Published:Updated:

புதிய ஹால்மார்க் விதிமுறைகள்: சென்னையில் நகைக் கடைகளை மூடி போராட்டம்; என்ன காரணம்?

Gold (Representational Image)
Gold (Representational Image) ( Photo by vaibhav nagare on Unsplash )

``கட்டாய ஹால்மார்க் திட்டம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அறிமுகமான 50 நாள்களில் ஒரு கோடி தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது."

புதிய `ஹால்மார்க்' விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, `அடையாள வேலைநிறுத்தம்' போராட்டத்தைத் தமிழகத்தின் நகைக்கடை உரிமையாளர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள சிறிய மற்றும் பெரிய நகைக்கடைகள் என 35,000 தங்க நகைக் கடைகள், இன்று காலை 9:00 முதல், 11:30 மணி வரை மூடப்பட்டிருந்தன.

கடந்த ஜூன் 16-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளிலும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்றும், இந்த விதிமுறைகளின்படி, தங்க நகை விற்பனையாளர்கள் இனி 14, 18 மற்றும் 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்கத்தை விற்பனை செய்ய வேண்டும் என்றும் பி.ஐ.எஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

தங்கம்
தங்கம்
தங்கத்துக்கு இனி ஹால்மார்க் கட்டாயம்; அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள் சொல்வது என்ன?

இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே, நாடு முழுவதும் நகைக் கடை உரிமையாளர்களும், வியாபாரிகள் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துவந்தன. முதல் கட்டமாக, கடை அடைப்புப் போராட்டத்தை நடத்தப் போகிறோம் என்கிற அறிவிப்பையும் சில தினங்களுக்கு முன்பு நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டது.

இந்தக் கடை அடைப்பு அறிவிப்பைக் கைவிடுமாறு, இந்திய தர நிர்ணய அமைப்பின் தலைமை இயக்குனர் பிரமோத் குமார் திவாரி கூறியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்து இதுகுறித்துப் பேசியபோது, ``கட்டாய ஹால்மார்க் திட்டம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அறிமுகமான 50 நாள்களில் ஒரு கோடி தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது.

பிரமோத் குமார் திவாரி , BIS
பிரமோத் குமார் திவாரி , BIS

மேலும், ஹால்மார்க் பதிவிற்காக விண்ணப்பித்த நகைக் கடைக்காரர்களின் எண்ணிக்கை 35,000 -லிருந்து 91,603-ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான நகைக் கடைக்காரர்கள் ஹால்மார்க் கட்டாயமாக்கியதை வரவேற்றுள்ளனர். ஆனால், பல தங்க நகை அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறைகளைச் சரிசெய்ய இந்த அரசு காத்திருக்கிறது. அதனால் கடை அடைப்பைக் கைவிடுங்கள்" என கேட்டிருந்தார்.

புதிய ஹால்மார்க் விதிகளை நகை வியாபாரிகள் எதிர்ப்பது ஏன்..? விரிவான அலசல்...

இந்த நிலையில்தான், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இன்று ஒரு நாள் மட்டும் 2:30 மணி நேரம் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை நகைக்கடை உரிமையாளர்கள் நடத்தியிருக்கிறார்கள்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜலானி, ``பி.ஐ.எஸ் அமைப்பு, நகைக் கடைகள் வாயிலாக விற்கப்படும் தங்க நகைகளுக்கு, இனி புதிய ஹால்மார்க் தர அடையாள எண் கொண்ட நிரந்தர முத்திரை பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது. நாங்கள் நகைகளில் ஹால்மார்க் முத்திரை இடம்பெற வேண்டும் என்பதை எதிர்க்கவில்லை. அதை வரவேற்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், ஹால்மார்க் அடையாள எண்ணைக் கொண்டுவர வேண்டும் என்பதைத்தான் எதிர்க்கிறோம். புதிய தர முத்திரை வழங்கும் வசதி உடைய, நாட்டின் 256 மாவட்டங்களிலும், இனி ஹால்மார்க் அடையாள எண்ணை தங்க நகைகளில் பதிவு செய்து விற்பனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது தர முத்திரை வழங்கும் மையங்களில் அதற்கான போதிய வசதியும், சாதனங்களும் இல்லை. இதனால், ஹால்மார்க் மையங்களில் கோடிக்கணக்கான நகைகள் முடங்கியுள்ளன. இதனால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேவையான நகைகள் தேக்கமடைந்து, விற்பனைக்கு வராமல் உள்ளன.

ஜெயந்திலால் ஜலானி
ஜெயந்திலால் ஜலானி

ஒரு நகை செய்து, ஹால்மார்க் முத்திரை மற்றும் தனி ஹால்மார்க் அடையாள எண் பதிந்து, விற்பனைக்கு கொண்டுவர, ஒன்பது முதல், 12 நாட்களாகும்.இதனால், தங்க நகைகள் தேங்கி, விற்பனை பாதிக்கும். மேலும், புதிய முறையில் நகை வாங்குவோரின் தனி விபரங்களையும் அளிக்க வேண்டி வருவதால், இது, தனிநபர் ரகசியம் காக்கும் உரிமையை மீறுவதோடு, அவர்களின் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்கும். இதற்கு பிறகும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிடில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.

நகைக்கடை உரிமையாளர்களின் இந்தப் போராட்டம் தங்க நகை வாங்க நினைப்பவர்களிடம் கவலையை உருவாக்கியுள்ளது!

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

அடுத்த கட்டுரைக்கு