Published:Updated:

தொழிலாளி டு முதலாளி... ஷிப்பிங் தொழிலில் கலக்கும் சென்னைப் பெண்! ஒரு சிங்கப் பெண்ணின் வெற்றிக் கதை

வானதி தேவி
பிரீமியம் ஸ்டோரி
News
வானதி தேவி

B U S I N E S S

தொழிலாளியாக இருந்து முதலாளியாக உயர்ந்தவர் வானதி தேவி. ஷிப்பிங் அண்டு கிளியரிங் துறையில் சாதாரணப் பணியாளராக வேலை பார்த்தவர், இன்று அதே துறையில் இரண்டு நிறுவனங்களை நிர்வகித்துவரும் வெற்றியாளர். இவரது நிறுவனங் களின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் வர்த்தகம் நடக்கிறது. சென்னையிலுள்ள அவரது நிறுவனத்தில் வானதி தேவியைச் சந்தித்தோம்.

வானதி தேவி
வானதி தேவி

ராமநாதபுரம் எனக்கு பூர்வீகம்...

“எனக்கு பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டத்துல குக்கிராமம். வீட்டுல படிப்புக்கு நிறைய ஊக்கம் கிடைச்சுது. எம்.பி.ஏ முடிச்சேன். உடனே கோயம்புத்தூர்ல ஒரு தனியார் கம்பெனியில வேலை கிடைச்சுது. நல்ல சம்பளம்தான். ஆனா, பெரிசா சவால்கள் இல்லாத அந்த வேலை மனசுக்கு நிறைவைத் தரலை. ஷிப்பிங் கம்பெனி ஒண்ணுல வேலைக்கு ஆட்கள் தேவைங்கிற விளம்பரத்தை நியூஸ் பேப்பர்ல பார்த்துட்டு, உடனே சென்னைக்கு வந்தேன். சாதாரண ஊழியரா வேலையில் சேர்ந்தேன்.

அப்போ இந்தத் துறைச் சார்ந்த எந்த விஷயமும் எனக்குத் தெரியாது. லோடிங், அன் லோடிங் தவிர, ஏற்றுமதி - இறக்குமதி சார்ந்த எல்லா வேலைகளையும் சீக்கிரமே கத்துகிட்டேன். ஏற்றுமதி, இறக்குமதிக் கான சரக்குப் பெட்டகங்களை ஒவ்வொரு நாட்டின் சட்டதிட்டங் களுக்கு உட்பட்டு, சுங்கத்துறை அனுமதியுடன் விமானம், கப்பல் மற்றும் சாலை மார்க்கமாக ஒரு நாட்டுல இருந்து மற்றொரு நாட்டிலுள்ள வாடிக்கையாளருக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் வர்த்தகப் பொருள்களுக்கு எந்தவித சேதாரமும் இல்லாம கொண்டுபோய் சேர்ப்பது தான் எங்க தொழில்.

இந்த வேலைகளை முடிக்கிறதுக்குள் நிறைய சவால்களும் சுவாரஸ்யங்களும் இருக்கும். அதனால, அந்த கம்பெனியில வேலை செஞ்ச ஏழு வருஷத்துல, நிறைய அனுபவங்கள் கிடைச்சதுடன், இந்தத் துறையும் எனக்கு ரொம்பவே பிடிச்சுடுச்சு. துறைச் சார்ந்த பல்வேறு படிப்புகளையும் முடிச்சதுடன், அந்த அனுபவங்களைக் கொண்டு புதுப்புது ஆர்டர்களையும் பிடிச்சுக் கொடுத்தேன். பலரின் கூட்டு முயற்சியால அந்த கம்பெனி முன்னணி நிலைக்கு வளர்ந்துச்சு.

இந்த நிலையில, ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு சென்னை உட்பட உலகின் பல்வேறு நகரங்கள்ல இயங்கின சரக்குப் பெட்டகங்களைக் கையாளுதல் பணியில சிறந்து விளங்கிய கம்பெனி ஒண்ணுல முக்கியப் பொறுப்பு கிடைச்சுது. ரெண்டு வருஷங்கள் ஓடிச்சு. பிறகு, அந்த வேலையில இருந்து விலகினேன். அந்த முடிவுலதான் என் வாழ்க்கையில பெரிய மாற்றம் உருவாச்சு” என்று பீடிகையுடன் இடைவெளி விடுகிறார் வானதி தேவி.

அடுத்தடுத்து விலகிய பார்ட்னர்கள்...

அதுவரை இரண்டு நிறுவனங்களிலும் கற்ற தொழில் அனுபவங்களைக் கொண்டு புதிய நிறுவனத்தை 2000-ல் தொடங்கியிருக்கிறார். தொடக்கத்தில் ஏமாற்றங்களே அதிகம் கிடைத்த நிலையில், விடாப்பிடியாகத் தொழில் முனைவோராகப் பயணிக்கத் தொடங்கி யிருக்கிறார்.

“ரெண்டு நண்பர்களைத் தொழில் பார்ட்னர்களாகச் சேர்த்து, ‘Vista Expedition’ங்கிற ஷிப்பிங் பணிகளுக்கான கம்பெனியைத் தொடங்க ஆயத்த மானேன். கம்பெனியைத் தொடங்க சில தினங்களுக்கு முன்பு ஒருவரும், கம்பெனியை ஆரம்பிச்ச ஒரே மாசத்துல இன்னொரு பார்ட்னரும் பிசினஸ்ல இருந்து விலகிட்டாங்க. தனியார் கம்பெனியில வேலை செய்திட்டிருந்த என் கணவர் மோகன் குமார் வேறுவழியில்லாம என்னோட கம்பெனியில மேனேஜிங் பார்ட்னரா இணைஞ்சு நம்பிக்கை கொடுத்தார்.

ஷிப்பிங் துறை உட்பட பல்வேறு தொழில்கள்லயும் துறை சார்ந்த தொழில் அனுபவம்தான் பிரதான முதலீடு. அந்த அனுபவம் என்கிட்ட நிறையவே இருந்ததால, ரூ.50,000 முதலீட்டுல தொழிலைத் தொடங்கினேன்.

நான் வேலை செஞ்ச பழைய கம்பெனிகள் மூலமா எனக்குப் பழக்கமான நிறுவனங்கள்கிட்ட ஆர்டர் கேட்டேன். என்னோடது புது கம்பெனிங்கிறதால, பெரிசா யாரும் ஆர்டர் கொடுக்கல. 40 நாள்களுக்குப் பிறகு, முதல் ஆர்டர் கிடைச்சுது. சின்னதும் பெரிசுமா ஆர்டர்கள் படிப்படியா வர ஆரம்பிச்சுது. தொழில்ல கூடுதல் முனைப்புடன் கவனம் செலுத்தினேன்.

வானதி தேவி
வானதி தேவி

ஏற்றுமதி இறக்குமதிக்குத் தனி கம்பெனி...

பல வருஷம் இந்த ஷிப்பிங் வேலைகளை மட்டுமே பண்ணிட்டு இருந்தோம். இந்த வர்த்தகத்துல, சம்பந்தப்பட்ட ரெண்டு நாட்டைச் சேர்ந்த சுங்கத் துறையினர் உட்பட சில துறையினர்கிட்ட சட்டரீதியான எல்லா உரிமங்களையும் வாங்கணும். இது கொஞ்சம் கடினமான, அதிக அனுபவம் தேவைப்படும் வேலை. இந்த வேலைகளையும் சேர்த்து செய்து கொடுக்கும் பொறுப்புகளும் எங்களுக்கு அதிகம் வந்துச்சு. இந்த ‘கிளியரிங்’ பணிகளுக்காகவே, உரிய அனுபவத்துடன், ‘Tradewell Cargo Pvt Ltd’ங்கிற கம்பெனியை 2013-ல் தொடங்கினோம். வாடிக்கையாளர் நிறுவனங்களோட தேவையைப் பொறுத்து ஷிப்பிங் அண்டு கிளியரிங் வேலைகளைச் சேர்த்தும் அல்லது ஏதாவது ஒரு தேவையை மட்டும் தனியாகவும் செய்து கொடுக்கிறோம். உலகின் பெரும்பாலான நாடுகளுக்கும், ஏராளமான துறைகளிலும் நிறைய சிக்கல்களைக் கடந்து வர்த்தகம் செஞ்சிருக்கோம். இப்ப வரைக்கும் ரெண்டு கம்பெனிகளுமே சிறப்பா இயங்கிட்டு இருக்கு” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

மெட்ரோ ரயில் புராஜெக்ட்...

“சட்டத்துக்கு உட்பட்டு, எந்தச் சிக்கலும் ஏற்படாத வகையில கவனமுடன் இந்தத் துறையில வேலை செய்யணும். இருந்த இடத்தில் இருந்தே ஆர்டர்களைப் பேசி முடிக்கலாம். ஆனா, இந்தத் துறைச் சார்ந்த அப்டேட்ஸ் எல்லாம் துல்லியமா தெரிஞ்சு வச்சுக்கணும். ஒவ்வொரு ஆர்டரையும் செஞ்சு முடிக்கிறதுக்குள்ள சுவாரஸ்ய மான, த்ரில்லிங்கான அனுபவங்கள் நிறையவே கிடைக்கும். தற்சமயம் ஜவுளி முதல் உணவுப் பொருள்கள் வரை பத்துக்கும் மேற்பட்ட துறைகளுக்கு ஷிப்பிங் வேலைகளைச் செய்து கொடுக் கிறோம். சென்னை மெட்ரோ ரயில் புதிய விரிவாக்கப் பணிகளுக்கு கொரியாவில் இருந்து கட்டுமானத் தளவாடங் களைக் கொண்டு வருவதற்கான ஆர்டரும் கிடைச்சிருக்கு.

ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த எந்த ஆர்டரா இருந்தாலும், சம்பந்தப்பட்ட பொருளை உரிய இடத்துல எடுத்து தகுந்த இடத்துல போய் சேர்க்கும்வரை முழுக் கவனமுடன் செயல்படுறதை முதல் நோக்கமா வச்சிருக்கோம். அதனால, வாடிக்கையாளர்களோட நம்பிக்கையை எப்போதும் தக்க வச்சுக்க முடியுது. தொழில்நுட்ப வளர்ச்சியால ஏற்றுமதி இறக்குமதி வேலைகள் எளிமை யாகிட்டாலும், எங்க துறையைச் சார்ந்த நிறுவனங்களோட சேவைக்கான தேவையும் மதிப்பும் உயர்ந்துகிட்டேதான் இருக்கும்” என்கிறார் வானதி தேவி,

இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் இருந்தபடியே ஏராளமான நாடுகளுக்கு வர்த்தகம் செய்கிறார். இரண்டு நிறுவனங்கள் மூலமாக ஆண்டுக்குச் சில கோடிகள் டேர்ன்ஓவர் ஈட்டுகிறார். பெண் தொழில்முனைவோர்களை உருவாக்கும் சேவை நோக்கத்தில் தென்னக மகளிர் தொழில் முனைவோர் பயிற்சிக் குழுமத்தை (Siawed) நடத்துவதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களை உருவாக்கி இருக்கிறார். வானதி தேவி மாதிரி ஆயிரம் சிங்கப் பெண்கள் உருவாகட்டும்!