Published:Updated:

வணிகத் தலைமைகொள் 1 - புதிய பகுதி

வணிகத் தலைமைகொள் 1 - புதிய பகுதி
பிரீமியம் ஸ்டோரி
News
வணிகத் தலைமைகொள் 1 - புதிய பகுதி

வணிகத்தின் ஆரம்ப நாள்களில், வருவாய் ஈட்ட எவ்வளவு கஷ்டப்படுகிறோமோ, அந்த அளவு செலவைக் குறைக்கவும் முற்பட வேண்டும்.

பிரமாண்ட கட்டடங்கள் எல்லாமே பிரமாதமான அடித்தளத்தின் மீதே உருவாகி உயர்ந்து நிற்கின்றன. பிசினஸ் என்பதிலும் அடித்தளம் அவசியம். எந்த வணிகத்தில் இறங்கினாலும், முதல் இரண்டு ஆண்டுகள் பாசிட்டிவ் அப்ரோச் வேண்டும். லாப நஷ்டத்தை விடவும் முக்கியம், வணிகத்தில் நிலைத்து நிற்பது.

ஏனெனில், இன்றைக்கு வணிகத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறியவர்கள் பெரும்பாலும் முதல் ஆறு மாதங்களில் அல்லது ஒரு வருடத்தில் சென்றவர்களே. இரண்டு வருடங்கள் நிலைத்தவர், வெளியேற மாட்டார். அவர் தன் உழைப்பின் விளைச்சலைக் கண்டிருப்பார். அறுவடைக்கான பயிர் அவர் கண்ணெதிரில் வளர்ந்து நின்றிருக்கும்.

இரண்டு வருடங்கள் தோல்விகள் வரினும், கஷ்டநஷ்டம் வரினும் வணிகத்தில் நிலைப்பது அவசியம், தேவை, கட்டாயம். நிபந்தனை எனக்கூடக் குறித்துக்கொள்ளலாம். நாம் கஷ்டப்பட்டதன் பலனை அடைய, தோல்விகளின் மூலம் பாடங்களைக் கற்றதனால் அடையப்போகும் வெற்றிகளைக் காண, இரண்டு வருடம் உறுதியாக நிற்போம். அப்படி நின்றதன் அனுகூலம் வாழ்நாளெல்லாம் நம்மை, நம் நிறுவனத்தை, நம் தலைமுறைகளை வளமாய் இருக்கச் செய்யும்.

தொழில் தொடங்கிய முதல் ஆறு மாதங்களில் நான் கடைப்பிடித்த மூன்று விதிகளைப் பகிர்கிறேன்.

வணிகத் தலைமைகொள் 1 - புதிய பகுதி

விதி 1: தொழிலை நேசி

என் தொழிலை என் மகளாக நேசித்தேன். அப்போது எனக்கு இரண்டு மகன்கள். மகளில்லை. ஆனால் இன்று யாரேனும் கேட்டால், என் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி ‘என் மகள்' என்பேன். அவ்வளவு நேசித்தேன்; நேசிக்கிறேன்.

தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு கவிதையில் எழுதியிருப்பார். ‘அப்பா இருந்த வீடு இரவிலும் விழித்திருக்கும்.' ஒரு பெண் பிள்ளையின் தகப்பன், எல்லாக் காலத்திலும்... ஏன், அகாலத்திலும் அவளின் தகப்பனாக இருத்தலையே தன் முதல்பணியாக எண்ணி வாழ்கிறான். அப்படித்தான் நானும். முதல் ஆறு மாதங்களில் (இப்போதுமே) வணிகனாக இருத்தலை என் முதல்பணியாகக் கொண்டேன். இன்று அவ்வணிகம்தான் எனக்கு எல்லாம் தருகிறது. சபைகளில் கௌரவமும் அது தந்ததே.

விதி 2: செலவு சுருக்கு

வணிகத்தின் ஆரம்ப நாள்களில், வருவாய் ஈட்ட எவ்வளவு கஷ்டப்படுகிறோமோ, அந்த அளவு செலவைக் குறைக்கவும் முற்பட வேண்டும். உறுதி எடுக்க வேண்டும். நான் 2007-ல் ஒரு நல்ல வேலையை உதறிவிட்டு, பாதுகாப்பான சம்பளத்தை மறுதலித்துவிட்டு வெளியே வந்து தொழில் தொடங்கினேன்.

முதல் ஆறு மாதங்கள், குறைந்தது 80 வாடிக்கையாளர்களை என் வணிகம் சார்ந்த தொடர்புகளைப் பார்க்க வேண்டும் என முடிவு செய்தேன். அதாவது, ஒரு நாளைக்கு ஒருவர். அதில் எத்தனை பேர் எங்கள் ஜெனரேட்டரை (நாங்கள் விற்கும் - சேவை அளிக்கும் பொருள்) வாங்குவார்கள்; வாங்கப் பரிந்துரைப்பார்கள் எனத் தெரியாது. ஆனால், பார்க்க முடிவு செய்தாயிற்று.

அத்தனை பேரையும் பேருந்தில், அவசரமெனில் ஆட்டோவில்தான் சென்று சந்தித்தேன். என்னிடம் கார் இருந்தது. அதை என் வீட்டிலேயே விட்டுவிட்டு, ஏதுமில்லாத ஒரு மனிதனாக வணிகம் புரிந்தேன். காரணம், பெரும்பாலான தொழில்களில் முதல் ஆறு மாதங்கள் எந்த வருவாயும் இருக்காது. உணர்ந்ததால் பேருந்தில் பயணித்தேன். தள்ளுவண்டிக் கடைகளில் சாப்பாடு, பத்துக்குப் பத்து அலுவலகம், மூன்று பேர் சகாக்கள் நான் உட்பட, ஒரே ஒரு கணினி. அலுவலகத்துக்கு வாடகை இரண்டாயிரம் ரூபாய், மின் கட்டணத்துக்கு வேறு இரண்டாயிரம் தர வேண்டுமா என்ற கேள்வி வர, ஏ.சி-யும் தேவையான பட்டியலிலிருந்து நீங்கியது.

செலவுகளைச் சுருக்கி, ஒரு நாளைக்கு அதிகபட்சம் 150 ரூபாய்க்கு மேல் செலவு செய்யக்கூடாதென வாழ்ந்ததால்தான், வருவாய் இல்லாத அந்த ஆரம்ப நாள்களைச் சமாளிக்க முடிந்தது. செலவைக் கட்டுப்படுத்தியிருக்கா விட்டால், பாரம் அதிகமாகி தொழிலையே விட்டிருப்பேன்.

விதி 3: நம்பிக்கைதான் வணிகம்

நாம் இப்போதுதான் தொழில் தொடங்கியிருக்கிறோம். ஆனால், பல வருடங்களாக இந்தத் தொழிலைச் செய்யும் பெரு முதலாளிகள் சந்தையில் இருக்கிறார்கள். சில ஆண்டுகள் தொழில் செய்து சந்தையின் கணிசமான வாடிக்கையாளர்களைக் கைக்கொண்டிருக்கும் சிறு வியாபாரிகளும் இருக்கிறார்கள். இவர்களோடு நாம் எப்படிப் போட்டியிடுவது? நம் பிராண்டை எப்படி நிலை நாட்டுவது?

ஒரு வணிகன் தனி மனிதன் அல்ல! அவனே ஒரு பிராண்ட். அவனது தரம், அவனது அறம், அவனது சொல், அவனது செயல் என அவனது குணங்களே வணிகப் பரிமாற்றத்தில் விற்பனையை முடிவு செய்கின்றன.

தொழில் தொடங்கியவுடன், இதுநாள் வரை நம்மிடமிருந்த தவறான போக்குகள் அனைத்தையும் விடவேண்டிய தருணம் வந்தாயிற்று.

நான் கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு கெட்ட வார்த்தை பேசியதில்லை, என் நண்பர்களிடம் கூட! காரணம், நான் ஒரு நிறுவனம். நான் விற்கும் பொருள், நான் சரியாக இருந்தால்தான் விற்கும். அதனால் முதலில் நானொரு பிராண்ட் ஆகி என் brand value மேம்பட வேண்டும். ஆங்கிலத்தில் சொல்வார்கள், It doesn't matter how big you are. what matters is, how reliable are you. ஆம், நாம் வணிகத்தில் பெரும்புள்ளியாக இல்லாமலிருக்கலாம். வாடிக்கையாளருக்கு அது அவசியமும் இல்லை. வாடிக்கையாளர் நம்மிடம் எதிர்பார்ப்பது நம்பிக்கை. அதை ஏற்படுத்தினால், அளித்தால் போதும். வணிகம் வளரும்.

எனவே இளைஞர்களே, வாருங்கள்! வணிகம் செய்வோம்.

- வணிகம் பெருகும்...

வணிகத் தலைமைகொள் 1 - புதிய பகுதி

ராம் வசந்த் (இயற்பெயர்: ராமமூர்த்தி ) காஞ்சிபுரம் அருகே ஒரு குக்கிராமத்து விவசாயக்குடியில் பிறந்தவர், படிப்புக்கும் வயிற்றுக்கும் நகரங்கள் திரிந்து இன்று ஹைதராபாத்தில் ஒரு வணிக நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார். 2,500 ரூபாய் சம்பள வேலைக்கு முன்பதிவற்ற ரயில் பெட்டியில் டிக்கெட் எடுத்துக்கொண்டு 22 வருடங்களுக்கு முன்பு அங்கு சென்றவர். இன்று ஒரு பெரிய ஆட்டோமொபைல் நிறுவனத்தின் ஜெனரேட்டர் பிரிவுக்கு அகில இந்திய அளவில் முதன்மை டீலராக மாறியிருக்கிறார். அடுத்த தலைமுறைமீது அபார நம்பிக்கை கொண்டவர். இளைஞர்களுக்கு உத்வேகமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய வெற்றி ரகசியங்களை முகநூலில் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.