Published:Updated:

மோதிரம், கம்மல்,வளையல், ஐஸ்க்ரீம் கப்... கொட்டாங்கச்சியில் வித்தை காட்டும் ராஜசேகர்!

ராஜசேகர்
பிரீமியம் ஸ்டோரி
ராஜசேகர்

கைவினைப் பொருள்கள்

மோதிரம், கம்மல்,வளையல், ஐஸ்க்ரீம் கப்... கொட்டாங்கச்சியில் வித்தை காட்டும் ராஜசேகர்!

கைவினைப் பொருள்கள்

Published:Updated:
ராஜசேகர்
பிரீமியம் ஸ்டோரி
ராஜசேகர்

ஒன்றுக்கும் உதவாது என்று நாம் தூக்கிப் போடும் கொட்டாங் கச்சியை வைத்து பலவிதமான பொருள்களைத் தயார் செய்து, வித்தை காட்டுகிறார் ராஜசேகர். விழுப்புரம் மாவட்டத்தின் எல்லைப் பகுதியை ஒட்டியபடி அமைந்துள்ள புதுவை மாநிலத்தைச் சேர்ந்த கலிதீர்த்தால் குப்பத்தைச் சேர்ந்த ராஜசேகரனை நாம் சந்தித்தோம். 50 வயதான அவர், 20 வயது இளைஞர் போல செயல்பட்டபடி நம்முடன் பேசினார்.

“இதுதான் என்னுடைய சொந்த ஊரு. நான் பத்தாவது முடிச்சதுக்கு அப்புறமா, ‘கலை மற்றும் கைவினை’ தொடர்பா ரெண்டு வருஷம் படிச்சேன். அதுக்கு அப்புறமா, ‘நுண்கலை’ தொடர்பாக மூணு வருஷம் படிச்சேன். டிராயிங் பண்ணணும்னா பெயின்ட் வாங்க நிறைய பணம் தேவைப்படும் என்கிறதால, வேஸ்ட் மெட்டீரியலைப் பயன்படுத்தி ஏதாவது செய்ய முடியமான்னு தோணுச்சு. அதைப் பின்னாளில் பிசினஸாக மாத்துற ஐடியாவும் இருந்துச்சு. இதுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சப்பதான் கொட்டாங்கச்சி பத்தின யோசனை வந்துச்சு.

ராஜசேகர்
ராஜசேகர்

இங்கு பலரும் அதைப் பயன்படுத்துவது கிடையாது. அதனால கொட்டாங்கச்சியிலிருந்து பறவையின் இறகு போன்ற ஒரு கீ செயின், கல் வைத்த மோதிரம் பண்ணினேன். அதுதான் நான் முதன்முதலில் கொட்டாங்கச்சியைப் பயன்படுத்தி செய்த பொருள். 1988-லேயே 10 ரூபாய் வரைக்கும் அதை விற்றேன். எனக்கு அது மேலும் ஆர்வத்தைக் கூட்டியது. இதை சுயதொழில் மாதிரி பண்ணப் போறதா வீட்ல சொன்னேன். வீட்டுல அதை ஏத்துக்கல. ‘வேணாம்’னு சொல்லிட்டாங்க.

அதனால, 300 ரூபாயை முதலீடா வச்சு வேலைய ஆரம்பிச்சுட்டேன். நான் உற்பத்தி செய்த பொருள்கள் மூலம் வந்த சின்னச் சின்ன தொகை, நான் மூணாவது வருஷம் படிப்பு படிச்சு முடிக்க ரொம்ப உதவியா இருந்தது.

இந்த சிறு கைவினைத் தொழிலைப் பற்றிச் சொல்லித் தரணும் என்கிற ஆர்வம் இருந்ததால, தட்டாஞ்சாவடியில இருக்கிற ‘மாவட்ட தொழில் மையத்தை’ அணுகி லோன் கேட்டேன். 1997-ல 25,000 ரூபாய் லோன் கொடுத்தாங்க. தொடக்கத்துல ஆறு பேருக்கு இந்தக் கலைத்தொழில் பற்றி கற்றுக் கொடுக்க ஆரம்பிச்சேன். அப்புறம் அது கொஞ்சம் கொஞ்சமாக கூடுச்சு. அதன் மூலமா கொஞ்சம் வருவாயும் எனக்கு கிடைச்சது’’ என்றவர், கொட்டாங்கச்சியிலிருந்து அவர் தயார் செய்த மோதிரம், கம்மல், வளையல், டீ கப், ஐஸ்க்ரீம் கப், கிளிப் என நூற்றுக்கும் மேற்பட்ட பொருள்களைக் காட்டினார். தேங்காய் பஞ்சு, தென்னை மரப்பலகை போன்றவற்றைப் பயன்படுத்தியும் அவர் தயார் செய்திருந்த பொருள்களைப் பார்க்கும்போது ஆச்சர்ய மாகத்தான் இருந்தது.

அந்தக் காலத்துல மண்பாண்டங்கள்ல உணவு சமைச்சாங்க. கரண்டிக்காக கொட்டாங்கச்சியில் ஆப்பை (அகப்பை) செஞ்சு பயன்படுத்தினாங்க. அதுபோல, இப்ப பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக இந்த சிறு கைவினைத் தொழிலை நான் பார்க்கிறேன்.

சுத்தமாவும் தரமாவும்தான் இந்தப் பொருள்களை உற்பத்தி செய்றேன். இவற்றை செய்வதற் குத் தனியாக மெஷின் எல்லாம் கிடையாது. நாமதான் நமக்கு ஏத்த மாதிரி மெஷினைத் தயார் பண்ணிக்கணும்.

மோதிரம், கம்மல்,வளையல், ஐஸ்க்ரீம் கப்... கொட்டாங்கச்சியில்
வித்தை காட்டும் ராஜசேகர்!

விற்பனைனு வரும்போது எனக்கு உதவியாக இருந்தது மாவட்ட தொழில் மையம்தான். என்னைப் போன்ற கைவினைக் கலைஞர்களை பல மாநிலங் களுக்கு அழைச்சுக்கிட்டு போவாங்க. எங்களுடைய கைவினைப் பொருள்களை அங்கு காட்சிப்படுத்துவோம். அங்கு வரும் வாடிக்கையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், எனப் பலரும் எங்களுடைய தொடர்பு எண்களை வாங்கிச் செல்வார்கள். அவங்களுக்கு தேவைப்படும்போது போன் பண்ணி ஆர்டர் கொடுப்பாங்க. அதுக்கேத்த மாதிரி நாங்களும் பொருள்களை செஞ்சு கொடுப்போம். இப்படி நிறைய ஆர்டர் வந்தது. கூடுதலா ஆர்டர் வர்றப்ப, என்கிட்ட படிச்ச மாணவர்கள்கிட்ட அந்த வேலையைப் பிரிச்சுக் கொடுப் பேன். அதற்கு நாங்க வாங்குகிற காசையும் தந்துடுவேன்.

இதுவரை நெருங்கிய நண்பர் கள் மூலமாகக் கொட்டாங்கச்சி சேகரித்துப் பயன்படுத்தி வர்றேன். காலத்துக்கு ஏத்த மாதிரி மாற்றம் வரும்போது, அதன் பாதையில் செல்வதும் நம் பொருள்களை விற்பனை செய்வதற்கு உதவியாக இருக்கும்.

பத்து வருஷத்துக்கு முன்னாடி ‘பிரவுசிங் சென்டர்’ போயிட்டு ஏதாவது மெயில்ல ஆர்டர் வந்திருக்கான்னு பார்ப்பேன். டச் செல்போன் வந்ததுக்கு அப்புறமா வாட்ஸ்அப், முகநூல், இந்தியா மார்ட் போன்றவை எனக்கு உதவியாக இருக்கு. எனக்குத் தேவையான பொருள்களை வாங்கவும் என்னுடைய பொருளை விற்கவும் உதவியாக இருக்கு” என்று சொன்னபடி, தனக்கு வந்த ஆர்டர்களைப் பற்றி எடுத்துக் காண்பித்தார்.

“உறவினர்களின் வீட்டு நிகழ்ச்சி களுக்குப் போகும்போது கிஃப்ட் ஏதும் வாங்க மாட்டோம். எங்களுடைய கைவினைப் பொருள்களையே கிஃப்ட்டாகக் கொடுப்போம். இந்த கைவினைப் பொருள்கள் நேச்சுரலான கலரில் இருக்கும்; எடையும் மிகவும் குறைவு; இயற்கைக்கு நன்மை செய்வதாகவே இருக்கும். இதன் மூலம் செய்யப்படும் நகைகளை வாங்கினால் தொலைந்துவிடுமோ என்ற பயமும் வேண்டாம்.அது மட்டுமன்றி, இதுபோன்ற கைவினைப் பொருள்களை வாங்கும்போது எங்களைப் போன்ற கலைஞர்களின் வாழ் வாதாரமும் உயரும்.

இப்போ நான் தயாரிக்கிற இந்த கைவினைப் பொருள்கள், கோயம்புத்தூர், திருச்சி, தேனி, கொடைக்கானல், பெங்களூரு, பாம்பே போன்ற பல இடங்களுக்கு சப்ளை ஆகுது. என்னிடம் 30 ரூபாயிலிருந்து 600 ரூபாய் வரையிலான பொருள்கள் இருக்கு. கொரோனாவுக்கு முன்பு வரை, மாதம் முழுவதும் ஆர்டர் இருந்தது. கடினமாக உழைத்தால் என்னுடைய அனைத்து செலவும் போக 40,000 ரூபாய்க்கு மேல் கிடைக்கும். சில சமயம் குறைவாகவும் கிடைக்கும். இப்ப கொரோனா காலம் என்பதால், ஆர்டர் குறைவாகத்தான் வருது. அதனால என்னோட செலவு எல்லாம் போக மாதம் 20,000 ரூபாய் வரை கையில நிக்குது.

இது போன்ற சிறு கைவினைத் தொழில்களைக் கற்றுக் கொண்டால் வேலை இல்லாத பட்டதாரி இளைஞர்களின் வாழ்வும் மேம்படும். பாரம்பர்ய கலையும் அழியாது; நம் பொருளாதாரமும் வளரும்; இயற்கையான பொருள்கள் வீணாவதும் தடுக்கப்படும். இந்தக் கலையை எல்லோருக்கும் கற்றுத் தர நமது தமிழக அரசாங்கம் ‘சான்றிதழ் படிப்பு’ ஒன்றை வடிவமைத்து, அதை இளவயது ஆண்களுக்கும் பெண்களுக்கும் கற்றுத் தந்தால், கிராமப் பொருளாதாரத்தை நன்கு உயர்த்த முடியும்.

இன்றைக்குப் படிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் கம்பெனிகளில் வேலை கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஆனா, குறைந்த முதலீட்டில் பொருளாதாரத்தில் சீக்கிரம் முன்னேற வேண்டும் எனில், இதுபோன்ற சுய கலைத் தொழில்களை கற்றுக்கொள்வது சரியாக இருக்கும்.

இதற்கு மத்திய, மாநில அரசுகளும் மக்களும் ஆதரவு தந்தால், மிகச் சிறப்பான எதிர்காலம் இந்த கலைக்குக் கிடைக்கும்’’ என்று பேசிமுடித்த ராஜசேகர், கொட்டாங் கச்சிகளைப் பயன்படுத்தி, பொருள்களைச் செய்யும் வேலையில் மூழ்கினார்.