Published:Updated:

நாணயம் பிட்ஸ்...

நாணயம் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் பிட்ஸ்

பொருளாதாரச் சுணக்கம், கொரோனோ காரணமாக நேரடி வரி வசூலில் கணிசமாகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது!

ஊரடங்கு... வாராக்கடன் அதிகரிக்கும் அபாயம்!

வங்கி
வங்கி

21 நாள் ஊரடங்கு உத்தரவால் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் ரூ.15 லட்சம் கோடி வசூலாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. என்.டி.பி.சி நிறுவனம் ரூ.1.48 லட்சம் கோடியும், பவர்கிரிட் நிறுவனம் ரூ.1.37 லட்சம் கோடியும், டாடா ஸ்டீல் நிறுவனம் ரூ.1.02 லட்சம் கோடியும் கடன் வாங்கியுள்ளன. இவை தவிர, டாடா மோட்டார்ஸ் ரூ.95,465 கோடியும், அதானி பவர் மற்றும் டாடா பவர் நிறுவனங்கள் தலா ரூ.48,000 கோடியும் கடன் வாங்கியிருக்கின்றன. 2019-20-ம் நிதியாண்டில் பல ஆயிரம் கோடி ரூபாயை வட்டியாகவும் செலுத்தியுள்ளன. ஆனால், இப்போது கொரோனா காரணமாகத் தொழில் முடக்கம் ஏற்பட்டிருப்பதால், இந்த நிறுவனங்கள் கடந்த ஆண்டு சரியாக வட்டி செலுத்தியதுபோல இந்த ஆண்டும் செலுத்துமா, கடன் தொகை முழுவதும் உரிய காலத்தில் வந்து சேருமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

#கொரோனாவால் வங்கிகளின் வாராக்கடன் உயரப்போவது நிச்சயம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பி.எஸ் 4 வாகனம்... 10 நாள்கள் அவகாசம் போதாது!

பி.எஸ் 4 வகை கார்
பி.எஸ் 4 வகை கார்

`பி.எஸ் 4 வகை கார்களை மார்ச் மாதம் 31-ம் தேதிக்குமேல் விற்கக் கூடாது’ என்ற முடிவை ஏப்ரல் 10-ம் தேதி வரை தள்ளிவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. `இந்த 10 நாள் தள்ளிவைப்பால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை’ என்று கேர் ரேட்டிங் நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. `நாடு முழுக்க தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், இப்போது கார் வாங்க யாரும் வெளியே வர முடியாது. இந்த நிலையில், விற்காமல் இருக்கும் பல ஆயிரம் பி.எஸ் 4 கார்களை இந்த 10 நாள்களுக்குள் விற்று முடிக்க வாய்ப்பில்லை. தவிர, ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு பலரும் உற்சாகமாகக் கிளம்பி வந்து கார்களை வாங்குவார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது’ என்று அந்த நிறுவனம் கருத்து தெரிவித்திருக்கிறது.

#விற்காத கார்களை விற்க உச்ச நீதிமன்றம் மீண்டும் கால அவகாசம் தருமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நேரடி வரி வசூல் ரூ.1.50 லட்சம் கோடி பற்றாக்குறை!

வரி வசூல்
வரி வசூல்

பொருளாதாரச் சுணக்கம், கொரோனோ நோய்ப் பரவல் காரணமாக மத்திய அரசின் நேரடி வரி வசூலில் கணிசமான அளவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. `2019-20-ம் நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ.10.5 லட்சம் கோடி முதல் ரூ.10.7 லட்சம் கோடி வரை இருக்கும்’ என முதலில் மதிப்பிடப்பட்டது. பிறகு, `ரூ.11.7 லட்சம் கோடி நேரடி வரி வசூல் திரட்ட வேண்டும்’ என்று மறு மதிப்பீடு செய்தது நிதி அமைச்சகம். ஆனால், ஊரடங்கு உத்தரவால் இந்த இலக்கை எட்ட முடியாத சூழல் தற்போது உருவாகியிருக்கிறது. தற்போதிருக்கும் நிலைமையின்படி, `ரூ.1.5 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்படும்’ என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகூட உத்தேசமான மதிப்பீடுதான். ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகுதான் பற்றாக்குறை குறித்த சரியான விவரங்கள் கிடைக்கும்.

#நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாவம்தான்!

ஊரடங்கு முடக்கம் தேவைதானா?

ராஜிவ் பஜாஜ்
ராஜிவ் பஜாஜ்

கொரோனா தொற்றுநோய் பயம் எல்லா மக்களையும் வாட்டி வதைக்கும் நிலையில், `மத்திய அரசாங்கம் அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு மிகவும் முக்கியம்’ என எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க, இதற்கு நேரெதிரான கருத்தைத் தெரிவித்திருக்கிறார் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜிவ் பஜாஜ். ‘‘கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகிறவர்களில் 99% பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான். இவர்களை மட்டும் வீடுகளில் இருக்கச் செய்துவிட்டு, மற்றவர்களை வழக்கம்போல இயங்க அனுமதித்திருக்கலாம். இந்த ஊரடங்கு உத்தரவை சீக்கிரம் முடிவுக்குக் கொண்டு வருவதுதான் புத்திசாலித்தனம்’’ என்று சொல்லியிருக்கிறார் அவர். தன்னுடைய கருத்தை மறைக்காமல் சொல்பவர் ராஜிவ் பஜாஜ். அவரின் இந்தக் கருத்துக்கும் வழக்கம்போல ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கின்றன!

#மாற்றுக்கருத்து இருப்பதில் தவறில்லையே!

கொரோனா ஒழிப்பு... நிதியை அள்ளித்தரும் நிறுவனங்கள்!

நிதி திட்டம்
நிதி திட்டம்

கொரோனா ஒழிப்புக்காக பிரதமர் மோடி அறிவித்திருக்கும் ‘பிஎம் கேர்ஸ்’ திட்டத்துக்குத் தொழில் நிறுவனங்கள் நிதியை அள்ளி வழங்குகின்றன. டாடா ரூ.1,500 கோடியும், ரிலையன்ஸ் ரூ.1,000 கோடியும், எல் அண்ட் டி ரூ.150 கோடியும், டி.வி.எஸ் ரூ.25 கோடியும், எரிபொருள் விநியோகம் செய்யும் அரசு நிறுவனங்கள் ரூ.1,000 கோடியும் நன்கொடை தந்துள்ளன. `இந்தத் திட்டத்துக்குத் தரப்படும் நிதி ‘கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி’ (CSR) திட்டத்தின்கீழ் சேரும்’ என்று மத்திய அரசு அறிவித்திருப்பதால், சி.எஸ்.ஆருக்குச் செய்ய வேண்டிய செலவை இந்தத் திட்டத்துக்கு நிறுவனங்கள் நன்கொடையாக அளிக்கின்றன.

#கலக்கல் கார்ப்பரேட்ஸ்!

ஊரடங்கு... குறைந்துபோன மின்சாரத் தேவை!

கடந்த இரு வாரங்களாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால், மின்சாரத்துக்கான தேவை நாடு முழுக்கவே குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா முழுக்க 41,037 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்கு இந்தியாவில் 16,724 மெகாவாட் மின் உற்பத்தியும், வட இந்தியாவில் 13,143 மெகாவாட் மின் உற்பத்தியும், தென் இந்தியாவில் 9,740 மெகாவாட் மின் உற்பத்தியும், கிழக்கு இந்தியாவில் 1,430 மெகாவாட் மின் உற்பத்தியும் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.2.90-லிருந்து ரூ.2.40-ஆகக் குறைந்திருக்கிறது.

#வீடுகளுக்கான மின் கட்டணத்தை அரசாங்கம் குறைக்குமா..?

கொரோனா... கார் உற்பத்தி டு வென்டிலேட்டர் தயாரிப்பு!

வென்டிலேட்டர்
வென்டிலேட்டர்

நாம் நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே கார் விற்பனை குறைந்துவருகிறது. இந்த நிலையில், கொரோனாநோய் பயம் வந்து, எல்லோரையும் வீட்டுக்குள் முடக்கிவிட்டது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் செயற்கையான முறையில் சுவாசிக்க உதவும் வென்டிலேட்டர்கள் அதிக அளவில் தேவைப்பட்டன. இந்த வென்டிலேட்டர்களை கார் தயாரிக்கும் நிறுவனங்கள் எளிதாகத் தயாரிக்க முடியும் என்பதால், இப்போது எல்லா கார் தயாரிப்பு நிறுவனங்களும் முடிந்த அளவு வென்டிலேட்டர்களைத் தயாரித்துவருகின்றன. `மாற்றி யோசித்தால் எல்லா நிறுவனங்களுக்கும் தொழில் உண்டு’ என்பதையே கார் நிறுவனங்களின் இந்த நடவடிக்கை நமக்கு உணர்த்துகிறது.

#வித்தியாசமாக யோசித்து செயல்படும் கார் நிறுவனங்களை நிச்சயம் பாராட்டலாம்!