Published:Updated:

ரியல் எஸ்டேட் துறையில் பல புதுமைகள் செய்தவர்... மறைந்த தொழிலதிபர் அப்பாசாமி நினைவுக் குறிப்புகள்!

அப்பாசாமி
அப்பாசாமி

சென்னையில் 1960-களிலேயே அடுக்குமாடிக் குடியிருப்பை அறிமுகப்படுத்திய பெருமை அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனர் அப்பாசாமியையே சேரும்.

சென்னையில் உள்ள அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம், ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்த ஒன்று. இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் அந்நிறுவனத்தின் நிறுவனரும் உரிமையாளருமான அப்பாசாமி. 87 வயதான இவர், நேற்று உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.

இவர் 1950-ன் பிற்பகுதியில் ரியல் எஸ்டேட் துறையில் கால்தடம் பதித்தார். சென்னையில் 1960-களிலேயே அடுக்குமாடிக் குடியிருப்பை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும். சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் தனது ரியல் எஸ்டேட் மூலம் நகரங்களையும் உருவாக்கினார். பின்னர், 1990-களில் `ரெசிடன்சி க்ரூப் ஆஃப் ஹோட்டல்ஸ்' என்ற பெயரில் ஹோட்டல்களையும் கட்ட ஆரம்பித்தார். இதன் மூலம் தென் இந்தியா முழுவதும் உள்ள பல ஹோட்டல்கள் அப்பாசாமி நிறுவனத்திடம் உள்ளன. இதுவரை சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மட்டுமே மொத்தம் 12 குடியிருப்புச் சொத்துகளும், ஏழு வணிகச் சொத்துகளும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்குச் சொந்தமாக உள்ளன. இதோடு சென்னை, புதுச்சேரி மற்றும் கோவையில் ரெஸிடன்சி டவர்களும் இந்நிறுவனத்தின் பெயரில் உள்ளன.

2016-ம் ஆண்டில் விருந்தோம்பல் கட்டடங்களை உலகளவில் கட்ட ஆரம்பித்தது அப்பாசாமி நிறுவனம். தற்போது மாலத்தீவில் `செயின்ட் ரெகிஸ்' என்ற பெயரில் விருந்தோம்பல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதோடு 2018-ல் சென்னையின் மற்றொரு முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான `ட்ரூ வேல்யூ ஹோம்ஸூடன்' ₹400 கோடி அளவிலான ஒப்பந்தத்தையும் செய்து கொண்டது அப்பாசாமி நிறுவனம். இது சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள 60 கிரவுண்டில் உயர்தரக் கட்டடங்கள் உருவாக்குவதற்காகச் செய்யப்பட்ட ஒப்பந்தமாகும்.

வடபழனி
வடபழனி

இந்த நிலத்தை ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் நிறுவனம் 2009-ல் ₹120 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதற்கு பிரமல் கேபிட்டல் மற்றும் ஹவுசிங் ஃபைனான்ஸ் சார்பிலும் கணிசமான அளவில் நிதியுதவி அளிக்கப்பட்டது. இதற்குமுன்னர் ஏ.சி.முத்தையாவின் குடும்பத்தினர் வைத்திருந்த இந்த நிலத்தில் 18 மாடிக் குடியிருப்பு ஒன்றைக் கட்ட இருப்பதாக அறிக்கைகள் வெளிவந்தன.

இவ்வாறு ரியல் எஸ்டேட் துறையில் இன்றளவும் முக்கிய நிறுவனமாக அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. இந்நிறுவனம் உருவாக்கிய அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டத்தால்தான் சென்னையில் இன்று பல இடங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பல்கிப் பெருகியுள்ளன. இவை தவிர, இத்தனை வருடங்களில் ரியல் எஸ்டேட் துறையில் பல புதுமைகள் செய்திருக்கிறார் அப்பாசாமி.

இவருடைய மறைவுக்கு ரியல் எஸ்டேட் துறையிலிருந்து மட்டுமல்லாமல், மற்ற துறை சார்ந்த தொழிலதிபர்களும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். அந்த வகையில், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எம்.முரளி, ``அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிறுவனர் அப்பாசாமி, என்னைப் பெற்றெடுக்காத தந்தை என்றுதான் சொல்வேன். எனக்கும் அவருக்குமான உறவு அப்படித்தான் இருந்தது.

எம்.முரளி
எம்.முரளி

நான் சென்னையில் கடை வைத்து நடத்த வேண்டும் என்பதில், அக்கறையும், என் வளர்ச்சியின் மீது நம்பிக்கையும் வைத்திருந்தார். தெளிவான சிந்தனை, சரியான திட்டமிடல் ஆகியவை அனைத்தும் நான் அவரிடமிருந்தே கற்றுக்கொண்டேன். தொழில் செய்வதில் என்னைப் போன்றோரை வழிநடத்திய ஆசான், இப்போது எங்களுடன் இல்லை. மனதுக்கு நெருக்கமானவர்களின் மறைவு நம்மை ஏதேதோ செய்துவிடும். அந்த நிலையில்தான் நான் இப்போது இருக்கிறேன். அவருடைய கட்டடங்கள் எப்படி தனித்துவமாக வானுயர்ந்து நிற்கின்றனவோ, அதே போல அவருடைய புகழும் இந்த உலகம் உள்ள வரை வானுயர்ந்து நிற்கும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு