Published:Updated:

உலகத்துக்கான உற்பத்தி மையம் ஆகுமா இந்தியா? - ஒரு விரிவான பார்வை

இந்தியாவின் ஜி.டி.பி-யில் உற்பத்தித் துறையின் பங்கு இன்னும் 15-16% அளவில்தான் இருக்கிறது.

பிரீமியம் ஸ்டோரி
சீனாவிலிருந்து சில பொருள்கள் இறக்குமதி செய்யத் தடை என்று தொடங்கி, 110 ராணுவத் தளவாடப் பொருள்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யத் தடை விதித்திருக்கிறது மத்திய அரசாங்கம்.

நாம் தினசரி பயன்படுத்தும் போன், கார், நுகர்வோர் பொருள்கள், மருந்துப் பொருள்கள் உற்பத்தி செய்யத் தேவையான மூலப்பொருள்கள் எனப் பலவற்றுக்கும் இந்தியாவும் பிறநாடுகளும் சீனாவைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன என்பது யாராலும் மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மை.

உலகத்துக்கான உற்பத்தி மையம் ஆகுமா இந்தியா? - ஒரு விரிவான பார்வை

இந்த நிலையில், நம் நாடு உலக உற்பத்தி மையமாக ஆக வேண்டும் எனில், என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை விளக்கிச் சொல்லும் புத்தகம் ஒன்று இப்போது வெளியாகியிருக்கிறது. `கெட்டிங் காம்பெடெட்டிவ் – ஏ பிராக்டிஸனர்’ஸ் கைடு ஃபார் இந்தியா (Getting Competitive: A Practioner’s Guide for India) என்ற இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் மாருதி சுஸூகி இந்தியா நிறுவனத்தின் சேர்மனாக இருக்கும் ஆர்.சி.பார்கவா.

இவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி. மத்திய அரசின் பல துறைகளில் சுமார் 25 ஆண்டுக்காலம் பணியாற்றியதுடன், பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸிலும், அதன்பின் மாருதியில் ஆரம்ப காலத்திலிருந்து பல்வேறு நிலைகளிலும் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.

அவருடைய பழுத்த அனுபவத்தின் மூலம் இந்தப் புத்தகத்தில் அவர் தெளிவாகக் கூறியிருப்பது, `பொருளாதாரத்தில் ஒரு வலுவான நிலையை இந்தியா அடைய வேண்டுமெனில், சேவைத் துறையைக் காட்டிலும் உற்பத்தித் துறையில் தனது முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும்’ என்பதே.

‘‘இந்தியாவின் ஜி.டி.பி-யில் உற்பத்தித் துறையின் பங்கு இன்னும் 15-16% அளவில்தான் இருக்கிறது. ஆனால் ஜப்பான், கொரியா, சீனா, தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் உற்பத்தித்துறையின் பங்கு சுமார் 30 - 35% ஆகும்’’ என்ற புள்ளி விவரத்தைத் தரும் பார்கவா, இந்தியாவில் உற்பத்தித்துறை வளராமல் போன வரலாற்றை விளக்க மாகச் சொல்கிறார்.

உற்பத்தி வரலாறு!

‘‘இந்தியாவின் முதல் பிரதமர் நேரு இந்தியாவைத் தொழில் மயமாக்க வேண்டு மென்ற எண்ணத்துடன் பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றைத் தொடங்கினார். இந்த நிறுவனங்களை வழிநடத்த பெரும் பாலும் அரசு அதிகாரிகளே நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் தங்கள் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள அரசுக்கு எதிராக எந்தக் கருத்தையும் சொல்லவில்லை.

உலகத்துக்கான உற்பத்தி மையம் ஆகுமா இந்தியா? - ஒரு விரிவான பார்வை

அதன்பின் `லைசென்ஸ் ராஜ்’ அமலுக்கு வந்தது. அப்போதும் பொதுத்துறை நிறுவனங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த நிலை 1991 வரை நீடித்தது. அதற்குப் பிறகு உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என அரசு நீட்டி முழக்கி பல காரியங்களை முன்னெடுத்தாலும் உற்பத்தித்துறை மீது போதுமான கவனம் செலுத்தப்படவில்லை’’ என நமது உற்பத்தி வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்வதை இன்றைய இளையதலைமுறை கவனமாகக் கேட்டறிய வேண்டும்.

வேலைவாய்ப்பைத் தரும் உற்பத்தித்துறை!

உற்பத்தித்துறை ஏன் முக்கியம்? இது பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் மட்டும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதில்லை. மாறாக, அதுசார்ந்த ஏராளமான சேவைத் தொழில்களிலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும். இதற்கு பார்கவா, தனக்கு நன்கு பரிச்சயமான வாகன உற்பத்தித் துறையை உதாரண மாகக் காட்டுகிறார்.

வாகன உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலையிலும், அதை விற்பனைக்குக் கொண்டுசெல்ல தேவைப்படும் போக்குவரத்துத் துறையிலும், உற்பத்தி செய்த வாகனத்தை விற்பனை செய்ய தேவைப்படும் சந்தைப்படுத்துதல் துறையிலும், விற்பனைக்கு பிறகான சேவை, வாடிக்கையாளர் உறவு மேலாண்மை, டிராவல், டூரிஸம் என அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சில பொருளாதார நிபுணர்கள், சேவைகள் வழங்கப்படும் தொழில்கள் மூலம்தான் அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும் எனக் கூறிவருவதை பார்கவா கடுமையாக மறுக்கிறார்.

உலகத்துக்கான உற்பத்தி மையம் ஆகுமா இந்தியா? - ஒரு விரிவான பார்வை

என்ன தவறு செய்தோம்?

குறைபாடான தொழிற்கொள்கை ஒரு புறமிருக்க, தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் ஓர் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கத் தவறியதுடன், உற்பத்திப் பெருகினால் அதன் பயன் தொழிலாளர்களுக்கும்தான் என்பதை எடுத்துச் சொல்லி நம்பிக்கையை ஏற்படுத்தவும் மத்திய மாநில அரசுகளும் அவற்றின்கீழ் இயங்கிவந்த/வருகிற பொதுத்துறை நிறுவனங்களும் தவறிவிட்டன என்கிறார்.

இதற்கு அவர், தான் தலைமைப் பொறுப்பிலிருக்கும் மாருதி நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ஜப்பானிய முறையிலான தொழிலாளர் மேலாண்மைக் கொள்கையையும், அவர் களிடையே நம்பிக்கையை உருவாக்கி அவர்களும் நிறுவனமும் வேறில்லை என உணர்த்த எடுக்கப் பட்ட முயற்சிகளையும் இந்தப் புத்தகத்தில் விளக்கியிருக் கிறார்.

இன்றைக்கு உலகப் புகழ்பெற்ற மற்ற வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வந்தாலும் மாருதி நிறுவனத்தின் சந்தைப் பங்கு 50 சதவிகிதத்துக்கு மேல் என்பதுடன் இதனுடைய உற்பத்தி ஆண்டுக்கு சுமார் இரண்டு மில்லியன் வாகனங்களாகும் (1988-ம் ஆண்டு இருந்த உற்பத்தியைவிட இது சுமார் 20 மடங்கு அதிகம்). அவற்றில் கணிசமான அளவு `தரத்துக்கு’ புகழ்பெற்ற ஜப்பானுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

2014 தேர்தலில் வெற்றி பெற்று புதிய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அதுவரை இருந்துவந்த குறைபாடுகளைக் களையும் வகையிலும் உற்பத்தித் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் `மேக் இன் இந்தியா’, `ஸ்கில் இந்தியா’ எனச் சில திட்டங்களைக் கொண்டு வந்தாலும் `நோய்க்கான’ காரணம் என்ன என்பதைச் சரியாகத் தெரிந்துகொள்ளாமல் கொடுத்த `மருந்தாக’த்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

உலகத்துக்கான உற்பத்தி மையம் ஆகுமா இந்தியா? - ஒரு விரிவான பார்வை

உற்பத்தித் துறையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? அதிக உற்பத்தி, தொடர்ந்து செலவில் சிக்கனம், குறைவான வரி, உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யும் வகையில் உயர்தரம், பணியாளர்களைக் கூட்டாளிகளாகவும் பங்குதாரர்களாகவும் தொழிலதிபர்கள் நினைப்பது, நுகர்வோர்கள் விரும்பும் வகையில் சந்தையில் போட்டியை (வாகன உற்பத்தி, ஏர்லைன்ஸ், நுகர்வோர் பொருள்கள், தொலைத் தொடர்புத் துறைகளில் ஏற்பட்டது போல) உருவாக்குவது என பலவற்றைப் பரிந்துரைக்கிறார்.

இந்தியாவில் விநியோகச் சங்கிலி (supply chain) துறையும் உள்கட்டமைப்பும் இன்னும் வளர்ச்சி யடைய வேண்டும், தொழில் ஆரம்பிக்க ஏற்ற சூழ்நிலையில் (Ease of doing business) இந்தியாவின் நிலை 143-லிருந்து 63-க்கு வந்தாலும் உலகளவில் இந்தியா இன்னும் மற்ற நாடுகளைக் கவர்ந்திழுக்கும் நிலைக்கு வரவில்லை. எனவே, அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறுகிறார்.

சுருக்கமாகச் சொல்லப்போனால், தலைப்பில் குறிப்பிட்டிருப்பதுபோல இது ‘இந்தியாவுக்கான பயிற்சியாளர் கையேடு’ என்பதோடு தொழிலதிபர்களுக்கும், கொள்கையைத் திட்டமிடுபவர்களுக்குமான கணிப்புச் சுவடி (Ready reckoner) என்றுதான் சொல்ல வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு