பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

“ஏராளமானோருக்கு எக்ஸ்ட்ரா வருமானம்... கைகொடுக்கும் என் பிசினஸ்..!”

சிந்து அருண்
பிரீமியம் ஸ்டோரி
News
சிந்து அருண்

ஈஸி பிசினஸ்... எக்ஸ்ட்ரா வருமானம்!

குடும்பத்தின் பணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பலரும் இரண்டாவது வருமானம் தரும் வகையில் தனக்குப் பிடித்தமான தொழிலில் இறங்குகிறார்கள். கணிசமான வருமானத்தையும் பெற்று வாழ்க்கையை வளமாக்கிக் கொள்கிறார்கள்.ஆனால், உடுமலைப்பேட்டையிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மொடக்குப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த சிந்து அருண், தனது குடும்பத்தில் இரண்டாவது வருமானத்துக்கான பிசினஸை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருவதன் இலக்கு வித்தியாசமானது.

“என் பிசினஸ் எனது குடும்பத்துக்குக் கூடுதல் வருமானம் தந்து வருகிறது என்பதுடன், பணப் பற்றாக்குறை உள்ள பல குடும்பங்களுக்கும் கூடுதல் வருமானம் பெற உதவியாக இருக்கிறது” என்று உற்சாகமாகப் பேச ஆரம்பித்த சிந்து, தொடர்ந்து தன் பிசினஸ் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

சிந்து அருண்
சிந்து அருண்

“நான் பிறந்தது வளர்ந்ததெல்லாம் பொள்ளாச்சி அருகே உள்ள அழகான ஒரு கிராமத்தில்தான். என் பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். பணக் கஷ்டம் தெரியாமல்தான் என்னை வளர்த்தார்கள். பி.டெக் படிக்கும் வரையிலும்கூட எனக்கு வீடு மட்டுமே உலகம். ஆனால், என்னுடன் படித்த கல்லூரி தோழிகளைப் பார்த்து நானும் விசாலமான அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என நினைத்தேன்.

கல்லூரியில் படித்து முடித்தபோது இங்கிலாந்துக்குப் போய் எம்.எஸ் படிக்க ஆசைப்பட்டேன். வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கும் அளவுக்கு என் பெற்றோர் தயாராகவில்லை. ஆனால், நான் ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என நினைத்து விட்டால், அதை எப்படி வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கிவிடுவேன். வெளிநாடு சென்று படிக்க பயிற்சி, டெஸ்ட் என்றெல்லாம் நான் தயாராவதைப் பார்த்துவிட்டு, என் பெற்றோர் வங்கிக் கடன் வாங்கி என்னை இங்கிலாந்துக்குப் படிக்க அனுப்பி வைத்தார்கள். 

இங்கிலாந்தில் பகுதிநேரமாக வேலை பார்த்துக்கொண்டே மேற்படிப்பைப் படித்தேன். இரவு 1 மணி வரையெல்லாம் வேலை பார்த்துவிட்டு தங்கியிருந்த இடத்துக்குப் போக வேண்டியிருக்கும். அந்தச் சூழ்நிலைதான் தன்னம்பிக்கை, தைரியம், எதையும் ஈஸியாக செய்து முடிக்கக்கூடிய திட்டமிடல் எனப் பல பாசிட்டிவ் விஷயங்களைப் பழகிக் கொள்ள எனக்கு உதவியாக அமைந்தது. இங்கிலாந்தில் கோர்ஸ் முடித்த பிறகும், இரண்டு ஆண்டுகள் அங்கேயே பணியாற்றினேன்.

பிறகு, நம் மண்ணில் வந்து எதையாவது சாதிக்க வேண்டும் எனத் தோன்றவே ஊருக்கு வந்து இ-காமர்ஸ் பிசினஸ் ஆரம்பித்தேன். ஆனால், அதில் வெற்றி பெற முடியவில்லை. ரூ.25 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது. தோல்வி தந்த பாடங்களுடன் மீண்டும் எதையாவது செய்ய வேண்டும் என யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் எனக்குத் திருமணம் நடந்தது.

என் கணவர் ஆரம்பத்தில் வெவ்வேறு பிசினஸில் இருந்தார். என் கணவரின் சித்தப்பா தேங்காய், கொப்பரை பிசினஸை சின்ன அளவில் செய்து வந்தார். அந்த பிசினஸை என் கணவர் பெரிய அளவில் செய்யத் திட்டமிட்டு ஆரம்பித்தார். தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் பல பெரிய நிறுவனங்களுக்கு கொப்பரையைக் கொள்முதல் செய்து அனுப்பினார். அவருக்குத் துணையாக ஐந்து ஆண்டுகள் பிசினஸில் இருந்தேன்.

பிறகு, தன்னிச்சையாக எதையாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். தேங்காய், கொப்பரை என மூலப் பொருள்கள் நம்மிடையே இருக்கும்போது செக்கு எண்ணெய் தயாரிப்பு என்பது எனக்கு ஈஸியான பிசினஸாக இருக்கும் எனத் தோன்றியது. 

“ஏராளமானோருக்கு எக்ஸ்ட்ரா வருமானம்... கைகொடுக்கும் என் பிசினஸ்..!”

என் குடும்பத்தில் இன்னொரு தொழில் செய்து கூடுதல் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற தேவை எதுவும் இல்லை. ஆனாலும், கூடுதல் வருமானம் என்பது அடுத்தகட்ட வளர்ச்சியாக இருக்கும்; அதே சமயத்தில், என் சுய முயற்சியால் செய்யும் பிசினஸ் மூலம் பல குடும்பங்களின் பணப் பற்றாக்குறையைப் போக்கும் ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என்கிற இலக்குடன் பிரெஸோ என்ற பிராண்ட் பெயருடன் ஆரம்பித்தேன்.

இந்த பிராண்ட் பெயரில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் என மக்கள் அதிகம் பயன்படுத்தும் மூன்று வகைகளைத் தயாரிக்கிறேன். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மக்கள் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், பாரம்பர்ய செக்கு எண்ணெயைச் சுத்தமான முறையில் தயாரித்துத் தர வேண்டும் என்பதே என்னுடைய நிறுவனத்தின் குறிக்கோள். 

என் நிறுவனத் தயாரிப்புகளை வாங்கி விற்கும் விநியோகஸ்தர் களையும், மொத்த விற்பனை யாளர்களையும் நாங்கள் ‘பிசினஸ் பார்ட்னர்கள்’ என்று தான் அழைக்கிறோம். இதுவரை ஆண்கள், பெண்கள் என 100 பேர் எனது நிறுவனத்தில் இணைந்துள்ளார்கள். எந்தவொரு வருமானம் தரும் வேலையும் இதுவரை செய்யாத பல பெண்கள் என் நிறுவனத்தில் இணைந்து தங்கள் குடும்பத்துக்கு கூடுதல் வருமானத்தைச் சம்பாதித்து வருகிறார்கள்.

விற்பனையாளர்களைத் தேர்வு செய்யும்போது மிகவும் கவனமாக இருப்பேன். வருமானம் என்ற இலக்குடன், சமூகப் பொறுப்பு என்பதை முதன்மையாகக் கொண்டவர் களைத்தான் தேர்வு செய்கிறேன். 21 நாள் இலவச பிசினஸ் பயிற்சிக் குப் பிறகுதான் விற்பனையில் ஈடுபடுத்துகிறேன். கலப்படம் இல்லாத தயாரிப்பை மக்களுக் குச் சேர்க்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள் நல்ல எண்ணம் கொண்டவர்களாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம் என நினைக்கிறேன்.

நம்மூரில் ஒரு பாசிட்டிவ்வான அம்சம் என்னவென்றால், நிறைய பேர் இந்த வயதுக்குள் தான் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் எல்லை வைத்துக் கொள்வ தில்லை. பல தொழில்களைச் செய்துவிட்டு, என் நிறுவனத்தில் பிசினஸ் பார்ட்னராக இணைந்த 60 வயது நபர் ஒருவர், ‘இன்னும் நான் முயற்சி செய்கிறேன். என்னால் வெற்றி பெற முடியும்’ என்கிறார் நம்பிக்கையுடன். இவரைப் போன்ற பாசிட்டிவ் மனிதர்களுக்கு சரியான பயிற்சியையும், வழி காட்ட லையும் செய்துவிட்டாலே போதும். அவர்கள் பிசினஸில் ஈஸியாக லாபம் ஈட்ட ஆரம்பித்து விடுவார்கள் என்பது என் அனுபவம்.

2018-ம் ஆண்டில் ரூ.10 லட்சம் முதலீட்டில் எண்ணெய் தயாரிப்பைத் தொடங்கிய பிறகு, லாபம் எடுக்க இரண்டு ஆண்டுகள் உழைக்க வேண்டியிருந்தது. இப்போது 30 லட்சம் ரூபாய் ஆண்டுக்கு டேர்ன் ஓவர் செய்யும் நிறுவனமாக உருவாக்கியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

விரைவில் ஒரு லட்சம் பிசினஸ் பார்ட்னர்களுடன் உலகம் முழுக்க என் தயாரிப்புகளைக் கொண்டு சேர்க்க முனைப்புடன் திட்டமிட்டு வருகிறேன். 2022-க்குள் பத்து லட்சத்துக்கும் மேலான பயன்பாட்டாளர்களைச் சென்றடைய வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறேன். அதனால்தான் என் பிசினஸ் மூலமான கூடுதல் வருமானத்தை பிசினஸ் வளர்ச்சிக்காகவே செலவிடுகிறேன். மாதம்தோறும் 60,000 லிட்டர் தயாரிக்கும் வகையிலான கட்டமைப்புகளைச் செய் துள்ளேன்.

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் குளோபல் பிராண்டாக உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறேன். தலைமுறைகளைத் தாண்டி இந்தத் தொழில் வளரும் வகையிலான அடித்தளத்தைப் பலமாக அமைக்கத் தேவையான அனைத்துவிதமான உத்திகளையும் நான் கையாள்கிறேன். 

‘ஒரு பிசினஸ் ஒரு வருமானம் என்றிருந்ததை இரட்டை பிசினஸ் இரட்டை வருமானமாக மாற்றியதற்கு உன் நேர்த்தியான உழைப்பே காரணம்’ என என் கணவர் அடிக்கடி சொல்வார். அது உண்மையும்கூட.

பிராண்ட் லோகோவை உருவாக்கும்போது கற்பனைப் பறவை ஒன்றை உருவாக்கி ‘பிரெஸோ உடுமலைப்பேட்டை இன்டர்நேஷனல்’ என்பதன் சுருக்கமாக ‘புட்டி’ (PUTI) என அந்தப் பறவைக்குப் பெயர் வைத்தேன். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் செய்யும் மெனக்கெடல்தான் மேன்மேலும் வளரக் காரணம்.

உடுமலைப்பேட்டைக்குப் பக்கத்தில் உள்ள மொடக்குப் பட்டியில் இருந்து பிசினஸை சிறப்பாக நடத்தும் அளவுக்கு நான் உயர்ந்திருப்பதே எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றிதான்’’ என்று பெருமிதத்துடன் பேசிமுடித்தார் சிந்து.

குறிப்பு: இவரைப் போன்று நீங்களும் எக்ஸ்ட்ரா வருமானத்துக்காக பிசினஸ் அல்லது பகுதிநேர வேலையை வெற்றிகரமாகச் செய்து வருகிறீர்களா..? உங்கள் பிசினஸ் அல்லது வேலை, மாத வருமானம் உள்ளிட்ட விவரங்களை finplan@vikatan.com மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். உங்கள் தொலைபேசி எண்ணை அவசியம் குறிப்பிடவும்.