Published:Updated:

அதிக வெகுமதி தரும் கால்நடை தீவனம் தயாரிப்பு!

கால்நடை தீவனம் தயாரிப்பு
பிரீமியம் ஸ்டோரி
கால்நடை தீவனம் தயாரிப்பு

தொழில் பழகுவோம் வாங்க! 11

அதிக வெகுமதி தரும் கால்நடை தீவனம் தயாரிப்பு!

தொழில் பழகுவோம் வாங்க! 11

Published:Updated:
கால்நடை தீவனம் தயாரிப்பு
பிரீமியம் ஸ்டோரி
கால்நடை தீவனம் தயாரிப்பு

விவசாயமும் கால்நடை வளர்ப்பும் நம் நாட்டில் கோடிக் கணக்கானோருக்கு ஜீவ ஆதாரத் தொழில். கால்நடை வளர்ப்பில், தீவனச் செலவுகளைக் குறைக்கவும், தீவனப் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனம் (ஊறுகாய் புல்) எனப்படும் சைலேஜ் பயன்பாடு தற்போது வெகுவாக அதிகரித்துள்ளது. கால்நடை வளர்ப்பாளர்களுக்குப் பெரிதும் கைகொடுக்கும் இந்தத் தொழில் குறித்து வழிகாட்டுகிறார், திருச்சியைச் சேர்ந்த தொழில் ஆலோசகர் ராமசாமி தேசாய்.

சைலேஜ் தீவனத்தை ஏன் பயன்படுத்த வேண்டும்?

கோடைக்காலத்தில் விளைச்சல் குறைந்து தீவனப் பற்றாக் குறை ஏற்படும். குளிர்காலத்தில் பசுந்தீவனத்தை நேரடியாக மேயும்போது, அதிலுள்ள பூஞ்சைகள் வாயிலாகக் கால்நடை களுக்குத் தொற்று பாதிப்புகள் ஏற்படலாம். இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்கவும், பசுந்தீவனம், அடர்தீவனம், உலர்தீவனம் போன்ற வழக்கமான தீவனங்களைத் தனித் தனியே பிரித்துக் கொடுப்பதுக்கு மாற்றாகவும், கால்நடை களுக்கு ஊட்டமேற்றியதாக சைலேஜ் தீவனத்தை மட்டுமே தந்தாலே போதும். தேவைப்பட்டால், பால் கறவைத் திறனைக் கூட்ட இதனுடன் அடர்தீவனத்தை மட்டும் கொடுக்கலாம்.

கால்நடைகளுக்குப் பிரதான உலர்தீவனமாகத் தரப்படும் வைக்கோலுடன் (இதில் ஈரப்பதம் 12% இருக்கும்) ஒப்பிடும் போது, சைலேஜ் தயாரிப்பு அதிக செயல்முறைகள் கொண்டது தான். ஆனால், இந்தத் தீவனத்தில் நொதிக்க வைக்கும் செயல்பாட்டின் மூலம் ஈரப்பதம் (சைலேஜில் ஈரப்பதம் 60% - 65% இருக்கும்) மற்றும் நுண்ணூட்டச் சத்துகளை இயற்கையான முறையில் நீட்டிக்கச் செய்வதுடன், தீவனத்தின் தரத்தை மேம் படுத்தியிருப்பதால், கால்நடை களின் வளர்ச்சி நன்கு இருக்கும்.

அதிக வெகுமதி தரும் கால்நடை தீவனம் தயாரிப்பு!

மக்காச்சோளப் பயிரே சிறந்தது...

நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குவதற்குத் தேவையான கரிம அமிலங்கள் அதிகம் இருக்கும் மக்காச்சோளப் பயிரில் தீவனம் தயாரிப்பது மட்டுமே லாபகரமாக அமையும்.

சைலேஜ் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

சைலேஜ் தயாரிக்க பிரத்யேக இயந்திரங்கள் இருக்கின்றன. தேர்வு செய்யப்பட்ட விளை நிலத்தில் இயந்திரத்தின் உதவியுடன் மூலப் பொருளை (சோளத்தட்டு) அறுவடை செய்து, உற்பத்திக்கூடத்துக்குக் கொண்டு வர வேண்டும். பின், கட்டர் இயந்திரத்தின் உதவியுடன் சோளத்தட்டையைத் தலா 1.3 செ.மீ (0.5 இன்ச்) நீளத்துக்கு நறுக்கி, அதன்மீது நாட்டுச் சர்க்கரை அல்லது உப்பைத் தூவலாம். அல்லது நீரில் கரைத்த வெல்லப்பாகுக் கரைசலை வாட்டர் ஸ்பிரேயர் உதவியுடன் தெளிக்கலாம். இதனால், நொதித்தல் செயல்பாட்டின் மூலம் இயற்கையாகவே நல்ல பாக்டீரியாக்கள் உருவாகி, நன்மை பயக்கும் கரிம அமிலங்கள் அதிகரித்து ஊட்டமேற்றப்பட்ட தீவனமாக மாறும்.

ராமசாமி தேசாய்
ராமசாமி தேசாய்

இயந்திரத்தின் உதவியுடன் நன்கு கலக்கப்பட்டு, மூலப்பொருளானது உருளை வடிவத்துக்கு (30 – 60 கிலோ எடையில்) மாற்றப்பட்டு, மற்றொரு இயந்திரத்தின் உதவியுடன் அதிக அழுத்தம் (Compaction) கொடுத்து காற்று துளியும் இல்லாத வகையில், பாலித்தீன் லேபிளால் சுற்றப்பட்டு பண்டலாக மாற்றப்படும். எலி, பெருச்சாளி போன்றவற்றின் தொந்தரவுகள் ஏற்படாத வகையிலும், சூரிய வெளிச்சம் நேரடியாகப் படாத வகையிலும் தீவனத்தைப் பாதுகாத்தால் அடுத்த 30 - 40 நாள்களில் சைலேஜ் தயாராகிவிடும். பின்பு, இதை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யலாம். அவர்கள், தேவையைப் பொறுத்து ஒவ்வொரு பண்டலில் இருக்கும் தீவனத்தை மட்டுமே திறந்து, அவற்றை ஓரிரு தினங்களில் உடனுக்குடன் பயன்படுத்த வேண்டும்.

சைலேஜ் தீவனத்தின் சிறப்புகள்...

ஆடு, மாடு, எருமை, குதிரை, வெண்பன்றி, முயல், கோழி போன்றவற்றுக்கு மிகச் சிறந்த தீவனம் இது. அதிக நுண்ணூட்டச் சத்துக்களுடன் நார்ச்சத்தும் இருப்பதால், கால்நடைகளுக்குச் செரிமானம் விரைவாக நடக்கும். கால்நடை களின் எடை கூடும்; உடல்நலமும் வளர்ச்சியும் மேம்படும்; பால் உற்பத்தித்திறன் அதிகரிக்கும்.

செயல்முறை

1. மூலப்பொருளுக்கான இடத்தைத் தேர்வு செய்வது (Crop Sourcing): ஒரு ஏக்கரில் 12 டன்னுக்கு மேல் மூலப்பொருளை அறுவடை செய்யலாம். சொந்த நிலம் இருந்தால், கூடுதலான பரப்பளவில் மக்காச் சோளத்தைப் பயிரிட்டு, அதிக அளவில் உற்பத்தியை மேற் கொள்ளலாம்.

2. மூலப்பொருளைக் கொள் முதல் செய்வது (Harvesting): பயிர் நடவு செய்த 80–90-ம் நாள் அறுவடை செய்வது பொருத்த மாக இருக்கும். அப்போதுதான் மூலப்பொருளில் (மக்காச் சோளத்தில்) ஈரப்பதம் 65% – 70% என்கிற அளவில் இருக்கும். ஒரு டன் ரூ.2,000 – ரூ.2,500-க்கு மூலப் பொருளைக் கொள்முதல் செய்யலாம். அறுவடை இயந்திரத்தைக் கொண்டு தினமும் 2.5 – 3 ஏக்கர் நிலத்தில் அறுவடையை மேற் கொள்ளலாம்.

3. பேக்கிங் செய்தல் (Firm Wrapping): காற்று மற்றும் நீர் புகாத வகையில் தீவனத்தை பாலித்தீன் கவர் கொண்டு இறுக்கமாக மூடி பாதுகாக்க வேண்டும்.

4. சேகரித்து வைத்தல் (Stacking): ஓராண்டு வரை தீவனத்தை வைத்திருந்து பயன் படுத்தலாம்.

அதிக வெகுமதி தரும் கால்நடை தீவனம் தயாரிப்பு!

வங்கிக் கடனுதவி...

மத்திய அரசின் என்.எல்.எம் (National Livestock Mission) என்னும் புதிய திட்டத்தின்கீழ், கால்நடை தீவனம் தயாரிக்கும் இந்தத் தொழில் தொடங்க, வங்கிக் கடனுதவியில் அதிகபட்சம் ரூ.50 லட்சம் அல்லது கடனுதவியில் 50% வரை மானியம் கிடைக்கும். நம் திட்ட மதிப்பீட்டில் (42 லட்சம்) ரூ.18.40 லட்சம் வங்கிக் கடனுதவி பெறலாம்.

கவனம் தேவை...

கிராமப்புறப் பகுதிகளில் இந்தத் தொழிலைத் தொடங்குவது சிறந்தது. சைலேஜ் உற்பத்தி குறித்துத் தெரிந்திருப்பதுடன், இந்தத் தீவனத்தை விற்பனை செய்வதற்கான வழிமுறைகளைத் தெரிந்திருக்க வேண்டும். மூலப் பொருள் உற்பத்தி தட்டுப்பாடு இருக்கும் கோடைக்காலத்தில் ஆர்டர் அதிகம் ஏற்படும். எனவே, முன்கூட்டியே உற்பத்தியை அதிகரித்து இருப்பு வைத்திருந்தால், அந்த நேரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

ஆண்டுக்கு 1.20 கோடி வருமானம்...

நம் திட்ட மதிப்பீடு அடிப்படையில் வருடத்துக்குச் சராசரியாக 2,000 டன் தீவனத்தை உற்பத்தி செய்வதாக எடுத்துக்கொள்ளலாம். அதன்படி, ஆண்டுக்கு 4 –5 மாதங்கள் மட்டுமே மூலப்பொருள்களைக் கொள்முதல் செய்ய முடிந்தாலும், உற்பத்தி செய்யப்பட்ட தீவனத்தைச் சேமித்து வைத்து ஆண்டு முழுக்க விற்பனை செய்யலாம். ஒரு கிலோ சைலேஜ் ரூ.6 வீதம், 2,000 டன் விற்பனையில் ரூ.1.20 கோடி வருமானம் கிடைக்கும்.

(தொழில் பழகுவோம்)

வீரன்
வீரன்

மாதம்தோறும் 750 டன் உற்பத்தி செய்கிறோம்!”

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் எம்.வி.ஆர் சைலேஜ் நிறுவன உரிமையாளரான வீரன், சைலேஜ் தயாரிப்பு தொழில் குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்தார். “கல்லூரியில் படிக்கும்போதே கால்நடை வளர்ப்பில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டு, தீவனச் செலவைக் குறைக்க பலதரப்பட்ட பசுந்தீவனங்களையும் கால்நடைகளுக்குக் கொடுத்தோம். சிறப்பான பலன் கிடைத்ததால், தீவன விற்பனையை பிசினஸாக மாற்றினோம். குறிப்பாக, வாடிக்கையாளர்களிடம் சைலேஜூக்கான வரவேற்பு அதிகரித்திருப்பதால் சில ஆண்டுகளாக இதன் விற்பனையிலும் அதிக கவனம் செலுத்துகிறோம். பல்வேறு பகுதிகளிலும் மூலப்பொருள்களைக் கொள்முதல் செய்து, மாதம்தோறும் 750 டன் உற்பத்தி செய்கிறோம். கோடைக்காலத்தில் மூலப்பொருள் தட்டுப்பாடு சவாலாக இருக்கிறது. இருப்பினும், நம்பிக்கையுடன் சிக்கல்களைச் சமாளிக்கிறோம். கால்நடைகளின் எடையைப் பொறுத்து தினமும் காலை மற்றும் மாலையில் இந்த சைலேஜ் தீவனத்தைப் பிரித்துக் கொடுத்தால் சிறப்பான பலன் கிடைக்கும்” என்று முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism