Published:Updated:

டிவிடெண்ட் விநியோக வரி, பட்ஜெட்டில் ரத்தாகிறதா? #Budget2020

டிவிடெண்ட்
டிவிடெண்ட்

அரசின் வருமானம் குறைகிறது என, அரசுத் தரப்பில் நினைத்ததன் விளைவாக டிவிடெண்ட் விநியோக வரி கொண்டு வரப்பட்டது. தற்போது ஒருவருக்கு 20.55% அளவு டிவிடெண்ட் விநியோக வரி விதிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு, பிப்ரவரி 1-ஆம் தேதி சனிக்கிழமை அன்று, எதிர்வரும் 2020-21-ம் நிதி ஆண்டுகான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்தப் பட்ஜெட்டில் பல தரப்பினருக்கும் பல விதமான எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. ஆனபோதும், பங்குச் சந்தை முதலீட்டாளருக்கு இருக்கும் முக்கியமான எதிர்பார்ப்பு, பங்குச் சந்தை முதலீட்டின்மூலம் கிடைக்கும் டிவிடெண்டுக்கு விதிக்கப்படும் விநியோக வரியினை நீக்க வேண்டும் என்பதுதான்.

டிவிடெண்ட்
டிவிடெண்ட்

பங்கு முதலீட்டில் கிடைக்கும் லாபத்துக்கு, முன்பு வரி எதுவும் விதிக்கப்படவில்லை. இதனால், நிறுவனத்தின் சொந்தக்காரர்களும் பெரும் முதலீட்டாளர்களும் தங்களுக்குக் கிடைக்கும் லாபத்துக்கு வரி கட்டாமலே இருக்கிறார்கள். இதன் காரணமாக அரசின் வருமானம் குறைகிறது என அரசுத் தரப்பில் நினைத்ததன் விளைவாக டிவிடெண்ட் விநியோக வரி கொண்டு வரப்பட்டது. தற்போது ஒருவருக்கு 20.55% அளவு டிவிடெண்ட் விநியோக வரி விதிக்கப்படுகிறது.

இந்த வரியானது பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடம் பாதகமான எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது. வரிக்குப் பயந்து டிவிடெண்ட் கொடுப்பதை, பல நிறுவனங்கள் நிறுத்தும் போக்கும் தொடர்கிறது. எனவேதான், இந்த வரியை நீக்கவேண்டும் என, `நேரடி வரி வருவாய்த் துறை'யின் தலைவரின் தலைமையில் அமைந்த குழு பரிந்துரை செய்தது. நீண்டகால மூலதன ஆதாய வரியையும், செக்யூரிட்டீஸ் ட்ரான்ஸாக்சன் டாக்ஸையும் தொடரலாம் என்றும் இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. ஒரு நிறுவனம், அது சம்பாதித்த லாபத்துக்கு ஏற்கெனவே வரி கட்டிவிட்டு, பிறகு டிவிடெண்ட் தருகிறது. அப்படித் தரும் டிவிடெண்ட்டுக்கும் வரி கட்ட வேண்டும் என்பது ஒரே வருமானத்துக்கு இரண்டு முறை வரி கட்டுகிறமாதிரி அமைகிறது. எனவே, இந்த வரியைப் பற்றி நிதி நிர்மலா சீதாராமனே அதிருப்தி தெரிவித்திருக்கிறார். உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்ல; வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இந்த வரி பல பாதகத்தை விளைவித்திருப்பதால், இந்த வரியானது நீக்கப்பட வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

டிவிடெண்ட்
டிவிடெண்ட்

இந்தக் கோரிக்கையை ஏற்று, வருகிற பட்ஜெட் தாக்கலில் இந்த வரியானது நீக்கப்பட்டாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள் சிலர். இந்த வரியை நீக்கிவிட்டு, டிவிடெண்ட் வருமானத்தை ஒருவரது மொத்த வருமானத்துடன் சேர்த்து அதற்கேற்ப வரி விதிக்கலாமா என்று மத்திய அரசு யோசித்து வருவதாகத் தெரிகிறது.

அரசின் வரி வருவாய் குறைந்துவரும் நிலையில், இந்த வரியானது முழுவதுமாக நீக்கப்படுமா அல்லது இதற்கு பதிலாக எந்தப் புதிய வரியாவது விதிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

அடுத்த கட்டுரைக்கு