Published:Updated:

கிராமத்தில் இருந்தும் ஏற்றுமதி செய்யலாம்... முந்திரி தரும் முத்தான வருமானம்!

முந்திரி ஏற்றுமதி
பிரீமியம் ஸ்டோரி
முந்திரி ஏற்றுமதி

தொழில் பழகுவோம் வாங்க! 20

கிராமத்தில் இருந்தும் ஏற்றுமதி செய்யலாம்... முந்திரி தரும் முத்தான வருமானம்!

தொழில் பழகுவோம் வாங்க! 20

Published:Updated:
முந்திரி ஏற்றுமதி
பிரீமியம் ஸ்டோரி
முந்திரி ஏற்றுமதி

உலர் பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களில் முதலிடம் வகிக்கிறது முந்திரி. பாயசம் முதல் பலகாரங்கள் வரை பெரும்பாலான உணவு களிலும் முந்திரி இருந்தால்தான் பலருக்கும் நிறைவு கிடைக்கும். எனவேதான், உள்ளூர் முதல் உலக அளவிலான ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இந்தத் தொழிலுக்கான முக்கியத்துவம் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் குறித்து இந்த வாரம் வழிகாட்டுகிறார், திருச்சியைச் சேர்ந்த தொழில் ஆலோசகரான ராமசாமி தேசாய்.

கிராமத்தில் இருந்தும் ஏற்றுமதி செய்யலாம்... முந்திரி தரும் முத்தான வருமானம்!

எதனால் இது லாபகரான தொழில்?

‘டிரை ஃப்ரூட்ஸ்’ எனப்படும் உலர் பழங் களில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் அதிகம் கிடைப்பதால், அவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பினராலும் விரும்பிச் சாப்பிடப் படுகிறது. அறுவடை செய்யப்பட்ட முந்திரிப் பழத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் விதைதான் முந்திரிப் பருப்பு. அதை நேரடியாக அப்படியே சாப்பிட முடியாது. பதப்படுத்தப்பட்ட பிறகே, முந்திரிப் பருப்பு சாப்பிட ஏதுவானதாக மாறும்.

உலகின் பல நாடுகளில் முந்திரி விளை விக்கப்பட்டாலும், இதைப் பதப்படுத்தும் செயல்முறையானது இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில்தான் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்படுகிறது. அதனால், நம் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி யாகும் முந்திரிக்கு அதிக வரவேற்பு உள்ளது.

முந்திரியை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. அதனால்தான், முந்திரிப் பருப்பைப் பதப்படுத்தும் செயல்பாடு, லாபகரமான தொழிலாகத் திகழ்கிறது.

கிராமத்தில் இருந்தும் ஏற்றுமதி செய்யலாம்... முந்திரி தரும் முத்தான வருமானம்!

ஆண்டு முழுவதும் உற்பத்தி..!

கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, கோவா, குஜராத் உள்ளிட்ட இந்தியாவிலுள்ள எட்டு மாநிலங்களில் முந்திரி முக்கியமான வணிகப்பயிராக விளைவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முந்திரி அதிக அளவில் விளைகிறது. இது சீஸன் பயிர் என்பதால், குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டுமே முந்திரியை உற்பத்தி செய்ய முடியும். எனவே, தென் ஆப்பிரிக்கா, வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பதப்படுத்தப்படாத முந்திரி அதிக அளவில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப் படுகிறது. இதனால், நம் நாட்டில் முந்திரியைப் பதப்படுத்தும் செயல்பாடானது ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது.

முந்திரியின் தரம் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

பதப்படுத்தும் செயல்பாட்டுக்குப் பிறகு, சாப்பிட ஏதுவான தரத்துக்கு மாற்றப்படும் முந்திரிப் பருப்பின் நிறம் மற்றும் சேதாரமாகாத தோற்றத்தைப் பொறுத்தே அதன் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. மத்திய அரசு, 33 வகையான முந்திரிப் பருப்புகளைப் பரிந்துரைக்கிறது. இதில், வணிக ரீதியாக 26 ரகங்கள் மட்டுமே சந்தையில் அதிகம் விற்பனை யாகின்றன. அதில், W-180, W-210, W-320 உள்ளிட்ட சில ரகங்கள் விற்பனைக்கு உகந்ததாகவும் பிரபலமானதாகவும் கருதப்படுகின்றன.

கிராமத்தில் இருந்தும் ஏற்றுமதி செய்யலாம்... முந்திரி தரும் முத்தான வருமானம்!

விற்பனை வாய்ப்பு

பெரும்பாலான பலகாரங்களிலும் தின்பண்டங்களிலும் முந்திரி சேர்க்கப்படுகிறது. இதனால், உணவகங்கள், இனிப்புக் கடைகள், பேக்கரிகள் போன்றவற்றில் ஆர்டர் களைப் பிடிக்கலாம். கிராமப்புறத்தில் இருந்தும்கூட இந்தத் தொழில் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தக வாய்ப்புகளை மேற்கொள்ள முடியும். ஆன்லைன் வாயிலாகவும் இருந்த இடத்தில் இருந்தே எந்தப் பகுதிக்கும் பதப்படுத்தப்பட்ட முந்திரியை விற்பனை செய்யலாம்.

ஆண்டுக்கு எட்டு லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிக மான முந்திரி, நம் நாட்டில் பதப்படுத்துதல் செயல்பாட்டுக்கு உட்படுத்தப்படுகிறது. இதில், மூன்றில் இரண்டு பங்கு உள்நாட்டுத் தேவைக்குப் பயன் படுகிறது. மீதி ஒரு பங்கு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இதனால், விற்பனை விஷயத்தில் அச்சம் தேவையில்லை. குறிப் பாக, முந்திரி ஓட்டில் இருந்து CNSL (Cashew Nut Shell Liquid) என்ற திரவம் பிரித்தெடுக்கப் படும். பெயின்ட் தயாரிக்க உதவும் மூலப்பொருள்களில் ஒன்றாகவும், எரிபொருள் தேவைக்கும் இது பயன்படுகிறது. எனவே, முந்திரி ஓடுகளை மட்டுமே தனியாக விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டலாம்.

கிராமத்தில் இருந்தும் ஏற்றுமதி செய்யலாம்... முந்திரி தரும் முத்தான வருமானம்!

தயாரிப்பு முறை

இந்த புராஜெக்ட் அளவீட்டின் படி, தினமும் 500 கிலோ முந்திரி (பதப்படுத்தப்படாத முந்திரி) தேவைப்படும். அதில் இருந்து 200 கிலோ முந்திரியைப் பதப்படுத்தி விற்பனை செய்ய லாம். எனவே, தேவைக்கேற்ப போதுமான அளவு முந்திரியை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். முந்திரிக் கொட்டை யைத் தரம் பிரித்து, அவற்றை வெயிலில் நன்கு உலர்த்தி, பையில் சேமித்து வைக்க வேண்டும். ஒரு கொதிகலனில் நீராவி முறையில் முந்திரிக் கொட்டையை வேகவைக்க வேண்டும். இதனால், முந்திரி ஓடானது மென்மையாக மாறும். பருப்பைப் பிரித்தெடுக்கும் இயந்திரத்தில், வேக வைத்த முந்திரிக் கொட்டையில் இருந்து, ஓடு தனியாகவும் பருப்பு தனியாக வும் பிரித்தெடுக்கப்படும். ஈரப்பத மாக இருக்கும் பருப்பை, டிரையர் இயந்திரத்தில் செலுத்தி உலர்த்த வேண்டும். பிறகு, பருப்பின் மேற்புறத்தில் இருக்கும் மேல் அடுக்கு லேயரை (Testa) நீக்க வேண்டும். பின்னர், பதப்படுத்தப் பட்ட தரமான முந்திரியை, பாலித்தீன் பையில் நிரப்பி, அதை டின்னில் பேக்கேஜிங் செய்து விற்பனைக்கு அனுப்பலாம்.

கிராமத்தில் இருந்தும் ஏற்றுமதி செய்யலாம்... முந்திரி தரும் முத்தான வருமானம்!

சிறப்பம்சங்கள்...

 மூலப்பொருள் (முந்திரி) தடையின்றி கிடைக்கும்.

 ஆண்டு முழுக்க விற்பனை வாய்ப்பு உண்டு.

 எல்லாக் காலத்துக்கும் வரவேற்புள்ள தொழில்.

 குறைந்த பணியாளர்கள் இருந்தாலே போதுமானது.

வங்கிக் கடனுதவி

‘நீட்ஸ்’ திட்டத்தின் கீழ் ரூ.38.50 லட்சம் கடனுடன் (Term Loan), 25% (ரூ.9 லட்சம்) மானியம் பெறலாம்.

மாதத்துக்கு ரூ.26 லட்சம் டேர்ன் ஓவர்

இந்த புராஜெக்ட் அடிப் படையில் தினமும் 200 கிலோ பதப்படுத்தப்பட்ட முந்திரியைத் தயாரிக்கலாம். ஒரு கிலோ முந்திரியை ரூ.520 – ரூ.550-க்கு விற்பனை செய்யலாம். நாம் ரூ.520-க்கு விற்பனை செய்வதாகக் கணக்கிட்டால், ஒருநாளைக்கு ரூ.1,04,000 கிடைக்கும். மாதத்தில் 25 தினங்களுக்கு உற்பத்தி நடைபெறுவதாகக் கொண்டால், ரூ.26,00,000 வருமானம் கிடைக்கும்.

விடைபெறுகிறேன்...

அதிக வரவேற்புள்ள புதிய தொழில்களை இந்தத் தொடர் மூலமாக உங்களிடம் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. சுயதொழில் செய்வதால் நமக்கான வளர்ச்சியுடன், பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதையும், நாட்டின் உள்நாட்டு உற்பத்தியையும் அதிகரிக்க முடியும். எனவே, விருப்பமுள்ள மற்றும் நமக்கேற்ற துறையைத் தேர்வு செய்து, உரிய பயிற்சி மற்றும் முன்அனுபவத்துடன் நம்பிக்கையுடன் தொழில் முனைவோராகக் களமிறங்கலாம். சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைத் தவிர்த்து, நாணயத்துடன் தொழிலை நிர்வகித்தால், விரைவிலேயே தொழிலதிபராக முன்னேற முடியும். வருங்கால தொழிலதிபர்களுக்கு வாழ்த்துகள்!

(நிறைவு பெற்றது)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism