Published:Updated:

உங்கள் பிராண்டை மக்கள் மனதில் பதிய வைப்பது எப்படி? பிராண்ட் பொசிஷனிங் & ரீபொசிஷனிங் கலை...

பிராண்ட் பொசிஷனிங்
பிரீமியம் ஸ்டோரி
பிராண்ட் பொசிஷனிங்

B R A N D

உங்கள் பிராண்டை மக்கள் மனதில் பதிய வைப்பது எப்படி? பிராண்ட் பொசிஷனிங் & ரீபொசிஷனிங் கலை...

B R A N D

Published:Updated:
பிராண்ட் பொசிஷனிங்
பிரீமியம் ஸ்டோரி
பிராண்ட் பொசிஷனிங்

சுப.மீனாட்சி சுந்தரம்

கோவிட் தொற்றுநோய் வந்த பிறகு பெரும்பாலான நிறுவனங்கள் முடங்கிக் கிடக்கின்றன. இந்த நிறுவனங்களில் பல தங்கள் பிராண்டை மீண்டும் நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. அதாவது, இந்த நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பைப் பற்றி இத்தனை நாளாகச் சொல்லிவந்ததை இனி கொஞ்சம் மாற்றிச் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. பிராண்ட்டை இப்படி ரீ்பொசிஷனிங் செய்வதன்மூலம் வாடிக்கையாளர்களின் மனங்களில் நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கி, பிராண்ட் பற்றிய உயர்ந்த பிம்பத்தை ஏற்படுத்த முடியும். இதை இன்னும் கொஞ்சம் விளக்கிச் சொல்கிறேன்.

சுப.மீனாட்சி
சுந்தரம்
சுப.மீனாட்சி சுந்தரம்

பிராண்ட் பொசிஷனிங்...

பொசிஷனிங் என்பது, நீங்கள் தயாரித்து விற்கும் ஒரு பொருள் பற்றி வாடிக்கையாளர்கள் மனதில் என்ன மாதிரியான எண்ணத்தை உருவாக்குகிறீர்கள் என்பதுதான். ‘நாங்கள் வேகமான, பாதுகாப்பான, மலிவான, அதிக வசதியுடன், நீடித்த உழைப்புடன், உயர்தரமான சிறந்த மதிப்புள்ள பொருள்களைத் தருகிறோம்’ என பல விஷயங்களை வாடிக்கையாளர்களின் மனதில் பதிய வைப்பதைவிட, இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து, அதை மக்கள் மனங்களில் இடம்பெறச் செய்யும் வகையில் ஒரு பிம்பத்தை உருவாக்க வேண்டும்.

ஒரு நிறுவனம் தயாரித்து அளிக்கும் பொருள்/சேவையானது வாடிக்கையாளரின் மனதில் நல்ல விதத்தில் பதியாமல், மோசமாகப் பதிந்தால் என்னவாகும்? ‘அந்தப் பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல’ என்று நெகட்டிவ் கமென்ட் அடிக்கிற மாதிரி ஆகிவிடும்.

சிறந்த பிராண்டுகளை நாம் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்கிறோம். அவற்றைத்தான் திரும்பத் திரும்ப வாங்குகிறோம். ஒரு பொருள் என்பது உயிரில்லாத ஜடம்தான். ஆனால், அந்தப் பொருளுக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுத்து, வாடிக்கையாளர்களின் மனதில் இடம்பெறும்போதுதான் பிராண்ட் என்னும் அங்கீகாரம் அதற்குக் கிடைக்கிறது. கடைகளில் வாடிக்கை யாளர்கள் கேட்டு வாங்கும் அளவுக்கு உயர்கிறது.

இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். வோல்வோவை ‘பாதுகாப்பான கார்’ என்று கூறுகிறது அந்த நிறுவனம்; செட்டிநாடு சிமென்டை ‘பெயர் சொன்னால் போதும், தரம் எளிதில் விளங்கும்’ என்கிறது. பூஸ்ட் என்றால் எனர்ஜி, லக்ஸ் என்றால் அழகு சாதன சோப். ‘ஒரு சோப்பு கொடுங்க’ என்று கேட்பதற்குப் பதிலாக, ‘ஒரு லக்ஸ் கொடுங்க’ என்பதற்கும், போட்டோ காப்பி எடுக்க வேண்டும் என்பதற்கு பதிலாக ஒரு ஜெராக்ஸ் எடுக்க வேண்டும் என்று சொல்வதுதான் பிராண்ட் பொசிஷனிங் என்பதன் மகத்துவம்.

ஹார்லி டேவிட்சன், ஆப்பிள் போன்ற தனித்துவமான பிராண்ட் பொசிஷனிங்கைக் கொண்ட நிறுவனங் களை காப்பியடிப்பது சற்று கடினம்தான். உள்ளார்ந்த ரீதியாகப் பல்வேறு செயல் முறைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் வெளிப்புறச் செயல்பாடுகளை வேண்டு மானால் ஓரளவுக்கு காப்பி அடித்துக் கொள்ளலாம்.

100 ஆண்டுகளைக் கடந்து விற்பனையில் தனக்கென்று ஓர் இடத்தையும் பிராண்டுக்கு என்று ஒரு மதிப்பையும் கொண்டிருக்கும் ஹார்லி டேவிட்சன் வெறும் மோட்டார் சைக்கிள் மட்டுமல்ல, வாடிக்கை யாளர்களுக்கு அது ஒரு மந்திரச்சொல். கிட்டத்தட்ட அதை ஒரு மதம், கலாசாரமாக நினைத்துப் பின்பற்றும் வாடிக்கையாளர் களும் உள்ளனர்.

பொசிஷனிங் என்பது புலி வாலைப் பிடித்தது போலத்தான். விட்டுவிட்டால் நம் கதி அதோ கதிதான். ஒரு தடவை பிடித்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள எந்த நேரமும் சந்தையில் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனென்றால், வாடிக்கையாளர் களின் மனதில் இடத்தைப் பெறுவதற்காக நாம் மேற்கொண்ட உத்தி எப்போதும் வேலை செய்யும் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது.

நுகர்வோர்களின் தேவை, போட்டியாளர், தொழில்நுட்பம், பொருளாதார மாற்றங்கள் என சந்தை சூழ்நிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால், நிறுவனங்கள் தங்களது முக்கிய பிராண்டுகளின் நிலைப்பாட்டை அவ்வப்போது மதிப்பீடு செய்து மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இதற்குப் பெயர்தான் ரீபொசிஷனிங். அது என்ன ரீபொசிஷனிங்..?

உங்கள் பிராண்டை மக்கள் மனதில் பதிய வைப்பது எப்படி? பிராண்ட் பொசிஷனிங் & ரீபொசிஷனிங் கலை...

பிராண்ட் ரீபொசிஷனிங்...

ஒரு தயாரிப்பின் பிராண்ட் பொசிஷனிங்கை மதிப்பீடு செய்து, கொஞ்சம் மாற்றி, மீண்டும் சந்தைக்குக் கொண்டு போய் வாடிக்கையாளர்களின் மனதில் இடம்பெறச் செய்வது தான் பிராண்ட் ரீபொசிஷனிங். மூன்று C-கள் காரணமாக இந்த ரீ பொசிஷனிங்கை நாம் செய்தாக வேண்டும். முதல் C, Competition அதாவது, போட்டி. இரண்டாவது C, Change அதாவது, மாற்றம். மூன்றாவது C, Crisis அதாவது, நெருக்கடி.

கண்ணுக்கெட்டிய வரை தனக்குப் போட்டியாளர்கள் யாருமில்லை என நினைத்த நோக்கியா 90-களில் உலக சந்தையைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருந்தது. ஆனால், ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்தை அங்கீகரிக்க மறுத்ததன் விளைவு, சந்தையில் இருந்து காணாமலே போய் விட்டது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நோக்கியாவைக் கையகப்படுத்தி மீண்டும் சந்தைக்கு வந்திருக்கிறது.

காட்பரீஸ் டெய்ரி மில்க் சாக்லேட்டில் புழு இருந்த தாக வீடியோ வைரலாக பரவினாலும், குறுகிய காலத்தில் அதைச் சரிசெய்ததன் மூலம் இழந்த பெயரை மீண்டும் பெற்றது காட்பரீஸ்.

மேகி நூடுல்ஸ் பாக்கெட்டு களில் அதிகப்படியான ஈயம், மோனோ சோடியம்  க்ளூடாமேட் இருப்பதாகக் கண்டறிந்ததை அடுத்து ஏப்ரல் 2015-ல் மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டது. பல்வேறு கடைகளில் இருந்து 35,000 டன் மேகி பாக்கெட்டுகளை அந்த நிறுவனம் அகற்ற வேண்டியிருந்தது. இந்தத் தடையானது அடுத்த சில மாதங்களில் ரத்து செய்யப்பட்டாலும், 2 நிமிட மேகி நூடுல்ஸ் நிறுவனத்தின் நற்பெயரை இரண்டு நாளில் காலி செய்துவிட்டது. ரூ.500 கோடிக்குமேல் நஷ்டம் கண்டது.

ஒரே ஒரு பொருளை பெரிதாக நம்பி இருப்பதால்தானே இத்தனை பிரச்னை என்று நினைத்த அந்த நிறுவனம், இரண்டே ஆண்டுகளில் 43-க்கும் அதிகமான பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி தனது சந்தைப் பங்கை தக்கவைத்துக் கொண்டது.

ஆக, கடந்த காலத்தைப் பற்றி நாம் அதிகம் பெருமைப்படாமலும் அல்லது கவலைப்படாமலும் காலத்துக்கேற்ப மாற்றி பிராண்ட் ரீபொசிஷனிங் செய்தால், வாடிக்கையாளர்களின் மனதில் என்று நிலைபெற்று, சிறப்பான விற்பனை காணலாம் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism