Published:Updated:

அலுவலக ஊழியர்களின் வேலைத்திறனைக் குறைக்கும் ஆபீஸ் மீட்டிங்குகள்! என்னதான் தீர்வு?

ஆபீஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆபீஸ்

M B A B O O K S

எது உங்களை எந்தவொரு வேலையையும் சிறப்பாகச் செய்யவிடாமல் தடுக்கிறது என்ற கேள்விக்கு நேர்மை யான பதிலைத் தனக்குக் கீழே பணிபுரிபவர்களிடம் ஒரு நிறுவனத்தின் தலைவர் கேட்டுத் தெரிந்துகொள்ள முயன்றார்.

வீணாகும் பொன்னான நேரம்...

‘நாம் போடுகிற மாதாந்தர ஸ்ட்ராட்டஜி ரிவ்யூ கூட்டம் தேவையா?’ என்று கேட்டார். அத்தனை பேருமே ‘அது தேவை யில்லை’ என்று கோரஸாகச் சொன்னார்கள். ‘ஓ.கே. உங்களுக்கு அது தேவையில்லை என்றால், எனக்கும் தேவையில்லை’ என்று சொல்லிவிட்டார் அவர்.

எதனால் இந்த விதமான கோரஸான பதில் வந்தது என்று பார்த்தால், மாதாந்தர ஸ்ட்ராட்டஜி ரிவ்யூ மீட்டிங்குக்குத் தயார் செய்வதற்கே எக்கச்சக்கமான நேரத்தை அந்தக் குழுவினர் செலவிட்டு வந்தனர் என்பதுதான். உயர்பதவி வகிக்கும் அதிகாரிகள் 40 பேர் சராசரியாக ஒவ்வொருவரும் மூன்று மணி நேரம் செலவிட்டுக்கொண்டிருந்தனர். இது தவிர, பல இடைநிலை உயரதிகாரி களிடத்தில் பேச்சுவார்த்தை, எக்கச் சக்கமான பவர்பாயின்ட் ஸ்லைடுகள் (இதில் பாதியை யாரும் கவனிக்கவே மாட்டார்கள்!), அதற்கான டேட்டாக்களை நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்து கேட்டுப் பெறுவதற்கான கால அவகாசம் எனப் பலரும் இந்த மாதாந்தர ஸ்ட்ராட்டஜி ரிவ்யூ மீட்டிங்குக்காகத் தங்களுடைய பொன்னான நேரத்தைச் செலவிட்டு வந்தனர். கூட்டிக் கழித்து கணக்கு பார்த்தால், இந்த உப்புசப்பில்லாத மாதாந்தர ஸ்ட்ராட்டஜி ரிவ்யூ மீட்டிங்குக்கு ஆண்டொன்றுக்கு மூன்று மில்லியன் டாலர்கள் அளவிலான செலவை நிறுவனம் செய்துகொண்டிருந்தது.

ஆனால், பாஸ் சொல்லிவிட்டாரே என்ற ஒரே காரணத்துக்காக நிர்வாகிகள் வேறு வழியில்லாமல் செய்துவந்தனர். இதேபோன்று நிறுவனத்தினுள் இருக்கும் பட்ஜெட், அப்ரூவல், பல்வேறு பணிநிலை அடுக்குகள், (structure) பல்வேறு நடைமுறைகள் போன்றவை எந்த அளவுக்கு சிறப்பான செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டை போடுவதாக இருக்கும் என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறது ‘Brave New Work: Are You Ready to Reinvent YourOrganization?’ என்ற இந்தப் புத்தகம்.

ஆபீஸ்
ஆபீஸ்

தரமான சம்பவங்கள் சாத்தியமா..?

இந்த மாதிரியான வீணான விஷயங்கள் மூலம் ஏற்படும் விளைவுகள் எப்படி இருக்கும் எனில், நம் இரண்டு கைகளையும் பின்னால் கட்டி வைத்துவிட்டு சிறப்பான, தரமான சம்பவங்களை செய்யச் சொன்னால் எவ்வளவு கேலிக்கூத்தாக இருக்குமோ, அப்படிக் கேலிக்கூத்தாக இருக்கும் என்கிறார் புத்தக ஆசிரியர்.

உதாரணத்துக்கு, என்ன வேலையை எப்படிச் செய்யவேண்டும் என்பதை முடிவு செய்ய போடப்படும் மீட்டிங்குகளில் கலந்துகொள்ளவே, அனைவரின் கையில் இருக்கிற நேரமும் போய்விட்டால், அவ்வளவு நேரம் செலவழித்து கண்டுபிடித்த வழிகளில் அவர்கள் வேலை செய்ய நேரமேயில்லாமல் போய்விடுவதைப் பற்றி பலரும் கவலையேபடுவதில்லை என்கிறார் ஆசிரியர்.

குறிப்பாகச் சொன்னால், நம் வேலையை முடிப்பதற்குத் தேவை யான நேரம் நம்மிடம் இருக்காது. ஆனால், முடிவேயடையாத மீட்டிங்குகளில் நாம் பங்கெடுத்துக் கொண்டேயிருப்போம். நமக்குத் தேவையான மாதிரியான நிலையில் தகவல்கள் எதுவும் நமக்குக் கிடைக்காது. ஆனால், எக்கச்சக்கமான இ-மெயில்களின் குவியலுக்குள் நாம் புதையுண்டு சிக்கித் தவிப்போம். வேகமாகவும் புதுமையாகவும் உள்ள நடவடிக்கைகளை நிறுவனம் செய்ய வேண்டும் என நாம் நினைப்போம்.

ஆனால், சொந்தத்தில் நாமாக ரிஸ்க் எதுவுமே எடுக்காமல் இருந்து கொண்டும், நம்மிடம் இருக்கும் சிறந்த நபர்களை ரிஸ்க் எடுக்க விடாமல் தடுத்தும் கொண்டிருப்போம். ஒரு குழுவாகத்தான் நாம் வேலை செய்கிறோம் என்று உரக்கச் சொல்லிக் கொண்டு, வேலை செய்தபோதிலும் ஒருவரை ஒருவர் எள்ளளவும் நம்பாமலேயே வேலை செய்வோம். நாம் வேலை செய்யும் விதம் சரியான விதமல்ல என்பது நமக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தபோதிலும், மாற்று வழியில் வேலை செய்வது குறித்து நம்மால் சிந்தித்துப் பார்க்கக்கூட முடியாத நிலையில் இருப்போம்.

மாற்றம் வேண்டும் என்று நாம் மனதார நினைப்போம். ஆனால், அதை எப்படிக் கொண்டுவருவது என்பதுதான் நமக்குத் தெரியாது. இன்றைய சூழலில் நாம் செயல்பட்டுவரும் பொருளாதாரம், அரசாங்கம், சமுதாயம் போன்றவை இயங்கும் முறைமை சார்ந்த சவால்களே நம்மை மாறவிடாமல் தடுக்கின்றன. இந்தவித மரபு சார்ந்த நடைமுறைகளைக் கொண்ட நிறுவனங்களே நவீன உலகைக் கட்டமைப்பதாக இருக்கின்றன.

மாறாத மேலாண்மை...

உலகத்தில் எல்லாம் மாறிவிட்ட போதிலும் நிர்வாக மேலாண்மையின் வடிவம் பெரும்பாலான நிறுவனங்களில் மாறாமலேயே இருக்கிறது. இது எல்லாருக்குமே தெரிந்தாலும் அமைதியாக இருக்கிறோம். ஏனென்றால், கம்ப்யூட்டரில் இருக்கும் ஆபரேட்டிங் சிஸ்டம் போன்றது இது. அமைதியாக ஓடிக்கொண்டிருப்பது. ஆனால், இந்த அஸ்திவாரத்தின் மேலேதான் நாம் சாதிக்க நினைக்கும்/கனவு காணும் அத்தனை விஷயங்களும் கட்டமைக்கப் பட வேண்டியுள்ளது.

இதை ஓர் உதாரணத்துடன் பார்த்தால், இன்னும் தெளிவாகப் புரியும். வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் இடங்களில் குறுக்குச் சாலைகள் வரும் இடத்தில் என்ன செய்கிறோம்..? மனிதர்கள் பாதுகாப்பாக வாழ நினைப்பவர்கள். வாகனங்களை அனுசரித்துப் பார்த்துப் பார்த்து போய்க்கொள்வார்கள் என்று நினைத்து விட்டுவிடுகிறோமா என்ன? அப்படி விட்டுவிட்டால் டிராஃபிக் ஜாம் மற்றும் விபத்துகள் பெருகிவிடும் என்பதால், சிக்னல்களை நிறுவுகிறோம். சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறம், திரும்புவதற்கான வரை படங்களுடன்கூடிய சிக்னல்கள், எச்சரிக்கை செய்ய அணைந்து எரியும் விளக்குகள் என சிக்னல்கள் பலவிதமாக உருவெடுத்து இன்றைக்கு சிக்னலில் நின்றே நமக்கு பொழுது போய்விடுகிறது இல்லையா?

இதற்கு ஏதேனும் மாற்று ஏற்பாடு உண்டா என்றால், ரவுண்டானா என்று ஒன்று இருக்கிறது. ரவுண்டானா எனும் நடைமுறை மனிதர்கள் பார்த்து, கவனமாக இருந்து, ஒருவருக் கொருவர் சேதம் ஏற்படுத்தாமல் சென்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அமைக்கப்படும் ஒரு விஷயம் இல்லையா?

இந்த இரண்டில் எது சிறந்தது? எது அதிக அளவிலான டிராஃபிக்கை சுமுகமாகக் கையாள வல்லது? எதைக் குறைந்த பொருள் செலவில் பராமரிக்க முடியும்? மின்சாரம் இல்லா விட்டாலுமே எது சுமுகமாக செயல்படும் என்ற கேள்விகளுக்கு சரியான விடை ரவுண்டானா என்பதுதானே? ஆனாலும் சிக்னல்களைப் பயன் படுத்துவதையே செளகர்யமாக நாம் கருதுகிறோம் இல்லையா என்று கேட்கிறார் ஆசிரியர்.

இதுவேதான் நிறுவனங்களின் நிலையும். நடைமுறையில் இருக்கும் சிக்னல் இடைஞ்சல் என்று தெரிந்தும் அதைப் பயன் படுத்துவதைப் போலவேதான் நிறுவனங்களும் நடைமுறைகள், கொள்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்ற வற்றைக் கடைப்பிடிப்பதில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றன. அப்படிக்கூட சொல்லக் கூடாது. இவை யெல்லாம் நம்மை நாம் நினைக்கும் நிலைக்குக் கொண்டு செல்லத் தடையாக இருக்கின்றன என்பதுகூடத் தெரியாமல் இருக்கின்றன என்கிறார் ஆசிரியர்.

புத்தகம்
புத்தகம்

புத்தகத்தின் பெயர்: BRAVE NEW WORK – ARE YOU READY TO REINVENT YOUR ORGANIZATION ?        ஆசிரியர்:   AARON DIGNAN                                பதிப்பாளர்: Portfolio Penguin

எழும் கேள்விகள்...

எப்போது உங்கள் நிறுவனம் இந்தவித கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் தானாகவே இயங்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? உங்கள் நிறுவனத்தில் நீங்கள் எந்தவித ஆர்டரையும் போடாமல் அவை இயங்கினால் எப்படி இருக்கும்? பட்ஜெட், அடுத்த காலாண்டின் ஃபர்பாமன்ஸ் என்ற கவலை ஏதும் படாமல், அந்தந்த இடத்தில் இயங்கிக் கொண்டிருப் பவர்களே அதை யெல்லாம் சரிவரச் செய்தால் எப்படி இருக்கும் என்பது போன்ற கேள்வி களெல்லாம் உங்களுக்கு வருகிறது இல்லையா?

இதெல்லாம் சாத்தியமா என்பீர்கள். உலகில் சில நிறுவனங்கள் ஏற்கெனவே இந்த நடைமுறையில் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. நிறுவன இயக்கத்தின் நடைமுறையை புரிந்துகொண்ட வரானால் உங்களால் மேலே சொன்ன பிரச்னைகளின் ஊடேயே வாழ வேண்டியிருக்கும் என்கிறார் ஆசிரியர்.

ஆராய வேண்டியவை...

நம்முடைய ஸ்ட்ராட்டஜி என்ன, என்னென்ன ரிசோர்ஸ்கள் நம்மிடம் இருக்கிறது, எந்த விதமான நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டும், எப்படி வேலை என்பது பிரிக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், எப்படி மீட்டிங்குகளை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நாம் எப்படி அலசி ஆராய வேண்டும் என்று சொல்கிறார் ஆசிரியர்.

மாற்றம் என்பது அனைவரின் தொடர் பங்களிப்பின் மூலமே நிறைவேறும் ஒன்று. மாற்றத்தைப் பொறுத்தவரை, முழுமை என்பது புதிதாகச் சேர்க்க ஒன்றுமில்லை என்ற சூழலில் வருவது இல்லை. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நம்பும் ஒரு கூட்டமே வெற்றிகரமான குழுவாகும் என்கிறார் ஆசிரியர்.

முழுமை என்பதைவிட முன்னேற்றம் என்பதே சிறந்தது என்பதையும், எச்சரிக்கையாக இருப் பதைவிட தைரியத்துடன் காரியங்களைச் செய்ய முயல்வதே சிறந்தது என்பதையும் புரிந்து கொண்டு செயல்படும் நாளே நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படும் நாளாகும் என்று முடியும் இந்தப் புத்தகத்தை சிறப்பான செயல்பாட்டை விரும்பும் அனைவரும் படிக்கலாம்.

பிட்ஸ்

ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் நடத்திய சிக்கலுக்கு உள்ளான ஆறு கடன் திட்டங்களில் உள்ள முதலீட்டாளர் களின் பணத்தை எப்படித் திருப்பித் தருவது என்பது பற்றி உச்ச நீதி மன்றம் வரும் 25-ம் தேதி விசாரிக்க இருக்கிறது!