Published:Updated:

விரட்டும் கொரோனா... என்னவாகும் இந்தியப் பொருளாதாரம்?

இதுதான் உடனடி தேவை!

பிரீமியம் ஸ்டோரி
கொரோனா நோய் பரவலால் உலகப் பொருளாதாரம் ஸ்தம்பித்திருக்கிறது! கொரோனாவால் உலக அளவில் 2 டிரில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக, ஐ.நா சபையின் டிரேட் அண்ட் டெவலப்மென்ட் (UNCTAD) அமைப்பு கணித்துள்ளது. ‘பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் முதல் 15 நாடுகள் கொரோனாவால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும்’ என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த 15 நாடுகளில் இந்தியாவும் அடக்கம். கடந்த ஓராண்டாகவே பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துவரும் இந்தியா, இதனால் பெரிதும் பாதிக்கப்படும்.

ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளுக்கு 15.6 பில்லியன் டாலர் அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படக்கூடும். அமெரிக்காவுக்கு 5.8 பில்லியன் டாலரும், ஜப்பானுக்கு 5.2 பில்லியன் டாலரும், தென் கொரியாவுக்கு 3.8 பில்லியன் டாலரும், தைவானுக்கு 2.6 பில்லியன் டாலரும், வியட்நாமுக்கு 2.3 பில்லியன் டாலரும், இந்தோனேசியாவுக்கு 312 மில்லியன் டாலரும் இந்தியாவுக்கு 348 மில்லியன் டாலர் அளவுக்கும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதித் துறையைப் பொறுத்தவரை, உலகளவில் 50 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

திணறும் ஏற்றுமதி, இறக்குமதித் துறை!

இந்தியாவின் பெரும்பான்மையான மருந்து வர்த்தகம் சீனாவுடன்தான் என்பதால், இந்தியாவில் மருந்துப்பொருள்களை உள்ளடக்கிய கெமிக்கல்ஸ் துறைதான் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும். ஐரோப்பிய நாடுகளில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளதால், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களை முழுமையாக அங்கு உள்ள பெறுநர்கள் பெற்றுக்கொள்ளவில்லை. பெற்றுக் கொள்ளப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப் படாமல் முடங்கியுள்ளன. விற்பனையான பொருள்களுக்கான பணத்தை வசூலிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கமாலுதீன்
கமாலுதீன்

இதுகுறித்து ‘ப்ளூபாரத் எக்சிம் நிறுவனத்தின் இயக்குநரான கே.எஸ்.கமாலுதீனிடம் பேசினோம். “நாங்கள் சிங்கப்பூருக்கு அக்ரி தயாரிப்புகளை ஏற்றுமதி செய்துவருகிறோம். சிங்கப்பூரில் ரெஸ்டாரன்டுகள் நடத்திவருபவர்கள்தான் எங்களின் வாடிக்கையாளர்கள். தற்போது கொரோனா அச்சம் காரணமாக சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. உள்ளூர் மக்களும் ஹோட்டல்களுக்குச் செல்லத் தயங்குகின்றனர். இதனால் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதித்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் எல்லா ஏற்றுமதியாளர்களுக்கும் எங்களுக்கு ஏற்பட்ட அதே பிரச்னைதான். இதனால் தங்களின் பணியாளர்களுக்கு சம்பளம் தர முடியாமல் ஏற்றுமதி நிறுவனங்கள் சிரமப்படு கின்றன. ஜி.எஸ்.டி மற்றும் வருமான வரித் தாக்கலுக்கான கால அவகாசத்தை நீட்டித் திருப்பதை வரவேற்கிறோம். ஏற்றுமதித் துறைக்கு அரசுத் தரப்பிலிருந்து மேலும் சில சலுகைகளை எதிர்பார்க்கிறோம். இன்னும் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை வங்கிகளின் தரப்பில் விதிக்கப்படும் கட்டணங்களைக் குறைத்தால் ஏற்றுமதியாளர்கள் மீண்டு வருவதற்குப் பேருதவியாக இருக்கும்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திண்டாடும் சுற்றுலாத் துறை!

கொரோனா பரவத் தொடங்கியதுமே டூர்ஸ் & டிராவல்ஸ் துறை நேரடியாக பாதிக்கப்பட்டது. கொரோனா பரவும் வேகமும் உயிரிழப்புகளின் அளவும் அதிகரிக்க அதிகரிக்க, பல நாடுகள் விமானப் போக்குவரத்து மட்டுமன்றி உள்நாட்டு ரயில் போக்குவரத்தையும் முடக்கிக் கொண் டுள்ளன. இந்தியாவும் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இதனால் உலக அளவில் டூர்ஸ் & டிராவல்ஸ் துறையைச் சார்ந்த 5 கோடி பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் டூர்ஸ் & டிராவல்ஸ் துறையில் சுமார் 9,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் பரவல் அதிகரிக்கும்பட்சத்தில் இழப்பு மேலும் அதிகரிக்கலாம்.

விரட்டும் கொரோனா... என்னவாகும் இந்தியப் பொருளாதாரம்?

சுற்றுலாத் துறை பாதிப்பின் நீட்சியாக ஸ்டார் அந்தஸ்துள்ள ஹோட்டல்கள், ரெஸ்டாரன்டுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 70 முதல் 75 சதவிகிதம் வரை புக்கிங் ஆகக்கூடிய ஹோட்டல்களில் தற்போது 20 சதவிகித அளவிலேயே புக்கிங் ஆகின்றன. ரெஸ்டா ரன்டுகளில் உணவு உண்போரின் எண்ணிக்கையும் 20 லிருந்து 25 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. சினிமா தியேட்டர்களும் மால்களும் மூடப்பட்டுள்ளதால், அவற்றின் வருமானமும் வெகுவாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மக்கள் பெருமளவு ஓரிடத்தில் குவியக்கூடிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திப்போடப்படுவதால் ஈவென்ட் மேனேஜ் மென்ட் நிறுவனங்களும் பெரும்பாதிப்பைச் சந்தித்துள்ளன.

சிக்கலில் சேவைத் துறை!

கார்ப்பரேட் நிறுவனங்கள் மல்ட்டி நேஷனல் கார்ப்பரேட் நிறுவனங்களில் வெளிநாட்டுப் பணிகள் பெரிதும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. பணி ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது ரத்தானதால், புதிய பணிகளைத் தொடங்குவது தள்ளிப் போவதால் வருமான இழப்பு ஏற்படக் கூடும். அலுவலகங்களுக்குச் சென்றும், வீடுவீடாகச் சென்றும் சேவை வழங்கும் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அறிவுறுத்தியுள்ளன. இதனால் கூடுதல் செலவும் பணியில் தொய்வும் ஏற்பட வாய்ப்புள்ளது. போக்குவரத்து பெருமளவு தவிர்க்கப்பட்டு வருவதால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் தொடங்கி ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் வரை பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

கந்தலான கார்மென்ட்ஸ்!

2018-19ம் நிதியாண்டில் இந்தியாவுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுத் தந்தது, ஆடைத் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதிதான். ஆடைத் தயாரிப்பில் 60 சதவிகிதம் வருமானம் ஏற்றுமதி மூலமாகவும், 40 சதவிகித வருமானம் உள்நாட்டு விற்பனையிலும் கிடைக்கிறது. ஏற்றுமதி மட்டுமல்லாது உள்நாட்டு வியாபாரமும் முடங்கியுள்ளதால் கார்மென்ட்ஸ் துறை கட்டுக்கடங்காத சோகத்தில் மூழ்கியுள்ளது. அதுமட்டுமல்லாது சீனாவிலிருந்து கிடைக்க வேண்டிய ஆடைத் தயாரிப்புக்கான பொருள் களின் வரவு தடைப்பட்டுள்ளதும் இந்தத் துறைக்கு மேலும் இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ளது.

இதுதான் உடனடி தேவை!

இந்தப் பாதிப்பின் தாக்கத்தைக் குறைக்க, அரசு ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா என்று தொழில் துறையினர் எதிர் பார்த் திருந்த நிலையில், “2018-2019ம் ஆண்டுக்கான வருமான வரியை அபராதத் துடன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மார்ச் 31-ம் தேதியிலிருந்து ஜூன் 30-ம் தேதியாக மாற்றப்படுகிறது என்றும், டி.டி.எஸ் தாமதமாகச் செலுத்துவதற்கான வட்டியை 18 சதவிகிதத்திலிருந்து 9 சதவிகிதமாகக் குறைக்கப் படுவதாகவும், ஆதார் கார்டையும் பான் கார்டையும் இணைப்பதற்கான தேதியை மார்ச் 31-லிருந்து ஜூன் 30-க்குத் தள்ளிவைத்துள்ளதா கவும் அறிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான ஜி.எஸ்.டி தாக்கலுக்கு ஜூன் 30 வரை கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார். “இந்த அறிவிப்பு, எங்களது எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யவில்லை. வட்டியில்லா வங்கிக் கடன் போன்ற நிதி சார்ந்த உதவிகள்தான் உடனடியாகத் தேவைப் படுகின்றன” என்கின்றனர் தொழில்துறையினர்.

சிவகுமார்
சிவகுமார்

அரசிடம் தொழில்துறையினரின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது என்று, சிறுதொழில் முனைவோர் ஆலோசகர் எஸ்.சிவகுமாரிடம் கேட்டோம். “உற்பத்தி திடீரென முடங்கியதால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட முடியாமல் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் தத்தளிக்கின்றன. நிறுவனங்களின் நெருக்கடி நிலையையும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத் தையும் கருத்தில்கொண்டு குறு, சிறு நிறுவனங்களுக்கு தற்காலிகக் கடனுதவி வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில், தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதைப்போல் இந்தியா முழுவதும் உள்ள ரேஷன் அட்டை பயனாளர் களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும்.

கொரோனா பாதிப்புக்கு என பாண்ட் உருவாக்கி நிதி திரட்டும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடலாம். மேலைநாடுகளில் அந்த நாட்டு அரசுகள் வங்கிகளுக்கு ‘சப்போர்ட் கேரன்டி’ எனும் உத்தரவாதம் அளிக்கின்றன. பிரிட்டன் அரசு 300 பில்லியன் பவுண்டு அளவுக்கு வங்கிக்கு சப்போர்ட் கேரன்டி கொடுக்கிறது. அதேபோல், இந்திய அரசும் வங்கிகளுக்கு லோன் கேரன்டி அளிக்கலாம். கொரோனா வைரஸின் தாக்கம் குறையும் வரை வங்கிக்கடன் தவணைகளைத் தள்ளிவைக்கலாம். இ.எஸ்.ஐ, பி.எஃப் போன்றவற்றுக்கும் விலக்கு அளிக்கலாம். வாராக்கடன் கணக்கீட்டுக்கான கால அளவை 90 நாள்கள் என்பதிலிருந்து 180 நாள்களாக அதிகரிக்கலாம். விவசாயத்துக்கு பயிர்க் காப்பீடு தருவதைப்போல் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கும் காப்பீடு வசதி யைத் தொடங்க வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு