Published:Updated:

தனிநபர்களுக்கு பக்கா அலுவலகம்... சென்னை ஸ்டார்ட்அப்பின் சூப்பர் ஐடியா!

ஷ்யாம் சுந்தர் நாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
ஷ்யாம் சுந்தர் நாகராஜன்

ஸ்டார்ட்அப்

தனிநபர்களுக்கு பக்கா அலுவலகம்... சென்னை ஸ்டார்ட்அப்பின் சூப்பர் ஐடியா!

ஸ்டார்ட்அப்

Published:Updated:
ஷ்யாம் சுந்தர் நாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
ஷ்யாம் சுந்தர் நாகராஜன்

ஒரு பிசினஸ் தொடங்குவதற்கு முதல் அடிப்படைத் தேவை என்பது அலுவலகம். அதைத் தொடங்குவதற்கு ஓர் இடத்தை சொந்தமாக வாங்க வேண்டும் அல்லது நீண்ட கால குத்தகைக்கு எடுக்க வேண்டும் அல்லது ஒப்பந்தம் செய்து மாத வாடகையில் செயல்பட வேண்டும். இந்த மூன்று மாதிரியும் அல்லாமல் மிதக்கும் அலுவலகம் ஒன்றைத் தொடங்கினால் எப்படியிருக்கும் என்ற சிறிய பொறிதான் ‘கோவொர்கிங் ஸ்பேஸ்’ என்ற கருத்தாக்கத்தில் செயல்படும் வெற்றிகரமான பிசினஸாக மாறியிருக்கிறது.

கோவொர்க்கிங் ஸ்பேஸ்...

ஓர் அலுவலக இடத்தில் பல நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் அல்லது பல துறையைச் சேர்ந்தவர்கள் பணியாற்றுவதுதான் ‘கோவொர்க்கிங் ஸ்பேஸ்’ என்று அழைக்கப்படு கிறது. சென்னையைச் சேர்ந்த ஷ்யாம் சுந்தர் நாகராஜன் மற்றும் அவரின் நீண்ட கால நண்பர் ஶ்ரீவத்சன் ஆகியோர் இணைந்து கோஃப்ளோட்டர்ஸ் (GoFloaters) என்கிற ‘கோவொர்க்கிங் ஸ்பேஸ்’ நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். நாம் ஷ்யாம் சுந்தரை சந்தித்துப் பேசினோம்.

தனிநபர்களுக்கு பக்கா அலுவலகம்... சென்னை ஸ்டார்ட்அப்பின் சூப்பர் ஐடியா!

இன்ஷூரன்ஸ் வாங்கித் தர நினைத்தேன்...

“18 ஆண்டுகள் ஐ.டி துறையில் பணியாற்றிய பிறகு, ஒரு ஸ்டார்ட்அப் பிசினஸ் தொடங்கலாம் எனத் தோன்றியது. 2017-ம் ஆண்டு நான் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து வெளியேறி தொழில் தொடங்க வாய்ப்பு வந்தது. வர்தா புயல், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களின் காரணத்தால் மூடப்பட்ட சிறு, குறு நிறுவனங் களுக்கு எளிதாகக் காப்பீடு பெற்றுக் கொடுப் பதை ஸ்டார்ட்அப்பாகத் தொடங்கலாம் என்று நினைத்தேன். அதற்காக எட்டு மாதங்கள் முன்தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டேன். அப்போது முதலில் கஃபே, ரெஸ்டாரன்டுகள் நடத்தி நலிவடந்தவர்களுக்கு முதலில் காப்பீடு பெற்றுக் கொடுக்க நினைத்தேன். அவர்களுடன் பேசும்போது நிறைய கஃபேக்களில் வார நாள்களில் ஆள்கள் வரவு குறைவாக இருப்பதும் அவர்களுக்குத் தொழில் மந்தமாக இருப்பதும் தெரிய வந்தது. மற்றொரு புறம், எனக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள் பலர் சென்னையில் ஒரு பிசினஸ் மீட்டிங் நடத்த வேண்டும். அண்ணா நகரில் ஓர் இடம் வேண்டும்; அடையாரில் ஓர் இடம் வேண்டும் என அடிக்கடி கேட்பார்கள்.

இதுபோன்ற கஃபேக்கள், ரெஸ்டா ரன்டுகளை சில மணி நேரங்கள் புக் செய்துவிட்டு அதை ஏன் மீட்டிங்குக்காகப் பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணம் வந்தது. எப்போது வேண்டுமோ, எங்கு வேண்டுமோ தேவையான நேரம் மட்டும் பயன்படுத்தக்கூடிய அலுவலகங்களைச் செயல்படுத்தலாம் என்று நானும் ஶ்ரீவத்சனும் இணைந்து 2017-ம் ஆண்டு டிசம்பரில் இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். கோவொர்க்கிங் ஸ்பேஸுக்கான இடங்களை வைத்திருப்பதை எங்கள் நிறுவனத்தின் செயலியின் மூலம் ஒருங்கிணைக்கிறோம்.

ஒரு நாளைக்கு ரூ.200...

கூகுள் பிளேஸ்டோரில் எங்கள் ஆப் (GoFloaters) இருக்கிறது. இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். செயலியில் எந்த நகரில் பணியாற்ற விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக, சென்னையைத் தேர்வு செய்தால், அதில் நுங்கம்பாக்கத்தில் 7, தேனாம்பேட்டையில் 5, கிண்டியில் 5, பெருங்குடியில் 2, அண்ணாநகரில் 1 என எந்த இடத்தில் எத்தனை கோவொர்க்கிங் அலுவலகங்கள் உள்ளன என்பதைக் காண்பிக்கும். அதில் பிடித்த இடத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு நாளைக்கு ரூ.200 என்ற கட்டணத்திலிருந்து இதன் சேவைகள் தொடங்குகின்றன. ஒரு நாளைக்கு, சில மணி நேரங்களுக்கு, ஏன் ஒரு மணி நேரத்துக்கு ஒரு மீட்டிங் மட்டும் நடத்த வேண்டும் என்றாலும்கூட புக் செய்து கொள்ளலாம். ஒரு இருக்கை மட்டும் வேண்டும் என்றாலும் கூட புக் செய்யலாம்.

சந்தித்த சவால்கள்...

ஆரம்பத்தில் கஃபேக்களை அணுகியபோது அவர்கள் தயங்கினார்கள். காரணம், கஃபேக்களுக்கு உணவு விற்பனை தான் பிரதானம். அவர்களிடம் இங்கு வேலைபார்ப்பதற்காக வரும் எங்களுடைய வாடிக்கையாளர்களிடம் உணவு வாங்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்காதீர்கள் எனச் சொல்ல வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறை புதிய நகரங்களுக்குச் செல்லும்போதும் இந்தச் சவாலைச் சந்திக்க வேண்டியிருக்கும். ‘சென்னையில் இதுபோன்ற கஃபேயில் இத்தனை பேர் வருகிறார்கள். உங்கள் இடம் எப்போதும் பிசியாக இருக்கும் பகுதியாக மாறும். அதற்காகக் கட்டணமும் கிடைக்கும்’ எனப் பல்வேறு தரவுகளைச் சொல்லி, அவர்களை ஒப்புக்கொள்ள வைக்கிறோம்.

மார்கெட்டிங் பிரச்னை போக, எங்களிடம் புக் செய்து வரும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் செல்லும் கோ வொர்க்கிங் ஸ்பேஸில் அவர்கள் எதிர்பார்க்கும் வசதி கிடைக் கிறதா என்பதை உறுதி செய்வதும் சவாலாக இருந்தது. காரணம், புக்கிங் மட்டும்தான் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.

கோவொர்கிங் ஸ்பேஸ் தொழிலில் ஈடுபடும் நிறுவனங் களைத்தான் ஒருங்கிணைக் கிறோம் என்பதால், அவர்களுக்கு நாங்கள் வாடிக்கையாளர்களைக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதே போன்று வாடிக்கையாளர்கள் எதிர் பார்க்கும் அளவு சாய்ஸஸ், வசதி களையும் நிறைவாகக் கொடுக்க வேண்டும்.

கோவிட்டால் முன்னேறிய பிசினஸ்...

நாங்கள் இந்த பிசினஸை தொடங்கும்போது இந்தியாவில் அது அவ்வளவு பிரபலமாக இல்லை. முதலில் ஒரு கஃபேயில் ஒரு சீட் ஒரு மணி நேரத்துக்கு ரூ.25 என்ற அடிப்படையில் புக் செய்துகொள்ளலாம் என்று தான் ஆரம்பித்தோம். வருவாய் பங்கீட்டு முறையில்தான் பிசினஸ் செய்கிறோம். 2017-ம் ஆண்டு சென்னையில் மூன்று இடங்களில் மட்டும் இதை ஆரம்பித்தோம்.

கோவிட்டுக்கு முன்பு வரை 4 நகரங்களில் செயல்பட்டோம். கோவிட்டுக்குப் பிறகு, பெரும் பாலானவர்களின் வேலை செய்யும் முறை மாறிவிட்டது. அதனால் சிறு நகரங்களிலும் இதற்கான தேவை ஏற்பட்டது. தற்போது திருச்சி, மதுரை, மைசூர், விசாகப்பட்டினம், விஜயவாடா, மும்பை, புனே, கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி என 22 நகரங்களில் 2000-க்கும் மேற்பட்ட பாட்னர்களுடன் பணியாற்றி வருகிறோம்.

தனிநபர்களுக்கு பக்கா அலுவலகம்... சென்னை ஸ்டார்ட்அப்பின் சூப்பர் ஐடியா!

சொந்தக் கட்டடம் கிடையாது...

எங்கள் நிறுவனம் முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சார்ந்தது. இடத்திலோ, கம்ப்யூட்டர் போன்ற தொழில்நுட்பக் கருவிகளிலோ முதலீடு செய்ய வில்லை. எங்கள் நிறுவனத்துக் கென்று சொந்தமாக ஒரு கட்டடம் கூட கிடையாது. செயலிக்கான தொழில்நுட்பத்தை உருவாக்க, கோவொர்க்கிங் இடங்களை வைத்துள்ள நபர்களை எங்களு டன் இணைத்துச் செயல்பட மார்கெட்டிங் செய்ய சிறிய குழு உள்ளது. அவர்கள்தான் எங்கள் முக்கிய முதலீடு.

ஸ்டார்ட்அப் பிசினஸ் மற்றும் ஃப்ரீலேன்சர்களுக்கும் இடமளிக்கும் நோக்கில்தான் இதைத் தொடங்கினோம். இது போன்றவர்களுக்கு இடம் ஒரு பெரிய பிரச்னையாக இருக்கிறது. ஹோட்டல் அறை போன்று புக் செய்து பணிபுரிவது அதிக செலவு மிக்கதாக இருக்கிறது. அவர்களுக் கான செலவை எப்படிக் குறைக்கலாம் என்பதுதான் இதன் அடிப்படை நோக்கம். அவர்களுக் கான இடத்தைக் கண்டறிந்து கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங் உத்திகள், ஈவென்ட்ஸ் நடத்துவது போன்ற வற்றையும் ஒருங்கிணைக்கிறோம்.

கோவொர்க்கிங் இடங்களை ஐ.டி துறையினர்தான் அதிகம் பயன்படுத்துவார்கள் என நினைத்தோம். ஆனால், தற்போது கிரியேட்டிவ் துறையில் வேலை பார்ப்பவர்கள் அதாவது, வசனம், பாடல், கதை எழுதுபவர்கள், கிராபிக் டிசைனர்கள், ஆடிட்டர்கள் எனப் பல்வேறு துறையினரும் இதைப் பயன்படுத்துகின்றனர்.

நிறுவனங்களை இணைக்கும் முயற்சி...

சில நிறுவனங்களுடனும் இதுதொடர்பாகப் பேசி வருகிறோம். அவர்களுடைய ஊழியர்கள் இந்த 22 நகரங்களில் எங்கிருந்தாலும் அவர்களுக்குத் தேவைப்பட்ட நேரத்தில் கோவொர்க்கிங் இடங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற பேக்கேஜை அறிமுகப்படுத்தி யிருக்கிறோம். இதில் நிறுவனங்கள் பணம் செலுத்தி விடுகின்றன. ஊழியர்கள் வந்து பணியாற்றிச் செல்கின்றனர். இதனால் நிறுவனங்கள் பல லட்சம் செலவழித்து அலுவலக செட்டப்பை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், 22 நகரங்களில் தங்கள் ஊழியர்களை அவர்களால் பணியாற்ற வைக்க முடிகிறது. ஒரு பிரச்னைக்கான தீர்வு உங்களிடம் இருந்தால் ஸ்டார்ட்அப் தொடங்க அதிகம் யோசிக்க வேண்டாம். அதைத் தொடங்குவதற்கான பரிசோதனை முயற்சியை உடனடியாகத் தொடங்கிவிடுங்கள். அதிக தாமதம் பயனற்றதாகிவிடும். அந்த பிரச்னையைப் பற்றி ஆழமாக அதன் அனைத்து விஷயங்களையும் புரிந்து வைத்திருக்கிறீர்களா என்பதை மட்டும் சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்’’ என்கிறார் நம்பிக்கையாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism