Published:Updated:

“தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சிந்தனை வளமும் முக்கியம்!”

கருத்தரங்கு
பிரீமியம் ஸ்டோரி
கருத்தரங்கு

கருத்தரங்கு

“தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சிந்தனை வளமும் முக்கியம்!”

கருத்தரங்கு

Published:Updated:
கருத்தரங்கு
பிரீமியம் ஸ்டோரி
கருத்தரங்கு

கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட்-19-ன் தாக்கத்தால் முடங்கிக் கிடந்த இந்தியத் திரைப்படத்துறை இப்போது மீண்டும் சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்கியிருக்கிறது. இதைத் தொடர்ந்து, இந்தியத் தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ நிறுவனத்தின் சார்பில், ‘தக்‌ஷின்’ என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கு ஒன்றை சென்னையில் சர்வதேச வர்த்தக மையத்தில் கடந்த வாரம் நடத்தியது.

‘தென் இந்திய ஊடகம், பொழுதுபோக்கு’ என்கிற தலைப்பில் நடந்த இந்த மாநாட்டில் இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் சுசித்ரா எல்லா, தக்‌ஷின் அமைப்பின் தலைவர் டி.ஜி.தியாகராஜன், திரைப்பட இயக்குநர்கள் மணிரத்னம், எஸ்.எஸ்.ராஜமௌலி, பி.சுகுமார், நடிகர்கள் எஸ்.ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஜெயம் ரவி, தென் இந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் கத்ரகடா பிரசாத், சி.ஐ.ஐ அமைப்பின் தென்மண்டல இயக்குநர் ஜெயேஷ், சி.ஐ.ஐ தமிழ்நாடு அமைப்பின் தலைவர் சத்யகம் ஆர்யா, விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் மற்றும் பல்வேறு பத்திரிகை அதிபர்கள், நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

“தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சிந்தனை வளமும் முக்கியம்!”

‘‘இன்றைய தலைமுறையினரை மனதில் வைத்து படமெடுங்கள்!’’

இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கடந்த இரண்டு ஆண்டுக் காலம், கொரோனா காலமாக இருந்தது. பெரும்பாலானவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில், இப்போது கொரோனா தொற்று முழுமையாகக் கட்டுப் படுத்தப்பட்டு படிப்படியாக அனைத்து தொழில்களும் மீண்டு வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில் திரையுலகமும் மீண்டு வருவது மகிழ்ச்சியைத் தந்துகொண்டிருக் கிறது. திரையுலகம் பழைய நிலைமைக்குத் திரும்புவது மட்டுமல்ல, முன்னிலும் வேகமாகச் செயல்படுவதற்காக இந்த மாநாடு வழிவகை செய்யும் என்று நம்புகிறேன்.

தென்னகத் திரைப்படத்துறை, இந்திய சினிமாவுக்கு முன்னோடிப் பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கிறது. பல்வேறு தொழில் நுட்பங்களிலும் சென்னை இன்றைக்கும் முன்னோடியாக விளங்கிக்கொண்டிருக்கிறது.

வளர்ச்சி என்பது தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, நிதி வளர்ச்சி என்பதாக மட்டுமல்லாமல், மனவளர்ச்சி, சிந்தனை வளர்ச்சியாக உயர்ந்திருக்கிறது. அத்தகைய சிந்தனை வளர்ச்சிக்கும் சேர்த்து தீனி போடுவதாக ஊடகங்கள் வளர வேண்டும். பொழுதுபோக்கு ஊடகமாக மட்டுமல்லாமல், சிந்தனைக்கு தீனிபோடுவதாக ஊடகங்கள் தங்களைத் தகுதிப் படுத்திக்கொள்ள வேண்டும்.

திரையுலகம் தன்னை அனைத்து வகையிலும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். கதை, வசனம், இயக்கம், தொழில்நுட்பம் ஆகிய அனைத்திலும் இன்றைய சூழலுக்குத் தகுந்ததுபோல மாறியாக வேண்டும். அப்படி மாறினால்தான் மனிதர் களின் பொழுதுபோக்குத் தளமாகத் திரையுலகம் தொடர்ந்து செயல்பட முடியும். அது மட்டுமல்ல, இன்றைய தலைமுறையினர் திரைப்படங்களைப் பார்த்து வளர்கிறார்கள். எனவே, அதை மனதில் வைத்துக்கொண்டு, சமூகத்துக்குப் பயனளிக்கும் முற்போக்கான திரைப்படங்களை எடுக்க வேண்டும்” என்றார்.

இந்தக் கருத்தரங்கின் முதல் நாள் நிகழ்ச்சியின் முக்கிய அமர்வான, ‘Print Media – Reinventing for the 21st Century’ என்ற தலைப்பில் ஆனந்த விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், தினமலர் நாளிதழ் நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குநர் லட்சுமிபதி ஆதிமூலம் மற்றும் தினத்தந்தி நாளிதழ் நிறுவனத்தின் இயக்குநர் சிவந்தி பாலசுப்ரமணியன் ஆதித்யன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

பா.சீனிவாசன்
பா.சீனிவாசன்

காலத்தின் தேவைக்கேற்ப மாறும் விகடன்...

முதலில் பேசிய பா.சீனிவாசன், “காலத்துக்கு ஏற்றபடி விகடன் தன்னை தகவமைத்துக்கொண்டே வருகிறது. புதுப் புது விஷயங்களைத் தந்து தொடர்ந்து மேம்படுத்திக் கொள்கிறோம். அதனால்தான் எங்களால் கொரோனா காலகட்ட நெருக்கடியைக் கடந்து வர முடிந்தது.

குறிப்பாக, இன்றைய நிலை யில் எங்களுடைய நிறுவனத்தின் ஆசிரியர் குழுவினர் பத்திரிகை களில் எழுதுவதுடன், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலை தளங்களில் வீடியோ, ஆடியோ என மொபைல் ஜர்னலிஸம் மேற்கொண்டு வருகின்றனர். விகடனை இப்போது எங்கிருந்து வேண்டுமானாலும் செயல்பட வைக்கும் வகையில் தொழில் நுட்ப ரீதியாக மேம்படுத்தி யிருக்கிறோம்.

விகடனின் செய்திகளில் இருக்கும் உண்மை மற்றும் புதுமையான விஷயங்களால் பல கோடி வாசகர்கள் கொரோனா காலத்தைத் தாண்டி தொடர்ந்து எங்களுடன் இருக்கிறார்கள். முன்பைவிட கூடுதல் சந்தாதாரர்கள் விகடனுக்குக் கிடைத்திருக் கிறார்கள். எந்தத் தொழிலாக இருந்தாலும் நம்மைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் இடையிடையே வரும் இன்னல் களை எளிதில் கடக்க முடியும்” என்றார்.

“தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சிந்தனை வளமும் முக்கியம்!”

இந்திய ஓ.டி.டி சந்தையின் மதிப்பு ரூ.10 லட்சம் கோடி...

இந்தக் கருத்தரங்கின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் ‘OTT 2.0: The Next Big Boom’ என்ற தலைப்பில் நெட்ஃப்ளிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் கன்டென்ட் பிரிவின் துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஹெச்.எஸ்.எம் என்டர் டெயின்மென்ட் நெட்வொர்க் கன்டென்ட் பிரிவின் தலைவர் கௌரவ் பானர்ஜி, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் சமீர் நாயர், அமேசான் பிரைமில் இருந்து மனிஷ் மேகானி, ஜீ என்டர்டெயின்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி சுஜி பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாடினார்கள். இவர்கள் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அனைத்துமே ஓ.டி.டி எதிர் காலத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதாகப் பேசினார்கள்.

இந்திய ஓ.டி.டி சந்தையின் மதிப்பு ரூ.10 லட்சம் கோடி வரை இருக்கும் எனவும், இது ஒவ்வோர் ஆண்டும் 20% அளவில் வளரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் கூறினார்கள். தற்போது இந்திய ஓ.டி.டி சந்தையில் எட்டு கோடி மக்கள் சந்தாதாரர்களாக உள்ளனர். தொடர்ந்து சந்தா தாரர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. ஓ.டி.டி-க்கான கதைகளுக்கு வாய்ப்புகள் நிறையவே இருக் கின்றன. ஓ.டி.டி கதை சொல்லலுக் கான திறமை உள்ளவர்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்புகள் காத்திருக் கின்றன என்றும் அவர்கள் கூறியது அடுத்த தலைமுறை கதை சொல்லிகளுக்கு விடுத்த அழைப்பாகவே இருந்தது.

நெட்ஃப்ளிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் கன்டென்ட் பிரிவின் துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் பேசும்போது, “ஓ.டி.டி தளத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தென் இந்தியா வலுவான தடத்தைப் பதிவு செய்துள்ளது. ஆங்கிலம் அல்லாத பிற மொழி படைப்புகளுக்கு ஓ.டி.டி தளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பிராந்திய மொழிகளில் படைப்புகளை வெளியிடுவதில் தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸ் கவனம் செலுத்தி வருகிறது. மக்களின் ரசனை மேம்பட்டிருக்கிறது. அவர்களால் நல்ல படைப்புகளை எளிதில் அடையாளம் காண முடிகிறது. அவர்கள் நல்ல படைப்புகளுக்கு வரவேற்பு கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.

பிராந்திய மொழிகளில் இன்னும் சிறப்பான படைப்பு களுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள். ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடர் உலக அளவில் பல தரப்பிலான மக்களை ஓ.டி.டி பக்கம் இழுத்துள்ளது. அதே சமயம், ஆங்கிலம், இந்தி அல்லாத பிராந்திய மொழிகளின் படைப்புகளுக்கும் மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். ஆவணப் படங்கள், உண்மைக் கதைகள் ஆகியவையும் சிறப்பான இடத்தைப் பிடிக்கின்றன. எனவே, இந்தத் துறைக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன’’ என்றார்.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் சமீர் நாயர் பேசும் போது, “ஓ.டி.டி தளங்களில் தொடர்களுக்கு மிகப் பெரிய வெற்றிடம் இருக்கிறது. ஆங்கிலம் மற்றும் பிற அந்நிய மொழித் தொடர்கள் சிறப்பாகச் செயலாற்றி வரும் நிலையில், பிராந்திய மொழிகளில் குறைவாகவே தொடர்கள் வெளிவருகின்றன. தொடர்களில் கவனம் செலுத்த தயாரிப்பாளர்களும் படைப்பாளிகளும் முன் வர வேண்டும். இந்திய சினிமா ஓ.டி.டி தொடர்களுக்கான வாய்ப்பைத் தவறவிட்டுவிடக் கூடாது” என்றார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism