Published:Updated:

“என் கனவுப் பண்ணையை அமைக்க எக்ஸ்ட்ரா வருமானம் கைகொடுக்கும்!"

வித்யாலஷ்மி
பிரீமியம் ஸ்டோரி
வித்யாலஷ்மி

ஈஸி பிசினஸ்... எக்ஸ்ட்ரா வருமானம்!

“என் கனவுப் பண்ணையை அமைக்க எக்ஸ்ட்ரா வருமானம் கைகொடுக்கும்!"

ஈஸி பிசினஸ்... எக்ஸ்ட்ரா வருமானம்!

Published:Updated:
வித்யாலஷ்மி
பிரீமியம் ஸ்டோரி
வித்யாலஷ்மி

இன்றைய விலைவாசியைச் சமாளித்து ஓரளவு தாராளமான வாழ்க்கையை வாழ நடுத்தரக் குடும்பங்களில் ஒற்றை வருமானம் போதுமானதாக இருப்பதில்லை. கூடுதலாக இன்னொரு வருமானம் வரும் பட்சத்தில்தான் செலவுகளைச் சமாளித்து கொஞ்சமாவது சேமிக்க முடியும். குடும்பத்தில் பற்றாக்குறையைச் சமாளிக்கத்தான் பலர் கூடுதல் வருமானத்துக்கான முயற்சியைச் செய்கிறார்கள்.

ஆனால், “என் கணவரே ஒரு லட்ச ரூபாய்க்குமேல் சம்பாதிக்கிறார். எங்களுக்கு பணச்சிக்கல் ஏதும் இல்லை. நான் எக்ஸ்ட்ரா வருமானத்துக்காக பிசினஸ் செய்வது எனக்கே எனக்கான என் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளத்தான்” என்று வித்தியாசமாகச் சொல்கிறார் ஓசூரைச் சார்ந்த வித்யாலஷ்மி. என்ன கனவு... என்ன பிசினஸ்... என்ன வருமானம்..? அவரே விவரிக்கிறார்.

வித்யாலஷ்மி
வித்யாலஷ்மி

“நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஈரோடு. விவசாயக் குடும்பத்தில் பசுமையோடும் பயிர்களோடும் வளர்ந்ததால், இயற்கை ரசனை என்பது எனக்குள் இயல்பாகவே ஒட்டிக் கொண்டது. எம்.எஸ்ஸி, எம்.பில் வரை படித்திருக்கிறேன். 2010-ல் திருமணத்துக்குப் பிறகு, ஓசூர் வந்துவிட்டேன். என் கணவர் முத்துக்குமார் தனியார் நிறுவனம் ஒன்றில் மேனேஜராக இருக்கிறார். எங்கள் சராசரியான வாழ்க்கையில் பணக் கஷ்டம் ஏதும் இல்லை.

எனக்கு சின்ன வயதிலிருந்தே ஒரு கனவு... குறைந்தது ஐந்து ஏக்கர் நிலமாவது வாங்கி பண்ணை அமைக்க வேண்டும் என்பதுதான் அது. என் சொந்த சம்பாத்தியத்தில் அதைச் சாத்தியமாக்க நினைத்தேன். திருமணத்துக்குப் பிறகு, நமக்குள் இருக்கும் திறமைகளை வீணாக்கிவிடக் கூடாது என்பதிலும் நான் உறுதியாக இருந்தேன். தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் ஒன்றில் பயிற்சியாளராக தினம் மூன்று மணி நேரம் பணியாற்றி வந்தேன். 15,000 ரூபாய்தான் வருமானம் என்றாலும், என்னை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள அந்தப் பணி உதவியது. 

எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்தவள், வினீஷா ஏழாம் வகுப்பு படிக்கிறாள். இளையவள், விபூஷ்ணா ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்ததும் என் ரசனைக்கு ஏற்ற பிசினஸை ஆரம்பிக்க வேண்டும் எனத் தோன்றியது. கொரோனா ஊரடங்கு ஆரம்பித்த நேரம். ரஷ்மி பன்சல் எழுதிய ‘ஒவ்வொரு வானவில்லையும் பின்தொடருங்கள்’ என்ற புத்தகத்தை எதேச்சையாகப் படித்தேன். முழுக்க முழுக்க பெண் தொழில்முனைவோருக்கான புத்தகம் அது. சின்ன முதலீட்டில் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்பட்டது. பணம் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்றாலும், உலகத்துக்கு நன்மை தரும் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத தொழிலைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம்.

உடனே முடிவு செய்து நர்சரி கார்டன் ஆரம்பித்தேன். செடி, கொடிகளோடும், இயற்கையோடும் ஏற்கெனவே எனக்கு ஆர்வமும் பரிச்சயமும் இருந்ததால், நர்சரி கார்டன் பிசினஸ் எனக்கு ஈஸியாகத்தான் இருந்தது. ஆனாலும், கூடுதலான சில தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நர்சரி கார்டன் தொடர்பான தோட்டக்கலைப் பயிற்சி, பெங்களூரு ஐ.சி.ஹெர்.ஆரில் (ICHR-Indian Institute of Horticultural Research) பயிற்சி, தேனியில் மாடித்தோட்ட பயிற்சி என பிசினஸையும் கவனித்துக்கொண்டு சுற்றிச்சுழல முடிந்தது எனில், எனக்குள் இருந்த ஆர்வம்தான் காரணம்.

கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு, நிறைய பேர் இயற்கை சார்ந்த வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பதில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆர்வம் என் தொழிலுக்குச் சாதகமாக அமைந்தது. 

மூன்று பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளேன். அவர்களில் 58 வயது அம்மா ஒருவர். ஒரு சேலை வேண்டுமென்றாலும் பிறரை எதிர்பார்த்திருந்தவர், இன்று அவருக்குப் பிடித்ததை வாங்கும் அளவுக்கு உயர்ந் திருக்கிறார் என்பதைப் பார்க்கும் போது எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது.

“என் கனவுப் பண்ணையை அமைக்க எக்ஸ்ட்ரா வருமானம் கைகொடுக்கும்!"

என் பிசினஸ் மூலமான வருமானத்தை என் கனவுத் திட்டமான பண்ணை அமைக்க சேர்த்து வருகிறேன். நான் பண்ணை அமைக்க நினைப்பது என் ரசனைக்காக மட்டுமல்ல... இயற்கையின் அருமையையும் விவசாயத்தின் மகத்துவத்தையும் என் குழந்தைகளும் புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அரிசி எப்படி வருகிறது என்பதுகூட தெரியாத அடுத்த தலைமுறையை நாம் உருவாக்கிவிடக் கூடாது. நம் வாழ்வியலோடு கலந்த வருமானம் ஈட்டும் வழிகளை நம் பிள்ளைகளுக்கு பழக்க வேண்டும்.

எங்களுக்கு இரண்டு பேருமே பெண் குழந்தைகள் என்பதால், எதிர்காலத்தைக் கணித்து திட்டமிட வேண்டிய பொறுப்பும் உள்ளது. இன்றைய வளமான வாழ்க்கை எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்பதற்காக என் வருமானத்தி லிருந்து குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வருகிறேன். குறுகிய காலத்தில் பிசினஸில் லாபம் ஈட்டும் அளவுக்கு வளரக் காரணம், என் கணவர் மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவரின் ஆதரவுதான்.

என்னதான் பயிற்சிகளைப் பெற்றிருந்தாலும், தொழிலில் அனுபவத்துக்கு ஈடு எதுவும் இல்லை. நர்சரி கார்டன் தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் செடிகள், மரக்கன்றுகளைப் பராமரிப்பதில் தெளிவு இல்லாததால், கஷ்டப்பட்டு வாங்கி வந்த கன்றுகள் காய்ந்து விடும். மனதுக்கு சங்கடமாகி உட்கார்ந்து விடுவேன். ஆனால், சில நாள்களிலேயே பராமரிப்பு சூட்சுமங்கள் அனைத்தையும் தெரிந்துகொண்டு செய்ய ஆரம்பித்தேன். சில மாத அனுபவங்கள் பல வருட பயிற்சிக்குச் சமம் என்பதுதான் நான் கண்ட உண்மை.

நர்சரிக் கூடம் அமைப்பதற்கான கட்டமைப் புச் செலவுகள், செடிகள், மரக் கன்றுகள் வாங்க என ஆரம்பத்தில் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். சில மாதங்களிலேயே எல்லாச் செலவுகளும் போக மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வருமானம் வரத் தொடங்கியதும் எனக்கு நம்பிக்கை வந்து விட்டது. மக்களின் ஆர்வம், மனமாற்றத்தை மிகச் சரியாகப் புரிந்துகொள்ள முடிந்ததால் தான் இன்னொரு யூனிட்டை இப்போது ஆரம்பிக்க இருக்கிறேன். மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டம் அமைத்துக் கொடுக்கும் வாய்ப்புகளும் நிறைய வரத் தொடங்கி யிருக்கிறது. இதன் மூலமாகவும் கூடுதல் வருமானம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. நான் சம்பாதிக்கும் கூடுதல் வருமானத்தின் மூலம் நான் விரும்பும் பண்ணையை அமைப்பேன்” என நம்பிக்கையுடன் பேசி முடித்தார் வித்யாலஷ்மி!

குறிப்பு: இவரைப் போன்று நீங்களும் எக்ஸ்ட்ரா வருமானத்துக்காக பிசினஸ் அல்லது பகுதிநேர வேலையை வெற்றிகரமாகச் செய்துவருகிறீர்களா..? உங்கள் அனுபவங்களை finplan@vikatan.com மெயில் முகவரிக்கு எழுதுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism