Published:Updated:

ஈஸி பிசினஸ்... எக்ஸ்ட்ரா வருமானம்..!

நீலகண்டன்
நீலகண்டன்

புதிய பகுதி

பணப் பற்றாக்குறை... நம்மில் பலருக்கும் இது இயல்பான ஒன்றுதான். மாதக் கடைசியில் இதை உணராத நடுத்தர வர்க்கத்தினர் இருக்கவே முடியாது. ஆனால், சம்பாதிக்கும் வருமானம், செலவுகளுக்கு போதாத சூழலில், புதுமையாக மாற்றி யோசிக்கும் சிலர், தங்களுக்கு ஆர்வமுள்ள தொழிலைச் செய்து, எக்ஸ்ட்ரா வருமானத்தைத் திட்டமிட்டு ஈட்டுகிறார்கள். ‘பத்தலை... பத்தலை... சம்பளம் பத்தலை...’ எனப் புலம்பு பவர்களுக்கு மத்தியில், இவர்கள் தங்கள் ஆர்வத்துக்கேற்ற மாதிரியான தொழிலைச் செய்து, கூடுதல் வருமானம் ஈட்டி, இரட்டைக் குதிரையில் வெற்றிகரமாக சவாரி செய்கிறார்கள். அப்படிப்பட்ட பார்ட் டைம் பிசினஸ்மேன்களைத்தான் நாம் இந்தப் பகுதியில் இனிவரும் வாரங்களில் பார்க்கப் போகிறோம்.

அந்த வகையில், நாம் இந்த வாரம் சந்திப்பது, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றும் நீலகண்டனை. உடற்கல்வி ஆசியராக இருக்கும் இவர், கடந்த 10 ஆண்டுகளாக கார்மென்ட்ஸ் பிசினசிலும் கலக்கி வருகிறார். அவரது தொழிற்சாலையில் நாம் அவரை சந்தித்தோம்...

நீலகண்டன்
நீலகண்டன்

விளையாட்டுன்னா எனக்கு உசுரு...

“பேராவூரணி அருகே உள்ள கரம்பக்காடு என்கிற கிராமம்தான் என்னோட சொந்த ஊரு. சின்ன வயசுலே இருந்தே விளையாட்டுனா எனக்கு உசுரு. அதனால உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான படிப்பை படிச்சேன். பின்னர், திருப்பூர் மாவட்டத்துல உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வாலிபால் கோச்சாக வேலைக்குச் சேர்ந்தேன். ஆரம்பத்துல 5,000 ரூபாய்தான் எனக்கு சம்பளம். இந்தச் சூழ்நிலையில பள்ளி வேலை நேரம் முடிஞ்சதும் எனக்குத் தெரிஞ்ச பனியன் கம்பெனி, கார்மென்ட்ஸ் கம்பெனிக்குப் போகத் தொடங்கினேன். குறிப்பா, ஸ்போர்ட்ஸ் தொடர்பான உடைகள் தைக்குற கம்பெனிக்கு அடிக்கடி போவேன். அதுல எனக்கு பெரிய அனுபவம் கிடைச்சது.

நான் திருப்பூரில் இருந்ததால, வெளிமாவட் டங்களில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் அங்குள்ள கம்பெனியில் ஸ்போர்ட்ஸ் தொடர் பான ஆடைகள் ஆர்டர் கொடுத்துவிட்டு என்னை வாங்கி அனுப்பச் சொல்வார்கள். இதனால் எனக்கும், உடைகள் தைக்கும் கம்பெனிக்குமான நட்பும் தொடர்ந்தது. சின்னதாக வருமானமும் கிடைச்சது.

பேராவூரணிக்கே திரும்பி வந்தேன்...

ஒரு கட்டத்தில் எனக்கு பேராவூரணியில உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக வேலை கிடைச்சது. ஆனாலும், சம்பளத்தை வச்சு குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியலை. குடும்பத்துல முக்கியமா செய்ய வேண்டிய மருத்துவச் செலவுகளுக்காக உறவினர்கள் கிட்ட கடன் வாங்க வேண்டிய கட்டாயம். இந்த நெருக்கடியான நிலையை எப்படி மாத்தி அமைக்கிறதுன்னு யோசிச்சேன். அப்பதான் திருப்பூர்ல எனக்குக் கிடைச்ச தொழில் அனுபவம் கைகொடுத்துச்சு.

என்னோட சொந்த ஊர்ல சின்னதா கார்மென்ட்ஸ் ஆரம்பிக்கலாம் என முயற்சி செஞ்சேன். பத்து தையல் மெஷினுடன் சுமார் மூணு லட்சம் முதலீட்டுல எஸ்.எம்.என் ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் ஆரம்பிச்சேன். ஸ்போர்ட்ஸ்க்குத் தேவையான உடைகள், டீ ஷர்ட், லோயர் பேன்ட், ஷார்ட்ஸ், சின்ன குழந்தைகளுக்கான இரவு நேர டிரெஸ், ஏபரான் வகை டிரெஸ், விளையாட்டு டீம்களுக்குத் தேவையான ஒரே யூனிஃபார்ம் கொண்ட உடைகள் தச்சு விற்க ஆரம்பிச்சேன். மார்கெட்டிங்க் குறித்து தெரிஞ்சு வச்சிருந்ததால அனைத்தும் ஈஸியா கைகூடி வந்துச்சு.

முதல்ல ஸ்போர்ட்ஸுக்குத் தேவையான உடைகளைத் திருப்பூரில் வாங்கிக் கொண்டிருந்த என் நண்பர்கள் எங்கிட்ட ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அத்துடன் வாலிபால், புட்பால், நெட் வலை கள் போன்ற விளையாட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் வாங்கி விற்க ஆரம்பிச்சேன். இதுல எனக்கு நல்ல லாபமும் கிடைச்சது.

பின்னர் தனியார் பள்ளி களில் மாணவர்களுக்கான யூனிஃபார்ம் ஆர்டர் எடுத்துத் தைக்க ஆரம்பிச்சேன். பிசுறு அடிக்காம நேர்த்தியா துணியைத் தைச்சு கொடுத்ததுல பல பள்ளிகள் எங்கிட்ட தொடர்ந்து ஆர்டர் தர ஆரம்பிச்சாங்க. இதையடுத்து கம்பெனியை விரிவுபடுத்துற நோக்கத்துல பேராவூரணியில் தனியா இடம் வாடகைக்கு எடுத்து கொஞ்சம் பெரிய அளவுல செய்ய ஆரம்பிச்சேன். 40 தையல் மெஷின்கள், பிரின்டிங், பெயின்ட்டிங் போன்ற மெஷின்கள் எல்லாம் வச்சு கிராமப்புறப் பகுதியைச் சேர்ந்த 50 பெண்களுக்கு வேலை கொடுத்தேன்.

ஈஸி பிசினஸ்... எக்ஸ்ட்ரா வருமானம்..!

கலங்கவைத்த கஜா புயல்...

எல்லாம் நல்லா போன நேரத்துல 2018-ல் வீசிய கஜா புயலில் கம்பெனியிலிருந்த அனைத்துப் பொருள்களும் சேதமடைந்ததில் ரூ.10 லட்சம் நஷ்டம் வந்துடுச்சு. அப்ப நண்பர்கள் சிலர், பிசினஸ்ல இருந்து நான் வழுக்கிவிழுந்துடாம தாங்கிப் பிடிச்சாங்க. ஒரு மாதிரியா சமாளிச்சு மீண்டும் கம்பெனிய ஓட்ட ஆரம்பிச்சேன். இப்ப திருப்பூர், ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்கள்ல உள்ள கம்பெனிகள் என்ன டிரெஸ் தேவையோ, அதற்குரிய அளவில் துணியை கட் செய்து மெட்டீரியலுடன் எனக்கு அனுப்பி வைப்பார்கள். நான் அதைத் தைத்து அனுப்பி வைப்பேன். ஒரு டிரெஸ்ஸுக்கு இவ்வளவு எனப் பேசி மொத்தமாகப் பணம் தருவார்கள்.

உடைகள் தைப்பதற்கான நூல், ஊசி, துணி போன்ற ரா மெட்டீரியல் அனைத்தும் திருப்பூரிலிருந்து வாங்குவேன். அரசு பள்ளி களுக்குரிய யூனிஃபார்ம் ஆர்டர் எடுத்தும் தைத்து தருகிறேன். கொரோனா முதல் லாக்டெளன்ல தொழில் கொஞ்சம் முடங்கிப் போச்சு. அந்த நேரத்துல கொரோனா தடுப்பு கவச உடை தைக்க ஆரம்பிச்சேன். அத்துடன் சர்ஜிக்கல் மாஸ்க் மொத்தமா ஆர்டர் எடுத்து தயார் செய்துகொடுக்க ஆரம்பிச்சேன்.

ஆள்கள் சம்பளம், மெட்டீரியல், மெஷின் மெயின்டனன்ஸ் என எல்லாச் செலவும் போக மாசம் குடும்பச் செலவுகளைச் சுலபமா சமாளிக்கற அளவுக்கு லாபம் கிடைக்குது. ஒரு காலத்துல பணத்துக்காக கஷ்டப்பட்ட நான், இன்னைக்கு பலருக்கும் வேலை தந்து, சந்தோஷமா இருக்கேன்’’ என்று பூரிப்போடு பேசி முடித்தார் நீலகண்டன். மாற்றி யோசித்தால், வெற்றி நிச்சயம்!

குறிப்பு: இவரைப் போன்று நீங்களும் எக்ஸ்ட்ரா வருமானத்துக்காக பிசினஸ் அல்லது பகுதிநேர வேலையை வெற்றிகரமாகச் செய்துவருகிறீர்களா..? உங்கள் அனுபவங்களை finplan@vikatan.com மெயில் முகவரிக்கு எழுதுங்கள்.

பணப் பற்றாக்குறையைப் போக்கிய தொழில் வருமானம்!

“சொந்த ஊருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னே பணிக்கு வந்தப்ப நான் சேமிச்சு வச்சிருந்த 3 லட்சம் ரூபாயில்தான் கார்மென்ட்ஸ் தொழிலை ஆரம்பிச்சேன். இப்ப படிப்படியா சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிறுவனமா உருவாக்கியிருக்கேன். இப்ப எல்லா செலவுகளும் போக, மாசம் ரூ.40,000 வருமானம் கிடைக்கிறது மனசுக்கு நிறைவா இருக்கு. இன்னும் நிறைய ஆர்டர்கள் எடுக்க முயற்சி செய்துகிட்டு இருக்கேன். அப்ப இன்னும் 100 பேருக்கு மேல வேலை கொடுக்கவும் முடியும்... இன்னும் அதிக வருமானம் கிடைக்கவும் வாய்ப்பிருக்கு. தொழில் மூலமான வருமானம்தான் எனக்கு பற்றாக்குறை இல்லாத வளமான வாழ்க்கையைக் கொடுத்திருக்கு. தொழில் மூலமான வருமானத்திலிருந்து குழந்தையோட எதிர்காலத்துக்கு சேமிச்சுக்கிட்டும் இருக்கேன். தொழிலை பெரிசா வளர்த்தெடுத்தாலும் உடற்கல்வி ஆசிரியர் பணியைத் தொடர்ந்து செய்வேன்” என்றார் நீலகண்டன்.

அடுத்த கட்டுரைக்கு