Published:Updated:

தொழில் துறையினருக்கான 50:50 பட்ஜெட்டா..?

தொழில் துறை
பிரீமியம் ஸ்டோரி
தொழில் துறை

தொழில் துறை

தொழில் துறையினருக்கான 50:50 பட்ஜெட்டா..?

தொழில் துறை

Published:Updated:
தொழில் துறை
பிரீமியம் ஸ்டோரி
தொழில் துறை

தற்போது வந்திருக்கும் பட்ஜெட்டில் தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறி இருக்கிறதா என்பதை அறிய அந்தத் துறை சார்ந்த பலருடன் பேசினோம். அவர்கள் சொன்னதாவது...

‘‘அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்லும் பட்ஜெட் இது...’’

டாக்டர் எஸ்.சந்திரகுமார், தலைவர், சி.ஐ.ஐ, நிறுவனர் & செயல் தலைவர், காவேரி ஹாஸ்பிட்டல்ஸ்

“மத்திய அரசாங்கம் இந்த பட்ஜெட்டில் விவசாயம், திறன் மேம்பாடு, சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் விருந்தோம்பல் துறையில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறது. இது மாநிலங்களின் குறிப்பாக, தமிழகத்தின் பொருளாதார நிலையைப் பெரிதும் மேம்படுத்தும்.

பட்ஜெட்டில் தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள நதிகள் இணைப்புத் திட்டம், மாநிலத்தின் பாசன வசதியை அதிகரித்து, விவசாய உற்பத்தியை அதிகரிக்க உதவும்.

உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை, பி.எல்.ஐ திட்டத்துக்கான செலவின அதிகரிப்பு, மாநிலத்தில் உள்ள தொழில் களுக்கு உதவுவதுடன், அதிக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்கான அவசரகால கடனளிப்பு உத்தரவாதத் திட்டத்தின் (ECLGS) நீட்டிப்பு மற்றும் ரூ.5 லட்சம் கோடி ஒதுக்கீடு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறைக்குப் பெரிதும் பயன் அளிக்கும். மேலும், அதிகரித்த டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை மாநிலத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்களுக்கு நிச்சயமாகப் பயனளிக்கும். மேலும், பாதுகாப்புத் துறைக்கான 68% தளவாடங்களை உள்நாட்டில் கொள்முதல் செய் வதற்கான திட்டமும் வரவேற்கத்தக்க விஷயமாகும்.

இந்த பட்ஜெட் இந்தியாவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான பட்ஜெட். வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை இன்னும் சிறப்பாகச் செயல்பட வைக்க இந்த பட்ஜெட் நிச்சயம் உதவும்” என்றார் தெளிவாக.

தொழில் துறையினருக்கான 
50:50 பட்ஜெட்டா..?

‘‘கொங்கு மண்டலம் பயன் அடையும்..!’’

எம்.வி.ரமேஷ்பாபு, தலைவர், கொடீசியா.

“இந்த பட்ஜெட்டில் தொழில் துறை சார்ந்த அறிவிப்புகள் இருப்பதே எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. கோவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக தொழில்துறை மிகவும் பாதிப்படைந்துள்ளது. இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்புகளில் இருந்து இன்னும் தொழில் முனைவோர்களால் மீள முடியவில்லை. பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க நாங்கள் சலுகைகளைக் கேட்கவில்லை. ‘ஷார்ட் டேர்ம்’ கடன்களுக்கு பதிலாக, 5-7 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும்படியான ‘லாங் டேர்ம்’ கடன்களைக் கேட்டிருந் தோம். அதற்கான எந்த அறிவிப்பையும் இந்த பட்ஜெட்டில் எங்களால் பார்க்கமுடியவில்லை.

அதே போல, ஸ்டீல், காப்பர், காட்டன்கள் போன்ற உற்பத்திக் கான மூலப்பொருள்களை, மூலப்பொருள்களாக ஏற்றுமதி செய்வதைத் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத் திருந்தோம். அதற்கான அறிவிப்பும் இடம்பெறவில்லை. மூலப்பொருள்களாக ஏற்றுமதி ஆகாமல், அவற்றைக் கொண்டு பொருள்களைத் தயாரித்து அதை ஏற்றுமதி செய்யும்போது இங்குள்ள தொழில் துறையினர் பெரிதும் நன்மை அடைவார்கள். அதே போல, மூலப்பொருள்களுக் கான இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என்றும் கேட்டிருதோம். அதற்கான அறிவிப்பும் இல்லை. இதை எல்லாம் செய்திருந்தால், இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க தொழில் துறையினருக்கான பட்ஜெட் எனத் தாராளமாக சொல்லியிருக்கலாம்.

இதைத் தாண்டி, இந்த பட்ஜெட்டில் சில பாசிட்டிவ் அம்சங்கள் என்னவெனில், பாதுகாப்புத் தளவாடங்களை உள்நாட்டிலேயே 68% கொள் முதல் செய்யப்படும் என்று சொல்லியிருப்பது வரவேற்கத் தக்க விஷயம். இதனால் தமிழகத்தின் கொங்கு மண்டலம் பலன் பெறும். குறிப்பாக, கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு இதில் ஆதாயம் உண்டு” என்றார்.

டாக்டர் 
எஸ்.சந்திரகுமார், எம்.வி.ரமேஷ்பாபு, எம்.எஸ்.சம்பத்
டாக்டர் எஸ்.சந்திரகுமார், எம்.வி.ரமேஷ்பாபு, எம்.எஸ்.சம்பத்

‘‘ஜி.எஸ்.டி-யை இன்னும் எளிமைப் படுத்தாமல் இருப்பது ஏன்?’’

எம்.எஸ்.சம்பத், தலைவர், மடீசியா.

“தாக்கல் ஆகியிருக்கும் மத்திய பட்ஜெட், தொழில்துறை சம்பந்த மான பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் அம்சங்கள் நிறைந்த பட்ஜெட்டாகத்தான் வெளியாகி யிருக்கிறது.

போக்குவரத்து உள்கட்ட மைப்புக்காக சுமார் ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதன்மூலம் தொழில் துறையினர் நிச்சயமாகப் பலனடைவார்கள். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் மிகவும் முக்கியமான துறை சுற்றுலாத் துறை. இந்தத் துறைக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்க விஷயம். ஸ்டீல் ஸ்கிரேப்களில் (steel scrap) முதல் தரத்தை மட்டுமே வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், இந்த பட்ஜெட்டில் அனைத்துத் தரத்திலும் ஸ்டீல் ஸ்கிரேப்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இறக்குமதி வரியில் சலுகைகளும் வழங்கப்பட்டு இருப்பது நல்ல விஷயம்.

எண்ணெய் வித்துக்கள் அதிக அளவில் இறக்குமதி செய்வது குறைக்கப்பட்டு, உள்நாட்டில் உற்பத்தி அதிகரிக்கப்படும் என சொல்லியிருப்பதால், ஆயில் மற்றும் ஆயில் துறை சார்ந்த தொழில்முனைவோர்கள் பயன் பெறுவார்கள். இதனால் விவசாயிகளுக்கும் பலன் போய் சேரும். சூரிய ஒளி மூலம் மின்சார உற்பத்திக்கு ரூ.19,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 280 கிலோ வாட் மின்சார உற்பத்திக்கான இலக்கும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சோலார் பேனல்கள் தயாரிக்கும் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பயனடைவார்கள். அதே போல, சுயசார்பு திட்டத்தின்கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனச் சொல்லியிருப்பதையும் வரவேற்கலாம்.

நெகட்டிவ் அம்சங்கள் எனில், தனிநபர் வருமான வரிக்கான உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை. ஏனெனில், இந்த விஷயம் நேரடியாகத் தொழில்துறையைப் பாதிக்கும். சம்பளதாரர்களுக்கு வருமான வரி உச்ச வரம்பை அதிகப் படுத்துவதன் மூலம் அவர்களிடம் ஓரளவுக்குப் பணப் புழக்கம் அதிகரிக்கும். அந்தப் பணத்தை அவர்கள் பொருள்கள் வாங்குவது மற்றும் இதர வழிகளில் செலவு செய்வார்கள். இதனால் தொழில்துறை சார்ந்த வளர்ச்சி ஊக்கப்படுத்தப்படும். இதற்கான வழி இந்த பட்ஜெட்டில் வரவில்லை.

அடுத்ததாக, ஜி.எஸ்.டி வரி வசூலில் சாதனை படைத்திருப்பதாக மார்தட்டிக்கொள்ளும் மத்திய அரசு, அந்த வரி விதிப்பை இன்னும் எளிமைப்படுத்தாமல் இருப்பதும், அதற்கான விஷயங்களைச் சொல்லாமல் ஒவ்வொரு பட்ஜெட்டாக கடத்திக்கொண்டே போவதும் ஏற்புடையது அல்ல. அதேபோல, மூலப்பொருள்களுக்கான விலை கடந்த இரண்டு ஆண்டுகளில் 60% - 100% வரை அதிகரித்திருக்கிறது. இதற்கான விலை நிர்ணயத்தில் ஒரு வரையறையை ஏற்படுத்துவது மத்திய அரசின் கடமையாகும். அதற்கான அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை. அதே போல, மூலப்பொருளை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்யும் அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் வரவில்லை” என்றார் தெளிவாக.

ஆக, இந்த பட்ஜெட்டில் தொழில் துறையினருக்கு சாதகமான அம்சங்கள் பாதியும், பாதகமான அம்சங்கள் பாதியும் கலந்து 50 : 50 பட்ஜெட்டாக வந்திருப்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism