Published:Updated:

“எனக்கு கூடுதல் வருமானம் தந்த என் அம்மாவின் ஃபார்முலா!”

ரவிச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
ரவிச்சந்திரன்

ஈஸி பிசினஸ்... எக்ஸ்ட்ரா வருமானம்!

“எனக்கு கூடுதல் வருமானம் தந்த என் அம்மாவின் ஃபார்முலா!”

ஈஸி பிசினஸ்... எக்ஸ்ட்ரா வருமானம்!

Published:Updated:
ரவிச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
ரவிச்சந்திரன்

பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு வேலை அல்லது ஒரு தொழில் என்று அமைவதுதான் வழக்கம். ஆனால், புதுமையாக யோசித்து, கூடுதல் வருமானத்துக்கு வழிவகுத்திருக்கிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த ரவிச்சந்திரன். இவர், மளிகைக் கடை வருமானத்துடன் நின்று விடாமல், சிறிய முதலீட்டில் ஒரு பிசினஸைத் தொடங்கி, இன்று நல்ல வருமானம் பார்த்து வருகிறார். நாம் அவரைச் சந்தித்துப் பேசினோம்.

“என் சொந்த ஊர் காரைக்குடி அருகில் உள்ள நடுவிக்கோட்டை. ஆனால், நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் திண்டுக்கல்தான். என் மனைவி உமாராணி வீட்டுப் பொறுப்பைக் கவனித்துக்கொள்கிறார். எனக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் சுபாஷ் பி.இ படித்துள்ளான். இளையவன் தீபக் ரிஷி பி.எஸ்சி ஃபுட் டெக்னாலஜி படித்துவிட்டு, பெங்களூரில் மேற்படிப்பை படித்து வருகிறான்.

என் அப்பா ஃபைனான்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். பிறகு, சொந்தமாக ஃபைனான்ஸ் கம்பெனி ஆரம்பித்து நடத்தினார். 1976-ல் மளிகைக் கடை ஆரம்பித்தார். நான் பள்ளிக்கூடம் படிக்கும்போதிலிருந்தே விடுமுறை நாள்களில் கடையில் அப்பாவுக்கு உதவியாக இருப்பேன். படிக்கும் காலத்திலிருந்தே எதையாவது புதுமையாகச் செய்துகொண்டே இருப்பேன். மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு நிற்க வேண்டும் என்பதே என் கவனமாக இருக்கும்.

ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன்

பி.எஸ்ஸி வரை படித்துவிட்டு அப்பாவுக்கு உதவியாக மளிகைக் கடையைக் கவனிக்க ஆரம்பித்தேன். நான் ஒரே பையன் என்பதால், அப்பா தன் தொழிலை நான் ஏற்று நடத்த வேண்டும் என விரும்பினார். எனக்கும் வியாபாரத்தில் ஆர்வம் இருந்தது. ஒரு கட்டத்தில் கடையை முழுப் பொறுப்பும் ஏற்று நடத்த ஆரம்பித்தேன்.

சிறுதானியங்கள், பாரம்பர்ய அரிசி வகைகள் என வியாபாரத்தில் வித்தியாசப் படுத்திச் செய்வதால், எங்கள் கடைக்கு பிரத்யேகமான வாடிக்கையாளர்கள் அதிகம். 2000-ல் பிராண்டட் மசாலாப் பொடி நிறுவனங்கள் காலூன்ற ஆரம்பித்த நேரம். என் கடையில் அந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்து வந்தேன். அப்போது என் வாடிக்கையாளர்களில் சிலர், என்னதான் இருந்தாலும் ‘எங்க அம்மாவின் கைப்பக்குவம் வராதுப்பா... எங்க அப்பச்சியின் கைப்பக்குவம் வராதுப்பா...’ என்பார்கள். அப்போதுதான் பாரம்பர்ய சுவை மாறாமல் மசாலாப் பொடிகளைத் தயார் செய்து என் கடையில் விற்க ஆரம்பித்தேன்.

குழந்தைகளுக்கான ஹெல்த் மிக்ஸை இன்று கார்ப்பரேட் கம்பெனிகள் தயார் செய்து விற்கின்றன. நான் மசாலாப் பொடி தயாரிக்கும் முன்பே குழந்தைகளுக்கான ஹெல்த் மிக்ஸைத் தயார் செய்து குறைந்த விலையில் விற்கத் தொடங்கினேன். இப்போதுதான் ஹெல்த் மிக்ஸ் என பிரமாண்டப்படுத்தி விற்கிறார்கள். சத்து மாவு எனச் சொல்லித்தான் அன்று நான் விற்று வந்தேன். சிறுதானியங்களை பாரம்பர்ய முறையில் முளைக்கட்டி பக்குவப்படுத்தி அரைத்து மார்க்கெட் செய்தேன். மக்களிடம் அப்போதே அது நல்ல வரவேற்பைப் பெற்றது. மசாலாப் பொடிகள், சத்து மாவு என எல்லாத் தயாரிப்புகளுமே என்னுடைய அம்மாவின் ஃபார்முலாதான்.

நான் படிக்கும் காலத்திலேயே என்னுடைய அம்மா அனைத்து வகையான உணவுப் பொருள்கள், மசாலாக்களை வறுத்து, பக்குவப்படுத்தி அரைத்து பயன்படுத்தியதைக் கவனித்ததே நான் இந்த உணவுப் பொருள்களைத் தயாரிக்க அடிப்படைக் காரணம்.

இத்தகைய மதிப்புக்கூட்டல் விற்பனைக்கான மூலப்பொருள்களை என் கடையில் இருந்துதான் எடுத்துக் கொள்கிறேன். ஆரம்பக் காலத்தில் இப்படி சின்ன அளவில் வீட்டிலேயே தயார் செய்துவந்த நான், ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் ஒரு யூனிட் போட்டு வேலைக்கு ஆட்களை அமர்த்தி தொழிலை விரிவாக்கம் செய்ய ஆரம்பித்தேன்.

மதுரை ‘யெஸ்’ அமைப்பில் நான் உறுப்பினராக இருக்கிறேன். அமைப்பு மூலம் நடக்கும் கூட்டங்களுக்குச் செல்லும்போது பல தொழில்முனைவோர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான், நான் செய்துகொண்டிருப்பதையே விரிவுபடுத்தி முறைப்படுத்தி ஒரு தொழிலாகச் செய்ய வேண்டும் என்ற யோசனை எனக்கு வந்தது. அதற்குப் பிறகுதான் எஸ்.ஆர் ஃபுட்ஸ் என்ற பெயரில் என் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்த ஆரம்பித்தேன்.

முளைக்கட்டிய சத்து மாவு, சிறுதானிய அடை மிக்ஸ், சிறுதானிய தோசை மாவு, கவுனி பாயாச மிக்ஸ், கவுனி அரிசி கஞ்சி மிக்ஸ், மாப்பிள்ளை சம்பா இடியாப்ப மாவு, சிவப்பு அரிசி புட்டு மாவு, முருங்கை இலை பொடி, விதவிதமான இட்லி பொடிகள், கஸ்தூரி மஞ்சள் தூள், சுக்கு மல்லி காபி பொடி, எள் உருண்டை, கவனி அரிசி உருண்டை, கம்பு உருண்டை, கடலை உருண்டை உட்பட இப்போது இருபதுக்கும் மேலான ரெடிமேட் உணவு வகைகளைத் தயாரித்து வருகிறேன்.

“எனக்கு கூடுதல் வருமானம் தந்த  
என் அம்மாவின் ஃபார்முலா!”

இப்போதைக்கு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள சில ஊர்களுக்கும், சென்னையிலும் மார்க்கெட் செய்து வருகிறேன். என்னுடைய யூனிட்டில் அந்த அளவுக்குத்தான் தயார் செய்ய முடிகிறது. கொரோனாவுக்குப் பிறகு, மக்களிடம் சிறுதானியங் கள், பாரம்பர்யம் என்றெல்லாம் விழிப்புணர்வு வந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. இனிவரும் நாள்களில் ஆன்லைனிலும் விற்கும் திட்டம் உள்ளது.

மளிகைக் கடையில் ஆள்கள் சம்பளம் உட்பட அனைத்துச் செலவுகளும் போக, நிகர லாபமாக மட்டும் 30,000 முதல் 35,000 ரூபாய் கிடைக்கிறது. இது சீஸனைப் பொறுத்து மாறுபடும்.

இதே போல, உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 30,000 வரை நிகர லாபம் கிடைக்கிறது. மளிகைக் கடை வருமானத்தை மட்டுமே நான் கொண்டிருந்தால், என் பிள்ளைகளை இந்த அளவுக்குப் படிக்க வைத்து ஆளாக்கியிருக்க முடியாது.

பிசினஸில் வரும் லாபத்தில் பெரும்பகுதியை பிசினஸ் வளர்ச்சிக்காகவே பயன்படுத்துகிறேன். கடந்த மாதம்கூட தானியங்களை வறுக்கும் நவீன மெஷின் ஒன்றை வாங்க ரூ.2.5 லட்சம் முதலீடு செய்துள்ளேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் யூனிட் விரிவாக்கத்துக்கு மட்டுமே ரூ.5 லட்சம் செலவு செய்தேன். மொத்தமாக பிசினஸுக்கான முதலீட்டை ஒதுக்காமல், வருகிற வருமானத்திலிருந்துதான் கொஞ்சம் கொஞ்சமாகத் தொழிலை விரிவாக்கம் செய்து வந்துள்ளேன்.

இன்னும் ஐந்து ஆண்டுகளில் பிசினஸை இன்னும் விரிவுப்படுத்தி அனைத்து மாவட்டங் களிலும் மார்க்கெட் செய்ய வேண்டும் எனத் திட்டம் வைத்துள்ளேன். எனக்கு பாரம்பர்ய விவசாயத்தில் ஆர்வம் அதிகம். சில ஏக்கர் நிலமாவது வாங்கி விவசாயம் செய்ய வேண்டும்’’ என்றவர், “எந்த பிசினஸாக இருந்தாலும், எந்தளவுக்கு மார்க்கெட்டிங் செய்கிறோமோ, அந்தளவுக்கு லாபம் கிடைக்கும்; ஆனால், உணவுப் பொருள் தயாரிப்பைப் பொறுத்தவரை, சுவையும் தரமும் இருந்தால் மட்டுமே நிலைத்து வளர முடியும்.

என்னுடைய பிசினஸ் மூலமான கூடுதல் வருமானம்தான் என் வாழ்க்கையை வளப்படுத்தியது. வாழ்க்கையில் பெரிதாக பணச் சிக்கலை எதிர்கொள்ளாமல் இருக்கிறேன் எனில், மளிகைக் கடை மூலமான வருமானத்தைத் தாண்டிய இன்னொரு வருமானத்துக்கான என் முயற்சிதான் காரணம்” என்றார் பெருமிதமாக.

குறிப்பு: இவரைப் போன்று நீங்களும் எக்ஸ்ட்ரா வருமானத்துக்காக ஏதாவது பிசினஸ் செய்து வருகிறீர்களா..? உங்கள் பிசினஸ், மாத வருமானம் உள்ளிட்ட விவரங்களை finplan@vikatan.com மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். உங்கள் தொலைபேசி எண்ணை அவசியம் குறிப்பிடவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism