Published:Updated:

உலக மக்களை வசீகரிக்கும் கள்ளக்குறிச்சி மரச்சிற்பம்..!

கள்ளக்குறிச்சி மரச்சிற்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
கள்ளக்குறிச்சி மரச்சிற்பம்

ஜி.ஐ பிசினஸ்

தமிழகத்தில் அழகிய வேலைப்பாடு களுடன்கூடிய மரச்சிற்பங்கள் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கிறது கள்ளக்குறிச்சி. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் வியாபித்திருக்கும் மரச் சிற்ப வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர் களின் விருப்பத் தேர்வு எது என்று கேட்டால், அது கள்ளக்குறிச்சி மரச்சிற்பம்தான்.

கள்ளக்குறிச்சியில் உள்ள அண்ணா நகரில் வசிக்கும் 300 குடும்பங்களுக்கு இந்த தொழில்தான் வாழ்வாதாரம். நுணுக்கமாகவும் தத்ரூபமாகவும் இங்கு செய்யப்படும் சிற்பங்கள், கடல் கடந்து பல நாடுகளில் பூஜையறை, வரவேற்பறை, கலைக்கூடங்களில் கம்பீரமாக நிற்கின்றன. நாம் அண்ணா நகருக்குள் நுழைந்தவுடன் மரங்களின் மீது படும் உளிகளின் ஓசை இசையாக நம் காதுகளை நிரப்புகிறது. இங்குள்ள சிறந்த மரச்சிற்பக் கலைஞர்களில் ஒருவரும், விஷ்ணு சிற்பக் கூடத்தின் உரிமையாளருமான மாயவண்ணனுடன் பேசினோம்.

மாயவண்ணன்
மாயவண்ணன்

“நான் மூணாவது தலைமுறையா இந்தத் தொழிலை செஞ்சுட்டு வர்றேன். நாற்பது வருஷம் ஓடிப்போச்சு. இங்க மரச்சிற்பங்கள் செய்ற 300 குடும்பங்கள் இருக்கு. 600 கலைஞர்கள் மரச் சிற்பம் செய்யும் தொழிலில் இருக்காங்க. குடும்ப உறுப்பினர்கள் எல்லோரையும் சேர்த்துக்கொண்டால் சுமார் 900 பேருக்கு இந்தத் தொழில்தான் சாப்பாடு போடுது.

எங்கள் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் இதுதான். இந்தியாவிலேயே மரச் சிற்பம்னாலே அது எங்க ஊருதான். திருப்பதிக்கு லட்டு, திருநெல்வேலிக்கு அல்வா மாதிரி கள்ளக் குறிச்சிக்கு மரச்சிற்பம். இதுக்கு புவிசார் குறியீடு வேணும்னு எட்டு வருஷ தொடர் போராட்டம் நடத்தினோம். அதன் பலனாக அரசாங்கமும் நாங்க தயாரிக்கிற மரச் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு தந்து, எங்கள் தொழிலுக்கு அங்கீகாரம் கொடுத்துச்சு.

கள்ளக்குறிச்சில எப்படிப் பார்த்தாலும் இங்க இருபதுல இருந்து முப்பது பட்டறைகள் இருக்கும். ஆண், பெண் என்ற பேதம் பார்க்காம குடும்பத்தோட இந்த வேலையைச் செய்றோம். விநாயகர், முருகர், பெருமாள், நடராஜர், சரஸ்வதி, கருடாழ்வார், கிருஷ்ணர், காத்தவராயன், ஐயனார்னு எல்லா வகை சிற்பங்களையும் செய்து கொடுக்குறோம். ஒரு அடியில் இருந்து 10 அடி வரைக்கும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப சிற்பங்களைச் செய்வோம். இந்தியாவில் தமிழ்நாட்டை தாண்டி டெல்லி, பம்பாய், கொல்கத்தானு எல்லா இடத்துல இருந்தும் எங்ககிட்ட வருவாங்க. அதேபோல இந்தியாவைத் தாண்டி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கும் நாங்க செய்ற மரச்சிற்பங்கள் ஏற்றுமதி ஆகுது.

உலக மக்களை வசீகரிக்கும் 
கள்ளக்குறிச்சி மரச்சிற்பம்..!

சிங்கப்பூர், மலேசியா நாடுகள்ல இருந்து வர்றவங்க பெரும்பாலும் விநாயகர் சிலைக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. ஒரு அடி சிற்பம் 4,000 ரூபாய்க்கும், 8 அடி சிலையை அதிகபட்சமா 2,00,000 ரூபாய்க்கும் செஞ்சு கொடுக்கிறோம். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி பண்றப்போ நிறைய வரி கட்டணும்ங்கறதால விலை கொஞ்சம் வித்தியாசப்படும்.

ஆனா, இந்த வேலை அவ்வளவு ஈஸி கிடையாது. நிதானமும், நல்ல மனநிலையும் ரொம்ப முக்கியம். டிராயிங், பெயின்டிங்கோட கற்பனைத் திறனும் இருந்தாதான் சிற்பங்களை உயிர்ப்புடன் கொண்டு வர முடியும். அதேபோல, எல்லா மரத்திலும் சிற்பங்களைச் செய்துவிட முடியாது. வாகை, சிகைவாகை, மாவலிங்கம் தேக்கு, இலுப்பைனு குறிப்பிட்ட மரங்களில்தான் செய்ய முடியும். அந்த மரங்களை எவ்வளவு கவனமாத் தேர்வு செஞ்சாலும் சில நேரங்கள்ல அது கர்ப்ப மரமா இருந்துடும். ஆனா, அதைப் பார்க்கும்போது தெரியாது. இரண்டு மாசம் கஷ்டப்பட்டு 10 அடி உயர சிற்பத்தைச் செய்து முடிப்போம். கடைசியில் முகம், கழுத்துனு சில முக்கியமான இடங்களில் ஃபினிஷிங் டச் கொடுக்கறப்போ, அந்த இடத்துல மட்டும் அப்படியே உதிர்ந்து விழுந்துடும். அப்படியான நேரங்களில் நாள்கள், கூலி, முதலீடுனு எல்லாமே நஷ்டமாயிடும். அதை எல்லாம் தாண்டித்தான் இந்தத் தொழிலை நாங்க செஞ்சுகிட்டு வர்றோம்” என்றார் மாயவண்ணன்.

பொதுவாக, மரத்தை சீர்செய்யும் தச்சு வேலைக்குக் கடினமான பெரிய உளிகளைப் பயன்படுத்துவார்கள். ஆனா, இந்தச் சிற்பங்கள் செய்வதற்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட சிறிய அதே சமயம், நுணுக்கமான உளிகளைப் பயன்படுத்து கிறார்கள். மிக சொற்பமான எண்ணிக்கையில் பெண்களும் சிற்பக் கலைஞர்களாகச் செதுக்கிக்கொண்டிருக் கிறார்கள்.

உண்மையில் ஃபினிஷிங் ‘டச்’தான் சிற்பங்களில் உள்ள சிறு சிறு குறைகளை சரி செய்கிறது. ஆண் கலைஞர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாயும், பெண்களுக்கு 200 ரூபாயும் கூலியாகக் கொடுக்கப்படுகிறது. ஒரு அடி சிற்பமாக இருந்தாலும் 10 அடி உயர சிற்பமாக இருந்தாலும் பட்டுச்சேலை நெய்வதைப் போல, இழை இழையாகச் செதுக்குகிறார்கள்.பொதுவாக, மரம் தொடர்பான தச்சு வேலைகளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரே இடம் பெற்றிருப்பார்கள். ஆனால், இங்கு பிற சமூகத்தினரும் நேர்த்தியான சிற்பக் கலைஞர்களாக வலம் வருகிறார்கள்.

“பல நூறு வருஷங்களா பரம்பரை பரம்பரையா இந்த வேலையை செஞ்சுகிட்டு வர்றோம். இந்த வேலைக்கு வந்துடுனு இங்க யாரோட அப்பா அம்மாவும் சொல்ல மாட்டாங்க. அதேபோல, விருப்பப்பட்டு உளியைப் பிடிக்கும் யாரையும் அவங்க தடுக்க மாட்டாங்க. மரங்களைத் தேர்வு செய்றதுதான் இந்தத் தொழில்ல முக்கியம். தோதான மரமா பார்த்து தேவைக்கு ஏத்த மாதிரி துண்டு துண்டா அறுத்துடு வோம். கைதேர்ந்த, அனுபவம் வாய்ந்த மாஸ்டரை வச்சு செதுக்க வேண்டிய சிற்பத்தை அந்த மரத்து மேல வரைஞ்சிடுவோம். முகம், உடல் எனத் தனித்தனியாக அளவு எடுத்து எழுதிக்கொள்வோம். ஒரு சிற்பத்துக்கு எட்டு பாகம் இருக்குது. நெற்றி, கண், புருவம், மூக்கு, வாய் என முகம் ஒரு பாகம். நெஞ்சுப்புள் ஒரு பாகம். தொப்புள் ஒரு பாகம். குறி ஒரு பாகம். முட்டி ரெண்டு பாகம். பாதம் ரெண்டு பாகம்னு மொத்தம் எட்டு பாகம்.

திருமலை
திருமலை

சாமி சிலைகள்ல முக்கியமா மூக்கும் மார்பும் ரொம்ப முக்கியம். வாடிக்கையாளர்களும், வியாபாரி களும் அதைத்தான் முதலில் பார்ப்பாங்க. நாங்கள் செய்ற சிற்பங்களை சிலர், கலையா ரசிப் பாங்க. சிலர், கடவுளா பார்ப் பாங்க. கடவுளா பார்க்கறவங்க வீட்டு பூஜையறையில் வைப்பாங்க. கலையா பார்க்கறவங்க வரவேற்பறை, வணிக வளாகம், விமான நிலையம் மாதிரி பொதுமக்கள் அதிகமா கூடும் இடங்கள்ல வைப்பாங்க.

பூஜையறையில் வைப்பதற்கு மாவலிங்க மரத்தில் செய்றோம். வரவேற்பறை போன்ற இடங்களில் வைப்பதற்கு வாகை மரங்களைத் தேர்வு செய்றோம். வியாபாரிங்க எங்ககிட்ட இருந்து வாங்கி ஏற்றுமதி செய்வாங்க. அதே சமயம், வெளிநாடுகள்ல இருந்து இந்தியா வர்றவங்க தேடி வந்து எங்கள் சிற்பங்களை வாங்கிட்டுப் போறாங்க. சில நேரங்கள்ல வேலை இருக்காது. அப்ப வீட்டுக் கதவுகள், கோயில் தேர்கள்னு கிடைக்கற வேலையைச் செய்வோம். கலை நுணுக்கத்தோட நாங்க செய்யற சிற்பங்களை மற்றவர்கள் கடவுளா வழிபடுவதைப் பார்க்கும்போது கிடைக்கும் ஆத்ம திருப்திதான் எங்களைத் தொடர்ந்து இயங்க வைக்குது” என்றார் சிற்பக் கலைஞர் திருமலை.

வெளிச் சந்தையில் ஒரு அடி உயரமுள்ள மரச் சிற்பம் 4,000 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும் சிற்பக் கலைஞர்களிடம் வெறும் 1,000 ரூபாய்க்குதான் கொள்முதல் செய்கிறார்கள். தமிழக அரசின் பூம்புகார் கைவினை நிறுவனமும் வியாபாரிகளிடம்தான் கொள்முதல் செய்கிறதே தவிர, சிற்பக் கலைஞர்களிடம் நேரடியாகக் கொள்முதல் செய்வ தில்லை என்பது கொடுமை. இதனால் பல கோடிகளுக்கு கள்ளக்குறிச்சி மரச்சிற்பங்கள் விற்கப்பட்டாலும், ஏற்றுமதி செய்யப்பட்டாலும் அதன் பயன் சிற்பக் கலைஞர்களுக்கு முழுமையாகச் சென்று சேர்வதில்லை. அதனால் கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்தி அதன்மூலம் ஏற்றுமதி செய்வதற் கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டால் தங்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று கோரிக்கை வைக்கின்றனர் இந்தக் கலைஞர்கள்.

தமிழர் மரபை உலகுக்கு உணர்த்தும் இந்த மரச்சிற்பக் கலைஞர்களின் கோரிக்கையைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றுமா?