தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

“சுதந்திரமும் தைரியமும்தான் அப்பா கொடுத்த பெரிய கிஃப்ட்!” - மனம் திறக்கும் ‘கவின்கேர்’ குடும்பம்

அமுதவல்லி, சி.கே.ரங்கநாதன், தாரணி
பிரீமியம் ஸ்டோரி
News
அமுதவல்லி, சி.கே.ரங்கநாதன், தாரணி

அப்பா விடம் பிடித்ததே அவர் வாழ்க்கை குறித்தும், மனிதர்கள் குறித்தும் வைத்திருக்கிற மதிப்பீடுகளும், கொள்கைகளும்தான்

வெறும் 15,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கி, இன்று ரூ.5,000 கோடி மதிப்புள்ள நிறுவனமாக வளர்ந்திருக்கிற ‘கவின்கேர்’ குழுமத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் சி.கே.ரங்கநாதனின் மகன், மகள்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அவள் விகடனுக்காக சி.கே.ரங்கநாதன், மகள்கள் அமுத வல்லி, தாரணி மூவரையும் சென்னையில் உள்ள அவர்களின் கவின்சோலை இல்லத்தில் சந்தித்தோம். தலைமுறைகள் தாண்டியும் ஒரு பிசினஸ் வெற்றிகரமாக வளர குடும்பத்திலும், நிறுவன நிர்வாகத்திலும் கவின்கேர் குடும்பம் கடைப்பிடிக்கும் அணுகுமுறைகளை, நுணுக்க மான பிசினஸ் விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள் அவர்கள்.

“சமுதாயத்தில் பெண்கள் யாரையும் எதிர்பார்க்காமல் சொந்தக் காலில் நிற்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பது அம்மா விடமிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம். நானும் என் மனைவியும் எங்கள் மகள்களை அப்படித்தான் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தோம். பெண் பிள்ளைகளை பொத்திப்பொத்தி வளர்க்கக் கூடாது என்று தீர்மானித்தோம். இவ்வளவு பெரிய நிறுவனம் இருக்கிறது, இதைவிட என்ன வேண்டும் என்று நினைக்கவில்லை.

வாழ்க்கையில் அதற்கே உரிய நல்லது, கெட்டது, சவால்கள் எல்லாவற்றையும் அவர்களாகவே பார்த்து, அடிபட்டு கற்றுக் கொண்டால்தான் யாரையும் எதிர்பார்க்காமல் அவர்கள் வாழ்க் கையை வாழ முடியும். அதனால்தான் அவர்களாகவே தனியாக பிசினஸ் தொடங்கி அதில் வெற்றிகண்ட பிறகுதான் கவின்கேர் நிறுவனத்துக்குள் நுழைய முடியும் என்று கண்டிஷனாகச் சொல்லி விட்டேன். நன்றாக வளர்ந்த பிசினஸ் இருக்கிறது. படித்து முடித்து விட்டு, நேராக வந்து நிர்வாக சீட்டில் அமர்ந்துவிடலாம் என்று நினைக்கக் கூடாது என்று ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன்.

அமுதவல்லி, சி.கே.ரங்கநாதன், தாரணி
அமுதவல்லி, சி.கே.ரங்கநாதன், தாரணி

மூத்த மகள் அமுதவல்லி, கவின்கேர் நிறுவனத்துக்குள் வருவதற்கு 10 வருடங்கள் எடுத்துக்கொண்டார். கல்வி நிறுவனம் ஆரம்பித்து நடத்தி, பல முறை தவறு செய்து, தோல்வி கண்டு கொஞ்சம் கொஞ்சமாக பிசினஸ் பற்றி கற்றுக்கொண்டு இப்போது தகுதியான நபராக தயாராகி இருக்கிறார். மகன் மனுவையும் ஐந்தாண்டுகள் சொந்தமாக பிசினஸ் செய்து கற்றுக்கொண்ட பிறகே கவின்கேருக்குள் அனுமதித்தேன். அதேபோல் இளைய மகள் தாரணி, ஸ்வீட் ஷாப் ஆரம்பித்து தோல்வி கண்டு, அடிபட்டு பிசினஸ் விஷயங்களைக் கற்றுக்கொண்டார். இப்போது அடுத்த முயற்சியாக ஹோம்பேக்கிங் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்” என்று பெருமை பொங்கப் பேசுகிறார் சி.கே.ரங்கநாதன்.

“பிசினஸைத் தாண்டி அப்பா பல விஷயங்களை எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். முக்கியமாக அப்பா விடம் பிடித்ததே அவர் வாழ்க்கை குறித்தும், மனிதர்கள் குறித்தும் வைத்திருக்கிற மதிப்பீடுகளும், கொள்கைகளும்தான்...’’ என பேச ஆரம்பித்தார் அமுதவல்லி ரங்கநாதன்...

‘`எந்தச் சந்தர்ப்பத்திலும் சூழ்நிலையிலும் நியாயமாக நடந்துகொள்வது, எந்த உயரத்துக்குப் போனாலும் தலைக்கனம் இல்லாமல் நடந்துகொள்வது, சக மனிதனை மனிதனாக மதிப்பது என நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதேபோல் பிசினஸ் இருக்கிறது, நல்ல வருமானம் வருகிறது என்பதற்காக நமக்கான விஷயங்களை முதலில் பார்க்கக் கூடாது. வங்கி, பங்குதாரர்கள், விநியோகஸ்தர் களுக்கான பேமென்ட், ஊழியர்கள், நிறுவனத் துக்கான முதலீடு, இவையெல்லாம்தான் முதலில், அதற்குப் பிறகுதான் மற்றதெல்லாம் என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறார். அன்பு, பாசத்திலும் அப்பா எப்போதுமே பெஸ்ட் தான். மூன்று பேரையுமே ஒரே மாதிரி நடத்தி யிருக்கிறார். ‘நீ முதலில் உன் சொந்த முயற்சியில் பிசினஸ் ஆரம்பி. தோல்வி வந்தால் பரவாயில்லை. தவறுகள் நடந்தாலும் தொடர்ந்து முயற்சி செய். பிரச்னை என்றால் அப்புறம் என்னிடம் வா... நான் வழிகாட்டு கிறேன். சொந்தமாக முயற்சி செய்து கற்றுக் கொண்டால்தான் அனுபவம் கிடைக்கும். அதுதான் கடைசி வரைக்கும் உங்களுடைய வளர்ச்சிக்கு மூலதனம்’ என்று சொல்வார்” - அப்பா பற்றிப் பேசும் தாரணியிடம் அவ்வளவு பெருமை.

“சுதந்திரமும் தைரியமும்தான் அப்பா கொடுத்த பெரிய கிஃப்ட்!” - மனம் திறக்கும் ‘கவின்கேர்’ குடும்பம்

“2014-ல் இன்டர்நேஷனல் ப்ரீஸ்கூல் ஆரம்பித்தேன். உயர் தரத்தில் சர்வீஸ் கொடுக்க வேண்டும் என்று பெரிய இடமாக வாடகைக்கு எடுத்தேன். ஆனால் செலவு ரொம்பவும் அதிகமாகி சமாளிக்க முடியாமல் போனது. அதன்பிறகுதான் கல்வியின் தரம் இடத்தில் இல்லை, கற்பிப்பதில் இருக்கிறது என்பது புரிந்தது. தேவையான அளவுக்கு மட்டுமே இடத்தை எடுத்து மீண்டும் ஆரம்பித் தோம். போகப்போக விரிவாக்கம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். பிசினஸில் எங்களுடைய முயற்சிகளுக்குத் தேவையான உதவிகளை அப்பா செய்து வந்தாலும், பிசினஸ் விஷயத்தில் எங்களிடம் கண்டிப்பாகத்தான் இருப்பார்” என்றார் அமுதவல்லி.

“லைஃபோ... பிசினஸோ தொடர்ந்து ஒரே நேர்க்கோட்டில் போகாது. எல்லோரும் தவறு செய்வோம். சவால்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். எல்லா விஷயங்களிலும் ‘இது என்ன ஆச்சு, அது என்ன ஆச்சு, ஏன் இப்படி நடந்தது’ என்று தலையிட்டு கட்டுப்படுத்த மாட்டேன். தவறு நடந்திருந்தால் அதில் இருந்து என்ன கற்றுக்கொண்டார்கள், எப்படி அதை சரி பண்ணலாம் என்று பேசுவோம். பெரிய மூலதனம் கொடுத்தால் அகலக்கால் வைத்துவிடுவார்கள் என்பதால், சிறிய அளவில் முயற்சி செய்து வெற்றி கண்டபிறகு பெரிய முயற்சிகளில் இறங்குங்கள் என்று சொல்வேன். நாணயமாக இருக்க வேண்டும். அடுத்தவர்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டும். நாம் மட்டும் ஜெயித்தால் போதும் என்றும், அடுத்தவர்கள் தோற்க வேன்டும் என்றும் நினைக்கக் கூடாது. இதையெல்லாம் எப்போதும் மறந்துவிடக்கூடாது என்று கூறியிருக்கிறேன்” வாழ்க்கைப் பாடத்தோடு பிசினஸ் பாடத்தையும் கற்றுக்கொடுத்த தந்தையாகச் சொல்கிறார் சிகேஆர்.

``காலேஜ் முடிக்கிற வரைக்கும் எனக்கு பிசினஸ் பற்றி எதுவுமே தெரியாது. இங்கிலீஷ் அதிகம் படித்ததில்லை. ஆனால் பிசினஸ் ஆரம்பித்த பிறகு என்னை நானே வளர்த்துக் கொண்டேன். அப்படித்தான் என் பிள்ளை களும் வளர விரும்பினேன். பணம் சம்பாதிப் பது பெரிய விஷயம் இல்லை. நாம் உருவாக்கும் மதிப்பையும் மரியாதையையும் காப்பாற்ற வேண்டும். அந்த விஷயத்தில் பிள்ளைகள் நாங்கள் பெருமைப்படுகிற மாதிரி வளர்ந்திருக்கிறார்கள்.

அமுதவல்லி கடலூரில் ஸ்கூல், காலேஜ் கவனித்துக்கொள்வதோடு கவின்கேர் குழுமத்தின் இ-காமர்ஸ் பிரிவைப் பார்த்துக் கொள்கிறார். மகன் மனு தனியாக சி.கே பேக்கரி தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டு, இப்போது கவின்கேர் குழுமத்தின் ரீடெய்ல் பிரிவை கவனித்துக்கொள்கிறார். தாரணியும் அவருடைய பிசினஸில் வெற்றி கண்ட பிறகு கவின்கேரில் ஒரு பிரிவில் இணைவார்” - பூரிக்கிறார் சிகேஆர்.

தானும் வளர்ந்து, தன்னைச் சார்ந்தோரையும் சேர்த்து வளர்க்க நினைக்கும் கவின்கேர் இன்னும் பல உயரங்களை எட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.