Published:Updated:

கோக்கனட் ஸ்வீட் ரோல் விற்பனையில் கலக்கும் அறந்தாங்கி பாவா..!

பாவா மொஹைதீன்
பிரீமியம் ஸ்டோரி
News
பாவா மொஹைதீன்

பிசினஸ்

முறுக்கு, அதிரசம் எனப் பல வகையான பண்டங்களை நீங்கள் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால், கோக்கனட் ஸ்வீட் ரோல் சாப்பிட்டிருக்கிறீர்களா?

இந்த இனிப்பு, அறந்தாங்கியில் இருப்பவர் களுக்கு அத்துப்படி. அதிலும், ‘பாவா கோக்கனட் ஸ்வீட் ரோல் மடக்கு’ என்றால், உடனே பரபரப்பாகிவிடுவார்கள். செய்வதற்கு மிகவும் சிரமமான இந்த இனிப்பு வகையை அறந்தாங்கியில் 20 வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாகச் செய்து விற்றுவருகிறார் பாவா மொஹைதீன். 78 வயதானாலும் 28 வயது இளைஞர் போல செயல்பட்டுவரும் அவரை அவருடைய தொழில்கூடத்தில் சந்தித்தோம்.

சிறிய ஓட்டு வீடு, உள்ளே சென்றதும் ஒரு பக்கம், கோக்கனட் ஸ்வீட் ரோல் பேக்கிங் பணி நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் கிரைண்டர்கள் தடதடத்துக் கொண்டிருந்தன. வீட்டுக்குப் பின்புறம் சுற்றிலும் வேலி கொண்டு அடைக்கப்பட்டு கோக்கனட் ஸ்வீட் ரோல் தயாரிப்புப் பணி மும்மரமாக நடந்துகொண்டிருந்தது. அறந்தாங்கியில் ஒரு சிறிய ஓட்டு வீட்டிலிருந்து தயாராகும் இந்த கோக்கனட் ஸ்வீட் ரோல்கள், தமிழகத்தைக் கடந்தும் வெளிநாடுகளுக்கும் பறந்துகொண்டிருக் கின்றன. இந்த வீட்டில் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று பேக்கிங் பணியில் ஈடுபட்டிருந்த பாவாவிடம் பேசினோம். தனது பிசினஸ் பயணத்தை சுவாரஸ்யமாக எடுத்துச் சொன்னார் அவர்.

கோக்கனட் ஸ்வீட் ரோல் விற்பனையில் கலக்கும் அறந்தாங்கி பாவா..!

‘‘நான் பொறந்து, வளர்ந்தது எல்லாம் திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை. படிச்சது 5-ம் கிளாஸ். குடும்ப வறுமையால அன்னைக்கு மேற்கொண்டு என்னால படிக்க முடியலை. 60-கள்லேயே ஹோட்டல் வேலைக்கு வந்திட்டேன். 1970-கள்ல சென்னையில சொந்தமா ஹோட்டல் ஆரம்பிச்சு நடத்தினேன்.

சென்னையில ஹோட்டல் தொழில் கொஞ்சம் நலிவடைஞ்ச நேரம், 1975-ல திருச்சிக்கு வந்து மிட்டாய், ஸ்வீட் வகைகளைத் தயாரிச்சு, அதை ஊர், ஊராக விற்பனை செஞ்சுகிட்டு இருந்தேன். அப்போ எல்லாம் தேங்காய் பர்பிக்கு கடுமையான மவுசு. அதை அதிக அளவில் தயாரிக்க ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துல தேங்காய் பர்பி பாவாவைப் பார்த்தீங்களான்னுதான் என்னைப் பலரும் கேட்பாங்க.

ஆரம்பத்துல திருச்சியிலிருந்து, அறந்தாங்கிக் குப் பஸ்ல வந்துதான் வியாபாரம் செஞ்சிட்டுப் போவணும். அறந்தாங்கி தாண்டி மணமேல்குடி கடற்கரைப் பகுதிகளுக்கும் போக வேண்டியிருந்துச்சு. ரொம்ப தூரம் ஆனாலும், கடற்கரைப் பகுதியிலதான் வரவேற்பு இருந்துச்சு. அதனாலயே, 1978-ல எல்லாம் மனைவி, பிள்ளைகளோட அறந்தாங்கிக்கு வந்திட்டேன். ஒரு வாடகை வீட்டைப் பிடிச்சு தினமும் மிட்டாய் வகைகளைத் தயார் செஞ்சு, விற்க ஆரம்பிச்சேன். 80 கி.மீ தூரம் வரை, கடற்கரை ஏரியாவுக்கு சைக்கிள்லயே போயிட்டு வருவேன். கஷ்டப்பட்டு உழைச்சேன். அறந்தாங்கி வந்த அடுத்த வருஷத்துலயே சொந்தமா வீடு வாங்கி, பேக்கரியையும் ஆரம்பிச்சேன்.

காலப்போக்குல மிட்டாய் அயிட்டங்களைப் பலரும் போட ஆரம்பிச்சிட்டாங்க. நான் மிட்டாய் அயிட்டத்தைக் கொஞ்சம் கொறச்சுகிட்டேன். அந்த நேரத்துலதான் என் சொந்தக்காரரு ஒருத்தரு, இந்த கோக்கனட் ஸ்வீட் ரோலை எனக்கு அறிமுகப்படுத்தினாரு. இதுல, நல்லா சம்பாதிக்கலாம். ஆனா, வேலை அதிகம் வச்சுடும். அதனாலதான் யாரும் இதை பெருசா முயற்சி பண்ணலைன்னு சொல்லிட்டுப் போனாரு. 20 வருஷத்துக்கு முன்னால 1998-ல ஒரு சேலஞ்சா எடுத்துக்கிட்டு ரெண்டு பேரை வேலைக்கு வச்சுக்கிட்டு இந்தத் தொழிலை செய்ய ஆரம்பிச்சேன்.

இப்போ வேலைக்கு 18 பேர் இருக்காங்க. தயாரிச்சதை எடுத்துக்கிட்டு சைக்கிள்ல கிளம்பிடுவேன். ஆரம்பத்துல பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் வரைக்கும் லைன் பார்த்துட்டு வந்தேன். நல்லா மூவிங் இருந்துச்சு. அரைக்கிறது போக மடக்கி பொரிச்சு எடுக்கிற வரைக்கும் எல்லா வேலையும் கையிலயே மேனுவலாகத்தான் செய்யணும். வேலை கொஞ்சம் கூடுதல்தான்.

இந்த இனிப்பை செய்றதுக்குப் பிரதானமாக மைதா, முட்டை, சீனி, வனஸ்பதி, ஏலக்காய் என மூலப்பொருள்கள் எல்லாம் சேர்த்து தயாரிக்கிறோம். அப்பவும் சரி, இப்பவும் சரி தரத்துல மட்டும் எந்த சமரசமும் பண்ணிக்க மாட்டேன். அதனால், எப்பவுமே எனக்கு ரிட்டர்ன் வராது.

அன்னைக்கு 10 ரோல் 10 ரூபாய்க்குக் கொடுத்தோம். இப்போ 40 ரூபாய்க்கு விற்பனை செய்றோம். சுவை அதிகம்கிறதால, ஆர்டர் அதிகமா வர ஆரம்பிச்சது.

எனக்கு ஒருபக்கம் வயசாகிக் கிட்டே போனதால, லைன் பார்க்க முடியாத சூழல் வந்துச்சு. அப்புறம் லைனை விட்டுட்டு அறந்தாங்கியில சுந்தரம் பேக்கரி கிளைகளுக்கு மட்டும் கொடுக்க ஆரம்பிச்சேன். அந்த நேரத்துல தான் கும்பகோணத்தைச் சேர்ந்த ஏஜென்ட் ஒருவர் அவரா எங்களை அணுகி, எங்க ஸ்வீட் ரோலை எடுத்துக்கிட்டுப் போய் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யிறதா சொல்லிக் கேட்டார். இப்போ 14 வருஷமா அவங் களுக்குக் கொடுத்துக்கிட்டு இருக்கேன். பாண்டிச்சேரி, காரைக்கால், வட மாவட்டங்கள் முழுவதும் அவர் சப்ளை பண்றாரு.

கோக்கனட் ஸ்வீட் ரோல் விற்பனையில் கலக்கும் அறந்தாங்கி பாவா..!

தமிழகம் முழுவதும் இப்போ பாவா கோக்கனட் ஸ்வீட் ரோலை விற்பனை செஞ்சிக்கிட்டு இருக்காங்க. ஆரம்பத்துல மாசம் 4,000 ரூபாய்க்கு எடுத்தாரு. இப்ப மாசம் 6 லட்சம் ரூபாய்க்கும் குறையாம சரக்கு எடுக்கிறாரு. அவராலதான் இப்போ ஏழ்மை நிலையில் உள்ள 18 பெண்களுக்கு ரெகுலரா என்னால வேலை கொடுக்க முடியுது.

அறந்தாங்கியில சுந்தரம் பேக்கரிக்குக் கொடுக்கிறது மூலமா கவும் மாசம் ரூ.1 லட்சம் கிடைக் கும். சுந்தரம் பேக்கரி சிங்கப்பூர், மலேசியாவுல இருக்கிற வாடிக்கை யாளர்களுக்கு அவங்க பலகாரங் களோட நம்ம ஸ்வீட் ரோலை அனுப்பிக்கிட்டு இருக்காங்க. தீபாவளி நேரத்துல மட்டும் அப்படியே மூணு மடங்கு அனுப்புற மாதிரி இருக்கும்.

நாங்க இரவு பகலா வேலை பார்ப்போம். வருஷத்துக்கு இந்தத் தொழில் மூலமா எங்களுக்கு ரூ.80 லட்சம் வரையிலும் டேர்ன் ஓவர் ஆகுது. அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி, நாங்க தயாரிச்சு அனுப்பு பொருள் திரும்ப வந்ததே இல்லை. ரிட்டர்ன் வராமல் இருந்தால் போதும், நாம எந்தத் தொழில்லயும் ஜெயிச்சிடலாம்.

அதுவும் இல்லாமல, நாங்க தயாரிச்ச பொருள் தயாரிச்ச தேதியிலயிருந்து ஒரு மாசம் வரைக்கும் வச்சு சாப்பிடலாம். ஆனாலும், நாங்க தயாரிக்கிற ஸ்வீட்ஸ் அத்தனையும், தயாரிச்ச ஒரு வாரத்துக்குள்ளேயே விற்பனை ஆகிடும்.

ஸ்வீட்டுக்குத் தேவையான பொருள்களோட விலை ஏறினாலும் தரத்தை என்னைக்கும் குறைக்க மாட்டேன். வேலைக்கு ஆளுகளை எடுக்கிறப்ப, பெண்களுக்குத்தான் முன்னுரிமை. அதுல மூணு பேருக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொடுத்து, மாசம் ரூ.3,000 கட்டிக்கிட்டு வர்றேன்.

இப்பவும் திருப்பூர்ல பெரிய பேக்கரிக்காரர் ஒருவர் இடம், ஆள் எல்லாம் ஒதுக்கித் தாரேன்; இங்க ஒரு யூனிட் போட்டுக் கொடுங்கன்னு கேட்டாரு. இது ஒண்ணு போதும், முடியாதுன்னு சொல்லிட்டேன். என்னோட நேரடிக் கட்டுப்பாட்டுல இருக்கிறதால, எப்பவும் போல சிறப்பா போயிக்கிட்டு இருக்கு. இப்பதான் பேரனை இந்தத் தொழிலுக்குள்ள கொண்டு வந்திருக்கேன். வயசாகிக்கிட்டு இருக்கு. நாம இருக்க வரைக்கும் இது போதும்’’ என்றவர், மீண்டும் பேக்கிங் வேலையில் சுறுசுறுப்பானார்.

பிசினஸ் டு சினிமா..!

பாவாவுக்கு இலக்கிய ஈடுபாடு அதிகம். ஓய்வு நேரத்தில் புத்தகங்களைப் படித்துக்கொண்டே இருப்பார். இதற்குக் காரணம், அவருடைய அரசியல் ஈடுபாடுதான். “ஆரம்பத்துல தி.மு.க-வுல இருந்தேன். இப்போ 30 வருஷமா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில சேர்ந்து, கலை, இலக்கிய மேடைகள்ல பாட்டு எழுதி, பாடிக்கிட்டு இருக்கேன். நானே எழுதி டியூன் பண்ணி பாடுவேன். பாண்டிச்சேரியில நடந்த கலை இலக்கிய மன்ற நிகழ்ச்சியில விழிப்புணர்வுப் பாடல் ஒன்றைப் பாட, அதைப் பார்த்த ராஜூமுருகனுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. உடனே கூப்பிட்டு வாய்ப்புக் கொடுத்தாரு. ‘என்னங்க சார் உங்க சட்டம்’ பாட்டைப் பாடிக் கொடுத்தேன். அந்தப் பாட்டுக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நெனச்சுக்கூட பார்க்கலை. இப்ப ‘வாய்தா’ங்கிற படத்துல ஒரு பாடல் பாடியிருக்கேன். ‘உப்புக்காத்து’ங்கிற படத்துக்கான பணிகள் போயிக்கிட்டு இருக்கு. இன்னும் சில வாய்ப்புகளும் வந்துகிட்டு இருக்கு. ஒருபக்கம் பிசினஸ், மறுபக்கம் சினிமான்னு எந்தவித களைப்பும் இல்லாம, சுறுப்பா இயங்கிக்கிட்டு இருக்கேன்’’ என்கிறார் பாவா.