Published:Updated:

உலர்பழ விற்பனையில் கலக்கும் நாமக்கல் தொழில்முனைவர்!

ரேணுகாதேவி
பிரீமியம் ஸ்டோரி
ரேணுகாதேவி

பிசினஸ்

உலர்பழ விற்பனையில் கலக்கும் நாமக்கல் தொழில்முனைவர்!

பிசினஸ்

Published:Updated:
ரேணுகாதேவி
பிரீமியம் ஸ்டோரி
ரேணுகாதேவி

தரமும், நல்ல சேவையும், நவீன மார்க்கெட்டிங் உத்தியும் இருந்தால், பிசினஸில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள தொப்பப்பட்டியைச் சேர்ந்த ரேணுகாதேவி. உலர்பழ விற்பனை பிசினஸில் வேகமாக வளர்ந்து வரும் அவரை நாம் சந்தித்தோம். தன் வெற்றிக்கதை பற்றி சுவாரஸ்யமாக எடுத்துச் சொன்னார் அவர்.

“நான் பிறந்த வீட்டிலும், என் கணவர் வீட்டிலும் விவசாயம்தான் பூர்வீகத் தொழில். நான் பி.சி.ஏ படிச்சுட்டு தனியார் பள்ளிக் கூடத்துல டீச்சரா வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். என்னோட கணவர் அசோக்குமார் பி.எஸ்ஸி படிச்சுட்டு, சென்னையில ஒரு ட்ரை ஃபுட்ஸ் கம்பெனியில மார்க்கெட்டிங் மேனேஜரா வேலை பார்த்துக் கிட்டு இருந்தாரு. எங்களுக்கு 2008-ம் ஆண்டு கல்யாணம் நடந்தது. கல்யாணத்துக்குப் பிறகு, ‘நாம சொந்தமா தொழில் பண்ணணும்’னு கணவர்கிட்ட சொன்னேன். அவரும் அதற்கு சம்மதித்தார். என்ன தொழில் செஞ்சா ஜெயிக்கலாம்னு நாங்க தினமும் பேசுவோம்.

ரேணுகாதேவி
ரேணுகாதேவி

இந்த நிலையிலதான், நாமக்கல் மாவட்டத் தொழில் மையத்தில் நீட்ஸ் (NEEDS) திட்டத்தில், 25% மானியத்தில் ரூ.1 கோடி தொழில் லோன் தரப் போறதா அறிவிப்பு வந்துச்சு. உடனே, நான் ஊருக்கு வந்து, அந்த லோன் வாங்க முயற்சி செய்தேன். பயனாளியா நான் தேர்வானேன். என்ன தொழில் பண்றதுனு யோசிச்சப்பதான், ‘ட்ரை ஃபுட்ஸ் விற்பனை செய்யலாம்’னு என் கணவர் ஐடியா கொடுத்தார். எனக்கு ஒத்தாசை பண்ணுவதற்காக அவர் பார்த்துக்கிட்டிருந்த வேலையை ராஜினாமா செஞ்சுட்டு ஊருக்கு வந்துவிட்டார்.

உலர்பழ விற்பனையில் கலக்கும் 
நாமக்கல் தொழில்முனைவர்!

‘நீட்ஸ்’ திட்டத்தில லோன் கிடைச்சவங் களுக்கு, ஈரோடு ‘எட்டிசியா’வில் ஒரு மாதம் பயிற்சி கொடுத்தாங்க. ஃபீல்டு விசிட் தொடங்கி, மார்க்கெட்டிங், பேங்கிங், பிராண்டிங், அட்வர்டைசிங், சோர்சிங், பேக்கிங் வரை பயிற்சி தந்தாங்க. எங்க வீட்டுக்குப் பக்கத்துலேயே உள்ள எங்களுக்குச் சொந்தமான 4000 சதுர அடி இடத்தில் கட்டடம் கட்டினோம். அதன் பிறகு, பெங்களூர்ல உள்ள ஒரு வடிவமைப்பாளரிடம் எங்களுக்குத் தேவையான வடிவத்தில் மெஷினை செய்ய ஆலோசனை வழங்கினோம். ஏழு வகை மெஷின்களைக் கொண்டுவந்து தொழிற்சாலையில் நிறுவினோம். ஏ.ஆர்.என் இண்டஸ்ட்ரீஸ் என்கிற பெயர்ல நிறுவனத்தைத் தொடங்கி, ‘டேட் கிங்’ என்கிற பிராண்டை வெளியிட்டோம். ‘இந்தக் குக்கிராமத்தில் இந்தத் தொழில்ல சாதிச்சிட முடியுமா?’ன்னு எங்களைப் பலரும் கிண்டலடிச்சாங்க. ஆனா, நாங்க நம்பிக்கையுடன் இந்தத் தொழில்ல கால் பதிச்சோம். இரான், இராக் மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகள்ல பேரீச்சம் பழங்களை இறக்குமதி பண்ண ஆரம்பிச்சோம்.

உலர்பழ விற்பனையில் கலக்கும் 
நாமக்கல் தொழில்முனைவர்!

அதைக் குளிர்சாதன வசதிகளுடன்கூடிய சேமிப்புக் கிடங்கில் வாடகை பேசிக்கில் சேமித்து வைத்துக்கொண்டு, தேவைப்படும் போது, எடுத்து வந்து தரமாப் பதப்படுத்தி, பேக்கிங் செய்தோம். பாம்பே, டெல்லியில் இருந்து பாதாம், பிஸ்தா, முந்திரி, அத்திப்பழம், பூசணி விதை, கறுப்புத் திராட்சை, மஞ்சள் திராட்சை, உலர் நெல்லிக்காய், வால்நட்னு உலர் உணவுப் பொருள்களை வாங்க ஆரம்பிச்சோம். மஞ்சள் பேரீச்சம் பழத்தில் விதையுடன், விதை இல்லாமல் என்று ரெடி செய்தோம். தவிர, கறுப்பு பேரீச்சயைத் தனியாக விற்பனை செய்ய ஆரம்பித்தோம். கறுப்பு பேரீச்சம்பழத்தில் டேட்ஸ் சிரப், டேட்ஸ் சாக்லேட், டேட்ஸ் அல்வானு செய்தோம்.

பொருள்களைத் தரமா தயாரிச்சாலும், மார்க்கெட்டிங் பிடிக்க ஆரம்பத்துல ரொம்பவே சிரமப்பட வேண்டியிருந்துச்சு. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய கடைகள், ஹோல்சேல் கடைகள், மால்கள், டிபார்ட் மென்ட் ஸ்டோர், சூப்பர் மார்க்கெட்டுகளில் தினமும் ஏறி இறங்கினோம். ரெகுலராக மூணு வருஷம் தொடர்ந்து நாங்க ஒவ்வொரு கடைக்கும் போக ஆரம்பிச்சோம். பெரிய கம்பெனிகள் எல்லாம் தங்கள் பொருள்களை விற்கும் கடைகளுக்குக் கடன் தந்தாங்க. அத்துடன், அந்த கம்பெனிகளின் ஆறு மாதத் தொகையைக் கடை முதலாளிகள் தங்கள் வசமாக வைத்திருந்தாங்க. இதையெல்லாம் எங்களால ஆரம்பத்துல செய்ய முடியல. இருந்தாலும், எங்க கம்பெனி பொருளின் தரமும், எங்க அணுகுமுறையும் பிடிச்சுப் போய், எங்க பொருளை கடைகள்ல வாங்க ஆரம்பிச்சாங்க.

உலர்பழ விற்பனையில் கலக்கும் 
நாமக்கல் தொழில்முனைவர்!

நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, கோவைனு பல மாவட்டங்களில் எங்க பொருள்கள் விற்பனையாகுது. இப்ப 1,200 கடைகளுக்கு ரெகுலராக ட்ரை ஃப்ரூட்ஸை சப்ளை பண்ற அளவுக்கு வளர்த்திருக்கிறோம். ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்றோம். இனி டீலர்கள் மூலமா விற்பனை செய்யப் போறோம். கஷ்டப்பட்டு உழைச்சதால இப்ப லாபம் கிடைக்க ஆரம்பிச்சுருக்கு. ‘பரவாயில்லை, ஜெயிச்சுக் காட்டீட்டிங்க’ன்னு பலரும் பாராட்டுறாங்க. இப்ப எங்க கம்பெனியில 20 பேர் வேலை பார்க்கிறாங்க. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 200 பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு முன்னேறணும்ங்கிற லட்சியத்தோடு செயல்படுறோம். எங்க கம்பெனி பிராண்டை, ஒரு குளோபல் பிராண்டா மாற்றணும்னு நெனைச்சு, ஒரு ஆப் உருவாக்கியிருக்கோம்” என்றவர், தனது வெற்றி ஃபார்முலாவை பகிர்ந்தார்.

“பணம் வந்ததும், தாம்தூம்னு இடம் வாங்குறது, வீடு கட்டுறதுனு சிலபேர் இறங்கு வாங்க. அப்படி செய்யாம, நாம பார்க்கும் தொழிலையே இன்னும் விருத்தி பண்ண முதலீடு பண்ணனும். ‘சிரிக்கத் தெரியாதவர்கள், நல்ல வியாபாரி களாக ஆக முடியாது’னு ஒரு பொன்மொழி சொல்வாங்க. அதனால், கஸ்டமர்களையும், டீலர்களையும் இன்முகத்தோடு அணுகி, பொறுமையா பேசணும். வேலை பார்க்கிறவங்களை குடும்ப உறுப்பினர் போல நடத்துறோம். எல்லாத்துக்கும் மேல, ‘நம்மால் முடியாது, நமக்கு இந்தத் தொழில் தெரியாது, நான் பெண், நான் கிராமத்தில் இருக்கிறேன்’ என்று நமக்கு நாமே முட்டுக்கட்டை போட்டுக்கக் கூடாது. ‘நம்மால முடியும்’னு ஆர்வதுடன் கள மிறங்கினா, நிச்சயம் வெற்றிதான்’’ என்று முடித்தார் ரேணுகாதேவி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism