Published:Updated:

சி.ஐ.ஐ தலைமைப் பொறுப்பேற்ற பிசினஸ் ஜாம்பவான்கள்!

சஞ்சீவ் பஜாஜ், ஆர்.தினேஷ், பவன் முஞ்சால்
பிரீமியம் ஸ்டோரி
சஞ்சீவ் பஜாஜ், ஆர்.தினேஷ், பவன் முஞ்சால்

பிசினஸ்

சி.ஐ.ஐ தலைமைப் பொறுப்பேற்ற பிசினஸ் ஜாம்பவான்கள்!

பிசினஸ்

Published:Updated:
சஞ்சீவ் பஜாஜ், ஆர்.தினேஷ், பவன் முஞ்சால்
பிரீமியம் ஸ்டோரி
சஞ்சீவ் பஜாஜ், ஆர்.தினேஷ், பவன் முஞ்சால்

ஆகாஷ்

அகில இந்திய தொழில் நிறுவனங்களில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ (Confederation of Indian Industry) அமைப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் புதிய தலைவர், துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த அமைப்பின் 2022-23-ம் ஆண்டுக்கான அகில இந்திய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தின் சேர்மனும் மேனேஜிங் டைரக்டருமான சஞ்சீவ் பஜாஜ்.

சி.ஐ.ஐ அமைப்பின் கெளரவத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவரும், முதன்மைச் செயல் அதிகாரியுமான பவன் முஞ்சால்.

அதே போல, இந்த அமைப்பின் அகில இந்தியத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் டி.வி.எஸ் சப்ளை செயின் சொல்யூன்ஸ் நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் வைஸ் சேர்மன் ஆர்.தினேஷ். இந்த இருவரும் அடுத்த ஓராண்டு காலத்துக்கு இந்தப் பதவியில் இருப்பார்கள் என சி.ஐ.ஐ அமைப்பு தெரிவித்திருக்கிறது.

சஞ்சீவ் பஜாஜ், ஆர்.தினேஷ், பவன் முஞ்சால்
சஞ்சீவ் பஜாஜ், ஆர்.தினேஷ், பவன் முஞ்சால்

சாதித்த சஞ்சீவ் பஜாஜ்...

பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தின் சேர்மனும், மேனேஜிங் டைரக்டருமான சஞ்சீவ் பஜாஜ், சி.ஐ.ஐ அமைப்பில் கடந்த பல ஆண்டுகளாகப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 2019-20-ல் அவர் மேற்கு மண்டலத்தின் தலைவராக இருந்தார். ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் படித்த சஞ்சீவ் பஜாஜ், உலகப் பொருளாதார மன்றம் உட்பட பல்வேறு அமைப்புகளில் ஓர் உறுப்பினராக முக்கியப் பணியாற்றி இருக்கிறார்.

சி.ஐ.ஐ அமைப்பின் அகில இந்தியத் தலைவராகப் பதவியேற்ற பின் முதல்முறை யாக நிருபர்களுக்கு ஆன்லைன்மூலம் பேட்டி அளித்தார் சஞ்சீவ் பஜாஜ். அப்போது அவர் கூறியதாவது...

‘‘நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது. இந்த நிதி ஆண்டில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 - 8.2 சதவிகிதத்துக்குள் இருக்கும். கச்சா எண்ணெய் விலை எந்தளவுக்கு இருக்கும் என்பதைப் பொறுத்து, வளர்ச்சியின் அளவு மாறும்.

தற்போது நம் நாட்டின் மொத்த பொருளா தார மதிப்பு 3.1 ட்ரில்லியன் டாலராக உள்ளது. இது வருகிற 2026-27-ல் இது 5 டிரில்லியன் டாலராகவும், 2030-31-ல் 9 டிரில்லியன் டாலராகவும் 2047-48-ல் 40 டிரில்லியன் டாலராகவும் மாறும் என எதிர்பார்க்கிறோம்.

வருகிற 2030-க்குள் நம் நாடு எந்த விதமான வளர்ச்சியைக் காண வேண்டும் என்பதற்காக 10 அம்சத் திட்டத்தை சி.ஐ.ஐ இப்போது உருவாக்கி இருக்கிறது. முதலாவதாக, நம் நாடு வேகமான வளர்ச்சியைக் காண வேண்டும் எனில், பொது ஆரோக்கியத்துக்காக நாம் செலவு செய்யும் தொகையானது வருகிற 2025-க்குள் நமது ஜி.டி.பி-யில் நாம் செலவு செய்யும் 1.3 சதவிகிதத்தில் இருந்து 2.5 - 3% வரை செலவு செய்ய வேண்டும். இதேபோல, கல்விக்காக நாம் செய்யும் செலவானது வருகிற 2025-க்குள் 4.4 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக உயர்த்தியாக வேண்டும்.

இரண்டாவதாக, உற்பத்தியை அதிகரிப் பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். உற்பத்திசார் துறைகளுக்கான ஊக்குவிப்புத் திட்டமானது இன்னும் பல துறைகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும். நமது தொழில் துறையை வெளிநாட்டு வர்த்தகக் கொள்கைகளுக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும். புதிய தொழில் துறைகளுக்குக் கூடுதலாக ஊக்குவிப்புத் தொகை வழங்கப்பட வேண்டும். தொழில் நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களைப் புதுத்துவதற்கேற்ப ஊக்குவிப்புத் தொகை வழங்கப்பட வேண்டும். இதன்மூலம் திறன்மிகுந்த உற்பத்தி முறை உருவாக்க வேண்டும். கிராமப்புறங்களில் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும்.

மூன்றாவதாக, சுற்றுலா, சில்லறை வர்த்தகம், பொழுது போக்குத்துறை, சுற்றுலா ஆகிய துறைகளில் புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுதற்கேற்ப ஊக்குவிப்புத் தொகை வழங்கப்பட வேண்டும். நான்காவதாக, நாம் இத்தனை நாளும் தொழில் செய்வதற்கு இணக்கமான சூழல் பற்றித்தான் பேசினோம். இனி தொழில் செய்வதற்கான செலவைக் குறைப்பது பற்றியும் நாம் கட்டாயம் பேசியாக வேண்டும். இதற்கு ‘கதி சக்தி’ திட்டத்தை விரைந்து முடிக்க, மாநில அரசுகளை இந்தத் திட்டத்தில் இணைக்க வேண்டும். மின் துறையில் முக்கியமான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். எல்லா விதமான எரிசக்திப் பொருள்களையும், பெட்ரோல், டீசலையும் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர வேண்டும். தவிர, தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான அனுமதிகளையும் உரிமங்களையும் ஆன்லைன் மூலமே பெறுகிற மாதிரி ஆக்க வேண்டும்.

ஐந்தாவதாக, நிதித் துறையில் முக்கியமான சீர்திருத்தங்கள் கொண்டுவரப் பட வேண்டும். வங்கிசாரா நிதி நிறுவனங் களுக்கு வங்கி நடத்த அனுமதிப் பது, பங்குச் சந்தையையும், பாண்டு சந்தையும் இன்னும் சிறப்பாகச் செயல்படும்படி ஆக்குவது போன்ற பல விஷயங் களை செய்தாக வேண்டும். ஆறாவதாக, தனியார் மயமாக் கலை அதிகரிப்பதுடன், அரசுத் துறை நிறுவனங்களில் உள்ள மூலதனத்தைத் திரும்பப் பெறும் நடவடிக்கையையும் அதிகப் படுத்த வேண்டும்.

தொழில்நுட்ப கமிஷனை அமைத்து, தொழில் வளர்ச்சிக் கான ஆலோசனைகளைப் பெறுவது, ஏற்றுமதியை உயர்த்தத் தேவையான அமைப்புகளை உருவாக்குவது, சுற்றுச் சூழலுக்கு உகந்த பசுமைத் தொழில் நுட்பத்தை அமைப்பது, நிலம், தொழிலாளர்கள், மின்சக்தி, விவசாயம் ஆகிய துறைகளில் ஜி.எஸ்.டி போன்ற அமைப்பை உருவாக்குவது என 10 அம்சத் திட்டத்தை விளக்கமாக எடுத்துச் சொன்னார் சஞ்சீவ் பஜாஜ்.

சஞ்சீவ் பஜாஜ் மற்றும் டி.வி.எஸ் தினேஷ் தலைமையில் இந்தியத் தொழில் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி காண வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு!

திரும்பிப் பார்க்க வைக்கும் தினேஷ்!

சி.ஐ.ஐ அமைப்பின் அகில இந்தியத் துணைத் தலைவராகத் தேர்வாகியிருக்கிறார் டி.வி.எஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் வைஸ் சேர்மன் ஆர்.தினேஷ். கடந்த 20 ஆண்டுகளாக சி.ஐ.ஐ அமைப்பில் பல்வேறு காலத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்று செயல்பட்டிருக்கிறார் ஆர்.தினேஷ்.

2018-19-ம் ஆண்டில் சி.ஐ.ஐ அமைப்பின் தென் மண்டலத்தின் தலைவராக இருந்து, தென் மாநிலங்களில் உள்ள தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். லாஜிஸ்ட்டிக் தொடர்பான சி.ஐ.ஐ அமைப்பின் தேசிய கமிட்டியிலும், சி.ஐ.ஐ-யின் குடும்பத் தொழில் தொடர்பான அமைப்பிலும் அங்கம் வகித்திருக்கிறார்.

கல்லூரியில் வணிகவியல் படித்த தினேஷ், 2014-ல் டைகான் அமைப்பு வழங்கிய `ஆன்ட்ரபிரனர் ஆஃப் த இயர்’ விருதையும், 2017-ல் ஏர்னஸ்ட் & யெங் அமைப்பு வழங்கிய மிகச் சிறந்த தொழிலதிபர் என்கிற விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்று, எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். அவருடைய டி.வி.எஸ் சப்ளை செயின் சொல்யூஷன் நிறுவனம் கூடிய விரைவில் ஐ.பி.ஒ வெளியிடப்போகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism