Published:Updated:

குடியரசுத் தலைவர் மாதம் ₹2.75 லட்சம் வருமான வரி கட்டுகிறாரா? - உண்மை என்ன?

President Ram Nath Kovind
President Ram Nath Kovind ( Photo: Twitter / Rashtrapati Bhavan )

உண்மையில் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் வருமான வரி செலுத்துகிறாரா, புதிய விதிமுறைகளின் படி ரூ.5 லட்சம் சம்பாதிக்கும் அவர் செலுத்த வேண்டிய வருமான வரி எவ்வளவு?

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹத் மாவட்டத்தில் உரை நிகழ்த்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ``எனக்கு மாதத்துக்கு ரூ.5 லட்சம் சம்பளம். அதில் ரூ.2.75 லட்சத்தை வரியாகச் செலுத்துகிறேன். இந்தியாவில் அனைவரும் முறையாக வரி செலுத்த வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு இது உதவும்" என்று பேசியது சர்ச்சையாகிவிட்டது.

இன்று ட்விட்டர் எங்கிலும் ராம்நாத் கோவிந்தின் இந்தப் பேச்சு காரசாரமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. `இந்திய குடியரசுத் தலைவருக்கு, வரியில்லா வருமானம் `Citing President’s (`Emoluments and) Pensions Act, 1951' என்கிற சட்டம் இருக்கும் போது, இவர் 2.75 லட்சம் ரூபாய் வரியை செலுத்துவதாகச் சொல்கிறாரே? அப்படியே இவருடைய வருமானத்துக்கு வரி செலுத்துவதாக இருந்தாலும், புதிய வருமான வரி விதிமுறையின் படி, இவருடைய மாதச் சம்பளத்தில் பாதி சம்பளத்தை வரியாகச் செலுத்த வேண்டிய அவசியமில்லையே" என்கிற விவாதம் சூடுபிடித்திருக்கிறது.

குடியரசுத் தலைவருக்கு வரி உண்டா?

குடியரசுத் தலைவர் வருமான வரி செலுத்தும் வரம்புக்கு உட்பட்டவரா எனக் கேள்விகள் எழுந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்று குடியரசுத் தலைவரும் வருமான வரி செலுத்தும் வரம்புக்கு உட்பட்டவர்தான் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. தனது ஊதியம் முழுவதையும் அப்படியே, மத்திய அரசின் நிவாரண நிதிக்கு குடியரசுத் தலைவர் வழங்க முன்வந்தால் மட்டுமே, அவருக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க வருமான வரிச் சட்டம் வகை செய்கிறது. இது குடியரசுத் தலைவருக்கு மட்டுமல்ல, அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும்.

உண்மையில் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் வருமான வரி செலுத்துகிறாரா, புதிய விதிமுறைகளின்படி ரூ.5 லட்சம் சம்பாதிக்கும் அவர் செலுத்த வேண்டிய வருமான வரி எவ்வளவு? இது குறித்து ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமாரிடம் பேசினோம்.

``தற்போதுள்ள புதிய இந்திய வருமானவரிச் சட்டத்தில், குடியரசுத் தலைவருக்கான சம்பளத்துக்கு வருமான வரி இல்லை என்கிற வாசகத்தைப் பார்க்க முடியவில்லை. அவருக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சம் மாத ஊதியத்துக்கு, அவர் வருமான வரி செலுத்துவதாகக் கணக்கில் எடுத்துக்கொள்வோம்.

எஸ். சதீஷ்குமார், ஆடிட்டர்
எஸ். சதீஷ்குமார், ஆடிட்டர்

அப்படிப் பார்த்தாலும், வருடத்துக்கு அவர் 17,58,900 ரூபாயை வரியாகச் செலுத்தினால் போதும். மாதம் 1,46,575 ரூபாய் வருமான வரியாக வருகிறது. ஆனால், குடியரசுத் தலைவர் 2.75 ரூபாயை வருமான வரியாகச் செலுத்துவதாகக் கூறுவது நடைமுறையில் உள்ள வருமான வரி வசூலிப்புக்கு முரணாக உள்ளது.

இன்னும் விவரமாகச் சொல்லப்போனால், மாதம் ரூ.5 லட்சம் என்கிற கணக்குப்படி, வருடத்துக்கு ரூ.60 லட்சத்தை அவர் சம்பளமாகப் பெறுகிறார். ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் நபருக்கு 30% வருமான வரி உண்டு. 50 லட்சம் ரூபாய்க்கு மேல் என்கிறபோது சர்சார்ஜ் மற்றும் `Education Cess' வரியும் சேர்ந்து செலுத்த வேண்டியிருக்கும். அப்படிக் கணக்கிட்டுப் பார்க்கும்போதுதான் குடியரசுத் தலைவருக்கு ஆண்டுக்கு 17,58,900 ரூபாயும், ஒரு மாதத்துக்கு சுமார் 1,46,575 ரூபாயும் வருமான வரியாக வருகிறது" என்றார் தெளிவாக.

கொரோனா நிவாரண நிதிக்கு 30% சம்பளம்!

கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம், தனது மாதச் சம்பளத்திலிருந்து 30% தொகையை, கொரோனா நிவாரண நிதிக்காகப் பிடித்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார் இந்திய குடியசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த். அதன்படி பார்த்தால், ஆண்டுக்கு 18,00,000 லட்சம் ரூபாய்க்கு அவருக்கு வருமான வரி கிடையாது. மீதமுள்ள 42 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும்.

President Ram Nath Kovind
President Ram Nath Kovind
Photo: Twitter / Rashtrapati Bhavan

இதன்படி பார்க்கும்போது, புதிய வருமான வரி விதிமுறையின் கீழ் ஆண்டுக்கு `Education cess' வரி சேர்த்து ரூ.11,15,400 வரியாக கட்ட வேண்டி இருக்கிறது. மாதத்துக்கு கணக்கிடும்போது ரூ.92,950-தான் வருகிறது. எதன் அடிப்படையில் மாதம் 2.75 லட்சம் ரூபாயை வருமான வரி செலுத்துவதாகக் குடியரசுத் தலைவர் பேசியிருக்கிறார் என்கிற கேள்வியும் சந்தேகமும் எழுகிறது.

குடியரசுத் தலைவரின் இதர சலுகைகள்!

இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்துக்கு, இலவச பங்களாவாக ராஷ்டிரபதி பவன் இருக்கிறது. பர்சனல் செக்ரட்டரி உட்பட 5 தனிப்பட்ட ஊழியர்கள் இவருக்கு இருக்கிறார்கள். இவர்களின் மாதாந்தர சம்பளம் ரூ.60,000. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்.600 ரக கார், காப்பாளர்கள். வாழ்நாள் முழுவதற்குமான மருத்துவ வசதிகள். இரண்டு லேண்டுலைன் போன் மற்றும் ஒரு மொபைல் போன்.

President Ram Nath Kovind
President Ram Nath Kovind
Photo: Twitter / Rashtrapati Bhavan

குடியரசுத் தலைவர் உட்பட, அவருடன் பயணிக்கும் அனைவருக்குமான ரயில் மற்றும் விமானப் பயணத்துக்கான செலவுகள் இலவசம். ஆக இவை அனைத்துக்கும், இந்தியாவின் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே ஒரு வருடத்துக்கு இந்திய அரசால் செலவு செய்யப்படும் தொகை சுமார் ரூ.225 கோடி.

`இந்திய குடிமக்கள் கட்டாயம் வருமான வரி கட்ட வேண்டும்' என்று சொல்வதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், நாட்டின் முதல் குடிமகனாக இருக்கும் குடியரசுத் தலைவர், தான் கட்டும் வருமான வரி விவரங்களைப் பொதுவெளியில் தப்பும் தவறுமாக பகிர்வது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு