Published:Updated:

வளரும் குஜராத்... நசுங்கும் கோவை... வேதனையில் பம்ப் உற்பத்தியாளர்கள்..!

பம்ப் உற்பத்தி
பிரீமியம் ஸ்டோரி
பம்ப் உற்பத்தி

தொழில் துறை

வளரும் குஜராத்... நசுங்கும் கோவை... வேதனையில் பம்ப் உற்பத்தியாளர்கள்..!

தொழில் துறை

Published:Updated:
பம்ப் உற்பத்தி
பிரீமியம் ஸ்டோரி
பம்ப் உற்பத்தி

மோட்டார் பம்ப்செட் உற்பத்தி என்றாலே கோவைதான். நம் நாட்டில் உற்பத்தி ஆகும் பம்ப் செட்டுகளில் 60% கோவையில்தான் உற்பத்தியாகிறது. பெரு நிறுவனங்களைத் தாண்டி, சுமார் 3,000 சிறு, குறு மற்றும் நடுத்தர பம்ப் உற்பத்தி மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் கோவையில் உள்ளன. கோவையில் தினசரி 25,000 முதல் 30,000 மோட்டார் பம்ப் செட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. தினசரி ரூ.40 - ரூ.50 கோடி வரை வியாபாரம் நடந்தது. இந்த எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கும் கீழே குறைந்துவிட்டது.

வளரும் குஜராத்... நசுங்கும் கோவை... வேதனையில் பம்ப் உற்பத்தியாளர்கள்..!

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி நெருக்கடிகளுக்கு மத்தியில் கொரோனா நோய்த் தொற்று மேலும் பெரிய நெருக்கடியைக் கொடுத்தது. தவிர, கோவைக்குப் போட்டியாக குஜராத்தில் விலை குறைவான மோட்டார் பம்ப் தயாரிக்கப் படுகிறது. மோட்டார் பம்புக்கு சில மூலப் பொருள்கள் வட இந்தியாவில் இருந்துதான் வரவேண்டும். பெட்ரோல், டீசல் விலை காரணமாக மூலப்பொருள்கள் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. ஆனால், விற்பனை விலையை அதற்கு ஏற்றாற்போல அதிகரிக்க முடியவில்லை. டிசம்பர் முதல் ஜூன் வரை வரை மோட்டார் பம்புக்கான சீஸன். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தைவிட 20%கூட விற்பனை நடக்கவில்லை. பலர் இந்தத் துறையை விட்டு வேறு வேலைக்குத் செல்லத் தொடங்கிவிட்டனர்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந் தொழில்முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஜேம்ஸுடன் இது தொடர்பாக பேசினோம்.

ஜேம்ஸ்
ஜேம்ஸ்

80% நிறுவனங்களுக்கு வேலை இல்லை...

“கோவையில் பல ஆண்டு காலமாக பம்ப் செட் உற்பத்தி செய்துவந்த பெரு நிறுவனங்கள், இடம் வாடகை, மின்சார சலுகை, கூலி அனைத்தும் குறைவு என குஜராத்துக்குப் போக ஆரம்பித்தன. மூலப்பொருள்களை அங்கேயே வாங்கி பம்ப்செட்டுகளை செய் வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று நினைத்ததும் இன்னொரு காரணம். இப்படிப் படிப்படியாக பல நிறுவனங்கள் குஜராத்தில் பம்ப் செட் தயாரிப்பில் இறங்கின. இதனால் குறைந்த விலைக்கு பம்ப் செட்டுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகின்றன. குஜராத்தில் தயாராகும் பம்ப்செட்டுகளைவிட 20% அதிக விலைக்கு விற்றால்தான், கோவை உற்பத்தியாளர்களால் தாக்குப் பிடிக்க முடியும்.

பம்ப்பை உலகம் முழுக்கக் கொண்டு சென்றதில் கோவைக்குப் பெரும்பங்கு உள்ளது. தற்போது, குஜராத்தில் உற்பத்தியாகும் மோட்டார் கோவையில் விற்பனை ஆகிறது. 18% ஜி.எஸ்.டி வரி மிகப் பெரிய நெருக்கடியைத் தந்திருக்கிறது. மூலப் பொருள்களின் விலை 85 - 150% உயர்ந்துள்ளது. 80% குறு, சிறு நிறுவனங்கள் இப்போதும் பொது முடக்கக் காலகட்டத்தைப் போலத்தான் வேலை இல்லாமல் உள்ளன.

குறு, சிறு நிறுவனங்கள்தான் கோவை மாவட்டத்தின் முக்கிய அடையாளம். ஆனால், அதை வேகமாக இழந்துவருகிறோம். கொரோனா காலத்திலேயே 15% குறு சிறு நிறுவனங்கள் இந்தத் துறையில் இருந்து வெளியேறிவிட்டன. தி.மு.க அரசாங்கத்தின் மீது எங்களுக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதைப் பூர்த்தி செய்யும் வகையில் அவர்களின் செயல்பாடு இல்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. கோவையின் அடையாளத்தைத் தக்கவைக்க, தமிழக அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

செந்தில்குமார்
செந்தில்குமார்

எக்கசக்கமாக லாபம் பார்க்கும் பெரு நிறுவனங்கள்...

தென் இந்திய இன்ஜினீயரிங் உற்பத்தியாளர் சங்கம் (SIEMA) துணைத் தலைவர் செந்தில்குமார், “இந்தியாவில் மோட்டார் பம்ப் துறை ரூ.15,000 கோடி வர்த்தகம் செய்கிறது. இதில் கோவை நிறுவனங்கள் மட்டுமே ரூ.7,000 கோடிக்கு வர்த்தகம் செய்கின்றன. கோவையிலேயே பல பெரு நிறுவனங்கள் தங்களது சொந்த பெயரில் பம்ப் உற்பத்தி செய்து வருகின்றன. அதே போல, வெளியில் உள்ள பெரிய பிராண்டுகளுக்கு இங்கிருந்து உற்பத்தி செய்து அனுப்புகிறோம். 2019 அக்டோபரில் இருந்து பம்புக்குத் தேவையான மூலப் பொருள்களின் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்து விட்டது. பெரு நிறுவனங்கள் அதைச் சமாளித்துவிட்டன. காரணம், பல பெருநிறுவனங்கள் அவர்களே மூலப்பொருள் களை உற்பத்தி செய்கின்றன. குறு, சிறு நிறுவனங்களால் அதைச் சமாளிக்க முடியவில்லை. பெரு நிறுவனங்களுக்கும், சிறு நிறுவனங்களுக்கும் இருந்த விலை வித்தியாசம்தான் இவர்களின் வணிகத்துக்கு பலமாக இருந்தது.

இப்போதைய சூழ்நிலையில், விலை வித்தியாசம் பெரிய அளவுக்கு இல்லை. முன்பு இரண்டு நிறுவனங்களின் பம்ப் விலை வித்தியாசம் 30% எனில், இப்போது அது 5 சதவிகிதமாக குறைந்துவிட்டது. அதனால் சந்தையில் பெரிய பிராண்டே வாங்கிவிடலாம் என்கிற எண்ணம் உருவாகிவிட்டது. டேர்ன்ஓவர் குறைந்ததால், வங்கியும் அவர்களுக்குப் பெரிய அளவுக்கு உதவுவதில்லை. இந்தக் காலகட்டத்தில் பெருநிறுவனங்களின் லாப விகிதம் 2,000% வரை உயர்ந்துள்ளது. ஒரு பெரு நிறுவனம் 2019–ம் ஆண்டு ரூ.190 கோடிக்கு லாபம் பார்த்தது. அதே நிறுவனம் 2020-ம் ஆண்டு ரூ.2,600 கோடியும், 2021-ம் ஆண்டு ரூ.3,500 கோடியும் லாபம் பார்த்துள்ளது. அதே நேரம் குறு, சிறு நிறுவனத்தை நடத்தி வந்தவர்கள் இந்தத் தொழிலை விட்டுவிட்டு, ஸ்விக்கியில் டோர் டெலிவரி வேலைக்குச் சேர்ந்துள்ளனர்’’ என்றார்.

வளரும் குஜராத்... நசுங்கும் கோவை... வேதனையில் பம்ப் உற்பத்தியாளர்கள்..!

பம்ப்செட் To ஆட்டோ ஓட்டுநர்...

கோவை தொழில் துறையில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக சொந்தமாக நிறுவனம் நடத்திவந்த ரவீந்திரன் அதைவிட்டு விட்டு, ஆட்டோ ஓட்டி வருகிறார். அவரிடம் பேசினோம்.

“நான் 15 ஆண்டுகளாக லேத் வொர்க் ஷாப் வைத் திருந்தேன். ஆரம்பத்தில் ஏழு பேர் வேலை செய்து வந்தனர். கொரோனா முதல் அலையின்போது எந்தப் பிரச்னையும் இல்லை. இரண்டாவது அலையின் போது மிகவும் கஷ்டப்பட்டு விட்டோம். எங்களுக்கு ஜாப் ஆர்டரே வரவில்லை. மெட்டல் உள்ளிட்ட முக்கிய மான பொருள்களின் விலை ஏறிவிட்டது. கடன் மேல் கடன் வந்தது. ஏழு பேர் நான்கு பேராக குறைந்தனர். அந்த வருத்தத்தில், மன அழுத்தமாகி தலைசுற்றல் பாதிப்பு வந்துவிட்டது. இனி இந்தத் துறையில் இருக்க வேண்டாம் என மெஷினை எல்லாம் விற்றுவிட் டோம். இப்போது நான் கேரளாவில் ஆட்டோ ஓட்டிக் கொண்டி ருக்கிறேன். இடையில் மீண்டும் தொழிலுக்குச் சென்று விடலாம் என்று யோசித்தேன். இப்போது இருக்கும் சூழ்நிலையில் தொழிலில் நிலைத்திருப்பது கடினம். அரசாங்கம் மனது வைத்து ஏதாவது உதவி செய்து, பழைய நிலைக்குக் கொண்டு வந்தால்தான் அந்தத் தொழிலுக்கு வருவதைப் பற்றி யோசிக்க முடியும்” என்றார்.

ரவீந்திரன்
ரவீந்திரன்

ஜி.எஸ்.டி.யையாவது குறைக்க வேண்டும்...

பம்ப்செட்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மற்ற சிலருடன் பேசினோம். “கொரோனா காலகட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் எந்த உதவியும் செய்ய வில்லை. இருக்கும் ஊழியர்களைத் தக்க வைக்க முடியவில்லை. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வரா விட்டாலும்கூட பரவாயில்லை என்று நினைக்கிறோம். நிலைமை எப்போது சரியாகும் என்று யாருக்கும் தெரியவில்லை. 2 - 5% லாபம் பார்ப்பதே சிரமமான காரியமாக உள்ளது. ஆனால், 18% ஜி.எஸ்.டி கட்டச் சொல் கின்றனர். நிலைமை சரியாகும் வரையிலாவது ஜி.எஸ்.டி வரியைக் குறைக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் வணிக வரித் துறையும்கூட பல ஆண்டு களாக முடிக்கப்பட்ட வரி மதிப்பீட்டுக் கணக்குகளை ஆய்வு செய்து, அதில் குறைகளை கண்டுபிடித்து அபராதம் என்று வசூல்வேட்டை நடத்துகின்றன. 18 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்து போன கணக்குகளை எல்லாம் தூசு தட்டி நெருக்கடி தந்து வருகின்றன. அதிகபட்சம் ஒருவருக்கு ரூ.3 லட்சம் வரை கட்ட சொல்கிறார்கள். வணிக வரித் துறை பழைய வரி மதிப்பீட்டுக் கணக்கை முழுமையாகத் தள்ளுபடி செய்து சுமையைக் குறைக்க வேண்டும்” என்றனர்.

மாநில அரசு சில சலுகைகளை வழங்கியுள்ளது...

கோவை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகை வாசனிடம் கேட்டோம். “சிறிய சிறிய அளவில் சிலர் வெளியேறியிருக்கலாம். பெரிய அளவில் வெளியேற வில்லை. மூலப்பொருள் விலைப் பிரச்னைக்கு மத்திய அரசுக்கு சில பரிந்துரைகளை அனுப்பியுள்ளோம். 2020 டிசம்பருடன் ஒப்பிடும்போது, இப்போது ஸ்டீல் உள்ளிட்ட பொருள்களின் விலை சற்றுக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், கொரோனாவுக்கு முன்பிருந்த நிலை வரவில்லை என்பது உண்மை. காப்பர் மாதிரியான பொருள்கள் உலக சூழ்நிலைகளை வைத்துத்தான் முடிவாகும். மாநில அரசு அதை சரிசெய்ய முடியாது. குறு, சிறு நிறுவனங்கள் எங்களிடமும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. மாநில அரசு சில சலுகைகளை வழங்கியுள்ளது. மோட்டார் பம்புக்கான சீஸன் இப்போதுதான் தொடங்கியுள்ளது. படிப்படியாக அவர்களின் பிரச்னை சரியாகிவிடும்” என்றார்.

சிறு தொழில்கள் பல ஆயிரம் பேருக்கு வேலை தந்து பொருளாதாரத்தின் அடிப்படையாக உள்ளன. அவற்றை நாம் இழந்துவிடக் கூடாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism