Published:Updated:

“விளையாட்டாக ஆரம்பித்தேன்... பணம் சம்பாதிக்கும் பிசினஸாக மாற்றினேன்!”

பிரேமா பாலசந்தர்
பிரீமியம் ஸ்டோரி
பிரேமா பாலசந்தர்

ஈஸி பிசினஸ்... எக்ஸ்ட்ரா வருமானம்!

“விளையாட்டாக ஆரம்பித்தேன்... பணம் சம்பாதிக்கும் பிசினஸாக மாற்றினேன்!”

ஈஸி பிசினஸ்... எக்ஸ்ட்ரா வருமானம்!

Published:Updated:
பிரேமா பாலசந்தர்
பிரீமியம் ஸ்டோரி
பிரேமா பாலசந்தர்

சிலருக்கு பொழுதுபோக்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் செய்ய ஆரம்பித்த விஷயங்கள், பின்நாள்களில் குடும்பத் துக்குக் கூடுதல் வருமானத்தைத் தரும் தொழிலாகவே மாறிவிடுவதைப் பார்க்கலாம். அவர்களில் ஒருவராகத் திகழ்கிறார் மதுரை மேலூரைச் சேர்ந்த பிரேமா பாலசந்தர்.

“ஒரு இறுக்கமான சூழலில் நான் மன அமைதிக்காகச் செய்த ஒரு விளையாட்டான விஷயம்தான் இன்று எனக்கு குடும்பச் செலவுகளைச் சமாளித்து, எதிர்காலத்துக்குத் திட்டமிடும் வகையில் கூடுதல் வருமானத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது” என்கிறார் பிரேமா. தொடர்ந்து, தன் பிசினஸ் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டும் உத்திகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

பிரேமா பாலசந்தர்
பிரேமா பாலசந்தர்

விளையாட்டாக ஆரம்பித்தேன்...

“நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் மதுரைதான். என் சின்ன வயதிலேயே அப்பா தவறிவிட்டார். அம்மாதான் என்னையும் அக்காவையும் வளர்த்தார். பி.எஸ்ஸி வரை படித்துள்ளேன். 2017-ல் அம்மாவுக்கு ஹார்ட் பிராப்ளம் வந்தது. அம்மாவை இரவு பகலாகக் கவனித்துக்கொண்டேன். அப்போது எனக்கிருந்த மன அழுத்தத்தைப் போக்க சோஷியல் மீடியாவில் எதேச்சையாகக் கண்ணில் பட்ட பொம்மை அலங்காரம் செய்யும் வீடியோவைப் பார்த்தேன். பிறகு, நாமும் செய்து பார்ப்போமே எனச் செய்ய ஆரம்பித்தேன். மன மாற்றத்துக்காகச் செய்ய ஆரம்பித்த அந்த விஷயம்தான், எனக்கு இப்போது நல்ல வருமானத்தைத் தரும் பிசினஸாக மாறியிருக்கிறது.

ஆனால், அதற்கு முன்பிருந்தே எனக்குள் ஒரு தேடல் இருந்துகொண்டே இருந்தது. 2015-லேயே தமிழ்நாடு பாலிடெக்னிக்கில் ஜுவல் மேக்கிங் பயிற்சி பெற்றேன். திருமணத்துக்கு முன் இந்த அளவுக்கு வருமானம் வர வேண்டும் என இலக்கு வைத்து பிசினஸ் செய்யவில்லை. ஆனால், திருமணத்துக்குப் பிறகுதான் பிசினஸில் இலக்கு வைத்து செயல்படத் தொடங்கினேன். செய்யும் தொழிலில் கூடுதல் அக்கறை காட்ட ஆரம்பித்தேன்.

“விளையாட்டாக ஆரம்பித்தேன்... பணம் சம்பாதிக்கும் பிசினஸாக மாற்றினேன்!”

கற்பனைத் திறனுக்கு ஏற்ப காசு...

என் கணவர் வீடியோ எடிட்டர். ஃப்ரீலேன்சிங் முறையில் பணியாற்றுகிறார். மாதம் 20,000 - 25,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். அம்மாவின் பண நிர்வாகத்தைப் பார்த்து வளர்ந்திருந்தாலும் நான் அவ்வளவாக மனதில் பதிய வைத்துக்கொள்ளவில்லை. திருமணத்துக்குப் பிறகு, தனியாக குடும்பச் செலவுகளைச் செய்ய ஆரம்பித்த போதுதான் சில விஷயங்கள் புரிய ஆரம்பித்தது. சரியான திட்டமில்லாமல் நிறைய செலவு செய்ய ஆரம்பித்தோம். ஆனால், கூடியவிரைவில் நிதி நிர்வாகத்தைப் புரிந்துகொண்டு செயல்பட ஆரம்பித்தாலும், குடும்ப வருமானம் இயல்பான வாழ்க்கைக்குப் போதுமானதாக இல்லை. அப்போதுதான் நான் செய்துகொண்டிருந்த பொம்மை அலங்காரத்தை இன்னும் கிரியேட்டிவ்வாகச் செய்ய ஆரம்பித்தேன். 

மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன் என் அக்காவுக்கு குழந்தை பிறந்திருந்த சமயத்தில் சென்னைக்குப் போனபோது துணியால் விதவிதமான பொம்மைகள் செய்வதை விளையாட்டாகக் கற்று வைத்திருந்தேன். அந்த அனுபவத் தைப் பயன்படுத்தி வெவ்வேறு விதமான பொம்மை டிசைன்களைச் செய்ய ஆரம்பித்தேன்.

பொம்மை அலங்காரத்துக்கான சிலிகான் பொம்மைகளை மதுரையிலேயே வாங்கிக்கொள்கிறேன். பொம்மை அலங்காரத்தைப் பொறுத்தவரை, நம் கற்பனைத் திறனுக்கு ஏற்றவாறு லாபம் கிடைக்கும். உதாரணமாக, சிலிகான் பிளேன் பொம்மை, அலங்காரத்துக்குத் தேவையான ஸ்டோன்ஸ் எல்லாம் சேர்த்தே 50 ரூபாய்க்கு வாங்கியதை 250 ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறேன். நம்முடைய கிரியேட்டிவ் தன்மைக்கு ஏற்ப இன்னும்கூட கூடுதல் வருமானத்தைப் பெறலாம்.

“விளையாட்டாக ஆரம்பித்தேன்... பணம் சம்பாதிக்கும் பிசினஸாக மாற்றினேன்!”

நம்பிக்கை தந்த ஆர்டர்கள்...

நான் பொம்மைகளை அலங்காரம் செய்து இந்தியா முழுவதும், அமெரிக்காவிலும்கூட விற்று வருகிறேன். சிவன் பார்வதி, கிருஷ்ணன் ராதா என்றெல்லாம் குறிப்பிட்டு ஆர்டர் கொடுக்கிறார்கள். அவர்களின் விருப்பம் அறிந்து செய்துதருகிறேன். 4.5 இன்ச் முதல் இரண்டரை அடி உயரம் வரை உள்ள பொம்மைகளை அலங்காரம் செய்து விற்கிறேன். நவராத்திரி சீஸன்களில் பல்க் ஆர்டர் கிடைக்கும். ஆரம்பத்தில் ஒன்று, இரண்டு எனத்தான் ஆர்டர் வந்தது. போகப்போக 10, 20 என ஆர்டர்கள் வரஆரம்பித்தது.

முதன்முதலில் ஹைதராபாத் திலிருந்து நான்கு இன்ச் அளவிலான 12 பொம்மைகளுக்கு ஆர்டர் கொடுத்தார் ஒருவர். மொத்தமாக 6,000 ரூபாய் கிடைத் தது. இதே போல, வளைகாப்புக்கு வருகிறவர்களுக்கு கிஃப்ட் கொடுப்பதற்காக அமெரிக்கா விலிருந்து 20 செட் கிருஷ்ணர் பொம்மை கேட்டு ஒரு ஆர்டர் கிடைத்தது. இந்த ஆர்டருக்கு 12,000 ரூபாய் கிடைத்தது. ஆரம்பக் காலகட்டத்தில் இது போன்ற பல்க் ஆர்டர்கள் மூலம்தான் புதிய நம்பிக்கையும் மார்க்கெட்டிங் உத்திகளும் புரிய ஆரம்பித்தது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் எனச் சமூக வலைதளங்கள் மூலம்தான் எனக்கு நிறைய பிசினஸ் ஆர்டர் கிடைக்கிறது.

பொம்மை அலங்காரத்துக் கான ஆர்டர் கூடுதலாகக் கிடைக்கும்போது என் மாமியார், நாத்தனார் என என் குடும்பத் தினர் அனைவருமே பிசினஸில் உதவியாக இருக்கிறார்கள். நவராத்திரி சீஸன் காலத்தில் ஆர்டர்கள் அதிகமாக இருக்கும். அப்போதெல்லாம் குடும்ப மாகச் சேர்ந்து ஆர்டர்களை சரியான நேரத்தில் முடித்துக் கொடுப்போம்.

“விளையாட்டாக ஆரம்பித்தேன்... பணம் சம்பாதிக்கும் பிசினஸாக மாற்றினேன்!”

கின்னஸ் ரெக்கார்டு...

பொம்மை அலங்காரம் செய்யும் 40 பேர் இணைந்து பெங்களூரில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் 3,000 பொம்மைகளைக் காட்சிக்கு வைத்தோம். அந்தச் சமயத்தில், நான் காட்சிக்கு வைத்திருந்த பொம்மைகள் பார்வையாளர்கள் பலரின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. பொம்மை அலங்காரம் பற்றிப் பலரும் ஆச்சர்யப்பட்டு என்னிடம் கேட்டார்கள். இந்த கண்காட்சி நிகழ்வு கின்னஸ் ரெக்கார்டில் பதிவானது. இதற்குப் பிறகு, எனக்கு நிறைய ஆர்டர்கள் கிடைக்க ஆரம்பித்தது.

பொம்மை அலங்காரம் செய்வதில் மட்டும் செலவுகள் எல்லாம் போக மாதம் 20,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.

“விளையாட்டாக ஆரம்பித்தேன்... பணம் சம்பாதிக்கும் பிசினஸாக மாற்றினேன்!”

சாக்லேட் தயாரிப்பு...

பொம்மை அலங்காரம் தவிர, ஹோம் மேட் சாக்லேட் தயாரிப்பும் செய்து வருகிறேன். இதற்கும் சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் மூலம்தான் ஆர்டர் பிடிக்கிறேன். இதன் மூலம் மாதம் 10,000 ரூபாய் வரை வருமானம் வருகிறது.

நவம்பர், டிசம்பர் போன்ற குளிர்காலத்தில் சாக்லேட் ஆர்டர்கள் அதிகமாக இருக்கும். இது தவிர, எம்.எஸ்.எம்.இ பயிற்சி எடுக்கிறேன். மாதத்தில் ஒரு சில நாள்கள் மட்டும் பயிற்சி இருக்கும். இதன் மூலம் 6,000 ரூபாய் வரை கிடைக்கிறது.

என்னுடைய அனுபவத் தில் சொல்கிறேன். இரண்டு, மூன்று பிசினஸ் செய்கிறபோது சீஸனுக்கு ஏற்ப ஒன்றில் வருமானம் குறையும்போது இன்னொரு பிசினஸ் கைகொடுக்கிறது. வருமானம் சராசரியாகத் தொடர்ந்து கிடைத்து வரும்போதுதான் புதிதாக இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற யோசனைகள் தோன்றும்.

“விளையாட்டாக ஆரம்பித்தேன்... பணம் சம்பாதிக்கும் பிசினஸாக மாற்றினேன்!”

எக்ஸ்ட்ரா வருமானத்திலும் சேமிப்பு...

என்னுடைய வருமானத்தில் குடும்பச் செலவுகளுக்குப் போக 40% வரை சேமித்து வருகிறேன். குறுகிய காலப் பயிற்சிகளை அளிக்கும் இன்ஸ்டிடியூட் ஒன்றை ஆரம்பித்து நிறைய பேருக்குப் பயிற்சி தர வேண்டும் என்பதற்காகப் பணம் சேர்த்து வருகிறேன்.

பொம்மை அலங்காரத் தொழிலை சிறப்பாகச் செய்வதற் காகவும், கொரோனா காலத்தில் நிறைய கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தியதற்காகவும் என்னைப் பாராட்டி சமீபத்தில் ‘தி டையோசிஸ் ஆஃப் ஏசியா’ அமைப்பு எனக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அர்ப்பணிப்புடன் செய்துவரும் என் தொழிலுக்கான அங்கீகாரமாக நான் இதை எடுத்துக்கொண்டு இன்னும் முனைப்புடன் செயல்படத் திட்டமிடுகிறேன். நமக்குள் இருக்கும் திறன்களைக் கண்டுபிடித்துவிட்டால், சரியான மார்க்கெட்டிங் உத்திகளைக் கையாளத் தெரிந்துவிட்டால் ஈஸியாக பிசினஸில் ஜெயிக்க முடியும்” என்றார் பிரேமா நம்பிக்கையுடன்.

குறிப்பு: இவரைப் போன்று நீங்களும் எக்ஸ்ட்ரா வருமானத்துக்காக பிசினஸ் அல்லது பகுதிநேர வேலையை வெற்றிகரமாகச் செய்துவருகிறீர்களா..? உங்கள் அனுபவங்களை finplan@vikatan.com மெயில் முகவரிக்கு எழுதுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism