Published:Updated:

“அலுவலகம் இல்லை... வீட்டிலிருந்து வேலை...” - புதிய பாதை காட்டும் சி.கே.ஆர்..!

வீட்டிலிருந்து
வேலை
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டிலிருந்து வேலை

ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்கவைக்கும் முடிவை தீர்க்கமாக யோசித்து நம்பிக்கையுடன் எடுக்க வேண்டும்.

துவரை இல்லாத பல மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது கொரோனாநோய்த் தொற்று. இன்றைக்குப் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் அலுவலக இடப்பரப்பைக் குறைத்துவரும் வேளையில், `இனி அலுவலகமே வேண்டாம்’ என்று முடிவெடுத்து, எல்லோரையும் ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கியிருக்கிறார் கவின்கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.கே.ரங்கநாதன்.

சென்னையில் தேனாம்பேட்டை பகுதியில் செனடாப் ரோட்டில் 40,000 சதுர அடிப் பரப்பில் இருக்கிறது கவின்கேர் அலுவலகம். நான்கு மாடிகள்கொண்ட இந்த கார்ப்பரேட் அலுவலகத்தை தற்போது லீஸ் முறையில் வாடகைக்குவிட முடிவு செய்திருக்கிறார் சி.கே.ஆர். அவரது இந்த முடிவைக் கேட்டுவிட்டு, அவரைத் தொடர்புகொண்டோம். தனது இந்த முடிவைப் பற்றி நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

‘‘கோவிட்-19 நோய்த் தொற்று நம் நாட்டிலும் பரவத் தொடங்கிய உடனேயே, எங்கள் அலுவலகப் பணியாளர்கள் எல்லோரும் தங்களது வீடுகளிலிருந்து பணிபுரியலாம் என்று முடிவெடுத்தோம்.

வீட்டிலிருந்து
வேலை
வீட்டிலிருந்து வேலை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மார்ச் மாதம் 20-ம் தேதியிலிருந்து ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வரையிலான காலத்தில் எங்கள் பணியாளர்கள் வீட்டிலிருந்து எப்படி வேலை பார்க்கிறார்கள் என்று பார்த்தோம். அவர்கள் மிகப் பிரமாதமாக பணியாற்றுவதைப் பார்த்து எங்களுக்கு ஆச்சர்யம். அவர்களின் உறபத்தித்திறன் (Productivity) 20-30% அதிகரித்திருந்தது. இதைப் பார்த்து, இனி நிரந்தரமாக வீட்டிலிருந்தே வேலை செய்வது என்ற முடிவை எடுத்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வீட்டிலிருந்தே வேலை செய்ய முடிவெடுத்த பிறகு, அலுவலகம் என்ற ஒன்று எதற்கு என்ற கேள்வியும் வந்தது. இனி அலுவலகம் என்று ஒன்றிருந்தால், மீண்டும் அங்கே போகத் தோன்றும். `இனி அலுவலகமே இல்லை’ என்று முடிவு செய்துவிட்டால், வீட்டிலிருந்தே நமது வேலையை நன்றாகச் செய்வோம். எனவே, இந்த அலுவலகத்தை வேறு ஏதேனும் ஒரு நிறுவனத்துக்கு வாடகைக்கு விட்டுவிட முடிவெடுத்தோம். இப்போது தலைமை அலுவலகம் மட்டுமல்ல, நான்கு கிளை அலுவலகங்களையும் காலி செய்துவிட்டோம்’’ என்று உற்சாகமாகப் பேசியவர், தனது இந்த முடிவின் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றிப் பேசினார்.

வீட்டிலிருந்து
வேலை
வீட்டிலிருந்து வேலை

‘‘வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதன் மூலம் ஊழியர்களுக்கும் நன்மை, நிறுவனத்துக்கும் நன்மை. ஓர் ஊழியர் வீட்டிலிருந்து புறப்பட்டு, அலுவலகம் வந்து, வேலை பார்த்துவிட்டு, மீண்டும் வீட்டுக்குச் சென்றடைய தினமும் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. ஒருவர் ஒரு வாரத்துக்கு ஐந்து நாள்கள் அலுவலகம் வந்துசெல்ல, ஏழரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இதை 52 வாரத்துக்குக் கணக்கிட்டால், ஏறக்குறைய 379 மணி நேரம் அலுவலகம் வந்துபோகவே செலவாகிறது. இது ஏறக்குறைய 47 வேலை நாள்களுக்குச் சமம். `இந்த நேரத்தை வேலை செய்யச் செலவழியுங்கள்’ என்று நாங்கள் சொல்வதில்லை. அதைக் குடும்ப உறுப்பினர்களுடன் செலவு செய்வதால், எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கலாம். அதுபோக, ஊழியரின் அலைச்சலும் மிச்சம்.

ஓர் ஊழியர் அலுவலகத்துக்கு வந்தால், அவருக்குத் தேவையான இடத்துக்கான வாடகை, மின்சாரம், டேபிள், சேர், ஏ.சி., தண்ணீர் எனப் பலவற்றுக்கும் பெரும் பணம் செலவாகிறது. இந்த எல்லா வசதிகளையும் செய்து தர ஓர் ஊழியருக்கு மாதம் ரூ.15,000 வரை செலவாகிறது. சில நிறுவனங்கள் இதைவிட அதிகமான தொகையை செலவு செய்கின்றன. ஆனால், வீட்டிலிருந்தே வேலை செய்வதன் மூலம் இந்தச் செலவு மிச்சம்.

ஊழியர்கள் அலுவலகம் வந்துசெல்வது தவிர்க்கப்படுவதால் பெட்ரோல், டீசலுக்குச் செய்யப்படும் செலவு மிச்சம் என்பதுடன், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவது பெருமளவு குறைகிறது. மேலும், தற்போது வளர்ச்சி என்பது குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே இருக்கிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற பெரிய நகரங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு அதிக சம்பளம் கிடைப்பதால், சில நகரங்களில் அதிக வளர்ச்சியும், பல நகரங்களில் மிகக் குறைந்த வளர்ச்சியும் உருவாகிறது. ஆனால், வீட்டிலிருந்து வேலை செய்யும்போது எல்லோரும் தங்கள் சொந்த ஊரிலிருந்து வேலை செய்வதால் செல்வம் அனைத்து ஊர்களுக்கும் பரவலாகச் சென்று, எல்லா ஊர்களிலும் வளர்ச்சி ஏற்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொழில் சார்ந்த புரொஃபஷனல்கள், நிபுணர்கள் இதுவரை மும்பை, டெல்லி, பெங்களூரில்தான் இருந்தார்கள். அவர்களை நமக்காகப் பணிபுரியச் சொன்னால், சென்னைக்கு வர மறுப்பார்கள். ஆனால், இப்போது ஆன்லைன் மூலம் எந்த ஊரிலிருந்து வேண்டுமானாலும் அவர்கள் நமக்காக வேலை பார்ப்பார்கள். வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில், பல பெண்கள் வேலை செய்ய முன்வருவார்கள். வீட்டிலிருந்து வேலை செய்யும்போது வேலையையும் குடும்பத்தையும் ஒருசேர கவனித்துக்கொள்ள முடியும் என்பதால், பொருளாதார வளர்ச்சியில் இனி பெண் ஊழியர்களின் பங்களிப்பு கணிசமாக உயரும். எல்லாவற்றுக்கும் மேலாக, நோய்த் தொற்று கடுமையாக இருக்கும் இந்த நிலையில், ஓர் ஊழியர் அலுவலகத்துக்கு வந்து, அதனால் அவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால், அந்தக் குற்றவுணர்ச்சி நிர்வாகத்தை வாட்டும். ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்தால், அவர்களுக்கு நோய்த் தொற்று வந்துவிடுமோ என்று நிர்வாகம் பயப்படத் தேவையில்லை’’ என்று பேசிக்கொண்டே போனவர், இதன் இன்னொரு பக்கத்தையும் சொன்னார்.

சி.கே.ரங்கநாதன்
சி.கே.ரங்கநாதன்

‘‘வீட்டிலிருந்து எல்லாவிதமான வேலைகளையும் செய்துவிடலாம் என்று சொல்ல முடியாது. சின்னச் சின்னப் பொருளை வேண்டுமானாலும் வீட்டிலிருந்து தயாரிக்கலாம். ஆனால், முக்கியமான, விலையுயர்ந்த பொருள் எனில், அதைத் தொழிற்சாலையில்தான் தயாரிக்க முடியும். ஆராய்ச்சி தொடர்பான வேலைகளையும் லேபில்தான் செய்ய வேண்டும். இதை நன்றாக உணர்ந்து, நாங்கள் தொழிற்சாலை மற்றும் ஆர் அண்ட் டி ஆகிய இரண்டில் மட்டும் ஊழியர்களை தினமும் அலுவலகம் வந்து செல்ல ஏற்பாடு செய்திருக்கிறோம்.

கோவிட்-19 நோய் பயம் முற்றிலும் ஒழிந்த பிறகு ஊழியர்கள் அனைவரும் மாதமொருமுறை ஒரு ஹோட்டலிலோ அல்லது வேறிடத்திலோ நேரில் சந்திக்க முடிவு செய்திருக்கிறோம். அன்றைக்கு ஊழியர்கள் எல்லோரும் தங்கள் அலுவலக நண்பர்களுடன் பேசி, பாட்டுப் பாடி, மகிழ்ச்சியாக இருக்கலாம்.

நான் இந்த முடிவை சில நாள்களுக்கு முன்னர் அறிவித்தபோது, ‘இதெல்லாம் நிஜத்தில் நடக்காது’ என்றார்கள். ஆனால், இன்றைக்குப் பலரும் எனக்கு போன் செய்து, இது மாதிரி தாங்களும் செய்ய என்ன செய்ய வேண்டும், என்ன மாதிரியான பிரச்னைகள் வரும், அந்தப் பிரச்னைகளுக்கு எப்படித் தீர்வு காணலாம் என்று ஆலோசனை கேட்கிறார்கள்.

வீட்டிலிருந்து
வேலை
வீட்டிலிருந்து வேலை

வீட்டிலிருந்து வேலை செய்யும் முடிவை எல்லாப் பணியாளர்களும் ஏற்றுக் கொள்வார்களா என்று கேட்டால், நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள். ஆறு நாள்கள் வேலை செய்யும் அலுவலகங்களைவிட ஐந்து நாள்கள் வேலை செய்யும் அலுவலகங்களைப் பணியாளர்கள் விரும்புவதுபோல, வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கும் நிறுவனங்களைப் பணியாளர்கள் நிச்சயம் விரும்புவார்கள்’’ என்றவர், இறுதியாக ஒரு விஷயத்தைச் சொன்னார்.

‘‘வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதித்தால், ஊழியர்கள் நம்மை ஏமாற்றி விடுவார்கள் என்று நினைக்கத் தேவையில்லை. ஊழியரின் உற்பத்தித்திறன் எப்படி இருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடித்துச் சொல்லும் பல சாஃப்ட்வேர்கள் இப்போது வந்துவிட்டன. எனவே, நமது ஊழியர்களை நாம் சரியாக வழிநடத்தினால், அவர்கள் நன்றாகவே உழைப்பார்கள். அப்படி உழைப்பவர்களை ஊக்குவிப்பதன் மூலம் எல்லா ஊழியர்களையும் நன்கு உழைக்கவைக்க முடியும்.

ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்கவைக்கும் முடிவை நிறுவனத் தலைவரும், நிர்வாக அதிகாரிகளும் தீர்க்கமாக யோசித்து நம்பிக்கையுடன் எடுக்க வேண்டும். இதில் அரைகுறை மனதுடன் எடுத்தால், வெற்றி பெற முடியாது’’ என்று முடித்தார் சி.கே.ஆர்.

வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்கச் செய்வதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என்பது சி.கே.ஆரின் பேச்சிலிருந்து தெளிவாகப் புரிகிறது.

சொந்த ஊரில் வேலை... கிஷ்ஃப்ளோவின் புதிய திட்டம்!

சென்னை டைடல் பார்க்கில் இயங்கிவருகிறது சாஸ் (SaaS) நிறுவனமான கிஷ்ஃப்ளோ. இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தம், `ரிமோட்+’ என்ற புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருப்பது பற்றி அவருடன் பேசினோம்.

“அலுவலகம் இல்லை... வீட்டிலிருந்து வேலை...” - புதிய பாதை காட்டும் சி.கே.ஆர்..!

‘‘ஐ.டி தொடர்பான வேலைகளைச் சென்னையிலிருந்துதான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்டர்நெட் வசதியுள்ள எந்த ஊரிலிருந்து வேண்டுமானாலும் செய்யலாம். இந்த வேலையை கான்கிரீட் ஜங்கிளான சென்னையிலிருந்து செய்வதைவிட தங்களது சொந்த ஊர்களிலிருந்து செய்ய பலரும் விரும்புகிறார்கள். எனவே, எங்கள் ஊழியர்கள் தங்களது சொந்த ஊரிலிருந்து வேலை பார்ப்பது போன்ற வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் `ரிமோட்+’ என்ற திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறோம். இந்தத் திட்டத்தின்படி, ஒருவர் அலுவலகத்துக்கு வந்து வேலை பார்க்கலாம்; அல்லது சொந்த ஊரிலிருந்து வேலை பார்க்கலாம். சொந்த ஊரில் செலவைக் குறைத்து, சொந்தபந்தங்களுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறோம்.

எந்த ஊரிலிருந்து வேலை பார்த்தாலும், ஓர் ஊழியர்/ஊழியர் குழு மாதத்துக்கு ஒரு வாரம் தலைமை அலுவலகத்துக்கு வந்து எல்லோருடனும் இணைந்து பணியாற்ற வேண்டும். சென்னையில் தேவைப்படும் போக்குவரத்து வசதி, தங்கும் இடவசதியை நாங்களே ஏற்பாடு செய்துவிடுவோம்.

அலுவலகக் குழுக்களிடையே நல்லுறவை ஏற்படுத்த மாதந்தோறும் கூட்டம் நடத்துவோம். காலாண்டுக்கு ஒரு முறை அனைவரும் ஓரிடத்தில் கூடி, தாங்கள் செய்த சாதனைகள் பற்றி மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்லலாம். இதன் மூலம் ஊழியர் குழுக்களிடையே ஆரோக்கியமான போட்டி உருவாகும். ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறை எல்லோரும் நேரில் சந்திக்கிற மாதிரி ஒரு சுற்றுலா நிகழ்ச்சி ஏற்பாடு செய்வோம். ஊழியர்களின் உற்பத்தித்திறனை தினப்படி செய்யும் வேலைகளைவைத்து முடிவு செய்யாமல், அவர் தனது வேலையை மொத்தமாக எப்படி முடித்துத் தருகிறார் என்பதைவைத்து முடிவு செய்வோம். இந்த முறையில் நாங்கள் செயல்பட ஆரம்பித்ததிலிருந்து எங்கள் ஊழியர்களின் உற்பத்தித்திறன் 30% அதிகரித்திருக்கிறது. சிறிய ஊர்களில் தங்கி பணிபுரிவதன் மூலம் மாதமொன்றுக்கு ரூ.20,000 செலவு குறைகிறது. வீட்டிலிருக்கும் வயதான தாத்தா-பாட்டி, பெற்றோர்களை கவனித்துக்கொள்ள முடிகிறது. முக்கியமாக, குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழிக்க முடிகிறது. இந்தத் திட்டத்தை நாங்கள் செயல்படுத்தத் தொடங்கியவுடன் பலரும் இதை பாசிட்டிவ்வாகப் பார்த்து, பேசத் தொடங்கியிருக்கிறார்கள். நாங்கள் செயல்படுவதுபோலவே எல்லோரும் செயல்பட வேண்டுமென்பதில்லை. எல்லோரும் தங்களுக்கேற்ற மாதிரி விதிமுறைகளை வகுத்துக்கொள்ளலாம்’’ என்றார்.