Published:Updated:

நிவாரண உதவி... இந்தியாவில் சுணக்கம் ஏன்..?

நிவாரண உதவி
பிரீமியம் ஸ்டோரி
நிவாரண உதவி

உலக நாடுகளுடன் ஓர் ஒப்பீடு..!

நிவாரண உதவி... இந்தியாவில் சுணக்கம் ஏன்..?

உலக நாடுகளுடன் ஓர் ஒப்பீடு..!

Published:Updated:
நிவாரண உதவி
பிரீமியம் ஸ்டோரி
நிவாரண உதவி
து கொரோனா காலம். இந்த மகா பேரிடரால் உலகப் பொருளாதாரமே செயலற்றுக் கிடக்கிறது. தொழில் நிறுவனங்களின் செயல்பாடு முழுமையாக முடங்கியதால், பல கோடிப் பேர் வேலை இழந்திருக்கிறார்கள்.

பொருளாதாரத்தையும் தொழில் நிறுவனங்களையும் காத்து, தொழிலாளர்கள் வாழ்வியல்ரீதியான பாதிப்புகளிலிருந்து தப்பிக்க பல லட்சம் கோடி டாலர் மதிப்பிலான நிவாரணத் திட்டங்களை வெளிநாடுகள் அறிவித்துக்கொண்டிருக்க, நம்முடைய ரூ.1.70 லட்சம் கோடி நிவாரண அறிவிப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே தோன்றுகின்றன. இந்தப் பேரிடரில் வாடும் மக்களின் துயரம் களைய, பெரிய அளவிலான நிவாரணத் திட்டங்களை மத்திய அரசு தீட்டிவருவதாகத் தகவல்கள் வெளிவருகின்றன. ஏற்கெனவே பட்ஜெட் பற்றாக்குறை பெருமளவிலிருக்கும் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், கூடுதல் நிதி நிவாரணங்கள் வழங்குவதில் மத்திய அரசுக்கு இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

நிவாரண உதவி... இந்தியாவில் சுணக்கம் ஏன்..?

நூற்றாண்டு காணாத பொருளாதார பாதிப்பு!

`கொரோனா தாக்கத்தால் உலகப் பொருளாதாரம் 2020-ம் ஆண்டில் -3% வரை வீழ்ச்சியடையும்’ என்று சர்வதேச நிதியம் (IMF) எச்சரித்திருக்கிறது. `முன்னேறிய நாடுகள் -6.1% வரை வீழ்ச்சியடைய வாய்ப்பிருக்கிறது’ என்றும், குறிப்பாக `அமெரிக்கா -5.9% வரை வீழ்ச்சியடையக்கூடும்’ என்றும் தெரிவித்திருக்கிறது. இந்தியா உள்ளிட்ட வளரும் ஆசிய நாடுகளில் வளர்ச்சி விகிதம் வெகுவாகக் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச முதலீட்டு வங்கியான பார்க்லேஸ் (Barclays), `நடப்பாண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி (0%) என்பதே இருக்காது’ என்று தன் சமீபத்திய அறிக்கையில் எச்சரித்துள்ளது. கொரோனா முடக்கத்தால் இந்தியப் பொருளாதாரத்தின் இழப்பு 234.4 பில்லியன் அமெரிக்க டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.17.81 லட்சம் கோடி) இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் வருடாந்தர மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 8.1% ஆகும்.

நிவாரண உதவி... இந்தியாவில் சுணக்கம் ஏன்..?

வேலை இழந்த 270 கோடி தொழிலாளர்கள்!

`கொரோனா முடக்கத்தால், உலகெங்குமுள்ள 270 கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள்’ என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது உலகின் மொத்தத் தொழிலாளர் எண்ணிக்கையில் 81%. `மொத்தமாக 125 கோடி தொழிலாளர்கள் வரை வேலை இழக்கக்கூடும்’ என்றும் எச்சரிக்கப் பட்டிருக்கிறது. கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 2.2 கோடி பேர் வேலை இழந்திருப்பதாக அமெரிக்கா சொல்கிறது.

`இந்தியாவில் மிகக் கடுமையாக ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால், ஏராளமான ஊரகப்பகுதி தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்’ என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. `மிகப் பெரும்பான்மையான மக்கள், அமைப்புசாராத் துறையில் பணியாற்றிவரும் இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்படுவார்கள்’ என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்திருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முந்திக்கொண்ட வளர்ந்த நாடுகள்!

கொரோனா பாதிப்பு என்பது மருத்துவ அவசரநிலை மட்டுமல்ல; அது ஒரு வாழ்வாதார நெருக்கடியும்கூட என்பதை அதிவிரைவில் புரிந்துகொண்ட மேற்கத்திய நாடுகள் பல்வேறு விதமான நிவாரணங்களையும் சலுகைகளையும் உடனடியாக அறிவித்தன.
நிவாரண உதவி
நிவாரண உதவி

அமெரிக்க நாடாளுமன்றம், இரண்டு ட்ரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.150 லட்சம் கோடி) மதிப்பிலான நிவாரணத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. வருடாந்தர வருவாய் 75,000 டாலர் (சுமார் ரூ.57 லட்சம்) வரை உள்ள ஒவ்வோர் (வயது வந்தோர்) அமெரிக்கருக்கும் உடனடி நிவாரணமாக 1,200 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.91,000) வழங்கப்படுகிறது. 17 வயது வரையுள்ள சிறு வயதினருக்கு தலா 500 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.38,000) வழங்கப்படுகிறது. மேலும், 99,000 அமெரிக்க டாலர் வரையுள்ள உயர் வருவாய் பிரிவினருக்கும் சற்று குறைந்த அளவில் நிவாரண உதவி வழங்கப்பட்டிருக்கிறது. `இந்த நேரடி நிவாரணத் தொகை அமெரிக்காவின் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்களைச் சென்றடையும்’ என்று சொல்லப்படுகிறது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) 75 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறார். `கொரோனா பாதிப்பால் வேலை இழந்த ஒவ்வொருவருக்கும் அடுத்த நான்கு மாதங்களுக்கு 2,000 டாலர் உதவித்தொகை வழங்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார். கொரோனாவின் தாக்கத்தால் வருவாய் குறைந்திருக்கும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் 75% பங்கை அரசே வழங்கிவிடும் திட்டமும் உள்ளது. இதேபோல பிரிட்டன், ஸ்பெயின், ஜப்பான், சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளும் பெருமளவுக்கு நிவாரண அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

நிவாரண உதவி
நிவாரண உதவி

கொரோனா நிவாரணம் – இந்தியா Vs மற்ற நாடுகள்!

கொரோனா முடக்கத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் நம் நிதியமைச்சர் ரூ.1.70 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரணத் திட்டங்களை அறிவித்தார். `இதில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே புதிய மற்றும் நேரடி நிவாரணங்கள்’ என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. `பிற நாடுகளுடன் ஒப்பிட்டு நோக்கும்போது இந்தத் தொகை மிகக் குறைவு’ என்ற விமர்சனம் எழுந்ததைத் தொடர்ந்து, அடுத்த பெரிய அளவிலான உதவித் திட்டம் குறித்து மத்திய அரசு ஆலோசித்துவருகிறது.

இந்தியாவின் வருடாந்தர உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) சுமார் 2.8 ட்ரில்லியன் அமெரிக்க டாலர். இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கும் நிவாரணத் தொகை (சுமார் 22.4 பில்லியன் டாலர்) மட்டுமே. இது இந்தியாவின் ஜி.டி.பி-யில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவு. அமெரிக்காவின் நிவாரணத் தொகையோ அவர்களது ஜி.டி.பி-யில் 9%-க்கும் மேலானது. மற்ற வளர்ந்த நாடுகளும் தங்களுடைய ஜி.டி.பி-யில் பெரும்பகுதியை நிவாரண உதவியாக அறிவித்துள்ளன.

டாலர் - அமெரிக்காவின் பலம்!

அமெரிக்காவின் பலம் அதன் கரன்ஸியான டாலரில் அடங்கியிருக்கிறது. அந்த நாட்டின் மத்திய வங்கியால் எவ்வளவு கரன்ஸியை வேண்டுமானாலும் அச்சடித்துக்கொள்ள முடியும். இந்தியா போன்ற மற்ற நாடுகளுக்கு அது சாத்தியமில்லை. இந்தியா உட்பட பல உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் அந்நியச் செலாவணிக் கையிருப்பின் பெரும்பாலான பகுதியை டாலர் பத்திரங்கள் குறிப்பாக, அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டிருக்கும் கடன் பத்திரங்களிலேயே முதலீடு செய்துள்ளன. அதனால், பெருமளவில் நிதி திரட்டுவது என்பது அமெரிக்க அரசுக்குக் கடினமான காரியமல்ல.

நிவாரண உதவி... இந்தியாவில் சுணக்கம் ஏன்..?

ரேட்டிங் சிக்கல்!

அமெரிக்கா மற்றும் இதர வளர்ந்த நாடுகள் `AAA/AA’ போன்ற மிக உயர்ந்த கடன்/கரன்ஸி ரேட்டிங்கைப் பெற்றுள்ளன. ஜப்பான், மலேசியா, ஸ்பெயின் போன்ற நாடுகள்கூட `A’ எனும் உயர்தர ரேட்டிங்கைக் கொண்டிருக் கின்றன. ஆனால், இந்தியா மிகக் குறைந்தபட்ச முதலீட்டு வரம்பாகக் கருதப்படும் `BBB’ ரேட்டிங்கில்தான் இருக்கிறது. குறிப்பாக, சர்வதேச தர நிர்ணய நிறுவனமான மூடீஸ், கடந்த 2019, நவம்பர்-ல் இந்தியாவின் ரேட்டிங் மீதான கண்ணோட்டத்தை `நெகட்டிவ்’ எனக் குறைக்கக் காரணம், நமது மந்தமான பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிகப்படியான கடன் சுமைதான். மற்ற முக்கியத் தர நிர்ணய நிறுவனங்க ளான எஸ் & பி மற்றும் ஃபிட்ச் ஆகியவைகூட இந்தியாவுக்கு மிகக் குறைந்தபட்ச முதலீட்டு அளவாகக் கருதப்படும் `BBB’ என்ற ரேட்டிங்கையே வழங்கியுள்ளன.

கொரோனாவுக்கு முன்னர் உலகப் பொருளாதாரச் சூழல் சிறப்பாக இருந்த காலத்திலேயே நம் வளர்ச்சி மந்தநிலையில் இருந்திருக்கும்பட்சத்தில், தற்போதைய இக்கட்டான சூழலில் இந்தியாவின் வளர்ச்சி மேலும் பாதிக்கப்படவே வாய்ப்புகள் அதிகம். இந்த நிலையில், பொருளாதார வளர்ச்சியில் மந்தம் ஏற்பட்டால் நேரடி மற்றும் வரி வருவாய் பாதிக்கப்படக்கூடும். தவிர, கொரோனா தடுப்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஆகக்கூடிய செலவினங்கள் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை அதிகப்படுத்திவிடுமோ என்ற அச்சமும் இருக்கவே செய்கிறது.

பெருமளவிலான நிதிப் பற்றாக்குறையால் ஒருவேளை நமது ரேட்டிங் ஒருபடி இறங்கி, ‘முதலீட்டுக்குத் தகுதியில்லாத நிலைக்கு’ போய்விட்டால், ஒட்டுமொத்த பொருளாதாரமே பாதிக்கப்படும் அபாயநிலை ஏற்பட்டுவிடும். பொருளாதார வளர்ச்சிக்கு அந்நிய முதலீட்டை எதிர்நோக்கியிருக்கும் நம் நாட்டுக்குப் புதிய முதலீடுகள் கிடைக்காமல் போவதுடன், ஏற்கெனவே உள்ள முதலீடுகளும் வெளியேற வேண்டிய நிலை ஏற்படலாம். அதிகப்படியான அந்நிய முதலீடுகளின் வெளியேற்றம் ரூபாய் மதிப்பை வெகுவாக பாதிக்கும்; அந்நிய இறக்குமதிச் செலவினங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் சுமையையும் பெருமளவு பாதித்துவிடும். எனவேதான், `மத்திய அரசு நிதி நிவாரண விவகாரத்தில் அதிக கவனத்துடன் செயல்படுகிறது’ என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆனால், சாமானிய மக்களைப் பொறுத்தவரை `வயிறா அல்லது உயிரா..?’ என்ற கேள்வி மிக முக்கியமானது. சாவு என்றோ வருவது; பசி அடுத்த வேளைக்கே வருவது. சமூகத்தில் ஒரு பகுதியினர் பசியால் துடித்துக் கொண்டிருக்கும் போது, கொரோனாவின் உண்மையான தாக்கம் அவர்களுக்குப் புரியாமல் போக வாய்ப்புண்டு. எனவே, இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க அரசு செய்யும் முயற்சிகள் நீர்த்துப்போகவும் வாய்ப்புண்டு.

`போதனைக்கு முன்னர் பசியாற்ற வேண்டும்’ என்பது புத்தரின் அறிவுரை. இதன் அடிப்படையில் மிகச் சாமான்ய மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் இந்த நேரத்தில் மிக அவசியம். கடும் சவால்கள் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் மத்திய அரசு சிறப்பாகச் செயல்பட்டு, நாட்டின் பொருளாதாரநிலையை உயர்த்தும் என்று நம்புவோம்!

குறிப்பு: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளே.

பணப்புழக்கத்தை அதிகரிக்கும் ஆர்.பி.ஐ அறிவிப்பு!

டந்த வெள்ளி அன்று (17.4.2020) ரிசர்வ் வங்கி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அவை... 1. வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதற்காக வணிக வங்கிகளுக்கு ரூ.50,000 கோடி நிதி வசதி (Targeted Long Term Repo Operations) ஏற்பாடு செய்யப்படும். இந்தத் தொகையில் 50% சிறு, குறு நிதி நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்க வேண்டும். 2. நபார்டு, சிட்பி, தேசிய வீட்டு வசதி வங்கி ஆகியவற்றுக்குக் குறைந்த வட்டியில் (4.4%) ரூ.50,000 கோடி அளவுக்கு மறுகடன் (Refinance) வசதி வழங்கப்படும். 3. மத்திய வங்கியின் கொள்கை வட்டி விகிதமான ரிவர்ஸ் ரெப்போ ரேட் 0.25% குறைக்கப்பட்டுள்ளது. 4. கொரோனா பேரிடரைத் தடுக்கப் போராடிவரும் மாநில அரசாங்கங்களுக்கு ரிசர்வ் வங்கியிடம் உள்ள உடனடிச் செலவு கடன் வசதி (Ways and Means Advance) 60% உயர்த்தப்பட்டுள்ளது. 5. வாராக்கடன் வரையறை கடன் விடுமுறை கால அளவுக்கு (1.3.2020 – 31.5.2020) நீட்டிக்கப்பட்டுள்ளது. 6. வங்கிகளுக்கான லிக்விடிட்டி கவரேஜ் ரேஷியோ 100 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 7. வங்கிசாரா நிதி நிறுவனங்களிடம் கடன் உதவியுடன் செயல்படுத்தப்படும் வணிகரீதியிலான ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு ஒரு வருடம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புகளால் பணப்புழக்கம் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.