Published:Updated:

தொழில் பழகுவோம் வாங்க... இனி நீங்களும் பிசினஸ்மேன்தான்!

தொழில் பழகுவோம்
பிரீமியம் ஸ்டோரி
தொழில் பழகுவோம்

புதிய தொடர் - 1

தொழில் பழகுவோம் வாங்க... இனி நீங்களும் பிசினஸ்மேன்தான்!

புதிய தொடர் - 1

Published:Updated:
தொழில் பழகுவோம்
பிரீமியம் ஸ்டோரி
தொழில் பழகுவோம்

மக்கள் தொகை உயர்வுக்கேற்ப நம் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது. வேலைக்குச் செல்லும் பலருக்கும், தங்களின் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காதது, பணியிட பிரச்னைகள் உட்பட பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. இதற்கெல்லாம் சுயதொழில் வாய்ப்புகளே தீர்வாக அமைகின்றன. இட்லிக்கடை நடத்துவதில் தொடங்கி உற்பத்திப் பொருள்களை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்வது வரை சுயதொழில் களுக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

ஆனால், ஒருவருக்கு ஏற்றம் தந்த தொழில், மற்றொருவருக்கும் வெற்றியைத் தரும் எனக் கூற முடியாது. தொழில் தொடங்கிய இடம், வாடிக்கையாளர்கள், தொழிலில் கையாண்ட உத்திகள், நிதி விஷயங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளும் இணைந்தே நமது தொழிலுக்கான வளர்ச்சியை உறுதிசெய்கின்றன. எனவே, நமக்குப் பொருத்தமான தொழிலைத் தேர்வு செய்வதுதான் மிக மிக முக்கியமானது.

தொழில்முனைவோர்களின் எண்ணிக்கைக் கணிசமாக அதிகரித்தால், புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்; பணப்புழக்கம் அதிகரிக்கும்; உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்; அந்நியச் செலாவணி உயரும். எனவேதான், புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க, மத்திய, மாநில அரசுகள் வங்கிக் கடனுதவி சலுகைகளை வழங்குவதுடன், சுயதொழிலில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் வழங்குகின்றன.

சுயதொழில் தொடங்கும் ஆர்வம் இருந்தால் மட்டும் போதுமா? நமக்கான தொழிலைத் தேர்வு செய்வது, நமது பகுதிக்கேற்ற தொழில் எது, அதற்கான கடனுதவியைப் பெறுவது எப்படி, ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் என்னென்ன எனப் பல்வேறு விஷயங்களையும் அறிந்து, தெளிவான முடிவெடுப்பதும் அவசியம்.

அதற்கான வழிகளைக் காட்டுகிறது இந்தத் தொடர். திருச்சியைச் சேர்ந்த தொழில் ஆலோசகரான ராமசாமி தேசாய், புதிய தொழில்முனைவோர்களுக்குத் தேவையான அடிப்படையான விஷயங்களை, இந்தத் தொடர் மூலமாக வழிகாட்டவிருக்கிறார். புதிதாகத் தொடங்குபவர்கள் அவசியம் தெரிந்துவைத்திருக்க வேண்டிய விஷயங்களை அவர் இந்த வாரம் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்.

ராமசாமி தேசாய்
ராமசாமி தேசாய்

புதிய தொழில்முனைவோர்கள் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்பது விஷயங்கள்...

1. நமக்கான தொழிலைத் தேர்வு செய்த பிறகு, அந்தத் தொழிலுக்கான விற்பனை வாய்ப்பு (மார்க்கெட்டிங்) பற்றி அவசியம் அறிந்திருக்க வேண்டும்.

2. நாம் தேர்வு செய்த தொழில், நிச்சயம் லாபம் தரக்கூடிய தொழிலாக இருக்க வேண்டும்.

3. உற்பத்திச் செலவுகளைக் குறைத்து, தொழிலை நடத்தும் வழிமுறைகளைத் தெரிந்திருக்க வேண்டும்.

4. பணியாளர்கள் சரியாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

5. தொழில் தொடங்கத் தேர்வு செய்த இடம் எல்லா வகையிலும் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.

6. தொழில் செய்வதற்கான இயந்திரங்கள் வாங்குவதற்கான விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

7. மூலப்பொருள்கள் வாங்குவதற்கான விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

8. நமது தொழில் குறித்த சிறப்பான திட்ட அறிக்கையைத் தயார் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

9. தொழிலுக்கான முதலீட்டுத் தொகையை வரையறை செய்து, கடனுதவி பெறுவதற்கான வழிமுறைகளையும், நம் தொழிலுக்குக் கைகொடுக்கும் மத்திய, மாநில அரசுகளின் கடனுதவித் திட்டங்கள் மற்றும் மானியம் குறித்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

தொழில் பழகுவோம் வாங்க...
இனி நீங்களும் பிசினஸ்மேன்தான்!

5% முதலீடே போதும்...

உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களில், இயந்திரங் களுக்கான மூலதனத் தொகை ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான முதலீட்டுக்குள் இருந்தால், அந்தத் தொழில்முனை வோர்கள் குறுந்தொழில்முனைவோராகக் கருதப்படுவார்கள். நிறுவனம் தொடங்குவதற்கான முதலீட்டில் வெறும் 5% – 10% தொகையை மட்டுமே நாம் செலவிட்டால்கூட போதும். மீதித் தொகையைக் கடனுதவியாகப் பெறலாம். புதிய தொழில்முனைவோர்கள் வங்கியிலேயே நேரடியாகக் கடன் பெறலாம். ஆனால், கொடுத்த தொகை திரும்பக் கிடைப்பதில் சில நேரங்களில் சிக்கல்கள் ஏற்படுவதால், வங்கிகள் நேரடி யாகக் கடன் கொடுக்கத் தயங்கலாம். அதனால், எம்.எஸ்.எம்.இ மற்றும் மாவட்டத் தொழில் மையத்தை அணுகி, அந்த நிறுவனங்களின் வழிகாட்டு தலுடன் எளிதாக வங்கிக் கடனு தவியைப் பெற முடியும்.

10 லட்சம் ரூபாய்க்கும் குறை வான கடனுக்கு எந்தவித அடமானமும் கேட்கக் கூடாது என்பதை ஆர்.பி.ஐ விதி உறுதி செய்கிறது. கடனுதவி திட்டங் களைப் பொறுத்து, சராசரியாக 20% – 35% தொகையை மானிய மாகவும் பெறலாம். சிறு, குறுந் தொழில்களை ஊக்குவிக்க மத்திய அரசும் சிட்பியும் (SIDBI) இணைந்து ரூ.2 கோடி வரைக்கும் எவ்வித அடமானமும் இல்லாமல் கிரெடிட் கேரன்டி ஸ்கீமில் (CGS - Credit Guarantee Scheme) கடன் தருகின்றன. ஆனால், இந்தத் திட்டத்தில் கடன் பெற பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து வங்கி களில் விவரங்கள் பெறலாம். வங்கிக் கடனுதவி பெற, குறைந்த பட்சம் எட்டாவது வரை படித்திருக்க வேண்டும். வங்கிக் கடனுதவியைச் சரியான முறை யில் திருப்பிச் செலுத்தினால், தொழில் விரிவாக்கத்துக்குத் தொடர்ந்து வங்கிக் கடன் பெறலாம்.

கைகொடுக்கும் கடனுதவி திட்டங்கள்...

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் (எம்.எஸ்.எம்.இ - Micro, Small & Medium Enterprises) கட்டுப் பாட்டில், தொழில் வணிக ஆணையரகம், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம், தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனம், தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம், ‘நீட்ஸ்’ திட்டம் (NEEDS - New Entrepreneur-cum- Enterprise Development Scheme), யு.ஒய்.இ.ஜி.பி திட்டம் (UYEGP - Unemployed Youth Employment Generation Programme), பி.எம்.இ.ஜி.பி திட்டம் (Prime Minister’s Employment Generation Programme), பெண்கள் மற்றும் பட்டியலினப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு உதவும் ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டம், உணவு உற்பத்திக்காக உதவும் எஃப்.எம்.இ திட்டம் (FME - Micro food processing Enterprises Scheme), புதிய தொழில் முனைவோர்களுக்கு உதவும் ‘முத்ரா’ கடன் திட்டம் போன்ற பல்வேறு கடனுதவித் திட்டங்கள் கைகொடுக்கின்றன.

வளர்ச்சிக்கு உதவும் புதுமையான தொழில்கள்...

தனியாக அல்லது குழுவாக இணைந்தும் தொழில் தொடங்கலாம். முடிந்தவரையில் புதுமையான (Innovative) மற்றும் வளர்ச்சியைத் தரும் தொழில் களைத் தொடங்கினால், வங்கிக் கடனுதவி எளிதாகக் கிடைப் பதுடன், வெற்றியும் எளிதில் வசமாகும். பாக்கு மட்டை, பேப்பர் கப், பேப்பர் பிளேட் உள்ளிட்ட தொழில்களில் தடையின்றி மூலப்பொருள்கள் கிடைப்பதில்லை. மேலும், எல்லாக் காலங்களிலும் உரிய லாபமும் கிடைக்காததால், இதுபோன்ற சில தொழில்களை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

ஒரு டிரில்லியன் டாலர் இலக்கு...

மத்திய, மாநில அரசுகளின் கடனுதவித் திட்டங்களை, வட மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர்களே அதிக அளவில் பயன்படுத்திக்கொள்கின்றனர். அரசின் கடனுதவித் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு தென் மாவட்டங்களில் இன்னும் அதிக அளவில் உருவாக வேண்டும். ‘2030-ம் ஆண்டுக்குள் தமிழகம் ஒரு டிரில்லியன் டாலர் அளவிலான பொருளாதார உற்பத்தியை அடைய வேண்டும்’ என அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். அந்த வளர்ச்சியை அடைந்தால், தமிழகம் பொருளாதாரத்தில் பெரிய பலத்தை அடையும். அதற்கு சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கணிசமான அளவில் உருவாக வேண்டும்.

ஒரு காலகட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த சீனாவின் தற்போதைய தொழில் வளர்ச்சி, உலக வல்லரசான அமெரிக்காவைவிடவும் ஏறுமுகத்தில் இருக்கிறது. அந்த அளவுக்கு சீனாவில் சிறு, குறு, பெருந் தொழில் நிறுவனங்கள் அதிகளவில் உருவாகியிருக்கின்றன. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தால்தான், இந்தியாவும் உலக அளவில் பெரிய பொருளாதார பலத்தைப் பெறும். அதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வழிகளிலும் புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கச் சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றன. அவை குறித்தும், நமக்கு ஏற்ற தொழில்கள் குறித்தும் இனி ஒவ்வொரு வாரமும் விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

(தொழில் பழகுவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism