அரசாங்கம் நினைத்தால் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் சிக்கலை ஏற்படுத்த முடியும். சீனாவில் இதுபோல சிக்கல் ஏற்படுத்துவது மிகவும் எளிது.
கடந்த மாதம், அலிபாபா ஜாக் மா தலைமையில் செயல்படும் நிறுவனமான ஆன்ட் (Ant) பொதுப் பங்கு வெளியிடத் (ஐ.பிஓ) திட்டமிட்டிருந்தது. ஆனால், ஒழுங்குமுறை ஆணையங்களின் விதிமுறையைப் பூர்த்தி செய்யாததால் அந்த ஐ.பி.ஓ நிறுத்தப்பட்டது.
அந்த ஐ.பி.ஓ-வின் மதிப்பு ரூ.3,700 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,73,800 கோடி) ஆகும். ஒருவேளை இந்த ஐ.பி.ஓ வெற்றிகரமாக வந்திருந்தால் சர்வதேச அளவில் மிகப்பெரிய ஐ.பி.ஓ-வாக மாறியிருக்கும்.

இந்த நிலையில் அலிபாபா குழுமத்தின் மீது வேறு புதிய குற்றச்சாட்டை சீனா சுமத்தி இருக்கிறது. அலிபாபாவின் மோனோபாலி (monopoly) கொள்கை விதிமுறைகளுக்கு எதிரானது என சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. மோனோபாலி என்பது அந்தச் சந்தையில் அந்த நிறுவனத்தை தவிர யாரும் போட்டியிட முடியாத சூழலைக் குறிக்கும்.
அலிபாபா நிறுவனத்துக்கு ஒரு நிறுவனம் பொருள் விற்க வேண்டும் என்றால் வேறு நிறுவனத்துக்கு விற்க முடியாது. ஒருவேளை வேறு நிறுவனங்களில் விற்பனை செய்பவராக இருந்தால் அலிபாபாவில் விற்கக் கூடாது என்னும் விதிமுறையை நிறுவனம் உருவாக்கி வைத்திருக்கிறது. இந்த விதிமுறைக்கு எதிராக சீனா அரசு சம்மன் அனுப்பியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த ஒருவரி தவிர வேறு விளக்கங்கள் அந்த சம்மனில் இல்லை. இதற்கு அடுத்து என்ன செய்யப்படும், அபராதம் விதிக்கப்படுமா என மேலும் தகவல்களை சீனா தெரிவிக்கவில்லை.
சீன ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து சம்மன் வந்திருக்கிறது. இந்த சம்மன் குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். விதிமுறைகளைப் பூர்த்தி செய்வதற்கான பணிகளை நாங்கள் செய்வோம் என தங்களுடைய குழும நிறுவனமான வீசாட்டில் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

மேலும், அரசின் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம். இதுவரை எங்களுடைய செயல்பாடுகள் வழக்கம் போலவே இருந்து வருவதாக அலிபாபா தெரிவித்திருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கையால் அலிபாபா பங்கு விலை 9 சதவிகிதம் அளவுக்குச் சரிந்தன.
மோனோபாலியை நாம் பொறுத்துக்கொண்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கும். அதனால் அந்தத் துறையில் சீரான, ஆரோக்கியமான நீடித்த வளர்ச்சி இருக்காது என பிபுள் டெய்லி என்கிற சீன அரசாங்க பத்திரிக்கை தலையங்கம் எழுதி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சீன அரசு மீது பொதுவெளியில் சில வாரங்களுக்கு முன் ஜாக் மா விமர்சனம் செய்தார். அக்டோபர் 24-ம் தேதி சீன வங்கியாளர்கள் இருந்த சபையில் அரசாங்கத்தின் மீதான விமர்சனத்தை வைத்தார். நிதித்துறையில் புதுமைகளைப் புகுத்தவும் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கையை எடுக்கவும் போதுமான அமைப்பு இல்லை. மேலும் சர்வதேச பேசல் குழு பழைய நபர்களின் கூட்டமாக (an old man’s club) இருக்கிறது என ஜாக் மா விமர்சனம் செய்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

மோனோபாலிக்கு எதிரான வரைவுச் சட்டம் கடந்த நவம்பரில் வெளியானது. இந்த நிலையில் உடனடியாக அலிபாபா குழுமத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இது அரசியல் ரீதியிலான நடவடிக்கையா அல்லது உண்மையிலேயே சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையாக என சர்வதேச தொழில் உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது என அலிபாபா குழுமத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். மேலும், இதுபோன்ற மோனோபாலி நடவடிக்கையை ஏன் சீன அரசு நிறுவனங்கள் மீது எடுப்பதில்லை, வெற்றிகரமாகச் செயல்படும் தனியார் நிறுவனங்கள் மீது மட்டும் ஏன் எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
சந்தை பொருளாதாரத்தில் போட்டிகள் நியாயமாக இருக்க வேண்டும். அதற்கேற்ற விதிமுறைகள் தேவை என்பது சரிதான். ஆனால், அது பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கக் கூடாது.