Published:Updated:

உச்சத்தில் கச்சா எண்ணெய்... இன்னும் விலை அதிகரிக்குமா..?

கச்சா எண்ணெய்...

பிரீமியம் ஸ்டோரி

ஏழு வருடமாக உச்சத்தில் இருக்கிறது கச்சா எண்ணெய் விலை. இதனால் நம் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.107-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியும் விலை உயர்ந்திருப்பதைக் கண்டு, அனைத்துத் தரப்பினரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

ஷியாம் சுந்தர்,
கமாடிட்டி நிபுணர்
ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

கோவிட் 19-க்குப் பிறகு, உலகம் முழுவதும் தளர்வுகள் அகற்றப்பட்டு, சகஜநிலைக்குத் திரும்புவதால், நுகர்வு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், உலக அளவில் கச்சா எண்ணெயின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதால், பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

2020-ம் ஆண்டில் ஒரு பேரல் பூஜ்ஜியத்துக்குக் கீழே வர்த்தகமானதால், எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களுக்கு மட்டும் அல்லாமல், கச்சா எண்ணெயை நேரடியாக வாங்கி விற்பவர்கள், சேமித்து வைக்க இடமில்லாமல், நஷ்டத்தில் விற்க வேண்டிய கட்டாயம் உருவானது. அந்த நிலை தற்போது முற்றிலுமாக மாறி, வரக்கூடிய காலங்கள் அதற்கு நேர்மாறாக அமைந்து விடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது.

விலை உயர்வுக்கு என்னதான் காரணம்..?

உலக அளவில் கச்சா எண்ணெயின் தேவையானது, இந்த ஆண்டு இறுதிக்குள் கோவிட் 19-க்கு முன்பிருந்த நிலைக்குத் திரும்பலாம் என்கிற எதிர்பார்ப்பு. 2020-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 97 மில்லியன் பேரல்களாக இருந்ததை ஒப்பிடும்போது, 2021-ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் நாளொன்றுக்கு 99 மில்லியன் பேரல்களாக (அதாவது, 6% அதிகரித்து) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் கோடைக்கால பெட்ரோலியத் தேவை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கலாம் என்கிற கணிப்பு.

ஆசிய பிராந்தியத்தில் கோவிட்-19-க்குத் தடுப்பூசி போடுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், கச்சா எண்ணெயின் தேவையை அதிகரிக்கச் செய்யும் என்கிற எதிர்பார்ப்பு.

ஒபெக் நாடுகள், கச்சா எண்ணெயின் தேவையைச் சமாளிக்க உற்பத்தியை அதிகரிக்காததும், உற்பத்தி அளவை மேலும் குறைக்கவும் முயற்சி நடப்பதாக வரும் செய்திகளும்தான்.

உச்சத்தில் கச்சா எண்ணெய்...
இன்னும் விலை அதிகரிக்குமா..?

குறைந்துவரும் கச்சா எண்ணெய் கையிருப்பு...

அமெரிக்கா மற்றும் ஒ.இ.சி.டி நாடுகளின், கோவிட் 19–க்கு முந்தைய காலகட்டங்களின் ஐந்து வருட சராசரி கையிருப்பை ஒப்பிடும் போது, தற்போதைய கையிருப்பு குறைந்து காணப்படுவது முக்கியமான செய்தியாகப் பார்க்கப்படுகிறது. தவிர, சென்ற வருடம் இதே காலகட்டத்தில் மிக அதிகமான அளவில் கச்சா எண்ணெய் கையிருப்பு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் வியாபார ரீதியிலான தற்போதைய கச்சா எண்ணெய் கையிருப்பு, கடந்த 5 வருட சராசரி அளவை ஒப்பிடும் போது 7% குறைந்து, ஒரு நாளைய உற்பத்தி 445 மில்லியன் பேரல்களாக இருந்துவருகிறது. இதே போல், ஒ.இ.சி.டி நாடுகளின் ஆகஸ்ட் மாதக் கையிருப்பு, கடந்த ஐந்து வருட சராசரி கையிருப்பு அளவுடன் ஒப்பிடும்போது 162 மில்லியன் பேரல்கள் குறைந்து காணப்படு வதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளின் எரிசக்தி தேவை சார்ந்த பிரச்னைகள் (இயற்கை எரிவாயு, நிலக்கரி ஆகியவற்றின் பங்களிப்பு இல்லாமல்) சாதாரண நிலையிலேயே, நாளொன்றுக்கு 5,00,000 பேரல்கள் என்ற அளவுக்கு 2021, 2022–ம் ஆண்டுகளில் அதிகமாகத் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிவாயு மற்றும் நிலக்கரி தட்டுப் பாடுகள் காரணமாக, அனைவரும் கச்சா எண்ணெய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், அதன் விலை உடனடி யாக சரிய வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது.

வரைபடம் 1: கச்சா எண்ணெய் கையிருப்பு (மில்லி பாரல்களில்)
வரைபடம் 1: கச்சா எண்ணெய் கையிருப்பு (மில்லி பாரல்களில்)

சிவப்பு - ஐந்து வருட சராசரி கையிருப்பு

நீலம் - 2021-ம் ஆண்டின் கையிருப்பு

உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளி அதிகரிப்பு...

உலக நாடுகளின் கச்சா எண்ணெய் உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளி இந்த ஆண்டு தொடக்கத்தி லிருந்தே காணப்பட்டு வருகிறது (பார்க்க படம் 2). 2014-ம் ஆண்டின் விலைச் சரிவுக்குப் பின், எண்ணெய் உற்பத்தி சார்ந்த முதலீடுகள் குறையத் தொடங்கின. எண்ணெய் உற்பத்திக்கும், அதற்கான கட்டுமான பணிகளுக்குமான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டன. ஏனெனில், முதலீடுகளின் மீதான வருவாய் எதிர்பார்ப்பை யொட்டி இல்லாததால், முதலீட்டு ஆர்வம் முதலீட் டாளர்களுக்கு ஏற்படவில்லை.

இப்போதைய நிலையில், தேவை அதிகரித்தும் புதிய உற்பத்தி தொடங்குவதற்கான செலவினங்கள் அதிகரிப்பு மற்றும் முந்தைய காலங்களில் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் போன்றவை புதிய முதலீடுகளைச் செய்வதற்கு அச்சத்தைத் தோற்றுவித்துள்ளன. சற்று நிதானமான போக்கைக் கடைப்பிடிப்பதால், உடனடி யாக உற்பத்தி அதிகரிக்க முடியுமா என்பதில் சந்தேகங்கள் காணப்படுகின்றன.

2018-ம் ஆண்டுக்குப் பிறகு, ஒபெக் நாடுகளுக்கு இடையிலான உற்பத்திக் கட்டுப்பாடு தொடர் பான ஒப்பந்தத்தில் உள்ள அளவைவிட ஐக்கிய அரபு நாடுகள், குவைத், ஈராக் உள்ளிட்ட நாடுகள் நாளொன் றுக்கு அதிகபட்சமாக 0.5 மில்லியன் பேரல்கள் அதிகப் படியான (உபரியாக) உற்பத்தி யைச் செய்து வருகின்றன. அதே சமயம், ரஷ்யா, அங்கோலா மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் அதிகபட்சமாக 0.75 மில்லியன் பேரல்கள் என்ற அளவுக்கு உற்பத்தியைக் குறைத்துக்கொண்டுள்ளன. தற்போது கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், எண்ணெய் உற்பத்தி ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் என்ன செய்யப்போகின்றன என்பதை உலகமே உற்றுக் கவனித்து வருகின்றன.

வரைபடம் 2: தேவையும் உற்பத்தியும்
வரைபடம் 2: தேவையும் உற்பத்தியும்

வெள்ளை - 2021-ம் ஆண்டின் கச்சா எண்ணெய் தேவை

நீலம் - கச்சா எண்ணெய் உற்பத்தி

விலை இன்னும் அதிகரிக்குமா?

தற்போது பிரென்ட் கச்சா எண்ணெய் 85 டாலரில் வர்த்தக மாகி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் 60% விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. 2018-ம் ஆண்டுக்குப் பிறகு, முதன் முறையாக 85 டாலரைத் தொட்டு உள்ளது. 2021 டிசமபர் மாத ஒப்பந்த விலையை, 2022-ம் ஆண்டின் டிசம்பர் மாத ஒப்பந்த விலையுடன் ஒப்பிடும்போது, 2013–ம் ஆண்டுக்குப் பிறகு 8 டாலர்கள் அதிகரித்துள்ளது. இது எதை உணர்த்துகிறது எனில், கச்சா எண்ணெய் உற்பத்தியானது, தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு உயரவில்லை என்பதே. உற்பத்திக்கும் தேவைக்குமான இந்த இடைவெளியை சரி செய்ய வேண்டுமானால், கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இது விரைவில் நடக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அமெரிக்காவின் ‘கல்ப் ஆஃப் மெக்ஸிகோ’ பிராந்தியத்தில் ஆகஸ்ட் மாதத்தில் வீசிய ‘இடா’ புயல் காரணமாக எண்ணெய் உற்பத்தி பெருமளவு தடைபட்டுள்ளது. ஷெல் உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை டிசம்பர் 2021 வரை தொடங்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகின்றன.

ஒபெக் மற்றும் அதைச் சார்ந்த நாடுகள், தற்போது நிலவும் போக்கே தொடர்ந்து இருக்க வேண்டும் என விரும்புவதால், உடனடியாக விலை குறைய வாய்ப்பில்லை. சவுதி அரேபியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு உற்பத்தியை உயர்த்தினால். 2022-ம் ஆண்டின் கடைசியில் (தேவைக்கு அதிகமாக) கையிருப்பு அதிகரித்துவிடும் என்கிற நிலைக்குத் தள்ளப்படும் சூழல் உருவாகும் எனத் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவைப் பொறுத்தவரை, நீண்ட கால அடிப்படையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 80 டாலருக்குக் குறையாமல் இருக்க வேண்டும் என விரும்புகிறது. இந்த நிலையில், உலக அளவில் வரும் மாதங்களில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டால், விமானப் போக்குவரத்து சகஜநிலைக்குத் திரும்பி, பொருளாதாரம் சூடுபிடிக்க ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கலாம். இதனால், கச்சா எண்ணெய்க்கான தேவை மேலும் அதிகரித்து, அதன் விலை இன்னும் அதிகரிக்கவே வாய்ப்பிருக்கிறது.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்த விலை உயர்வை எதிர்கொள்ள இப்போதே மனதளவில் தயாராக இருப்பது நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு