Published:Updated:

`அரைப்படி அரிசில தொடங்குனோம்; இப்ப எங்களுக்கு 4 கிளைகள்!' - பிரியாணி மூலம் ஜெயித்த மோகனப்ரியா

திண்டுக்கல்லில் பிரியாணிக்கு பெயர்போன கடைகள் பல இருக்கும்போதிலும், அந்தப் போட்டிக்கு இடையிலும் போராடி ஜெயித்துள்ளார் மோகனப்ரியா. மணக்க மணக்க தங்கள் `கோல்டு ஸ்டார்' பிரியாணி ஹோட்டலின் வெற்றிக் கதையையும் பகிர்ந்துகொள்கிறார் இங்கே...

திண்டுக்கல் என்றால் பூட்டு ஞாபகம் வருகிறதோ இல்லையோ, பிரியாணி ஞாபகம் வராமல் இருக்காது. அந்த அளவுக்கு திண்டுக்கல்லின் அடையாளமாய் மாறிப்போனது பிரியாணி. திண்டுக்கல்லில் பிரியாணிக்கு பெயர்போன கடைகள் பல இருக்கும்போதிலும், அந்தப் போட்டிக்கு இடையிலும் ஜெயித்துள்ளார் மோகனப்ரியா. மணக்க மணக்க தங்கள் `கோல்டு ஸ்டார்' பிரியாணி ஹோட்டலின் கதையையும் பகிர்ந்தார்.

கோல்ட் ஸ்டார்
கோல்ட் ஸ்டார்

``என் கணவர் வேணுகோபால் தன்னோட 19 வயசுல 3,000 ரூபாய் முதலீட்டுல கோழிப்பண்ணை தொடங்கி, சில்லறை விற்பனையும் செய்து வந்தார். காலையில 6 முதல் 10 மணி வரை மட்டுமே வேலை இருக்கும், அதுக்கப்புறம் வேலை இருக்காது. 2002-ல் எங்க திருமணம் முடிஞ்சப்போ, அவரோட பெரும்பாலான நேரம் வீணாகி வர்றதை சுட்டிக்காட்டினேன். ஏதாச்சும் தொழில் செய்யலாம்னு திட்டமிட்டோம்'' - தாங்கள் படிப்படியாக முன்னேறிய பயணத்தைச் சொல்ல ஆரம்பித்தார் மோகனப்ரியா.

போட்டியில தோத்துடக் கூடாது!

``சின்ன வயசுல இருந்தே நான் நல்லா சமைப்பேன். எந்த உணவு வகைனாலும், வாசனையை வெச்சே அதுல என்னென்ன சேர்த்திருக்காங்கனு சொல்லிடுவேன். கூடவே, அதே மாதிரி சமைச்சிடுவேன். அதனால, என் கைமணத்தை நம்பி ஹோட்டல் தொழில்ல இறங்கலாம்னு கணவர்கிட்ட சொன்னேன். அவரும், கோழிப்பண்ணை இருக்குறதால பிரியாணி ஹோட்டலை நடத்திடலாம்னு நம்பிக்கை கொடுத்தார்.

அசைவ வகைகள்
அசைவ வகைகள்

இருந்தாலும், திண்டுக்கல்ல ஏற்கெனவே பல பிரபலமான பிரியாணிக் கடைகள் இருக்குறதால எங்களால போட்டிபோட்டு எங்களுக்குனு ஒரு இடத்தை அடைஞ்சிட முடியுமானு தயக்கம் இருந்துச்சு. அது மட்டுமல்லாம, திண்டுக்கல்ல இருக்குற பல பிரபல பிரியாணிக் கடை உரிமையாளர்கள் எங்க உறவினர்கள் என்பதால, அவங்ககூட போட்டிபோட்டு தோத்துடக் கூடாதுனும் ஒரு பயம் இருந்தது. அதனால, பல முன் தயாரிப்புகள்ல இறங்கினோம்'' என்பவர், அதைப் பற்றிச் சொன்னார்.

மசாலா முக்கியம் பாஸ்!

``பிரியாணிக்கு ரொம்பவும் முக்கியமானது மசாலாதான். அதை எங்க வீட்டுலேயே கிட்டத்தட்ட நூறு முறை, நூறு விதங்கள்ல தயாரிச்சுப் பார்த்தேன். எங்க மனசுக்கு திருப்தியா வந்ததும்தான் எங்க முயற்சி மேல ஒரு பிடிப்பு வந்துச்சு'' என்று மோகனப்ரியா நிறுத்த, தொடர்ந்தார் அவரின் கணவர் வேணுகோபால்.

மோகனப்ரியா
மோகனப்ரியா
ஒன்பது மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி; அசத்திய பிரியதர்ஷினி!

``மசாலாவை என் மனைவி ரெடி பண்ண, நான் கடைக்கான வேலைகளைப் பார்க்கத் தொடங்கினேன். 2002-ல் திருச்சி பைபாஸ் ரோட்ல 5 லட்சம் ரூபாய் முதலீட்ல 15 ஊழியர்களோட `கோல்டு ஸ்டார்' பிரியாணி கடையைத் தொடங்கினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்கு, எது ஃபேமஸ்னு தேடித்தேடி வாங்கினோம்!

என்னதான் பிரியாணி மசாலா வாசனையும் சுவையும் கொடுத்தாலும், பிரியாணிக்குத் தேவையான உணவுப் பொருள்களைக் கொள்முதல் செய்வதிலும் அதிகம் மெனக்கெட வேண்டும் என்பதை உணர்ந்தோம். அதனால் சிறுமலை மிளகு, வடுகபட்டி மலைப்பூண்டு, பன்றிமலை ஏலக்காய், வியட்நாம் கிராம்பு, சிங்கப்பூர் பட்டைனு பிரியாணிக்குத் தேவையான பொருள்களையெல்லாம் பார்த்துப் பார்த்து வாங்கினோம். குறிப்பாக, கல்வார்பட்டியில ஆடுகள் வாங்குவோம். ஏன்னா, அந்த ஆடுகள் மலைப் புல்களை மேய்ந்து வளரக்கூடியது. அதனால பண்ணையில் வளரும் ஆடுகளின் கறியைவிட சுவை நல்லா இருக்கும். இப்படிப் பார்த்துப் பார்த்து வாங்குறதால செலவு அதிகமாக ஆகத்தான் செய்யும்'' என்றார்.

வேணுகோபால்
வேணுகோபால்
Vikatan

``சமையல்ங்கிற மேஜிக் என் கையிலதான் இருக்கு'' என்று தொடர்ந்தார் மோகனப்ரியா. ``காலையில 6 மணிக்கு சமையலுக்கான பொருள்களைத் தயார் செஞ்சு, 7 மணிக்கெல்லாம் அடுப்பைப் பற்றவெச்சுடுவோம். பெண்கள் 5 பேர் சேர்ந்துதான் சமைக்கும் வேலையைச் செய்வோம். எப்போதும் என் மேற்பார்வையிலதான் சமையல் நடக்கும். 10 மணிக்கெல்லாம் சமையல் முடிஞ்சிடும். 11 மணிக்கு டேபிள், சேர்களை எடுத்து வைத்து உணவு பரிமாறத் தயாராகிவிடுவோம்.

ஆரம்பத்துல சில வாடிக்கையாளர்கள் எங்க பிரியாணியில சின்னச் சின்ன குறைகளைச் சுட்டிக்காட்டினாங்க. அதையெல்லாம் சரிசெஞ்சோம். எங்களுக்குனு ஒரு பிரத்யேக சுவையைக் கொண்டு வர கிட்டத்தட்ட 7 வருஷமாச்சு.

ருசியைக் கொடுக்க லாபத்தைக் குறைச்சுக்கிட்டோம்!

தொடக்கத்தில் மாதம் 20,000 ரூபாய் மட்டுமே லாபம் எடுக்க முடிந்தது. கோழிப்பண்ணை இருப்பதால பெரிய அளவுல எங்களுக்கு பாதிப்பு ஏற்படலை. இப்போ மாசம் 2 லட்சம் வரை லாபம் கிடைக்குது. பிற கடைகளை ஒப்பிடும்போது, இந்த லாபம் குறைவுதான். ஆனா, வாடிக்கையாளர்களுக்கு நல்ல ருசியான உணவைக் கொடுத்து நமக்கான அடையாளத்தை ஏற்படுத்திக்கிறதுக்காகக் குறைந்த லாபத்தை ஏற்றுக்கொண்டோம்.

கோல்டு ஸ்டார் பிரியாணி
கோல்டு ஸ்டார் பிரியாணி
`கமகமனு மஞ்ச சீரகம் நாட்டுக்கோழி குழம்பு!' - மேலூர் `சேகர் கடை' ஸ்பெஷல் #Recipe

பிரியாணியின் அளவு... அதிகம்!

சமையலுக்குக் கொள்முதல் செய்யும் உணவுப் பொருள்களோட தரத்தில் மெனக்கெடுறதோடு, பிரியாணி மற்றும் கறியின் அளவையும் அதிகமாவே கொடுக்கிறோம். குறிப்பா, பிற கடைகள்ல ஒரு பெப்பர் சிக்கன் வாங்கினா ஒருத்தர்தான் சாப்பிடலாம். ஆனா, எங்ககிட்ட வாங்கினா 4 பேர் கொண்ட குடும்பமே சாப்பிடும் அளவுக்குக் கொடுக்குறோம். இதுவும்தான் லாபம் குறைவதற்கு காரணமா இருக்கு'' என்றவர்,

``பல கடைகள்ல, மட்டன் பிரியாணி செஞ்சுட்டு, அந்த ரைஸ்ல வேகவெச்ச சிக்கனை சொருகி கொடுத்துடுவாங்க. ஆனா, எங்ககிட்ட கோழிப்பண்ணை இருப்பதால, மட்டன் தனியாவும், கோழிக்கறி தனியாவும் போட்டு பிரியாணி தயார் செய்வோம். அப்போதான் கறியோட சாறு ரைஸ்ல இறங்கி நல்ல சுவை கிடைக்கும். மட்டன் பிரியாணி ரூ.290-க்கும் சிக்கன் பிரியாணி ரூ.170-க்கும் கொடுக்கிறோம். கூடவே, பிரத்யேகமா தயாரிக்கப்படும் பெப்பர் சிக்கன் கிரேவியும் கொடுக்குறோம். இதுதான் எங்க கடையின் தனிச்சிறப்பு'' என்றார் மோகனப்ரியா.

``வெற்றியின் ரகசியம் என்னனு கேட்டா, சுருக்கமா என்ன சொல்வீங்க?" என்றால் தம்பதியர் ஒரே குரலில் பதில் சொல்கிறார்கள்.

``சுவையான பிரியாணியை யார் வேணும்னாலும் கொடுக்கலாம்தான். ஆனா, சாப்பிடுறவங்களோட வயித்துக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படுத்தாததுதான் நல்ல பிரியாணி என்பதை மனசுல வெச்சுதான் தினமும் சமைக்கிறோம். எங்கள் பிரியாணியில எந்த ரசாயனமும் கலக்குறதில்ல. சாப்பிடும் போதே பிரியாணி மென்மையா தொண்டையில இறங்குறதை உணர முடியும். சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படாது. வயிறு மந்தம் ஆகாது'' என்று சொல்பவர்களுக்கு, இப்போது நான்கு கிளைகள் உள்ளன. ஐந்தாவது கிளைக்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்கள். ``ஆரம்பத்துல பிரியாணி செய்ய அரைப்படி அரிசி போட்டோம். இப்போ 50 படி அரிசி போடும் அளவுக்கு வளர்ந்திருக்கோம்'' என்கிறார்கள் பெருமைகொள்ளாமல்.

சிக்கன்
சிக்கன்
பிரியாணிக்கு தொடைக்கறி, குழம்புக்கு நெஞ்சுக்கறி; என்ன சமையலுக்கு எந்தக் கறி வாங்கணும்?

இதற்கிடையே, கோழியை வெட்டி லாலிபாப், லெக் பீஸ், நிஜாஸ், போன்லெஸ், விங்ஸ் எனப் பிரித்து, சிக்கன் மசாலா கலந்து, அரைக் கிலோ பாக்கெட்களில் நிரப்பி `ரெடி டூ குக்' உணவாக திண்டுக்கல் நகர் முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர்.

``வீட்ல சிக்கன் சமைக்க, கான்ஃபிளவர், சால்ட், தந்தூரி மசாலா, கரம்மசாலா, பெப்பர், சில்லிப் பவுடர், முட்டை, இஞ்சி பூண்டு பேஸ்ட், நெய்னு ரெசிப்பிக்கு ஏற்ப சேர்மானம் சேர்க்கணும். ஆனா, பலருக்கும் அதுக்கு நேரம் இருக்கிறதில்ல. ரெடிமேடு பொடிகள்ல நிறம், சுவைக்காக சேர்க்கப்படுற ராசயனங்களால அதைப் பயன்படுத்தவும் தயக்கம். ஆனா நாங்க, வீட்ல அரைக்கிறது போல மசாலா தயாரிச்சு சிக்கனை கலந்து கொடுக்குறதால சுவை, ஆரோக்கியம் ரெண்டும் உறுதிப்படுது. மக்கள் பயன்படுத்திப் பார்த்துட்டு பிடிச்சிருக்கிறதாலதான் மீண்டும் மீண்டும் வாங்குறாங்க'' என்றும் சொல்லும் மோகனப்ரியா - வேணுகோபால் தம்பதி, தங்கள் உணவகச் சங்கிலியை தமிழகம் முழுக்கக் கொண்டு செல்வதே தங்கள் இலக்கு என்கின்றனர்.

மணக்கட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு