'ஒரு நிலையம் ஒரு விளைபொருள்' (One Station One Product) என்ற மத்திய அரசின் புதிய திட்டத்தின்கீழ் கைத்தறி நெசவாளர்களால் நெய்யப்படும் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரலில் நேரடி விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில்வேயைப் பயன்படுத்தி உள்ளூர் தயாரிப்புகளின் விநியோகச் சங்கிலியை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். ஒவ்வொரு ரயில் நிலையத்தையும் ஒரு விளம்பர மையமாக மாற்றி அதன் மூலம் உள்ளூர் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தி விற்பதற்காக இத்திட்டத்தை முன்னிறுத்தியிருக்கிறது மத்திய அரசு. குறுசிறு தொழிலாளர்களுக்கான ஒரு அங்கீகாரமாய் இதை 2022-23 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எம்.ஜி.ஆர் சில்க்ஸ் என்ற பெயரில் சென்னை சென்ட்ரலில் திறக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் பட்டு விற்பனையகத்தை தெற்கு ரயில்வேயின் பெண்கள் நல அமைப்பின் தலைமை அதிகாரி ஜி.எம்.உமா அகர்வால் திறந்து வைத்தார். இதுகுறித்து காஞ்சிபுரம் நெசவு பட்டு விற்பனையக உரிமையாளர் பாலாஜியிடம் பேசினோம்.
“எந்நேரமும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நமக்கு நெசவு பட்டுக்களை அதன் இடத்திற்கே சென்று வாங்குவதற்கான நேரமும் பொறுமையும் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு கைத்தறி நெசவாளர்களின் கலை வண்ணத்திற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கச் செய்யும் விதமாக தொடங்கப்பட்டதே இந்தக் காஞ்சிபுரம் பட்டு விற்பனை நிலையம். ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிலையம் பலதரப்பட்ட மக்களையும் நிச்சயம் சென்றடையும்” என்று கூறினார்.

இந்த நிலையம் ஏப்ரல் 8-ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் எனத் தெரிகிறது.
தமிழகத்தைப் போலவே ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்க முதலிய மாநிலங்களிலும் அப்பகுதிகளுக்கான உள்ளூர் தயாரிப்புகளை விற்பனை செய்யும் அரங்குகள் ரயில் நிலையங்களில் திறக்கப்பட்டுள்ளன. உள்ளூர் விவசாயிகள் மற்றும் விவசாய நிறுவனங்களுக்குப் புதுமையான தளவாடங்களை உருவாக்கும் மத்திய அரசின் இந்தப் புதிய முயற்சி தனித்துவமான பிராந்திய தயாரிப்புகளைப் பரந்த பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.