Published:Updated:

மணலுக்கும் ஜல்லிக்கும் தரச்சான்றிதழ் தந்து விற்கும் மதுரை நிறுவனம்!

சிவக்குமார் காளியப்பன்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவக்குமார் காளியப்பன்

பிராண்ட்

அருண் கோபால்

வீடு கட்டும்போது சிமென்டையும் பெயின்டையும் பிராண்ட் பார்த்து வாங்குகிறோம். ஆனால், மணலையும் ஜல்லியையும் வாங்கும்போது நாம் பிராண்ட் எதுவும் பார்த்து வாங்குவதில்லை. ஜல்லியில் பிராண்ட் என்று எதுவும் இருக்கிறதா என்பது தான் பலரும் கேட்கும் கேள்வி. இருக்கிறது, கட்டடம் கட்டும் ஜல்லியை பிராண்டாக மாற்றி விற்பதில் வெற்றி கண்டிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த தொழில்முனைவர் சிவக்குமார் காளியப்பன். அவருடைய புளூமெட் நிறுவனம் இந்தியாவிலேயே முதன் முறையாக எம்-சாண்ட் மணலையும், ‌‌ஜல்லி கற்களையும் கான்கிரீசியா என்கிற பிராண்டில் விற்பனை செய்து வருகிறது. தரம் மற்றும் அளவு ஆகிய இரண்டுக்கும் பில் மற்றும் தரச்சான்றிதழ் தருவதுடன், அதில் திருப்தி இல்லை எனில், அதை உடனடியாக மாற்றித் தருகிறார் சிவக்குமார். மதுரை - திண்டுக்கல் சாலையையொட்டி அமைந்திருக்கும் அவரது தொழிற்சாலையில் அவரை நாம் சந்தித்தோம்.

“பொதுவாக, ஒருவர் வீடு கட்டும்போது கட்டடத் துறையில் முக்கிய அம்சம் வகிக்கும் பொருள்கள் மணல், கம்பி, ஜல்லி, சிமென்ட் ஆகியவற்றை வாங்கும்போது, நீரின் தன்மையைப் பொறுத்து கம்பி மற்றும் சிமென்ட் போன்றவற்றை சிறந்த பிராண்டு களாகவே வாங்குவார்கள். ஆனால், மணல் மற்றும் ஜல்லி கற்கள் எங்கிருந்து வருகிறது, எந்த நிறுவனம் தயாரித்த பொருள் அது, அதன் தரம் எப்படி என்பதை எல்லாம் நாம் ஆராய்ந்து பார்ப்பதில்லை. ஆனால், அவைதான் கான்கிரீட் மற்றும் சென்ட்ரிங் பணியில் 80% பங்கு வகிக்கிறது. அவற்றின் தரம் குறையும் பட்சத்தில் அது கட்டடத்தையே பாதிப்படையச் செய்யும்.

சிவக்குமார் காளியப்பன்
சிவக்குமார் காளியப்பன்

ஒரு தனிநபர் தன் வாழ்க்கையில் வீடு கட்டுவது ஒரே ஒருமுறைதான். இதற்கே சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை இ.எம்.ஐ-ஆக அவர் செலவு செய்ய வேண்டியிருக்கும். அப்பேர்பட்ட வீட்டுக்காக வாங்கிய பொருள்கள் பில் இல்லாமல், வரி செலுத்தாமல் வாங்கியவை எனில், அது திருட்டுப் பொருளுக்கு ஈடானது. அது தரமற்றதாக இருந்தால், வீட்டு உரிமையாளரின் கனவு வீடு தரும் சந்தோஷம் நொடிப்பொழுதில் தகர்ந்துவிடும்.

பொதுவாக, கட்டடம் கட்ட வாங்கும் பொருள்களுக்குத் தரப்படும் கமிஷன், கான்ட்ராக்டர், கொத்தனார் மற்றும் இன்ஜினீயர்களுக்குத் தரப்படுகிறது. கமிஷனுக்கு ஆசைப் படுகிறவர்கள் தரமற்ற பொருள்களை நம் தலையில் கட்டி விட நிறைய வாய்ப்பிருக்கிறது. வீடு கட்டுகிறவர்களுக்குத் தரமான பொருள்களைத் தர வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் எம்-சாண்டுக்கும், ஜல்லிக்கும் இந்தியாவிலேயே முதன்முறையாக ஐ.எஸ்.ஐ சான்றிதழ் தந்து விற்கிறோம்.

பொதுவாகவே, வாடிக்கையாளரும் கான்ட்ராக்டரும், ஏன் இன்ஜினீயரும்கூட ஐல்லி மற்றும் எம்.சாண்டை நேரடியாக கிரஷ்ர்ல வாங்குறதில்லை. ‌காலங்காலமா இங்க உற்பத்தியாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில தரகர் நெறையா இருக்காங்க. இதுல பெரிய வாகன முதலாளிகள் முக்கியமான பங்கு வகிக்கிறாங்க. அதனால முதல்ல வாகன எண்ணிக்கையை அதிகப்படுத்தினோம்.

பிறகு, எங்க வாகனத்தோட அளவை வாடிக்கை யாளர்களுக்குத் தெரியப்படுத்துனோம். எம்.சாண்ட், ஜல்லி இரண்டுமே ஐ.எஸ்.ஐ தரச்சான்றின்படி இருக்கான்னு வெளி லேப்ல டெஸ்ட் பண்ணி, டெஸ்ட் சர்டிஃபிகேட்டை இணைச்சுக் கொடுத்தோம். குறிப்பிட்ட நேரத்துல சரியா டெலிவரி செய்றோம். தரம், அளவுல எந்தக் குறை இருந்தாலும், உடனே எங்க கம்பெனி ஊழியர் அங்கபோய், சரிபார்த்து, புதுப் பொருளைத் தந்துடுவார். தவிர, நாங்க பில் இல்லாம யாருக்கும் பிசினஸ் செய்றதில்லை.

மணலுக்கும் ஜல்லிக்கும் தரச்சான்றிதழ் தந்து விற்கும் மதுரை நிறுவனம்!

கட்டடம் கட்ட யாரெல்லாம் வானம் தோண்டுறாங்களோ, அவங்க எல்லாம் எங்க கஸ்டமர்கள்தாம். நாங்க கட்டட உரிமையாளர்கள்கிட்ட கட்டடத்தோட தரத்துக்கான அளவுகோளைச் சொல்லி அதற்குச் சேர்க்க வேண்டிய மூலப்பொருள்களோட தரத்தையும் அளவையும் விவரிச்சு அதன்படி கட்டுனா கட்டடம் தரமா இருக்கும். அந்த மூலப் பொருள் எங்க கெடச்சாலும் வாங்கிப் பயன்படுத்துங்கனு சொல்றோம். அவங்களுக்கு வேணும்னா, அந்தப் பொருளை எங்ககிட்ட வாங்கிக்கலாம்னு சொல்றதால, அவங்க எங்க பொருளை நிர்ப்பந்தம் இல்லாம வாங்குறாங்க.

நடைமுறைல பெரிய கட்டடத்துக்கு அரசாங்க டென் டருக்கு, தனியார் நிறுவனக் கட்டடங்களுக்கு மணல் மற்றும் ஜல்லி வாங்கணும்னா ஐ.எஸ்.ஐ தரச்சான்றிதழ் கட்டாயம். தொழிலுக்காகவும் அலுவலகத் துக்காவும் கட்டுற கட்டடம் நீண்ட காலத்துக்கு இருக்கணும்னு வாங்குறப்ப ஏன் சர்ட்டிஃபிகேட் பார்த்து வாங்கக்கூடாது என்கிறதுதான் என் கேள்வி.

இந்த மாதிரி தரச் சான்றிதழோட பொருளை விற்கிறப்ப விலை கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும். ஆனா, பில் இல்லாம தரம் குறைஞ்ச பொருளை வாங்கி வீடு கட்டினா, அஞ்சு வருஷத்துக்கு உள்ளேயே விரிசல், வெடிப்பு வந்துடும். பிறகு, அதைச் சரிசெய்ய எக்கச்சக்கமா செலவு செய்ய வேண்டியிருக்கும்’’ என்று சொல்லும் சிவக்குமார், இவர் விற்கும் எம்-சாண்டையும் ஜல்லி யையும் வாங்க ஒரு ஆப்பை வைத்திருக்கிறார். இந்த ஆப் மூலம் நமக்கு வேண்டிய மணல், ஜல்லியை வாங்கலாம். அப்படி வாங்கினால், பொருள் வருகிற டிரக் நம்பர், டிரைவர் போன் நம்பர், டிரக் வருகிற பாதை, டெலிவரி ஆகும் நேரம் என எல்லாவற்றையும் பார்க்க முடியுமாம்!