Published:Updated:

கொரோனா சூழலிலும் உங்கள் பிசினஸைத் தக்கவைக்க முடியும்..! நீங்கள் என்ன செய்ய வேண்டும்..?

பிசினஸ்
பிரீமியம் ஸ்டோரி
பிசினஸ்

B U S I N E S S

கொரோனா சூழலிலும் உங்கள் பிசினஸைத் தக்கவைக்க முடியும்..! நீங்கள் என்ன செய்ய வேண்டும்..?

B U S I N E S S

Published:Updated:
பிசினஸ்
பிரீமியம் ஸ்டோரி
பிசினஸ்

கடந்த சில மாதங்களாக தொழில்துறையை மீண்டும் முடக்கிப் போட்டிருக்கிறது கொரோனா இரண்டாம் அலை. சென்னையில் கடந்த 70 ஆண்டு காலமாகச் செயல்பட்டு வந்த விட்கோ நிறுவனம் அண்மையில் மூடப்பட்டிருக்கிறது. ‘‘கோவிட்-19 தொற்று மற்றும் அதனால் ஏற்பட்ட லாக்டௌனால் முடங்கிய வெளி நாட்டுப் பயணங்களின் தாக்கத்தால் இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல; எங்களால் இந்த தாக்கத்தைச் சமாளிக்க இயலாததால் எடுக்கப்பட்டது’’ என இந்த நிறுவனத்தின் உரிமையாளர் உருக்கமாக அறிக்கை விடுத்திருக் கிறார். எஃப்.எம்.சி.ஜி பொருள்கள் தயாரிப்பு தவிர, பிற துறைகள் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

இதுபோன்ற சூழலில் அதிக முதலீடு களுடன் இயங்கும் நிறுவனங்களுக்கு லாபத்தின் அளவு குறைந்திருக்கும். ஆனால், நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்துவதில் சிக்கல்கள் இருக்காது. ஆனால், சிறிய அளவிலான முதலீடுகளைக் கொண்டு செயல்படும் நிறுவனங்களால் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர முடியாத சூழல் இருக்கும். சிறிய நிறுவனங்கள் கொரோனா சிக்கலுக்குப் பிறகு, நிறுவனத்தை மூடுவது என்று முடிவெடுப்பதைவிட, தங்களின் பிசினஸைத் தக்கவைத்துக்கொள் வதற்கான எளிய வழிமுறைகளை விளக்குகிறார் மார்க்கெட்டிங் மற்றும் தொழில் நிறுவன ஆலோசகர் சக்திவேல் பன்னீர்செல்வம்.

விட்கோ
விட்கோ

வொர்க் ஃப்ரம் ஹோம்...

‘‘கொரோனா சூழலில் பணியாளர் களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் கொடுப்பது பாதுகாப்பானது. அவசியம் ஏற்படும் சூழலில் மட்டும் சில பணியாளர்களை அலுவலகத் துக்கு வரச் சொல்லலாம்.

பணியாளர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் கொடுத்த பிறகு, பணியாளர்களின் பணிகளைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். எனவே, அதற்குரிய தலைமையை நிர்ணயுங்கள்.

பணியாளர்களுக்கு வேலைகளை வாய் வழியாகச் சொல்லாமல், ‘remember the milk’ போன்ற ஆப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி டாஸ்க்குகள் கொடுக்கலாம். டாஸ்க் கொடுக்கும்போதே, அதை முடித்து கொடுக்க வேண்டிய நாள், தர வேண்டிய முன்னுரிமை போன்ற தகவல்களையும் அதில் அப்டேட் செய்துவிடுங்கள்.

வீட்டிலிருந்து வேலை செய்யும்போது பணியாளர்கள் சரியாகத்தான் வேலை பார்க்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ள குழுவில் இருக்கும் அனைவருக்கும் சேர்ந்து ஒரு கூகுள் ஷீட் தயாரித்து, அன்றாடம் அவர்கள் செய்த பணிகளை அந்த ஷீட்டில் நிரப்பச் சொல்லலாம். அதனால் பணிகள் சரியாக நடக்கிறதா என்பதை எளிதாகக் கண்டறிய முடியும்.

பிசினஸ்
பிசினஸ்

வலுவான குழு கட்டாயம் தேவை...

சூழல் இயல்பான பிறகு, நிறுவனத்தை சிறப்பாக நடத்த வலுவான குழு கட்டாயம் தேவை. எனவே, சிறப்பான பணியாளர்களை எதற்காகவும் இழந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள். ஊழியர்களிடம் பேசி, சம்பளத்தைக் குறைக்கலாம் அல்லது சில மாதங்கள் ஃப்ரீலான்சர்களாகப் பணியாற்றும் படி கேட்கலாம்.

இப்போதைக்கு இருக்கும் சூழலைச் சமாளிக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்கிறீர்கள் எனில், மீண்டும் இந்த நெருக்கடியான சூழல் சரியான பிறகு, புதிய நபர்களை வேலைக்கு எடுத்து, பயிற்சி வழங்கி, நிறுவனத்தின் வேகத்துக்கு ஏற்ப அவர்களை இயங்க வைப்பது மிகவும் சிரமம். எனவே, ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதைக் கூடுமானவரைத் தவிர்த்து சூழலைச் சமாளியுங்கள்.

பணியாளர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் இன்ஷூரன்ஸ்கள் எடுத்துக்கொடுக்கலாம். இதனால் பணியாளர்களுக்கு நிறுவனத்தின் மீது கூடுதல் அக்கறை வரும். மேலும், ஏதேனும் இழப்புகள் ஏற்பட்டாலும் நிதிப்பிரச்னையை எளிதாகச் சமாளிக்க இயலும்.

செலவுகளைக் குறைக்கலாம்...

நிறுவனத்தின் லாபம் முக்கியம் என்றாலும், நிறுவனத்தின் செலவைக் குறைப்பதன் மூலமும் இந்தச் சூழலை நாம் எளிதில் கையாள முடியும். அதற்காகப் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் பிசினஸ் செய்யும் இடம் வாடகைக் கட்டடம் எனில், வாடகை யைக் குறைக்கச் சொல்லிக் கேட்கலாம். ஆன்லைன் சார்ந்து இயங்கும் நிறுவனம் எனில், இப்போதைக்கு வாடகைக் கட்டடத்தைக் காலி செய்யலாம்.

உங்கள் நிறுவனத்தில் என்ன செலவுகள் இருக்கின்றன என்பதை முதலில் பட்டியலிடுங்கள். அதிலிருந்து அவசியமில்லாத செலவுகளை முடிந்த வரை தவிர்க்கலாம். இவற்றைச் செய்தும் நிறுவனத்தை நடத்துவதில் தொடர்ந்து சிக்கல் இருக்கிறது எனில், பணியாளர்களிடம் பேசி, சில பணியாளர்களை நிறுவனத்திலிருந்து சில மாதங்கள் நிறுத்தி வைத்து, சூழல் சரியானதும் மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம். பணியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட குறைந்த அளவு ஊதியத்தை அவர்களின் பங்களிப்புக் கேற்ப வழங்கலாம்.

சக்திவேல்  
பன்னீர் செல்வம்.
சக்திவேல் பன்னீர் செல்வம்.

கொரோனா சார்ந்த மாற்றம்...

உங்களின் நிறுவனத்துக்கு என்று ஒரு பிசினஸ் மாடல் இருந்திருக்கும். அதே பிசினஸ் மாடலுடன் இந்தச் சூழலில் இயங்குவது சிரமம். எனவே, உங்களின் பிசினஸ் மாடலையும் இலக்குகளையும் மாற்றி அமைக்க வேண்டும். இது போன்ற பேன்டமிக் சூழலில் லாபத்தின் அளவை அதிகரிப்பதை இலக்காகக் கொண்டு செயல்படாமல், நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்துவதை இலக்காக அமைக்க வேண்டும்.

உங்கள் பிசினஸை கொரோனா சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றலாம். உதாரணமாக, நீங்கள் ஒரு கேட்டரிங் வைத்து பிசினஸ் செய்து வருகிறீர்கள் எனில், வழக்கமான மெனு இல்லாமல், கொரோனா சூழலுக்கேற்ப நியூட்ரிஷியன் நிறைந்த உணவுகளைத் தனிமைப்படுத்தப் பட்டிருக்கும் வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்யலாம். இதனால் நிறைய புதிய வாடிக்கையாளர்களும் கிடைப்பார்கள்.

தெரியாத தொழிலில் இறங்காதீர்கள்...

ஒவ்வொரு சீஸனுக்கும் ஒரு வகையான தொழில் டிரெண்ட் ஆகும். அதேபோன்று இந்த கொரோனா சூழலில் மாஸ்க், சானிடைசர், பல்ஸ் ஆக்ஸி மீட்டர் போன்ற தொழில்கள் டிரெண்டிங்கில் உள்ளது. நீங்கள் ஏற்கெனவே தையல்துறை சார்ந்தவர் எனில், மாஸ்க்கைத் தயாரிக்கும் பணியைக் கையில் எடுக்கலாம்.

பினாயில், கிருமி நாசினிகள் தயாரிக்கும் உற்பத்தி நிறுவனம் எனில், சானிடைசர் தயாரிக்கலாம். ஆனால், இது போன்று இணைத் தொழில்களில் அனுபவம் இல்லாதவர்கள் டிரெண்டில் இருக்கிறதே என்று உங்களின் தொழிலை மாற்றி அமைக்காதீர்கள்.

ஆன்லைன் பிசினஸ்...

பிசினஸில் நிறைய புது முயற்சிகள் எடுக்க பொருத்தமான நேரம் இது. உங்கள் தொழில் எது சார்ந்து இருந்தாலும் ஆன்லைனில் மாற்ற முயற்சி செய்யுங்கள். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், இணையதளம் என எல்லாவற்றிலும் பக்கங்கள் தொடங்கி, அதன்மூலம் வாடிக்கையாளர்களைப் பெறலாம். வாடிக்கையாளர் களின் தொடர்பு எண்களைச் சேகரியுங்கள்.

உங்களிடம் இருக்கும் ஒவ்வொரு தொலை பேசி எண்ணும் உங்கள் பிசினஸின் அடுத்தகட்ட வளர்ச்சி என்பதை நினைவில் கொண்டு, புதுமை யான மார்க்கெட்டிங் முறை களைக் கடைப்பிடியுங்கள்.

புதிய பிசினஸ் தொடங்குபவர்கள் கவனத்துக்கு...

தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள், அவசர அவசரமாக முதலீடு செய்யாமல், தொழில் துறையைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதன் மூலம் புதிய தொழில்நுட்பங் களையும், புதிய உத்திகளையும் கற்றுக்கொள்ள முடியும். புதிய வாய்ப்புகள் எங்கிருந்து வேண்டுமானாலும் உருவாகலாம். இணையத்தைப் பயன்படுத்தி ஆப்ளிகேஷன்கள் மூலம் மேற்கொள்ளும் தொழில்கள் ஒருபுறம் வளர்ந்து வர, இன்னொரு புறம் அடிப்படைத் தேவை களுக்கான பொருள் விற்பனையும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

உங்களுடைய தொழில் அடிப்படைத் தேவைகள் சார்ந்ததா, தொழில்நுட்பம் சார்ந்ததா என்பதை முதலில் முடிவு செய்துகொள்ள வேண்டும். உங்களின் வாடிக்கையாளர்கள் யார், எவ்வளவு முதலீடு செய்யப் போகிறீர்கள், கடனுதவி எவ்வளவு கிடைக்கும் என்பதைத் திட்ட மிட்டுச் செயல்படுத்துவதன் மூலம் எளிதில் வெற்றி காணமுடியும்.

எல்லாரும் பிசினஸ் தொடங்குவதைப் பார்த்து நானும் தொடங்குகிறேன், இப்போது குடும்பம் இருக்கும் நிலையில் வேறு வழியில்லாமல் தொடங்குகிறேன் என பிசினஸ் தொடங்கக் கூடாது. நீங்கள் தொடங்கும் தொழில் பற்றித் தெளிவான புரிந்துகொள்ளலை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள். அதில் உள்ள நுணுக்கங்களை அறிந்து வைத்திருப்பது அவசியம்’’ என்று முடித்தார் சக்திவேல் பன்னீர் செல்வம்.

கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு ஏறக்குறைய முடிவடையும் நிலையில், இந்த யோசனைகள் உங்களுக்கு நிச்சயம் பயன்படும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism