Published:Updated:

தூத்துக்குடி:`இருமடங்கு உயர்ந்த கல் உப்பின் விலை!’- காரணம் பகிரும் உற்பத்தியாளர்கள்

உப்பளம்
உப்பளம்

உப்பின் விலை கடந்த ஆண்டை விட இந்தாண்டு இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால், உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக தமிழகத்தில் தூத்துக்குடியில்தான் உப்பு, அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 25,000 எக்கர் உப்பளங்களின் மூலம் மட்டும் 22 லட்சம் டன் வரை உற்பத்தி நடைபெறுகிறது. இத்தொழிலில் நேரடியாக 25,000 தொழிலாளர்களும், மறைமுகமாக 25,000 தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஆண்களை விட பெண் தொழிலாளர்களே அதிகம்.

உப்பளம்
உப்பளம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில், சில பகுதிகளில் தற்போதும் குடிசைத் தொழிலாகவும் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இலங்கை, மலேசியா, இந்தோனேஷியா, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

`தடைபட்ட ஏற்றுமதி; 50% வேலையிழப்பு’ - தூத்துக்குடியில் ரூ.1 கோடி உப்பு வர்த்தகம் பாதிப்பு! #Corona

கல் உப்பு, சிறுமணி,`ப்ரீ ப்ளோ’ எனப்படும் சீனித் தன்மையுடைய தூள் உப்பு ஆகிய பதத்தில் உப்பு அரைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போதைய கொரோனா தொற்றுக் காலத்தில் கல் உப்பு எனப்படும் கிறிஸ்டல் உப்பின் விலை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்காக விலை அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக உப்பு உற்பத்தி குறைந்துள்ளது என்கிறார்கள் உப்பு உற்பத்தியாளர்கள்.

உப்புக் குவியல்
உப்புக் குவியல்

இதுகுறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்களிடம் பேசினோம். ``நல்ல சீதோஷ்ண நிலை இருந்தும், கொரோனா ஊரடங்கினால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உப்பளங்களில் தொழில் செய்ய முடியாமல் தவித்தோம். தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் அளித்த விலக்கினால் உப்பு உற்பத்தியைத் துவக்கினோம். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகள், சுற்று வட்டாரப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

`ஏலம் எடுத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்!' - கரூரில் 33,000 ரூபாய்க்கு விலைபோன 1 கிலோ உப்பு

அதேநேரத்தில், கிருமிநாசினி தெளிக்க முடியாத இடங்களில் தண்ணீரில் கல் உப்பைக் கரைத்து தெளிக்கிறார்கள். அத்துடன், தற்போதைய நிலையில் வீட்டுத் தேவைக்காக வாங்கப்படும் காய்கறிகளையும், கல் உப்புக் கரைசலில் கழுவிய பிறகே வெட்டி சமையல் செய்யப்படுகிறது. இவற்றால் உப்பின் தேவை அதிகரித்துள்ளது. அதேபோல, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீரில் கல் உப்பு, மஞ்சள்தூள் கலந்து வாய் கொப்பளிப்பது, உப்பு, மஞ்சள், வேப்பிலை கொண்டு ஆவி பிடித்தல் போன்றவற்றாலும் கல் உப்பின் மதிப்பு உயர்ந்துள்ளது.

உப்புக்குவியல்
உப்புக்குவியல்

வழக்கமாக, ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் வெப்பக்காற்றுடன் வீசும் தென்மேற்குப் பருவக்காற்று இந்தாண்டு குறைந்ததால், உப்பு உற்பத்தி குறைந்துள்ளது. இருப்பினும், தற்போதைய உப்பின் தேவையால், கடந்த ஆண்டு ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு டன் கல் உப்பு, இந்தாண்டு இரு மடங்காக விலை அதிகரித்து ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு