நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

சிப் பற்றாக்குறை... திண்டாடும் வாகனத் துறை..! இந்தியாவுக்கு அருமையான வாய்ப்பு!

சிப்
பிரீமியம் ஸ்டோரி
News
சிப்

A U T O M O B I L E

எஸ்.ராமச்சந்திரன், தொழில்நுட்ப ஆலோசகர், Infosys Knowledge Institute

வாகனங்களில் பயன்படுத்தப் படும் மின்னணுப் பாகங் களின் விகிதம் இந்த நூற்றாண்டில் பலமடங்கு உயர்ந்துள்ளது. நான்கு சக்கர வாகனங்கள் சரியாக ஓட இன்று பல இ.சி.யு (ECU) எனப்படும் மின்னணுக் கட்டுப்பாட்டு அமைப்புகள் (Electronic Control Unit) உள்ளன. நிபுணர்களின் கணிப்பின்படி, 2030-ல் இன்ஜின் மூலம் ஓடும் ஒரு வாகனம் செய்ய ஆகும் செலவில் பாதி மின்னணுப் பாக‌ங்களுக்கே ஆகும்.

எஸ்.ராமச்சந்திரன்
எஸ்.ராமச்சந்திரன்

1970-ல் முதல் முறையாக...

வாகனங்களில் முதன்முதலில் இ.சி.யு 1970-களில் பொறுத்தப்பட்டது. ஃபோக்ஸ்வேகன் வாகனத்தின் இன்ஜினைக் கட்டுப்படுத்த ஒரு கட்டுப்பாட்டுச் சாதனத்தைப் பயன்படுத்தியது. எரிபொருளும் காற்றும் கலக்கும் விகிதம், அவற்றின் அளவு, வால்வுகள் திறக்கும் நேரம் போன்ற அளவுகோல்கள் இ.சி.யு மூலம் இயக்கும்படி செய்யப்பட்டது. இன்று வாகனத்தின் மற்ற பாகங் களையும் இ.சி.யு-க்களே இயக்கு கின்றன.

சிப்கள்தான் இ.சி.யு மற்றும் நவீன யுக வாகனங்களின் உயிர்நாடி என்றே சொல்லலாம். இப்படியான நிலையில், சிப்களுக்கு இப்போது கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இது விரைவில் தீர்ந்துவிடக்கூடிய சிக்கல் அல்ல. இந்தத் தலைவலி இப்படி வந்தது, அதை எப்படிச் சமாளிக்கலாம் என்பதைப் பார்ப்போம்.

பற்றாக்குறைக்கான காரணங்கள்...

இன்று வாகனங்களில் தொடங்கி, தொழிற்சாலைகளில் இயந்திரங்கள், மருத்துவச் சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், பொம்மை கள் அனைத்திலும் சிப்கள்தான் அவற்றை இயக்கும் கண்காணிப் பாளராக உள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட சமயத்தில் கணினி, கைப்பேசி போன்ற சாதனங்களால் சிப்களின் தேவை அதிகரித்தது. வீட்டிலிருந்தே வேலை செய்யும் நிலைமையில் இவற்றின் தேவை எதிர்பார்த்த‌தைவிட அதிகமாக இருந்தது.

2020 தொடக்கத்தில் கொரோனா பரவாமல் இருக்க, பல நாடுகளும் ஊரடங்கு அறிவித்தபோது வாகன‌ங் களின் விற்பனை சரிந்தது. அதைத் தொடர்ந்து இயல்பு நிலை எப்போது திரும்பும் என்று தெரியாமல் வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்தன. இதனால் சிப் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் கவனத்தை மற்ற துறைகளின் பக்கம் திருப்பின.

சிப் வடிவமைக்கும் (design) நிறுவனங்கள் பல இருந்தாலும் அவற்றைத் தயாரிக்கும் திறன் கொண்டவை உலக அளவில் மிகச் சில நிறுவனங்களே. அவற்றில் மிகப் பெரிய இரண்டு நிறுவனங்கள் கொரியாவில் சாம்சங் (SAMSUNG)மற்றும் தாய்வானில் உள்ள டி.எஸ்.எம்.சி (TSMC) நிறுவனங்கள்.

2020-ன் இரண்டாவது பாதியில் வாகன விற்பனை உயரத் தொடங்கியது. வாகனத் துறையில் தேவை திடீரென்று தலைதூக்கிய போது சிப் தயாரிக்கும் நிறுவனங் களால் ஈடு கொடுக்க‌ முடியவில்லை. காரணம், சிப்கள் தயாரிப்பது ஒரு சிக்கலான செயல்முறை. மற்ற துறைகளில் பயன்படுத்தப்படும் சிப்கள் வாகனத் துறையைவிட நவீனமானவை. அவற்றில் லாபமும் அதிகம். இதனால் வாகன விற்பனை ஏறுமுகமாக இருந்தபோதும் உடனடியாக சிப்களைத் தயார் செய்து தர முடியவில்லை.

மேலும், சிப்கள் தயாரிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் அதிகம். ஒரு வகையான‌ சிப்பிலிருந்து மற்றொன்றுக்கு தயாரிப்பை மாற்ற குறைந்தது நான்கு மாதங்கள் ஆகும். சிப் செய்யும் ஃபவுண்டரிகளின் பயன்பாடு கடந்த‌ இரண்டு ஆண்டுகளில் 90% தாண்டிவிட்டது.

சிப்
சிப்

சீனாவுக்கு அமெரிக்கா விதித்த தடை...

சீனா அமெரிக்க‌த் தொழில் நுட்பத்தை ராணுவ மற்றும் பல முக்கியமான துறைகளில் ஆதிக்கம் செலுத்த பயன்படுத்துகிறது என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப் நம்பினார். அதனால் சீனாவுக்கு சிப் சப்ளை செய்ய அமெரிக்கா, ஐரோப்பிய நிறுவனங்களுக்குத் தடை (sanction) விதித்தார்.

சீனாவிடம் பட்டறைகள் (Fountaries) இருந்தாலும் நவீன சிப்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் இல்லை. அதற்கு அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களையே நம்பி இருக்கிறது. இந்தத் தடை விதிக்கப் பட்டபோது தட்டுப்பாட்டை எதிர்பார்த்து சீனா, சிப்களை பல நாடு களிடமிருந்து வாங்கிக் குவிக்கத் தொடங்கியது. இதுவும் உலக அளவில் சிப் பற்றாக்குறை ஏற்பட ஒரு முக்கியமான காரணம்.

சீனாவின் மிகப்பெரிய சிப் தயாரிக்கும் நிறுவனம் எஸ்.எம்.ஐ.சி (SMIC). அமெரிக்கா வர்த்தகத் தடை அறிவித்த நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இதனால் நவீன சிப் தயாரிக்கும் திட்டங்கள் பயனற்றுப் போனது. தன் வாடிக்கையாளர்களிடம் சொன்னபடி, சிப்கள் சப்ளை செய்ய முடியாமல் போனது.

விபத்துகளால் சிப் தட்டுப்பாடு...

எதிர்பாராத விதமாக நடந்த சில விபத்துகளும் சிப் தட்டுப்பாட்டுக்கு ஒரு காரணம். வாகனத்துறை சிப்களில் 35% பங்கு வகிக்கும் ஜ‌ப்பானிய நிறுவனம் ரெனிஸாஸ். இதன் தொழிற்சாலையில் சமீபத்தில் நடந்த தீ விபத்தில் சிப் தயாரிக்கும் இயந்திரங்கள் சேதமடைந்தன.

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் எதிர்பாராதவிதமாக இந்த வருடம் அடித்த பனிப்புயலும் சிப் பற்றாக்குறைக்கு ஒரு காரணம். என்.எக்ஸ்.பி (NXP), இன்ஃபினியான் (Infineon), சாம்சங் போன்ற நிறுவனங்கள் இந்தப் பனிப்புயலால் தொழிற்சாலை களில் மின்சாரம் இல்லாமல் தயாரிப்பை நிறுத்த வேண்டி வந்தது. தாய்வானில் இந்த ஆண்டு வற‌ட்சி ஏற்பட்டதால், தண்ணீர் சப்ளை சரியாக இல்லாமல் சிப் தயாரிக்கும் திறன் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வாகனத் துறையில் தேவைப் படும் சிப்களில் அதிக கவனம் செலுத்தி முதலீடுகள் செய்யாததும் தட்டுப்பாட்டுக்கு ஒரு காரணம்.

சிப் தட்டுப்பாட்டால் உலக அளவில் வாகனங்கள் விற்பனை 60 பில்லியன் டாலர் வரை இந்த ஆண்டு பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் க‌ணித்துள்ளனர். இதைச் சமாளிக்க பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. சில நிறுவனங்கள், முழுவதும் முடிக்கப்படாத வாகனங்களைத் தயாரித்து, சிப்கள் வந்தபின் அவற்றைப் பொறுத்தி விற்க திட்டமிட்டுள்ளன. சில நிறுவனங்கள், சிறு சிறு சப்ளையர் களிடமிருந்து சிப்களை வாங்க உள்ளனர்.

நேரத்துக்கு ஏற்ற பாகங்கள்...

வாகனத் துறையில் பிரபலமான ஒரு பழக்கம், தேவைப்படும் நேரத்துக்கு பாகங்களைத் தொழிற் சாலைக்கு வரவைப்பது (Just in Time, சுருக்கமாக ஜெ.ஐ.டி). இந்த முறையின்படி, ஒரு பொருளின் எதிர்காலத் தேவையைக் கணித்து (forecast), அதன்படி அதற்குத் தேவைப்படும் உதிரிபாகங்களை சப்ளையர்களிடம் வாங்கி கிடங்குகளில், தொழிற்சாலையில் குவித்து வைத்துக்கொள்வது. இதனால் உதிரிபாகங்களை வாங்கி, பணத்தை முடக்க வேண்டிய தேவை இருக்காது. இந்தப் பணத்தை வேறு வகை களில் பயன்படுத்தலாம்.

எல்லாச் சூழல்களும் சரியாக இருந்தால், திட்டமிட்டபடி வேலை செய்து ஜெ.ஐ.டி முறையில் தொழிற்சாலையை இயக்கலாம். ஆனால், கொரோனா போன்ற‌ ஒரு நிகழ்வு நடக்கும்போது, ஜெ.ஐ.டி சரிப்படாது. டொயோட்டா முன்னரே பூகம்பம், சுனாமி வந்தபோது கற்றுக்கொண்ட பாடங்களை மறக்காமல் தன் செயல்பாட்டை மாற்றி வடிவமைத்துக்கொண்டது.

வாகனம் தயாரிக்கத் தேவையான அத்தியாவசிய 1,500 பாகங்களை அடையாளம் கண்டு பட்டியலிட்டது. அவற்றை அனுப்பும் சப்ளையர்களைத் தொடர்ந்து கவனித்து வந்தது. தன்னுடைய ஜெ.ஐ.டி கோட் பாட்டுக்கு நேர்மாறாக சிப் பற்றாக்குறை வரும் என்று முன்னரே அறிந்து அவற்றை சில மாதங்களுக்குத் தேவைப்படும் அளவுக்கு மொத்தமாக வாங்கி கையிருப்பில் வைத்துக் கொண் டது. இதனால் சிப் பற்றாக் குறையால் மற்ற நிறுவனங்கள் அடைந்த பாதிப்பை டொயோட்டா சந்திக்கவில்லை.

தன்னிறைவு அடைய இந்தியா செய்ய வேண்டியது...

சிப் வடிவமைக்கும் தொழில் நுட்பத்தில் இந்தியாவில் பல வல்லுநர்கள் உள்ளனர்.இவர்களால் மட்டும் தன்னிறைவு வந்துவிடாது. சிப் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உருவாக்க‌ பெரிய அளவில், பல பில்லியன் அமெரிக்க டாலர்களில் முதலீடு தேவைப்படும். அதற்கான சரியான சுற்றுச்சூழலும் வேண்டும். அடிப்படை வசதிகள் பல தேவைப்படும். சிப்கள் தயாரிக்க சுத்தமான நீர் தேவைப்படும். தடை யில்லாத மின்சார விநியோகம் வேண்டும்.

இந்தியாவில் சிப் தயாரிப்பு...

இந்திய அரசு சிப் தயாரிக்கும் நிறுவனங் களை ஊக்குவிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது. பட்டறை அமைக்கும் நிறுவனத்துக்கு ஒரு பில்லியன் ஊக்கத் தொகை அளிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதிக போட்டி உள்ள இந்தத் துறையில் முதலீட்டாளர்களுக்குத் தயாரிக்கப்படும் சிப்கள் சரியாக விற்பனை ஆகும் என்ற நம்பிக்கை வர வேண்டும். அதற்கும் அரசு தானே சிப்களை வாங்கிக்கொள்ளும் என்று உத்தரவாதம் அளிக்கிற‌து. இந்தியாவில் சிப் தயாரிப்பு தொடங்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

சிப் பற்றாக்குறை வாகனங்களிலிருந்து மற்ற துறைகளுக்கும் பரவும் ஆபத்து உள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் புது தயாரிப்புகளை இந்தப் பற்றாக்குறையால் தள்ளிவைக்கும் நிலை உருவாகியுள்ளது. வாகனம் தயாரிப்பதில் உலகின் முதல் ஐந்து நாடுகளில் இருக்கும், வளர்ந்துவரும் இந்தியா தொலைநோக்குப் பார்வையுடன் தன்னிறைவு அடைய சிப் ஆராய்ச்சி, தயாரிப்பில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கும்!

சிப் தயாரிப்பில் கலக்கும் சீனா..!

சிப்க‌ளுக்கு உலகிலேயே மிகப்பெரிய சந்தை சீனா. ஆனால், 80% தேவையை இறக்குமதி செய்யும் நிலை இருந்தது. இதை மாற்ற சீன அரசு 2014-ல் ஒரு கொள்கையை வகுத்தது. அதன் இலக்கு 2030-ல் சீனா உலகில் சிப் தயாரிப்பில் முன்னணி வகிக்க வேண்டும். இதை நடத்திக் காட்ட அரசு பல வரி விலக்குகள், சலுகைகள், ஊக்கங்கள் அளித்தது. இதன் விளைவாக, கடந்த சில ஆண்டுகளில் சிப் துறையில் சீனாவில் ஆராய்ச்சி, முதலீடுகள், உற்பத்தித் தொழிற்சாலைகள் வேகமாக வளர்ந்துள்ளன.