ஜீவகணேஷ்
தொழில்துறையில் வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது நம் தமிழகம். இந்த வளர்ச்சியைத் தெளிவாக எடுத்துச் சொல்கிற மாதிரி சென்னையில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய் திருந்தார் ‘இண்டஸ்டிரியல் எக்னாமிஸ்ட்’ ஆங்கில இதழின் ஆசிரியர் விஸ்வநாதன்.
‘டர்போசார்ஜ்ட் தமிழ்நாடு’ (Turbocharged Tamilnadu) என்னும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கருத்தரங்கை மாரத்தான் செமினார் என்றே சொல்லலாம். காரணம், ஒரே நாளில் ஏழு அமர்வுகளில் 20 முக்கிய பேச்சாளர்கள் பேசும்படி இந்தக் கருத்தரங்கை அவர் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தக் கருத்தரங்கின் முதல் அமர்வில் பேசிய தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ் குமார் பன்சால், ‘‘நான் மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்குச் சென்றுள்ளேன். அந்த மாநிலங்களைவிட தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கிராமங்களிலும் மின்சாரம் எப்போதும் கிடைக்கிறது’’ என்றார். தமிழக வளர்ச்சிக்கான ஆலோசனைக் குழு உறுப்பினராக இருக்கும் டாக்டர் எஸ்.நாராயண் ஐ.ஏ.எஸ், ‘‘அடுத்த 10 ஆண்டுக்குள் தமிழ்நாட்டிலும் கூட்டு வருடாத்தர வளர்ச்சி விகிதம் அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.
டி.வி.எஸ் கேப்பிடல் நிறுவனத்தின் தலைவர் கோபால் ஶ்ரீநிவாசன், செலிரிஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சுமந்திரன், ஐ.ஐ.டி ஆராய்ச்சி பூங்கா இயக்குநர் டாக்டர் அசோக் ஜுன்ஜுன்வாலா உட்பட பலரும் பேசினார்கள். தொழில்துறையில் தமிழகம் இன்னும் பெரும் வளர்ச்சியை அடைய வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு!