Published:Updated:

10 வருடங்களாக வருமான வரி செலுத்தாத ட்ரம்ப்... நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட ஷாக் தகவல்!

America
America ( AP )

வரி செலுத்தும் விவரங்களை டிரம்ப் நிச்சயம் வெளியிட மாட்டார் என்றும் ஏனெனில் அவர் வரியே செலுத்துவதில்லை என்றும் ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டியிருந்தார்.

"அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகளுக்கான வருமான வரியைக் கட்டவில்லை" என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. 'ஒரு வல்லரசு நாட்டின் அதிபரே வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கியிருக்கிறார்' என உலக மீடியாக்களில் இப்போது பேசுபொருளாக மாறியிருக்கிறார் டொனால்டு டிரம்ப். ''டொனால்டு டிரம்ப் தனது ரியாலிட்டி தொலைக்காட்சித் திட்டம் மற்றும் பிற உரிம ஒப்பந்தங்களில் இருந்து 2018-க்குள் 427.4 மில்லியன் டாலர் வருமானம் பெற்றிருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகளுக்குரிய வருமான வரிகளைச் செலுத்தவில்லை என்றும் 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 750 டாலர் செலுத்தி உள்ளார்" என்றும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்

மேலும், "டிரம்ப் தனது பிஸினஸில் பெரும் இழப்புகளைச் சந்தித்து வருவதாகக் கூறி வருமான வரியைக் குறைத்துக் காட்டியுள்ளார். 2018-ம் ஆண்டில் டிரம்ப் 47.4 மில்லியன் டாலர் இழப்பைக் கோரியுள்ளார். ஆனால் அந்த ஆண்டு வருமானமாக குறைந்தபட்சம் 434.9 மில்லியன் சம்பாதித்திருக்கிறார். டொனால்டு டிரம்ப் வரி கட்டவில்லை என்பதற்கான தரவுகள் இருப்பதாகவும் அதிபர் வேட்பாளர்களுக்கான நிலையான நடைமுறையிலிருந்து விலகி, தனது வரிகளை வெளியிட டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார்" என்றும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப், "இது முற்றிலும் பொய்யான செய்தி. உண்மையில், எனக்குக் கிடைத்த வருமானத்திற்கு நான் வரி செலுத்தியுள்ளேன். அது தணிக்கைக்கு உட்பட்டது" என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

இவரைப் போலவே, இவருடைய வழக்கறிஞர் ஆலன் கார்டன், "கடந்த தசாப்தத்தில், ஜனாதிபதி டிரம்ப் மத்திய அரசாங்கத்திற்கு பல்லாயிரக்கணக்கான டாலர்களைத் தனிநபர் வரியாக செலுத்தியுள்ளார். இதில் 2015-ம் ஆண்டில் தனது வேட்புமனுவை அறிவித்ததிலிருந்து மில்லியன் கணக்கான தனிப்பட்ட வரிகளை செலுத்தியுள்ளார். அதனால், வரி கட்டவில்லை என்று சொல்வதில் நியாயமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

வரி
வரி

ஹிலாரி கிளின்டனுக்கு நெருக்கமான வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள், "அமெரிக்க அதிபர்களில், டொனால்ட் டிரம்ப் மட்டுமே வரி செலுத்தும் தகவல்களைப் பாதுகாப்பதில் தீவிரமாக இருக்கிறார். இவர் ஒருவர் மட்டுமே வரி செலுத்துவதை பகிரங்கமாக அறிவிப்பதில்லை. 'நான் செலுத்தும் வரி குறித்த விவரங்களை விரைவில் வெளியிடுவேன்' என்றார். ஆனால் அவர் எப்போது வெளியிடுவார் என்பது தொடர் கேள்விக்குறியாகவே உள்ளது.

2016-ம் ஆண்டு முதல் வரி செலுத்தும் விவரங்களை அறிவிப்பதாகக் கூறி வருகிறாரே ஒழிய, இதுவரை அவர் வெளியிட முன்வரவில்லை. இதனால்தான் 2015-ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போதுகூட டிரம்ப் நிச்சயம் வரி செலுத்தும் விவரங்களை வெளியிட மாட்டார் என்றும் ஏனெனில் அவர் வரியே செலுத்துவதில்லை என்றும் ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டியிருந்தார்" என டிரம்ப் நடவடிக்கையின் மீதான அவர்களின் எதிர்வாதத்தை முன்வைக்கிறார்கள்.

முதல்முறையாக மாஸ்க் அணிந்த டொனால்டு ட்ரம்ப்! #PhotoOfTheDay
அடுத்த கட்டுரைக்கு