Published:Updated:

ஊரடங்கால் தவிக்கும் தொழில் துறை... காத்திருக்கும் சவால்கள்! மீள்வதற்கான வழிகள்...

I N D U S T R Y

பிரீமியம் ஸ்டோரி

தொழில் துறையினருக்கு ஊரடங்கு என்பது, தேன் கூட்டைக் களைத்துவிட்டு மீண்டும் தேனீக்கள் கூடு கட்டுவதுபோலத்தான். கடந்த ஆண்டில் கொரோனா பெருந் தொற்றால் ஒட்டுமொத்தத் தொழில் துறையும் ஸ்தம்பித்த நிலையில், செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு, பெரும்பாலான நிறுவனங்கள் மீண்டும் படிப்படியாக உற்பத்தியைத் தொடங்கின. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் மீண்டும் ஊரடங்கு காலத்தில் இருக்கிறோம். கடந்த ஆண்டைவிடவும், தற்போது தான் பெரும் இழப்பு என்கிறார்கள் தொழில் துறையினர். சிறு, குறு, நடுத்தர, பெரு நிறுவனங்கள் என ஒட்டுமொத்த தொழில்துறையில் 95% நிறுவனங்கள் தற்போது இயங்காமல் உள்ளன. தொழில் துறையின் தற்போதைய நிலை, காத்திருக்கும் சவால்கள், மீண்டுவருவதற்கான வழிமுறைகள் குறித்து வழிகாட்டுகிறார் நிறுவன மேம்பாட்டு ஆலோசகர் கேசவன் பாண்டியன்.

கேசவன் பாண்டியன்
கேசவன் பாண்டியன்

தொழில் துறையின் நிலை என்ன?

“தமிழகத்தில் உத்தேசமாக எல்லா வகையிலும் ஐந்து லட்சம் நிறுவனங் கள் (சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்) உள்ளன. அவற்றில் 60% உற்பத்தி நிறுவனங்களும், 40% சேவை நிறுவனங்களும் அடக்கம். திருப்பூர் பின்னலாடைத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்கள், உற்பத்திப் பணிகளை நிறுத்தி வைத்தால் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கும்போது தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ள பெரு நிறுவனங்கள் போன்ற மொத்த தொழில் நிறுவனங் களில் வெறும் 5% உற்பத்தி நிறுவனங் கள் மட்டுமே தற்போது செயல்படு வதாகத் தகவல்.

சேவைத் துறையில், உணவு, ஹோட்டல், ஐ.டி நிறுவனங்கள், கூரியர், மெடிக்கல் ஷாப், லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட சில வகையினர் மட்டுமே லாக்டெளன் சமயத்திலும் தங்கள் தொழிலைக் கவனிக்கின்றனர். ‘இவர்களுக்குப் பொருளாதார ரீதியாக பெரிதாகச் சிக்கல்கள் இல்லை’ என்பதுபோல பேச்சுக்கள் உலவுகின்றன. பார்சல் சர்வீஸ் மட்டுமே நடந்தாலும், முன்புபோல உணவகங்களுக்கு வாடிக்கையாளர்கள் வருவதில்லை. வெளியூர், வெளிமாநிலத்தினர், வெளிநாட்டினரின் வருகையை நம்பியே இயங்கிய ஹோட்டல்களில் (விடுதி) ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கவே தற்போது தடுமாறு கின்றனர். மக்கள் கூரியர் சேவையைப் பயன்படுத்துவதும் குறைந்துள்ளது. உற்பத்தி தடைப்பட்டுள்ளதால், சரக்குப் போக்குவரத்துக்கான லாஜிஸ்டிக்ஸ் பணிகளும் குறைந்துள்ளன.

கொரோனாவைச் சுற்றியே மருத்துவத் துறைப் பெரிதும் இயங்கு வதால், இதர உடல்நலத் தேவைகளுக் காக, வழக்கமான பரிசோதனை களுக்காக மருத்துவ மனைக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் இப்போது கணிசமாகக் குறைந் துள்ளது. இதனால், மாஸ்க், சானிடைசர், கோவிட் சார்ந்த மருந்து, மாத்திரைகள் பெறுவது மட்டுமே அதிகரித்து, இதர மருந்துப் பொருள்கள் வாங்குவது குறைந் துள்ளது. இதனால், மெடிக்கல் ஷாப்புகள் தினமும் இயங்கினாலும், வழக்கமான தொழில் வளர்ச்சியும் வருமானமும் இன்றி, அவர்களின் தொழிலும் சரிவைச் சந்தித்துள்ளது.

பல தளங்கள் கொண்ட பெரிய ஐ.டி நிறுவனங்களில், தகவல் சேகரிப்பு மற்றும் தகவல் சரிபார்ப்பு போன்ற மிகவும் பாதுகாப்புக்கு உட்பட்ட பணிகள், குறிப்பிட்ட சில அறைகளில் (server room) சிலரால் மட்டுமே செய்யப்படும். கடந்த ஆண்டு முதலே ஐ.டி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற வலியுறுத்துவதால், முக்கியத்துவம் வாய்ந்த தகவல் சேகரிப்புப் பணிகளை மேற்கொள் வதில் தடங்கல் ஏற்பட்டு, அந்தப் பணிகள் மற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் வசம் சென்றன. இதனாலும், கோவிட் பிரச்னை சார்ந்த பொருளாதாரச் சரிவுகளாலும், ஐ.டி துறையிலும் ஆட்குறைப்பு நடவடிக்கை கள் அதிகம் நடந்தன. இந்தியாவிலுள்ள ஐ.டி துறையினரின் 2019-ம் ஆண்டின் ஆண்டு வருமானம் 15 லட்சம் கோடி. ஆனால், கடந்த ஆண்டில் இந்தத் துறையினரின் சராசரி வளர்ச்சி கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த ஆண்டில் இன்னும்கூட வருவாய் குறையலாம் என்ற தகவல்கள் கிடைக் கின்றன.

எனவே, பெரும்பாலான தொழில் துறையினரின் வருவாய் கணிசமாகக் குறைந்து அல்லது வருவாய் தடைப்பட்டு, ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தவிர, இதுபோன்ற தொழில் நிறுவனங்களால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வருவாயும் தடைபட்டுள்ளது.

ஊரடங்கால் தவிக்கும் தொழில் துறை... காத்திருக்கும் சவால்கள்! மீள்வதற்கான வழிகள்...

காத்திருக்கும் சவால்கள்...

தற்போதைய ஊரடங்கால், ஒட்டு மொத்தத் தொழில் துறையினருக்கும் பெரிய சவால் ஏற்பட்டிருப்பதுதான் கள நிலவரம். அதில், பல ஆண்டுகளாகத் தொழில் செய்து, பெரிதாக லாபம் ஈட்டிய பெரு நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர்களால் மட்டுமே தற்போதைய நிலைமையைச் சமாளிக்க முடியும். ஆனால், ஒவ்வொரு மாத உற்பத்தி, வியாபார ஏற்ற இறக்கத்தை நம்பியே ஊழியர்களுக்கு வருமானம் கொடுத்து, தொழிலை நடத்தும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுத்தான் தற்போதும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மின் பயன்பாடுகள் அதிகமுள்ள தொழில்கள், டயர், பெயின்ட், கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு உற்பத்தித் தொழில்களின் இயக்கத்தை நிறுத்தி வைத்துவிட்டு மீண்டும் உற்பத்தியைத் தொடங்கும்போது பல்வேறு இடர்ப்பாடுகள் ஏற்படக்கூடும். அப்போது கூடுதல் செலவினங்கள் ஏற்படலாம்.

ஊரடங்கால் வெளியூர், வெளி மாநில தொழிலாளர்கள் பலரும் சொந்த ஊருக்குச் சென்று விட்டனர். ஊரடங்கு தளர்வு களுக்குப் பிறகு, ஊழியர்கள் அனைவரையும் மீண்டும் வரவழைத்து, அவர்களை முந்தைய பணித்திறனுடன் வேலை செய்ய வைத்து, தொழிலை இயல்புநிலைக்குக் கொண்டு வருவதற்குள் காலதாமதம், கடும் சவால்கள், பொருளாதாரச் சரிவுகள் ஏற்படக்கூடும்.

ஏ.சி.எம்.ஏ (ACMA -Automotive Component Manufacturers Association), எஃப்.ஹெச்.ஆர்.ஏ.ஐ (FHRAI - Federation for Hotel and Restaurant Association of India) உள்ளிட்ட ஒவ்வொரு தொழில் துறையினருக்கும் தனித்தனி குழுமங்கள் இருக்கின்றன. தங்கள் துறை சார்ந்த சிக்கல்கள், கொரோனாவால் ஏற்பட்டுள்ள இடர்ப்பாடுகள் குறித்து தொழில் துறையினர் தங்கள் குழுமத்திடம் தெரிவிக்கலாம். அவர்கள், அதை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கும், பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதிலும் தொழில் துறையினரின் பங்களிப்பு முக்கியமானது. கொரோனா பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக, மருத்துவ வல்லுநர்களை அடிக்கடி அழைத்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை செய்வதுபோல, தொழில்துறை யினரையும் அவ்வப்போது அழைத்து ஆலோசனை செய்ய வேண்டும். சரிவில் இருந்து மீள தொழில் துறையினருக்கான புதிய சலுகைகள், அறிவிப்புகளை வழங்க வேண்டும். அதைவிட முக்கியம், மீண்டும் இதுபோன்ற பொது முடக்கம் வரும்பட்சத்தில் அப்போது தொழில்துறை உற்பத்தி பாதிக்காத வகையில் இப்போதே முன்னேற்பாடுகளை வகுக்க வேண்டும்.

மீண்டுவரலாம்...

இயற்கைச் சீற்றங்களால் சில நேரங்களில் சில இடங்களிலுள்ள தொழில் துறையினருக்கு மட்டுமே எப்போதாவது உற்பத்திப் பாதிப்பு, பொருளா தாரச் சரிவு போன்ற சிக்கல்கள் ஏற்படும். பின்னர், குறிப்பிட்ட நாள்களில், பழையபடி உற்பத்தி இயல்பு நிலைக்குத் திரும்பும். ஆனால், கொரோனா உலக அளவில் ஏற்பட்ட, இதுவரை உலகம் சந்திக்காத பெரும் பேரிடர். பல்வேறு நடவடிக்கை களால், சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளும், வங்காள தேசம், வியட்நாம் போன்ற வளரும் நாடுகளும் கொரோனா தாக்கத்தில் இருந்து இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டன. அங்கெல்லாம் கொரோனா பாதிப்பு தற்போது முழுமையாகக் கட்டுக்குள் வந்துவிடவில்லை. ஆனாலும், தொழில்துறை எப்போதும்போல இயங்குகின்றன. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடத்தை மட்டும் micro containment zone பகுதியாகப் பிரித்து, அங்கு மட்டும் சில கட்டுப்பாடுகளை விதித்து, தொற்றின் தீவிரத்தைக் குறைக்கின்றனர். மற்றபடி, அங்குள்ள நிறுவனங்களில் ஊழியர்களைத் தினமும் பரிசோதனை செய்கின்றனர். அதில், வெப்பநிலை அதிகம் உள்ளோர், கொரோனா அறிகுறிகள் உள்ளோரை மட்டும் தனிமைப்படுத்தி வீட்டுக்கு அனுப்பு கின்றனர். இதுபோல, தொழில்துறை பாதிக்காதவாறு எந்தெந்த நாடுகள் சிறப்பாகப் பணியாற்றியுள்ளன என்பதை மத்திய, மாநில அரசுகள் ஆராய வேண்டும். அதில், நமக்குப் பயன்தரக் கூடிய அம்சங்களைப் பின்பற்றலாம்.

அரசின் நிர்வாக முடிவுகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டே, நாம் தொழில் செய்தாக வேண்டும். அந்த வகையில், ஊரடங்குக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை அறிந்து, அவர்கள் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்புவதற்கான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகச் செய்ய வேண்டும். ஊரடங்கு முடிந்து உற்பத்தியைத் தொடங்கும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படக்கூடும். எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து, தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டி, புதிய ஆர்டர் களைப் பிடித்து, முன்பைவிட கூடுதல் கவனத்துடனும் வேகத்துடனும் தொழிலை நடத்த வேண்டும். முடிந்த வரையில் தேவையற்ற செலவினங்களைக் குறைத்துக் கொள்ளலாம். கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்து, தீர்வுக்கான பாதை எட்டப்படும் வரை, அவசியத்துக்கு மீறிய தொழில் விரிவாக்கம், புதிய சோதனை முயற்சிகளைத் தவிர்க்கலாம். கடந்தமுறை ஊரடங்கு முடிந்ததும், விற்பனை பல மடங்கு உயர்ந்ததுபோல, இந்த முறையும் நடக்க வாய்ப்புண்டு. அந்த வாய்ப்பை யாரும் தவறவிட்டுவிடக் கூடாது’’ என்கிற எச்சரிக்கையுடன் பேசி முடித்தார் கேசவன் பாண்டியன்.

தொழில் துறையினர் நம்பிக்கையோடு, உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய நேரம் இது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு