Published:Updated:

பை பை சென்னை... வரவேற்கும் பிற நகரங்கள்..! - கொரோனாவுக்குப் பிறகு தொழில்..!

சென்னை
பிரீமியம் ஸ்டோரி
சென்னை

கோவையிலிருந்து 100 கி.மீ தூரத்துக்கு தொழில்ரீதியாக வளர்ச்சியடைந்தது என்றால், தமிழகத்தின் ஜி.டி.பி 2% அதிகமாகும்.

பை பை சென்னை... வரவேற்கும் பிற நகரங்கள்..! - கொரோனாவுக்குப் பிறகு தொழில்..!

கோவையிலிருந்து 100 கி.மீ தூரத்துக்கு தொழில்ரீதியாக வளர்ச்சியடைந்தது என்றால், தமிழகத்தின் ஜி.டி.பி 2% அதிகமாகும்.

Published:Updated:
சென்னை
பிரீமியம் ஸ்டோரி
சென்னை
ன்ன தீர்வு, எப்படிக் கொண்டுவருவது என்று கடந்த பல ஆண்டுகளாகப் பலரும் யோசித்த பிரச்னைக்கான முடிவு கொரோனா மூலம் கிடைத்திருக்கிறது.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 50% அளவுக்கு சென்னையை மையமாகவைத்தே நடந்துவந்தது. மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகளெல்லாம் சென்னையைச் சுற்றியே அமைக்கப்பட்டுவந்தன. இதனால், சென்னையில் மட்டும் பெருமளவு வளர்ச்சி ஏற்பட்டு, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்கள் சென்னையை நோக்கிவரும் நிலை ஏற்பட்டது.

நகரங்கள்
நகரங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

துறைமுகம், விமான சேவை போன்ற வசதிகள் சென்னையில் இருந்ததால், பிரிட்டிஷ் காலத்திலிருந்தே பெரும்பாலான தொழில்கள் சென்னையை மையமாக வைத்தே நடந்தன. ஆனால், இன்று கொரோனா நோய்த் தொற்று காரணமாக மக்கள் சென்னையைவிட்டுச் சென்று பல்வேறு நகரங்களில் வாழும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஐ.டி தொடர்பான பணியாளர்கள் தங்கள் சொந்த ஊர்களில் வீட்டிலிருந்து வேலை பார்த்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக இந்த நிலை தொடர்கிறது. இன்னும் சில மாதங்கள் இதே நிலைமை தொடரும்பட்சத்தில், இனி ஐ.டி தொழில் சென்னையைவிட்டுச் சென்றுவிடவே வாய்ப்பு அதிகம். ஐ.டி தொழில் மட்டுமல்ல, உற்பத்தி சார்ந்த வேறு தொழில்களும் சென்னை தவிர, பிற நகரங்களையும் நோக்கிச் செல்லத் தொடங்கியிருக்கின்றன.

கொரோனா
கொரோனா

இன்டர்நெட் வசதி அதிகரித்திருப்பது, சாலை வசதிகள் மற்றும் மின் கட்டமைப்பு வசதிகள் அதிகரித்திருப்பது, தரமான பள்ளி, கல்லூரிகள் எல்லா நகரங்களிலும் இருப்பது போன்ற காரணங்களால் இனி சென்னையில் மட்டும்தான் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளைச் சிறப்பாக நடத்த முடியும் என்ற நிலை மாறியிருக்கிறது.

இத்தனை நாளும் சென்னைக்குக் கிடைத்துவந்த தொழில் வாய்ப்பு, இனி தமிழகத்தின் பிற நகரங்களுக்கும் கிடைக்கப்போகிறது. என்றாலும், ஒவ்வொரு நகரத்திலும் என்னென்ன புதிய தொழில் வாய்ப்புகள் உள்ளன என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலுள்ள தொழில்துறை சார்ந்தவர்களிடம் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மதுரையைச் சுற்றி..!

சி.ஐ.ஐ தமிழ்நாடு தலைவரும், மதுரையைச் சேர்ந்த தொழிலதிபருமான கே.ஹரி தியாகராஜனிடம் பேசினோம். ‘‘தமிழகத்தில் தொழில் செய்யவரும் நிறுவனங்களுக்கு சென்னையைச் சுற்றி இடம் கொடுத்து, அரசால் அவர்களுக்குப் பல சலுகைகள் தரப்பட்டுவந்தன. இனி மதுரையைத் தாண்டியுள்ள தென் மாவட்டங்களுக்கு அது போன்ற நிறுவனங்களைத் தொடங்க ஏற்பாடு செய்யலாம்.

கே.ஹரி தியாகராஜன், சஞ்சய் குணசிங்
கே.ஹரி தியாகராஜன், சஞ்சய் குணசிங்

சென்னை முதல் தூத்துக்குடி வரையுள்ள பகுதியைத் தொழில் மண்டலமாக அறிவித்தார்கள். மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் அதற்காக நிலம் ஒதுக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. புதிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை இங்கு நிறுவலாம். அருகிலேயே துறைமுகம், விமான நிலைய வசதி இருக்கின்றன.

தென் மாவட்டங்களில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகியவை தொழில் துறையில் நீண்டகாலமாக மிகவும் பின்தங்கியுள்ளன. அந்த மாவட்டங்களுக்கு புதிய திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். அதற்கு சி.ஐ.ஐ ஆலோசனை வழங்கும்.

மதுரையைப் பொறுத்தவரை, பெரிய தொழில்களோ உற்பத்தி சார்ந்த தொழில்களோ அதிகம் இல்லை. சிறு, குறு தொழில்கள் உள்ளன. அதுபோல், மதுரை ஒரு சுற்றுலா நகரம். கொரோனாவால் சுற்றுலாத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அதையும் மேம்படுத்த வேண்டும். பெரிய மருத்துவமனைகள் இங்கு அமைந்திருப்பதால், கொரோனாவுக்குப் பிறகு மெடிக்கல் டூரிஸம் வளர்ச்சியடையும்’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாய்ப்புகளுக்குக் காத்திருக்கும் நெல்லை!

“நெல்லை மாவட்டத்தில் ஏற்கெனவே கூடங்குளம் அணு உலை, மகேந்திரகிரி இஸ்ரோ மையம் ஆகியவை அமைந்துள்ளன. அவற்றுக்கான போக்குவரத்து வசதிக்காக நான்குவழிச் சாலை அமைந்திருக்கிறது. நெல்லையிலிருந்து 25 நிமிட பயண தூரத்தில் தூத்துக்குடியில் விமான நிலையமும், 45 நிமிட பயண தூரத்தில் துறைமுகமும் அமைந்திருப்பது கூடுதல் வசதி.

சென்னை
சென்னை

நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை, நிலத்தடி நீர் நன்றாக இருக்கும் நிலையில், ஆண்டு முழுவதும் வற்றாத தாமிரபரணி ஆறு ஓடுவது கூடுதல் சிறப்பு. மேற்குத் தொடர்ச்சி மலையின் இதமான சூழலில் புதிய தொழில் வாய்ப்புகள் இந்த மாவட்டத்துக்கு வருவதற்கு அரசு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்கிறார்கள் பல தொழிலதிபர்கள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய உள்ளூர் தொழிலதிபர்கள், “பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது நெல்லை மாவட்டத்தில் நிலத்தின் விலை மிகவும் குறைவாக இருக்கிறது. தொழிற்சாலைகளுக்குத் தேவையான போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் இருக்கின்றன.

நாங்குநேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் முயற்சிக்கு உரிய பலன் கிடைக்கவில்லை. அந்தப் பகுதியில் 2,000 ஏக்கர் நிலம் அரசிடம் இருக்கிறது. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ முடிவெடுத்து அதற்கான பணிகள் தொடங்கியிருக்கின்றன.

நாங்குநேரியில் ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்காக, இஸ்ரோ சார்பாக நிலத்தைக் கேட்கிறார்கள். சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்தைக் கொடுத்தால் அங்கு ராக்கெட் உதிரி பாகங்களுக்கான தொழிற்சாலை அமையும். அதன் மூலம் சார்பு தொழிற்சாலைகள் மற்றும் மறைமுக வேலை வாய்ப்புக்கான உற்பத்தி மையங்கள் அமைந்து நாங்குநேரிப் பகுதி தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியாக மாறும்.

தூத்துக்குடியிலிருந்து நெல்லை வரை ஆறுவழிச் சாலை அமைக்கும் திட்டம் பரிசீலனையில் இருக்கிறது. அத்துடன், தூத்துக்குடி விமான நிலையத்தை நான்காம் தரத்திலிருந்து மூன்றாம் தரத்துக்கு மத்திய அரசு அண்மையில் தரம் உயர்த்தியிருக்கிறது. எனவே, இரவு நேரத்திலும் விமானங்கள் வந்து செல்லும் வசதியைப் பெறும். சர்வதேச விமானங்களும் நேரடியாக வரக்கூடிய வாய்ப்புள்ளது. அதனால் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் நெல்லை மாவட்டத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டும் சூழல் உருவாகியுள்ளது. இதைப் பயன்படுத்தி, நெல்லை மாவட்டத்துக்குத் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் தொழில் நிறுவனங்களின் பார்வை கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்கள்.

முகமது சுல்தான், ராமமூர்த்தி
முகமது சுல்தான், ராமமூர்த்தி

தொழிலதிபரும் நெல்லை மாவட்ட சிறு மற்றும் குறு தொழிற்சங்கத்தின் செயலாளருமான சஞ்சய் குணசிங் இந்தக் கருத்தை மறுக்கிறார். அவர் கூறுகையில், ‘‘வெளிநாடுகளிலிருந்து நிறைய கம்பெனிகள் வந்தபோதிலும், தமிழகத்தைவிட பிற மாநிலங்களில் அவற்றுக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. உதாரணமாக, குஜராத் மாநிலத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்கிவிட்டுக்கூட அனுமதி பெற்றுக்கொள்ள முடியும். தமிழகத்தில் ஆன்லைன் அனுமதிக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளை அரசு வைத்திருந்தாலும் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஐ.டி நிறுவனங்கள் அலுவலகத்தை சென்னையின் பெரிய கட்டடத்தில் நடத்துவதற்கு பதில் பல இடங்களில் அமைக்கும் வாய்ப்பிருக்கிறது. தற்போது ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் பெரும் சரிவைச் சந்தித்திருக்கும் சூழலில், வெளியிடங்களிலிருந்து மாவட்டங்களுக்குத் தொழில் வாய்ப்பு வரும் என்று நம்புவதற்கில்லை. ஒருவேளை தொழில் வாய்ப்பு ஏற்படுமானால் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்” என்று முடித்துக் கொண்டார்.

மைய நகரம் திருச்சி!

தொழில் வாய்ப்புகளுக்கு திருச்சி எந்த வகையில் தயாராக இருக்கிறது என்பதை அந்நகரைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது சுல்தான் எடுத்துச் சொன்னார். “திருச்சியிலிருந்து தமிழகத்தின் எந்தப் பகுதிக்கும் சுமார் நான்கு மணி நேரத்தில் சுலபமாகச் சென்றுவிட முடியும். மேலும், சர்வதேச விமான நிலையம், ஒருங்கிணைந்த ரயில் ஜங்ஷன், அருகிலேயே பேருந்து நிலையம் என சகல வசதிகளும் சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சியில்தான் உள்ளன. அதுமட்டுமல்லாமல், சென்னைக்கு அடுத்து என்.ஐ.டி., ஐ.ஐ.எம்., தேசிய சட்டப் பள்ளி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், மத்திய அரசின் பெல் நிறுவனம், துப்பாக்கி தொழிற்சாலை, தமிழ்நாடு காகித தொழிற்சாலை உள்ளிட்ட பெரிய தொழில் நிறுவனங்களும் இங்கிருக்கின்றன.

திருச்சியில் துறைமுக வசதி மட்டும் இல்லை. ஆனால், திருச்சியிலிருந்து 90 கிலோமீட்டர் தூரத்தில், நாகப்பட்டினம் துறைமுகம் உள்ளது. தற்போது சரியான போக்குவரத்து வசதி இல்லையென்றாலும், திருச்சி-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்குவழிச் சாலை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பணிகள் முடிந்தால் திருச்சியிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்தில் நாகப்பட்டினம் சென்றுவிட முடியும். சென்னைக்கு அடுத்தபடியாக அனைத்துத் தகுதிகளும் திருச்சிக்கு உள்ளன” என்றார் அவர்.

கோவைக்குப் புதிய வாய்ப்புகள்!

சென்னைக்கு அடுத்து தமிழகத்தின் `மோஸ்ட் வான்டடு’ நகரம் கோவைதான். `தொழில் நகரம்’ என்று பெயரெடுத்த கோவை, கொரோனா காலகட்டத்திலும் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருக்கிறது. கோவை நகரத்துக்கு இனி என்னென்ன புதிய வாய்ப்புகள் உள்ளன என்பது பற்றி கொடிசியா தலைவர் ராமமூர்த்தியிடம் கேட்டோம்.

கணேஷ் ஜெகதீசன், திருமூர்த்தி
கணேஷ் ஜெகதீசன், திருமூர்த்தி

“கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னரே கோவையை தேசிய அளவில் முக்கியத் தொழில் நகரமாக்கும் பணிகளைத் தொடங்கி விட்டோம். நாட்டிலேயே முதன்முறையாக ராணுவத் தளவாட உற்பத்தி பாகங்கள் தயாரிக்கும் மையம் கோவையில்தான் அமையவிருக்கிறது. இதற்காக முதற்கட்டமாக இன்குபேஷன் மையம் அமைக்கப்பட்டுவிட்டது. மோப்பிரிபாளையம், கள்ளப்பாளையம் பகுதிகளில் இரண்டு தொழிற்பூங்காக்கள் அமைத்துள்ளோம். அவற்றில் கிட்டத்தட்ட 400 நிறுவனங்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. கோவை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்தும் பணிகள் நடந்துவருகின்றன.

எப்படி சென்னை முதல் செங்கல்பட்டு வரை வளர்ச்சியடைந்திருக்கிறதோ அதுபோல கோவையிலிருந்து 100 கி.மீ தூரத்துக்கு தொழில்ரீதியாக வளர்ச்சியடைந்ததென்றால், தமிழகத்தின் ஜி.டி.பி 2% அதிகமாகும். கோவையில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் இருக்கின்றன. குறு,சிறு நிறுவனங்கள்தான் நம் பலம். எந்தத் துறையாக இருந்தாலும், அதைத் திறம்படச் செய்வதற்கான வலிமை கோவைக்கு இருக்கிறது. மேலும், இங்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைப்பதற்காகவும் தமிழக அரசிடம் பேசி வருகிறோம். கோவை எல்லாவற்றுக்கும் தயாராகவே இருக்கிறது. முதலீட்டாளர்கள் இங்கு வரவேண்டியதுதான் பாக்கி” என்றார்.

சி.ஐ.ஐ கோவை மாவட்ட தலைவர் கணேஷ் ஜெகதீசன், “கோவையைப் பொறுத்தவரை, இங்கு பம்ப் தொழில் வலுவாக இருக்கிறது. ஆனால், மருத்துவம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் மிகவும் குறைவு. அதேபோல, பேக்கிங் உணவு தொடர்பான நிறுவனங்களும் குறைவு. தற்போது அவை இரண்டுக்குமே தேவை அதிகமாக இருப்பதால், அதில் கவனம் செலுத்தலாம். அதேபோல, ரயில்வேதுறை சார்ந்தும் இங்கு பணிகள் குறைவு. அதிலும் கவனம் செலுத்தலாம். `மேக் இன் இந்தியா’ போன்றவற்றைப் பயன்படுத்தி மேற்கண்ட தொழில்களில் இறங்கினால் கோவைக்கும் நல்ல வளர்ச்சி கிடைக்கும்” என்றார்.

மதிப்புக்கூட்டலுக்கு ஏற்ற ஈரோடு!

ஈரோடு மாவட்டத்திலுள்ள புதிய தொழில் வாய்ப்புகள் பற்றி எடிசியா அமைப்பின் துணைத் தலைவர் திருமூர்த்தியிடம் பேசினோம். “சென்னை, மதுரை, கோவை போன்ற பெரு நகரங்களின் உணவுத் தேவையை ஈரோடுதான் பெருமளவு பூர்த்தி செய்துவருகிறது. ஈரோடு மாவட்டத்தில் மில்கா பிரட்ஸ், சக்தி மசாலா, அக்னி ஸ்டீல்ஸ் போன்ற தமிழகத்தின் பல பெரிய நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. நெல், கரும்பு, வாழை, எண்ணெய் வித்துகள், காய்கறிகள் என அனைத்தும் ஈரோட்டில் உற்பத்தியாகின்றன. தமிழகத்தின் சமையல் எண்ணெய் விலையை ஈரோடுதான் நிர்ணயிக்கிறது. முட்டை, கறிக்கோழி உற்பத்தி என எல்லா தொழில்களுக்கும் ஏற்ற பகுதியாக ஈரோடு இருக்கிறது.

சின்னசாமி, ஈசன் இளங்கோ
சின்னசாமி, ஈசன் இளங்கோ

மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் (CFTRI) கிளையை ஈரோட்டுக்குக் கொண்டுவந்தால், ஈரோட்டில் விளையும் விவசாயப் பொருள்களை மதிப்புக்கூட்டும் வகையிலான தொழிற்சாலைகளை அதிக அளவில் நிறுவலாம். பெருந்துறை சிப்காட்டில் உற்பத்தியாகும் பொருள்களை சரக்கு ரயிலில் ஏற்றிச் செல்வதற்காக, தனி ரயில் நிலையம் சிப்காட்டிலேயே தயாராகிவருகிறது. அது தயாரானதும் ஈரோட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை இந்தியா முழுக்க எளிதாக எடுத்துச் செல்லலாம். ஒரு பக்கம் விவசாயத்துறையில் புதிய தொழில் வாய்ப்புகள், இன்னொரு பக்கம் தொழில்துறையில் புதிய வேலைவாய்ப்புகள் என ஈரோடு மாவட்டத்தில் எண்ணற்ற தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன” என்றார் அவர்.

ஈரோடு சி.ஐ.ஐ அமைப்பின் முன்னாள் தலைவர் அக்னி ஸ்டீல்ஸ் சின்னசாமியுடன் பேசினோம். “எந்தவிதமான வேலைக்கும் தேவையான ஆட்கள் ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கின்றனர். ஈரோட்டிலிருந்து எந்தத் திசையில் 5-10 கி.மீ வெளியே சென்றாலும் தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. கர்நாடகா, கேரளா ஆகிய இரு மாநிலங்களும் ஈரோட்டிலிருந்து சமதூரத்திலேயே இருக்கின்றன. காவிரி, பவானி என இரு பெரும் நதிகள் ஓடும் ஈரோட்டில் தண்ணீருக்குப் பஞ்சமே இல்லை.

பெருந்துறையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. மேலும் பல உயர்தர தனியார் மருத்துவமனைகளும் ஈரோட்டில் இருக்கின்றன. இப்படி எந்தவொரு தொழில் தொடங்குவதற்கும் தேவையான அனைத்து அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளும் ஈரோட்டில் இருக்கின்றன. உற்பத்தியாகும் பொருள்களைக் கொண்டு செல்ல ரயில் வசதியும், 80 கி.மீ தூரத்தில் கோவை விமான நிலையமும், 60 கி.மீ தூரத்தில் சேலம் விமான நிலையமும் இருக்கின்றன. புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க ஏராளமான நிலங்கள் இருக்கின்றன. ஏற்கெனவே ஜவுளி உற்பத்தி மற்றும் மஞ்சள் உற்பத்தியில் ஈரோடு சிறந்த மாவட்டமாக இருக்கிறது. வருங்காலத்தில் எல்லாவிதத் தொழில்களும் ஒருங்கே கொண்ட மாவட்டமாக ஈரோடு இருந்தால் மகிழ்ச்சியே” என்றார்.

சகல தொழிலுக்கும் ஏற்ற சேலம்!

சேலத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஈசன் இளங்கோ, ‘‘தமிழகத்தின் பிற மாவட்டங்களைவிட சேலத்தில் தொழில் தொடங்குவதற்கான அனைத்து பாசிட்டிவ் அம்சங்களும் உள்ளன. தமிழகத்தின் போக்குவரத்தின் மையப் பகுதியாக சேலம் விளங்குவதால், அனைத்து மாவட்டங்களுக்கும் எளிதாகப் பயணிக்க முடியும். சேலத்திலிருந்து பெங்களூருக்கு நான்கு மணி நேரத்தில் செல்லலாம். ரயில் மற்றும் விமான சேவை இருப்பதால், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் சுலபமாகச் செல்ல முடியும்.

தொழிற்சாலைகளுக்கான நிலவளம், நீர்வளம் சேலத்தில் உள்ளன. இங்கு தொழிலாளர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். தொழில் வளர்ச்சிக்கான தட்பவெப்பநிலையும், பாதுகாப்பு வசதிகளும் இருக்கின்றன. வளர்ந்துவரும் தொழில் நகரமாக இருப்பதால், குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க முடியும். இங்கு ஏற்கெனவே ஜவுளி, வெள்ளிக் கொலுசு, இரும்பு உற்பத்தி, கனரக வாகனங்களுக்குத் தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில்களில் கொடிகட்டிப் பறக்கின்றன.

சேலத்தில் உணவகத் தொழில்கள், விவசாயம் சார்ந்த மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் கூடங்கள், ஜவுளி உற்பத்தி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இரும்பு மற்றும் கனரக தொழிற்சாலைகள் தொடங்கினால் வளர்ச்சியடைய முடியும். இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு பகல் நேரத்தில் செல்லும் ரயில் வசதி செய்துதர வேண்டும். விமானச் சேவையை அதிகப்படுத்துதல், தொழில் தொடங்குவதற்கான அரசுக் கடன் தொகை வழங்குதல் போன்ற வசதிகளைச் செய்து கொடுத்தால் சேலம் தொழில்துறையில் அபார வளர்ச்சியடையும்’’ என்றார்.

சென்னையைத் தாண்டிய தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிட இதுதான் மிகச் சரியான நேரம்.

சென்னையின் முக்கியத்துவம் குறையாது!

பை பை சென்னை... வரவேற்கும் பிற நகரங்கள்..! - கொரோனாவுக்குப் பிறகு தொழில்..!

சி.ஐ.ஐ அமைப்பின் முன்னாள் தமிழக தலைவரும் டான்பாஸ் நிறுவனத்தின் தலைவருமான ரவிச்சந்திரன் புருஷோத்தமனிடம் சென்னையின் தொழில் சூழல் குறித்துக் கேட்டோம். “கோவிட் 19-க்குப் பிறகு சர்வீஸ் இண்டஸ்ட்ரீஸ் வேண்டுமானால் சென்னையைவிட்டு இடம்பெயரலாம். உதாரணமாக, ஐ.டி மற்றும் ஐ.டி சார்ந்த நிறுவனங்கள். ஆனால், உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் சென்னையைவிட்டு பெரிய அளவில் செல்வதற்கு வாய்ப்பு குறைவு. இதற்குக் காரணம், சென்னையிலிருக்கும் உள்கட்டமைப்பு வசதிகள். எல்லா நகரங்களுக்கும் போய் வருவதற்கேற்ப சாலை வசதிகள், விமான நிலையம், துறைமுகம் அமைந்திருப்பது, ஐ.ஐ.டி, லெதர் இன்ஸடிட்யூட் போன்ற ஆய்வு நிறுவனங்கள் இருப்பதால் ஆர் அண்ட் டி வசதிகள் இருப்பது, திறமையான நபர்கள் அதிக அளவில் வேலைக்குக் கிடைப்பது, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்வதற்கேற்ற சூழல் இருப்பது எனப் பல அம்சங்கள் சாதகமாக உள்ளன. பன்னாட்டு நிறுவனங்களும் சென்னையில் தொழில் தொடங்கவே விரும்புகின்றன. எனவே, குறுகியகாலத்தில் எல்லா நிறுவனங்களும் சென்னையைவிட்டுச் சென்றுவிட வாய்ப்பில்லை” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism