Published:Updated:

உணவை ருசிக்க உலகத் தமிழருக்கு உதவும் கோவை வெட் கிரைண்டர்!

கோவை வெட் கிரைண்டர்
பிரீமியம் ஸ்டோரி
கோவை வெட் கிரைண்டர்

ஜி.ஐ பிசினஸ்

உணவை ருசிக்க உலகத் தமிழருக்கு உதவும் கோவை வெட் கிரைண்டர்!

ஜி.ஐ பிசினஸ்

Published:Updated:
கோவை வெட் கிரைண்டர்
பிரீமியம் ஸ்டோரி
கோவை வெட் கிரைண்டர்

இட்லி, தோசை நம் பிரியமான உணவு. இந்த உணவைத் தயாரிக்கத் தேவையான முக்கியமான வேலையைச் செய்வது வெட் கிரைண்டர். இதை உற்பத்தி செய்வதில் உலகுக்கே முன்னோடியாக இருப்பது கோவை. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1,10,000 கிரைண்டர்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. இவற்றில் 80,000 கிரைண்டர்கள் அதாவது, மொத்த உற்பத்தியில் 80 சதவிகிதம் கோவையில்தான் தயாரிக்கப்படுகின்றன.

உணவை ருசிக்க உலகத் தமிழருக்கு உதவும் கோவை வெட் கிரைண்டர்!

கோவை முழுவதும் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெட் கிரைண்டர்களைத் தயாரித்து வருகின்றன. வெட் கிரைண்டர் உற்பத்தி மூலம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.300 கோடி பிசினஸும், நேரடியாகவும் மறைமுக மாகவும் ஒரு லட்சம் பேருக்குத் தொழிலும் கிடைக்கிறது. இதனால், 2007-ம் ஆண்டு கோவை வெட் கிரைண்டர்களுக்கு புவிசார் குறியீடு (Geographical Indication) தரப்பட்டது. கிரைண்டர் உற்பத்தி செய்யும் தொழில் கோவைக்கு வந்தது எப்படி எனப் பார்ப்போம்.

கோவையில் 1955-ம் ஆண்டு சபாபதி என்பவர்தான் முதல் கிரைண்டரைக் கண்டு பிடித்தார். மார்க்கெட்டில் கிடைக்கும் பொருள்களை வைத்து, முதல் கிரைண்டரை அவர் தயாரித்தார். படிப்படியாக அதில் சில தொழில்நுட்பங்கள் எட்டிப் பார்த்தன. டில்டிங் கிரைண்டர் (மாவை சாய்த்து எடுப்பது), டேபிள் டாப் கிரைண்டர் (சிறிய அளவு) என்று பல வகையான கிரைண்டர்கள் பிற்பாடு வந்தன. 1 கிலோ முதல் 40 கிலோ வரையிலான கிரைண்டர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறைந்தபட்சம் ரூ.1,400 முதல் அதிகபட்சம் ரூ.8,500 வரை கிரைண்டர்கள் கிடைக்கின்றன.

கிரைண்டர் உற்பத்தித் தொழிலில் நீண்ட அனுபவம் கொண்ட பாலசந்திரனுடன் நாம் பேசினோம். “நான் 41 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் இருக்கிறேன். ரெகுலரில் 2 முதல் 20 கிலோ வரையும், கமர்ஷியலில் 40 கிலோ வரையும் கிரைண்டர்களை உற்பத்தி செய்து வருகிறேன். இது தவிர, கோழி இறக்கை எடுக்கும் இயந்திரம், சப்பாத்தி மாவு அடிக்கும் இயந்திரம், உருளைக்கிழங்கு கட் செய்யும் கருவி, சிக்கன் கட்டிங் கருவி ஆகியவற்றையும் தயாரித்து வருகிறோம். காரணம், ஹோட்டல் பயன்பாட்டுக்கு கிரைண்டர் கேட்டு வருபவர் களுக்கு, அது தொடர்பான மற்ற இயந்திரங் களும் கிடைக்கும்போது தொழில் இன்னும் நன்றாக இருக்கும். ஹைதராபாத், செகந்தராபாத், டெல்லி, நாக்பூர், மேற்குவங்காளம், புவனேஸ்வர், கட்டாக் பகுதிகளுக்கு கிரைண்டர் உற்பத்தி செய்து அனுப்பி வருகிறேன். மாதம் சராசரியாக ரூ.30 லட்சம் டேர்ன்ஓவர் செய்து வருகிறேன்.

உணவை ருசிக்க உலகத் தமிழருக்கு உதவும் கோவை வெட் கிரைண்டர்!

கிரைண்டருக்குத் தேவையான கல்லை உருவாக்கும் வேலைப்பாடு கோவையில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும். முன்பு ஓர் உருண்டைக் கல்லை, உளி வைத்து கையில் செதுக்கினார்கள். அதன்பிறகு கல்லை லேத்தில் வைத்து செதுக்கினார்கள். இப்போது 80% இயந்திரமே கல்லை செதுக்கிவிடுகிறது.

சாதாரண கிரைண்டரில் மாவு அரைக்க 45 நிமிடம் ஆகும். மாவு சூடாகாது. டேபிள் டாப்பில் 25 நிமிடத்தில் மாவு அரைந்துவிடும். மாவு சூடாகும். இதனால், சுவையில் வித்தியாசம் இருக்கும். இதை உணர்ந்ததால் மக்கள், பழைய சாதாரண கிரைண்டர் களைக் கேட்கத் தொடங்கிவிட்டனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த கிரைண்டர் இப்போதும் ஓடிக்கொண்டிருக் கிறது. இன்றைக்கு, கோவை இல்லாமல் கிரைண்டர் தொழில் இல்லை” என்று பெருமை பொங்க பேசினார்.

ஜெயமணி
ஜெயமணி

கிரைண்டர் உற்பத்தியாளர் ஜெயமணியுடன் பேசினோம். “நாங்கள் டேபிள் டாப் வெட் கிரைண்டர் தயாரித்து வருகிறோம். எங்களுக்கான உதிரிபாகங்களை, ஜாப் ஆர்டர் மூலம் வெளியிலிருந்து வாங்கி வருகிறோம். மாதம் சராசரியாக 3,000 வெட் கிரைண்டர்களை உற்பத்தி செய்து வருகிறோம். கத்தார், சவுதி, ஆஸ்திரேலியா, குவைத், பஹ்ரைன், கனடா போன்ற நாடுகளுக்கு கிரைண்டர் ஏற்றுமதி செய்து வருகிறோம். தென் இந்தியா முழுவதும், குஜராத் போன்ற மாநிலங்களுக்கும் கிரைண்டர் உற்பத்தி செய்து தருகிறோம். ஆண்டுக்கு ரூ.3 கோடிக்கு டேர்ன்ஓவர் செய்து வருகிறோம். கிரைண்டர் உற்பத்தியில் நமக்கு பெரிய மார்க்கெட் இருப்ப தால், இதில் புதிய புதிய தொழில்நுட்பங்களை முயற்சி செய்து வருகிறோம்.

சில நேரங்களில் ஓவர் லோடு காரணமாக கிரைண்டர் சூடாகி பழுதாகும். அதேபோல, கரன்ட் கட்டாகி, மீண்டும் வரும்போது சுற்ற ஆரம்பிக்கும். அதைக் கவனிக்காமல் விடுவதால், சில நேரங்களில் கிரைண்டர் பழுதாகும். ஓவர் லோடு ஆனாலோ, கரன்ட் கட் ஆகிவந்தாலோ, கிரைண்டர் தானாக ஆஃப் செய்யும் தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்துள்ளோம்” என்றார்.

உணவை ருசிக்க உலகத் தமிழருக்கு உதவும் கோவை வெட் கிரைண்டர்!

கோவை வெட்கிரைண்டர்கள் உற்பத்தியாளர்கள் சங்க (கௌமா) தலைவரும், இரண்டு தலைமுறைகளாக இந்தத் தொழிலில் இருப்பவருமான செளந்திரகுமாருடன் பேசினோம். “நாங்கள் இந்தத் தொழிலுக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில் நானும் டேபிள் டாப் கிரைண்டர் உற்பத்தி செய்து வந்தேன். இப்போது ஆர்டினரி கிரைண்டர்களை உற்பத்தி செய்து வருகிறேன். வீட்டில் பயன்படுத்தும் கிரைண் டர்களில் டொமஸ்டிக் (2-3 கிலோ), கமர்ஷியல் (5-10 கிலோ) என இரு வகை உள்ளன.

இந்தத் தொழில் கோவையை மையப்படுத்தி இருப்பதற்கு கல் மற்றும் தண்ணீர்தான் முக்கிய மான காரணம். டேபிள் டாப் கிரைண்டர்களுக்கான கல் நாமக்கல் மாவட்டத்திலிருந்தும், ஆர்டினரி கிரைண்டர்களுக்கான கல் ஊத்துக்குளியில் இருந்தும் வருகின்றன. சிறுவாணி மற்றும் அத்திக்கடவு தண்ணீர், பிளேட் டிங்கில் போடும் கெமிக்கல் நல்ல உறுதியைத் தருகிறது.

பாலசந்திரன்,  செளந்திரகுமார், பிரேம் ஆனந்த்
பாலசந்திரன், செளந்திரகுமார், பிரேம் ஆனந்த்

ஐக்கிய நாடுகள் தொழில் வளர்ச்சி அமைப்பு (Unido - United Nations Industrial Devlopment Organization), ஒரு தொகுப்பு வளர்ச்சித் திட்டத்தைக்கொண்டு வந்தது. தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 19 கிளஸ்டர்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் கிரைண்டர் தொழிலும் ஒன்று. தமிழகத்தில் இருந்து முதன் முதலாகத் தேர்வு செய்யப்பட்டது கிரைண்டர் தொழில் தான். அதை நாங்கள் வெற்றிகர மாக முடித்தோம். அதன்பிறகு மத்திய, மாநில அரசுகளின் உதவி அதிகம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, ஒரு கிளஸ்டர் சர்வீஸ் சென்டர் தொடங்கப்பட்டது. 2007-ம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைத் தது. எங்களுக்கு 14.5 சதவிகிதமாக இருந்த வாட் வரியை 5 சதவிகித மாக மாற்றினார்கள். ஜி.எஸ்.டி வரியும் முதலில் 28 சதவிகிதமாக இருந்தது, பிற்பாடு 5 சதவிகிதமாகக் குறைத்தார்கள்.

இந்தியாவில் எங்கு கிரைண்டர் உற்பத்தி செய்தாலும், அவர்களுக்கு உதிரிபாகங்கள் இங்கு இருந்து தான் செல்லும். கடந்த ஒன்றரை ஆண்டில் மூலப்பொருள்களின் விலை 80% உயர்ந்துள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில் மட்டுமே 50% உயர்வைக் கண்டுள்ளது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி நடவடிக்கைகள் எங்கள் தொழிலுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

2010-ம் ஆண்டு மாதம் 1.50 லட்சம் கிரைண்டர்களைக் கோவையில் உற்பத்தி செய்து வந்தோம். இப்போது மாதம் சராசரியாக 80,000 கிரைண்டர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகிலேயே கல்லை வைத்து உணவு உற்பத்தி செய்யும் ஒரே இயந்திரம் கிரைண்டர்தான். அதனால், அரசாங்கம் எங்கள் துறைக்குத் தனிக் கவனம் கொடுத்து உதவி செய்ய வேண்டும்” என்றார்.

கிரைண்டர் உற்பத்தித் தொழிலில் சிறப்பாகச் செயல் பட்டுவரும் பிரேம் ஆனந்துடன் பேசினோம். “2,000-க்குப் பிறகு, லைட் வெயிட் டேபிள் டாப் கிரைண்டர்களுக்கு தேவை வந்தது. அதனால், நாங்களும் டேபிள் டாப் கிரைண்டர்கள் உற்பத்தி செய்யத் தொடங்கினோம். டேபிள் டாப்பிலேயே, டில்டிங் கிரைண்டர்களை அறிமுகப்படுத்தினோம். பெரிய நிறுவனங்களைப்போல, வீடுகளுக்கே சென்று சர்வீஸ் செய்து கொடுப்போம். தமிழக அரசு இலவசமாகக் கொடுத்த கிரைண்டர்களில், நாங்களும் டெண்டர் எடுத்து 20 லட்சம் கிரைண்டர்களை உற்பத்தி செய்துகொடுத்தோம். மக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில், அழகான மூன்று லிட்டர் கிரைண்டரை சிறிய அளவில் தயாரித்தோம். அதன்பிறகு, 5 முதல் 20 கிலோ வரையிலான கிரைண்டர்களைக் குறைந்த எடையில் உருவாக்கினோம். மாதம் சராசரியாக 5,000 கிரைண்டர்களை உற்பத்தி செய்துவருகிறோம்.

நம் உணவில் இட்லி, தோசைக்கு நிரந்தர இடம் உண்டு. எனவே, கிரைண்டர் உற்பத்தி செய்யும் தொழிலுக்கு அழிவே கிடையாது. எல்லாப் பொருள்களையும் உற்பத்தி செய்யும் சீனாகூட இன்னும் நுழைய முடியாத தொழிலாக இது இருக்கிறது’’ என்றார் அவர்.

தமிழகத்துக்கும் கோவைக்கும் பெருமை சேர்க்கும் இந்த கிரைண்டர் தொழில், இந்தியாவைத் தாண்டி, உலகம் முழுக்க இருக்கும் மக்களைச் சென்றடைய வேண்டும்!

இலவச கிரைண்டரால் தொழில் பாதிப்பு!

“2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றதும், தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல, இலவச கிரைண்டர் கொடுக்கப்பட்டது. 1.85 கோடி கிரைண்டர்களை உருவாக்கும் மெகா ஆர்டர் கோவையைத் தேடி வந்தது. ஆண்டுக்கு 25 லட்சம் கிரைண்டர்களை உற்பத்தி செய்தால்தான், ஆட்சி முடிவதற்குள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிரைண்டர் கொடுக்க முடியும் என்கிற கட்டாயம். அந்த மெகா டாஸ்கை முடித்துக் கொடுத்தது கோவைதான். 80% கிரைண்டர் பிசினஸ் கோவையை நம்பித்தான் உள்ளது. இலவச கிரைண்டர் மக்களுக்கு கிடைத்து விட்டதால், அதன் தாக்கம் ஐந்து ஆண்டுகள் இருந்தது. 2016 வரை அதனால் பிசினஸ் டல் ஆனது. அப்போதே பலர் இந்தத் தொழிலை விட்டுப் போய்விட்டனர். அதைத் தொடர்ந்து, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவற்றால் தொழில் மேலும் பாதிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்திலும் குறிப்பிட்ட சிலர், இந்தத் தொழிலைவிட்டு வெளியேறினர். தற்போது மூலப் பொருள்கள் விலை உயர்வு, கல் கிடைப்பதில் சிரமம் போன்றவற்றால் மீண்டும் அசாதாரண சூழ்நிலை உருவாகியிருக்கிறது” என கிரைண்டர் உற்பத்தியாளர்கள் வேதனைப்படுகின்றனர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism