Published:Updated:

GST விவகாரம்: மாநிலங்களுக்காக மத்திய அரசே கடன் வாங்க முடிவு... பிரச்னை தீருமா?

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன் ( படம்: விகடன் / பெ.ராகேஷ் )

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய இழப்பீட்டு நிலுவைத்தொகை 1.51 லட்சம் கோடி ரூபாய் கோடியாக உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, ``ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக மத்திய அரசு கடன் வாங்க முடியாது. மாநில அரசுகள் தேவைப்பட்டால் வெளியில் கடன் வாங்கிக் கொள்ளலாம்" என ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசு கையை விரித்தது.

மத்திய அரசின் இந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல மாநிலங்கள் குரல் கொடுத்தன. கடந்த மூன்று ஜி.எஸ்.டி கூட்டத்தில், தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட தமிழக அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்துக்கான ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை 10,774.98 கோடி ரூபாயை உடனே வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

கடன் வாங்க ஏற்பாடு!

ஆனால் மத்திய அரசோ, தம்மிடம் நிதி இல்லை, வெளிச்சந்தையில் கடனும் வாங்க முடியாது; மாநில அரசுகள் கடன்வாங்க ஏற்பாடு செய்கிறோம் என்றே கூறியது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால், நடப்பு நிதியாண்டில், மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையில் 2,35,000 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட ரிசர்வ் வங்கி மூலம் 97,000 கோடி ரூபாய் கடன் (அசலுடன் இதற்கான வட்டியையும் சேர்த்து, மத்திய அரசே ரிசர்வ் வங்கிக்குத் திருப்பிச் செலுத்தும்) அல்லது வெளிச்சந்தையில் மொத்தமாக 2,35,000 கோடி ரூபாய் கடன் திரட்டுமாறு மாநிலங்களுக்கு இரண்டு விருப்பத் தேர்வுகளை ஏற்கெனவே மத்திய அரசு முன்வைத்திருந்தது. ஏற்கெனவே பல மாநிலங்களின் கடன் சுமை அதிகமாக இருப்பதால், வெளிச்சந்தை கடன் விருப்பத்தேர்வை 20 மாநிலங்கள் மட்டும் ஏற்றுக்கொண்டுள்ளன. மற்ற மாநிலங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில், திடீர் திருப்பமாக, ஜி.எஸ்.டி வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட மாநிலங்களுக்காக மத்திய அரசே 1.10 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குவதாகத் தெரிவித்துள்ளது.

பொருளாதார மந்தநிலை காரணமாக, கடந்த நிதி ஆண்டில் இருந்தே மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி வருவாய் வீழ்ச்சி அடையத் தொடங்கியது. மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்க சொகுசு பொருள்கள் மற்றும் புகையிலைப் பொருள்கள் மீது விதிக்கப்படும் உபரிவரி மூலம் கிடைக்கும் வருவாயை மத்திய அரசு பயன்படுத்துகிறது. ஆனால், அந்த வருவாயும் குறைந்துவிட்டது. அதனால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய இழப்பீட்டு நிலுவைத்தொகை 1.51 லட்சம் கோடி ரூபாய் கோடியாக உள்ளது.

GST
GST

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ``அனைத்து மாநிலங்கள் சார்பில் மத்திய அரசே வெளிச்சந்தையில் 1.10 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கும். பின்னர், ஜி.எஸ்.டி இழப்பீட்டுக்குப் பதிலாக, மாநிலங்களுக்கு அந்தப் பணம் கடனாக வழங்கப்படும். மாநிலங்கள் தனித்தனியாகக் கடன் வாங்கினால், வட்டி விகிதம் வெவ்வேறு விதமாக இருக்கும். மத்திய அரசு வாங்கினால், வட்டி விகிதம் ஒரே மாதிரி இருக்கும். அது நிர்வகிக்க எளிதாக இருக்கும். இந்தக் கடன், மத்திய அரசின் நிதி பற்றாக்குறையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு ரூ.10,774 கோடி!

இன்றைய நிலையில் பொருளாதார ரீதியாகவும் சரி, கொரோனா பாதிப்பிலும் சரி, தமிழகத்தின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. தமிழக அரசுக்கு ஒவ்வொரு மாதமும் சுமார் 12,000 கோடி வரி வருவாய் கிடைக்க வேண்டும். ஆனால், கடந்த மூன்று மாதங்களாகப் பெருமளவு வருமானம் சரிந்துள்ளது. இதை ஈடுகட்ட வேறு வழியில்லாமல் தமிழக அரசு கடன் வாங்கியிருக்கிறது. தற்போதைய நிலையில் தமிழகத்துக்கு மட்டும், மத்திய அரசாங்கம் கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை 10,774.98 கோடி. அதை கொடுத்தாலாவது, தற்காலிகமாக நிதிச் சிக்கலை தமிழகம் சமாளிக்கும்.

Economy
Economy

கொரோனா நெருக்கடியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதால் அரசு மக்களுக்காக அதிக செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. கொரோனா தடுப்புப் பணிக்காக அதிக நிதி ஒதுக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. எனவேதான் தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களில் அதிக கடன் வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் கடனை அதிகரித்துக்கொண்டே போனால், தமிழகத்தின் நிதிச்சுமை அதிகமாகும்.

சட்டத்துக்குப் புறம்பான செயல்!

இதுகுறித்து பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானத்திடம் பேசினோம். ``மத்திய அரசு மாநிலங்களுக்கு இரண்டு வகையான கடன் திட்டங்களை, கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி கூட்டத்தில் அறிவித்தது. அதன்படி, முதல் வகை திட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரியால் ஏற்பட்ட வருவாய் இழப்புக்கு ஈடான தொகையை மாநில அரசுகள் சந்தையிலிருந்து கடனாகப் பெற்றுக்கொள்ளலாம்.

இரண்டாம் வகைக் கடன் திட்டத்தின்படி, மாநிலங்கள் தங்கள் மாநிலத்துக்கு சரக்கு மற்றும் சேவை வரியால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பைச் சரிசெய்ய ரூ.2.35 லட்சம் கோடியைக் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்தக் கடன்களுக்கு வட்டி கட்டுவது மாநில அரசின் பொறுப்பாகும்.

ஜோதி சிவஞானம்
ஜோதி சிவஞானம்

ஆனால், மத்திய அரசாங்கம் ஏற்கெனவே வாக்கை காப்பாற்றவில்லை என நினைப்பதால், ஜார்க்கண்ட், கேரளா, தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் இந்த இரண்டு திட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தற்போது வரை ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், பீகார், கோவா, குஜராத், ஹரியானா இமாசலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஒடிசா, சிக்கிம், திரிபுரா உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் முதல் வகை கடன் திட்டத்தைத் தேர்வு செய்துள்ளதாகவும், இந்தக் கடன் திட்டத்தின் மூலம் 97,000 கோடி தொகையைக் கடனாகப் பெற ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த 97,000 கோடி ரூபாயைத்தான் தற்போது 1.10 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தி இருக்கிறார்கள்.

ஜி.எஸ்.டி இழப்பீடு... மாநில அரசாங்கங்கள் எதிர்ப்பது ஏன்? - விளக்கமான அலசல்!

மீதம் இருக்கும் 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கான வழியை மத்திய அரசாங்கம் ஏற்படுத்தவில்லை. அதை `ஆக்ட் ஆஃப் காட்' என்று சொல்லி, தராமல் தட்டிக்கழிக்கவே பார்க்கிறார்கள்.

மத்திய அரசின் கணக்குப்படி பார்க்கும்போது, ஒவ்வொரு மாநிலத்துக்கும் சேர வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையில் பாதிக்கும் குறைவாகவே கிடைக்கும். மீதித் தொகைக்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டிய நிலைமை உருவாகிறது. இது சட்டத்துக்கு புறம்பான செயலாகும். ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தும்போது மத்திய அரசு சொன்னது ஒன்று, இப்போது செய்துகொண்டிருப்பது ஒன்றாக இருக்கிறது. இது மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு செய்யும் துரோகச் செயலாகும்" என்றார் காட்டமாக.

தமிழக அரசைப் பொறுத்தவரை, வெளிச்சந்தையில் அதிக வட்டிக்குக் கடன் வாங்கும் பிரச்னை இப்போதைக்கு இல்லை என்பது ஆறுதலான விஷயம்தான்!

அடுத்த கட்டுரைக்கு