புத் திட்டங்கள் உரிய நேரத்தில் முடிக்கப் படாததால், ஒவ்வொரு திட்டத்திலும் ரூ.150 கோடியை அதிகமாகச் செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது!