நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

தென்னை மட்டை சிப்ஸ்... லட்சக்கணக்கில் வர்த்தகம்... முதலாளியாகக் கலக்கும் ஈரோடு இல்லத்தரசி..!

சாரதா
பிரீமியம் ஸ்டோரி
News
சாரதா

சுயதொழில்

வாழையும் தென்னையும் இயற்கை நமக்குக் கொடுத்த கொடைகள். இவற்றின் அனைத்துப் பாகங்களுமே சந்தை வாய்ப்பை உறுதிசெய்யும் பயன்பாட்டுப் பொருள்களாக உதவுகின்றன. இதில், தென்னை மட்டைக்குப் பின்னிருக்கும் வர்த்தகம், பலரும் அறியாதது.

இளநீர் குடித்துவிட்டுத் தூக்கி எறியப்படும் தென்னை மட்டை, செடி வளர்ப்புக்கு உதவும் சிப்ஸாக உதவுகிறது. பொள்ளாச்சி பகுதியில் அதிகமாக நடைபெறும் இந்த சிப்ஸ் உற்பத்தி தொழிலுக்கான வரவேற்பை உணர்ந்து, வீட்டுவேலையுடன் சுயதொழிலையும் சிறப்பாகச் செய்து வருகிறார், ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை அடுத்த பாண்டியம்பாளையத்தைச் சேர்ந்த சாரதா.

முன்பு, கணவரின் விவசாய வேலைகளுக்கு உதவியாக இருந்தவர், இப்போது 15 பெண் களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதுடன், மாதம்தோறும் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் செய்யும் தொழில்முனைவோராக முன்னேறி இருக்கிறார். பெண்களுக்கும், குறிப்பாக, இல்லத்தரசிகளுக்கும் கைகொடுக்கும் தென்னை மட்டை சிப்ஸ் தயாரிப்பில் சாரதா ஜெயித்த கதையைத் தெரிந்துகொள்ள அவரின் ஃபேக்டரிக்குச் சென்றோம்.

தென்னை மட்டை சிப்ஸ்... லட்சக்கணக்கில் வர்த்தகம்... முதலாளியாகக் கலக்கும் ஈரோடு இல்லத்தரசி..!

“என் அக்கா பையனுக்குத் தொழில் வச்சு கொடுக்கலாம்னு, அஞ்சு வருஷங்களுக்கு முன்பு இந்த யூனிட்டை அமைச்சோம். அவன் மேற்படிப்புக்குப் போயிட்டதால, நான் இந்தத் தொழில்ல இறங்கினேன். அடிப்படை விவரங்களைத் தெரிஞ்சுக்கலாம்னு இந்தத் தொழில் அதிகமா நடக்கிற பொள்ளாச்சிப் பகுதிக்குப் போனோம். தொழில் போட்டி காரணமா, இந்தத் தொழிலுக்கான வரவேற்பு, வர்த்தக வாய்ப்புகள் பத்தி சொல்ல யாருமே முன்வரலை. பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒருவர் மட்டும் அவரோட ஃபேக்டரி செயல் பாடுகளை விளக்கினார். பிறகு, இந்தத் தொழில் தொடர்பான எல்லா விஷயங்களையும் தேடித் தேடி கத்துக்கிட்டேன்.

இந்த மதிப்புக்கூட்டல் தொழில் ரொம்பவே எளிமையானதுதான். அதனால, இந்த வேலையை நான் மட்டுமே கவனிக்க, விவசாய வேலைகளை என் கணவர் தனியா செய்ய ஆரம்பிச்சார்.

தென்னை மட்டைகளை வாங்கி வருவதுதான் ஆரம்பத்துல சவாலா இருந்துச்சு. நிறைய தோட்டங்களுக்கு நேரடியா போய் மட்டைகளைக் கொள்முதல் செஞ்சோம். பிறகு, வியாபாரிகள் மூலமா மட்டைகளை வாங்க ஆரம்பிச்சோம். இப்ப தினமும் 10,000 உரிச்ச தென்னை மட்டைகள் தேவைப் படுது. அதை எங்க ஃபேக்டரிக்கே வியாபாரிகள் கொண்டுவந்து சேர்த்திடுவாங்க. ஓரிரு நாள்களுக்கான தென்னை மட்டைகள் எப்போதும் இருப்பு இருக்கிற மாதிரி பார்த்துப்போம்” - தொழிலில் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட விதத்தைச் சொன்ன சாரதா, தென்னை மட்டை சிப்ஸை உலர்த்தும் பணிகளைச் செய்துகொண்டே, இதன் உற்பத்தி குறித்து விவரித்தார்.

“ஓரளவுக்கு ஈரப்பதத்துடன் 2 – 3 பிளவுகளா (Cutting) உரிக்கப்பட்ட பச்சை தென்னை மட்டைதான் அடிப்படையான மூலப்பொருள். இதை கட்டிங் மெஷின்ல ஒவ்வொன்னா தர்றப்ப, அவை சின்னச் சின்ன துண்டுகளா மாறிடும். பிறகு, கடினமா இருக்கிற தென்னை மட்டையின் மூக்குப்பகுதியை மட்டும் நீக்கிட்டு, தென்னை மட்டைத் துண்டுகளை ஒண்ணா சேகரிச்சு, ஃபீடர் மெஷின்ல கொட்டினா, இன்னும் சிறிய அளவிலான துண்டுகளா அவை வெளியே வரும். அதுல, 6 – 16 மில்லிமீட்டர் அளவிலான துண்டுகளை மட்டும் தனியா சேகரிப்போம்.

இதை எத்தனை நாள்கள் வெச்சிருந்தாலும் சேதாரம் ஆகாம பாதுகாப்பா இருக்கும். இருப்பினும், மூட்டைப் பிடிச்சு வெச்சிருக்கிற இந்த சிப்ஸைக் காலையில இருந்து சாயந்திரம் வரைக்கும் தினமும் உடனுக் குடன் திறந்தவெளியில உலர்த் திடுவோம். வெயில்ல 4 – 5 மணி நேரத்துலயே ஈரப்பதம் போயிடும். அவை 18% வெப்ப நிலைக்கு மாறியதும், விற்பனைக்காக மூட்டையில் போட்டு வெச்சுடுவோம். இந்த விதத்துல தினமும் ஒன்றரை டன் உற்பத்தி பண்றோம். ஆறு டன் அளவுக்கு உலர்ந்த தென்னை மட்டை சிப்ஸ் இருப்பு இருக்கிறப்ப தகவல் சொல்வோம். விற்பனை யாளர்கள் ஃபேக்டரிக்கு வந்து வாங்கிட்டுப் போயிடுவாங்க. தென்னை மட்டைத்துகள் களை (மஞ்சி) கோழிப் பண்ணைகளுக்கு தனியா வித்துடுவோம்” என்றவர், தென்னை மட்டை சிப்ஸின் பயன்பாடுகளைப் பட்டியலி்ட்டார்.

சாரதா
சாரதா

“பெரும்பாலான தாவரங் களிலும் வேர் மூலமாதான் சுவாசம் நடக்கும். தென்னை மட்டை சிப்ஸுக்கு இடையில இடைவெளி அதிகமா இருக்கிறதால, வேர் சுவாச மும் வேர் பரவலும் இலகுவா நடக்கிறதோடு, களைகளும் அதிகமா வளராது. இந்த சிப்ஸ், நீரைச் சேமிச்சு வச்சுக்கிற தன்மை கொண்டது. அதனால, நீர் பயன்பாடும் குறைவாகத்தான் தேவைப்படும். தோட்டத்துல மூடாக்குப் போடவும் இந்த சிப்ஸ் உதவும். மாடித் தோட்டம் அமைக்கிறப்ப மொட்டைமாடியில பாரம் அதிகரிக்கிறதைத் தவிர்க்க, எடைக் குறைவான இந்தத் தென்னை சிப்ஸைப் பயன் படுத்தலாம். வெளிநாடுகள்ல இதுக்கான தேவை அதிகமா இருக்கிறதால, இவை அதிக அளவுல ஏற்றுமதி செய்யப் படுது.

முன்பெல்லாம் விறகுக்குப் பதிலா அடுப்பெரிக்க மட்டுமே தென்னை மட்டை கள் பயன்படுத்துனாங்க. ஆனா, இதுல இருந்து தயாரிக்கப்படுற நார், துகள், சிப்ஸ்னு பல்வேறு மதிப்புக் கூட்டுப் பொருள்களுக்கும் இப்ப கணிசமா டிமாண்டு இருக்கு.

தென்னை அதிகம் விளையுற பகுதிகள்ல, டிரேடர்கள் மூலமா மூலப் பொருள் கிடைக்கிறதை உறுதிசெஞ்சு, யார் வேணா லும் இந்தத் தொழிலை ஆரம்பிக்கலாம். தமிழ் நாட்டுல தென்னை மரங்கள் அதிக அளவுல இருக்கிறதால மூலப்பொருள் தட்டுப்பாடு இருக்காது. விற்பனையிலயும் சிக்கல் வராது” என அனுபவத் தில் இருந்து நம்பிக்கை யூட்டுகிறார் சாரதா.

ஒரு தென்னை மட்டையை (உரித்தது) 80 பைசா வீதம் வாங்குகிறார் சாரதா. அதை நன்கு உலர வைத்து, தென்னை மட்டை சிப்ஸாக மாற்றி, ஒரு டன் சிப்ஸை 13,000 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். தென்னை மட்டையின் விலை அதிகமானால், சிப்ஸுக்கான விலையும் கூடுதலாகக் கிடைக்கும். மாதம்தோறும் 50 டன் அளவுக்குத் தென்னை மட்டை சிப்ஸ் விற்பனை செய்து, ரூ.6.5 லட்சம் வர்த்தகம் செய்து வருகிறார் சாரதா.

“கட்டிங் மெஷின்ல பயன்படுத்துற பிளேடுகள் ரொம்பவே கூர்மையா இருக்கணும். மூணு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒவ்வொரு பிளேடையும் சாணம் பிடிக்கணும். இந்த வேலையுடன், மெஷின்கள் பழுதானா சரிபடுத்துறதுனு எல்லா வேலையையும் நானே செஞ்சுடுவேன்.

‘வெறும் தென்னை மட்டையை வச்சு என்ன பண்ணுவீங்க... இதுல என்ன வருமானம் கிடைச்சுட போகுது?’னு ஆரம்பத்துல பலரும் பலவிதமா பேசினாங்க. யார் என்ன சொன்னாலும் நமக்குப் பிடிச்ச, நம்மால செய்ய முடியுற சரியான தொழில் எதுவானாலும் துணிஞ்சு செய்யலாம். அந்த நம்பிக் கையிலதான் இப்ப வரைக்கும் இந்தத் தொழிலைச் செய்றேன். வெளிவேலைக்குப் போனாலும் கிடைக்காத அளவுக்கு இந்தத் தொழில்ல சிறப்பான லாபம் எனக்குக் கிடைக்குது” என்று மகிழ்ச்சியுடன் சொன்னவர்,

“பெரும்பாலும் இயந்திரங்களை நம்பியே நடக்கிற தொழில் இது. படிச்சவங்க, படிக்காத வங்க யார் வேணாலும் சில தினங்கள்ல இந்தத் தொழில் அனுபவங் களைக் கத்துக்க முடியும்.

தென்னை மட்டை சிப்ஸை உலர்த்த போது மான நிலப்பரப்பு தேவை. இதுக்காக ஒரு ஏக்கர் களத்தை ஒதுக்கி, அதுல தார்ப்பாய் பரப்பி விட்டு சிப்ஸை உலர்த்துவோம். உலர்த்திய சிப்ஸை இருப்பு வைக்க சேமிப்புக்கிடங்கு தேவைப்படும். அஞ்சு கட்டிங் மெஷினுடன், ஃபீடர் மெஷின் ஒண்ணும் வச்சிருக்கோம். இதே கட்டமைப்புல புது யூனிட் ஆரம்பிக்க 7 – 10 லட்சம் ரூபாய் முதலீடு இருந்தாலே போதுமானது” என்று வழிகாட்டி முடித்தார் சாரதா.