Published:Updated:

பெருநகரம் முதல் குக்கிராமம் வரை... கைகொடுக்கும் சலவைத் தொழில்!

சலவைத் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
சலவைத் தொழில்

தொழில் பழகுவோம் வாங்க! - 9

பெருநகரம் முதல் குக்கிராமம் வரை... கைகொடுக்கும் சலவைத் தொழில்!

தொழில் பழகுவோம் வாங்க! - 9

Published:Updated:
சலவைத் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
சலவைத் தொழில்

'ஆள் பாதி ஆடை பாதி’ என்பார்கள். நாம் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், வெளியிடங்களில் நம் மதிப்பை முதலில் உறுதிசெய்வது நம்முடைய வெளித்தோற்றம் தான். எனவே, வெளியிடங்களுக்குச் செல்லும் போது நன்கு சலவை செய்து, அயர்ன் செய்யப் பட்ட உடையை உடுத்த வேண்டிய கட்டாயத் தில் நாம் இருக்கிறோம். அந்த வகையில், நம் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட இயந்திர சலவைத் தொழிலுக்கான (லாண்டரி சர்வீஸ்) வரவேற்பு உயர்ந்து கொண்டே வருகிறது. சிறந்த தொழில் வாய்ப்பாகத் திகழும் சலவைத் தொழிலில் வெற்றி பெறும் ஆலோசனைகளை இந்த வாரம் வழிகாட்டுகிறார், திருச்சியைச் சேர்ந்த தொழில் ஆலோசகரான ராமசாமி தேசாய்.

கிராமம் டு நகரம் வரை...

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, பலதரப் பட்டவர்களின் துணிகளைத் துவைத்து, அயர்ன் செய்து கொடுக்கும் தொழிலைக் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் செய்து வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் நாளடைவில் மாற்றுத்தொழில் நோக்கிச் சென்றதால், சலவைத் தொழிலில் நவீனமும் தொழில் நுட்பமும் சேர்ந்தது. முன்பெல்லாம் விசேஷ நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது மட்டுமே பெரும்பாலானோர் ஆடைகளை அயர்ன் செய்து பயன்படுத்துவார்கள். ஆனால், கல்வி மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களுக்காக வெளியிடங்களுக்குச் செல்லும் தேவை தற்போது அதிகரித்திருப்பதால், நன்றாகத் துவைத்து, அயர்ன் செய்த ஆடைகளைப் பயன்படுத்துவது பலருக்கும் அவசியமானதாக மாறிவிட்டது.

பல்வேறு காரணங்களால் இன்றைய சூழலில் பல குடும்பங்களில் தினமும் துணி துவைப்பதும், அயர்ன் செய்வதும் சிரமமான தாக இருக்கிறது. வீட்டிலேயே அயர்ன் செய்தாலும், அயர்ன் சென்டரில் கிடைக்கும் ‘ஃபினிஸிங் குவாலிட்டி’ கிடைப்பதில்லை என்பது பலரின் எண்ணம். இதனால், கிராமம் முதல் நகரம் வரை எல்லா பகுதிகளிலும் சலவைத் தொழிலுக்கான முக்கியத்துவம் கூடியுள்ளது.

பெருநகரம் முதல் குக்கிராமம் வரை... கைகொடுக்கும் சலவைத் தொழில்!

ஒரு துறை மட்டுமே கை கொடுக்காது...

துணிகளைத் துவைப்பது மற்றும் அயர்ன் செய்து கொடுப்பது போன்ற இரண்டு செயல்பாடுகளையும் சேர்த்து அல்லது மக்களின் தேவைக்கேற்ப இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் தனியாகச் செய்யலாம். மக்களுக்கான நேரடிப் பயன்பாடு தவிர, தங்கும் விடுதிகள், மருத்துவ மனைகள், நர்சிங் ஹோம், அழகு நிலையங்கள், உணவகத் தேவைகளுக்கான துணிகளைத் தினமும் துவைக்க வேண்டிய அவசியம் இருப்பதால், இந்தத் துறையில் உள்ள தொழில் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு பலன் பெறலாம். வாடிக்கையாளர்கள் நம்மைத் தேடி வந்து ஆர்டர் கொடுப்பதைத் தாண்டி, ஹோம் டெலிவரி முறையிலும் வாடிக்கையாளர்களைக் கவரலாம்.

ராமசாமி தேசாய்
ராமசாமி தேசாய்

எந்த இடம் பொருத்தமானது?

சலவைத் தொழிலுக்கு நீர் அதிகம் தேவைப்படும் என்ப தால், ஓரளவுக்கு நீர் ஆதாரம் அதிகம் உள்ள பகுதியில் ஆலை அமைக்கலாம். கலங்கல் ஏதும் இல்லாத, அதிக உப்புத்தன்மை இல்லாத வகையில், நிலத்தடி நீர் மென்மையானதாகவும் துணி துவைக்க ஏற்றதாகவும் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் நிலத்தடி நீரைச் சுத்தம் செய்ய ஃபில்டர் யூனிட்டும் அமைத்துக் கொள்ளலாம்.

தொழிற்சாலை அமைக்க, சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களின் ஆட்சேபனை இருக்கக் கூடாது. மக்களின் ஆடைகள், மருத்துவமனை துணிகள், ஹோட்டல் பயன்பாட்டுத் துணிகள் என ஒவ்வொரு தேவைக் கான துணியையும் தனித்தனி பிரிவுகளில் சலவை செய்து, அயர்ன் செய்து கொடுப்பது சிறந்தது. அரசு மருத்துவமனைகள் மற்றும் ரயில்வே துறையில் ஒப்பந் தம் பெற்றும், அந்தத் துறைகளுக் கான துணிகளையும் சலவை செய்து தருவது நிலையான வர்த் தக வாய்ப்பை உறுதி செய்யலாம்.

பெருநகரம் முதல் குக்கிராமம் வரை... கைகொடுக்கும் சலவைத் தொழில்!

நேர்த்தியான செயல்பாடுகள்...

வாடிக்கையாளரிடமிருந்து துணியைப் பெற்றதும், அடர் நிறம் மற்றும் வெண்மை நிறம் என நிறத்தைப் பொறுத்து துணிகளைப் பிரிப்பது, கறை படிந்த துணி, சாயம் போகும் துணி என ஒவ்வொரு துணியின் தன்மைக்கு ஏற்ப அவற்றைப் பிரித்த பிறகே அடுத்தடுத்த வேலைகளைத் தொடங்க வேண்டும்.

துணி துவைப்பது, துணியிலுள்ள நீரை வெளியேற்றுவது, துணியை உலர்த்துவது போன்ற பணிகளை பிரத்யேக இயந்திரங்களைக் கொண்டு செய்யலாம். மக்களின் ஆடைகளை எலெக்ட்ரிக்கல் மெஷினிலும், தலையணை உறை, படுக்கை விரிப்பு போன்ற விடுதி, மருத்துவமனை போன்ற பிற பயன்பாடுகளுக்கான ஆடைகளை ஸ்டீம் மெஷினைப் பயன் படுத்தியும் அயர்ன் செய்யலாம். சலவைக்குப் பயன்படுத்திய நீரைக் கழிவுநீர் கால்வாயில் நேரடியாக விடலாம்.

வங்கிக் கடனுதவி!

நடுத்தர அளவிலான ஆலையை அமைக்க, ரூ.30 லட்சம் முதலீடு தேவைப்படும். ‘நீட்ஸ்’ திட்டத்தில் 25% மானியம் பெறலாம்.

பெருநகரம் முதல் குக்கிராமம் வரை... கைகொடுக்கும் சலவைத் தொழில்!

மாத வருமானம் ரூ.8,25,000...

ஒரு நாளில் 600 பெட்ஷீட் மற்றும் இருபாலர் ஆடைகள், தலையணை உரை, டவல் உள்ளிட்ட இதர வகையில் 1,500 துணிகளைத் துவைத்து அயர்ன் செய்து கொடுக்கலாம். ஒரு பெட்ஷீட்டுக்கு ரூ.20 வீதம், ஒரு மாதத்தில் 25 தினங்களுக்கு ரூ.4,50,000 வருமானம் கிடைக்கும். மற்ற 1,500 துணிகளில், ஒரு துணிக்கு ரூ.10 வீதம், 25 தினங்களுக்கு மொத்தமாக ரூ.3,75,000 வருமானம் கிடைக்கும். மொத்தமாக ஒரு மாதத்துக்கு ரூ.8,25,000 வருமானம் ஈட்டலாம்.

(தொழில் பழகலாம்)

செளமியா விஜயராகவன்
செளமியா விஜயராகவன்

நேர்த்தியாகவும் தரமாகவும் இருக்க வேண்டியது அவசியம்!

ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்த ‘பட்ஜெட் வாஷ்’ நிறுவன உரிமையாளரான செளமியா விஜயராகவனிடம், அவரின் சலவைத் தொழில் அனுபவம் குறித்துப் பேசினோம். “திருச்சியைச் சுற்றியுள்ள இயந்திர வடிவமைப்பு நிறுவனங்கள் சிலவற்றுக்கு, பல்வேறு உதிரிபாகங்களைத் தயாரித்து கொடுக்கும் நிறுவனத்தை என் கணவர் நடத்தி வந்தார். மாற்றுத்தொழிலில் இறங்க வேண்டிய தேவை அவருக்கு ஏற்பட்டதால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் இருவரும் இணைந்து ‘லாண்டரி சர்வீஸ்’ தொழிலில் நுழைந்தோம். பெரும்பாலானோருக்கும் ஆடைகள் என்பது சென்டிமென்ட் சார்ந்தது என்பதால், ஒவ்வொரு துணியையும் கவனமுடன் சலவை செய்து கொடுக்க வேண்டும். நம் தொழில் நேர்த்தியாகவும் தரமாகவும் இருக்க வேண்டியது அவசியம். இதன் மூலம், வாடிக்கையாளர்களின் சிபாரிசால் தொழில் விரிவடையும். மக்களுக்கான நேரடிப் பயன்பாடு மற்றும் தங்கும் விடுதிக்கான துணிகளை மட்டுமே நாங்கள் சலவை செய்துகொடுக்கிறோம். ஆண்டுக்குப் பல லட்சம் வருமானம் ஈட்டுகிறோம். பெண்களுக்கு அதிக அனுபவம் கொண்ட தொழில் என்பதால், முத்ரா திட்டத்தின் கீழ் பயன்பெற்று பெண் தொழில்முனைவோர்கள் இந்தத் தொழிலில் வெற்றி பெறலாம்” என்று நம்பிக்கையுடன் முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism